Tuesday, August 22, 2017

சென்னை தினம் - 378 வது பிறந்தநாள்


லக வரலாற்றில் சென்னைக்கு சிறப்பிடம் உண்டு; அதேபோல, சென்னைக்கும் சிறப்பான வரலாறு உள்ளது. இந்தியாவுக்குள் புகுந்த ஆங்கிலேயரின் வரலாற்றை, சென்னையை தவிர்த்து எழுதிவிட முடியாது. ஆங்கிலேயரால் சென்னையும், சென்னையால் ஆங்கிலேயரும் மாற்றம் கண்ட காலம், மகத்தான காலம்.சென்னையின் வயதை, ஆங்கிலேயர்களின் வருகையோடு ஒப்பிடுவர் சிலர். அவர்கள், சென்னைக்கு சொல்லும் வயது, 378. பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த சான்றுகள் அடிப்படையில், சென்னை மனிதர்களுக்கு, கற்கால வயது என்றும், சில தரப்பில் கூறப்படுகிறது.பல்லவ, சோழ, விஜயநகர பேரரசுகளின் கல்வெட்டு, கோவில், கட்டடங்கள் அடிப்படையில், கி.பி., முதலாம் நுாற்றாண்டிலே, சென்னை உருவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சென்னையின், பெருமை பேசவும், அதன் அருமையை உணர்த்தவும், அனைவரும் ஒப்புக்கொண்ட நாள், ஆக., ௨௨ம் தேதி தான்.பூந்தமல்லியை சேர்ந்த, அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் நிலத்தை, கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான, பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், அவர்களின் உதவியாளர் பெரிதம்மப்பா ஒத்துழைப்புடன், 1639, ஆக., 22ல் வாங்கினர்.அந்த இடத்தில் தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. நிலத்தை விற்ற சகோதரர்கள், தன் தந்தையான சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிய நகருக்கு சூட்டும்படி வேண்டுகோள் விடுத்தனர். அவ்வாறு தான், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடக்கு பகுதிக்கு, சென்ன பட்டணம் என, பெயரிடப்பட்டது.

இன்றைய தமிழகத்தின், தலைமை செயலகம் உள்ள, கோட்டை அமைய காரணமான, ஆக., 22ஐ தான், சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம்.

நாட்டின் முதல் நகராட்சி

இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், 1688ல், சென்னையை முதல் நகர அவையாக அறிவித்தார். இப்படித்தான், இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமை, சென்னைக்கு கிடைத்தது. 
ஆங்கிலேயர் வசமிருந்த, சென்னை நகரையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும், 1746ல், பிரெஞ்சு கைப்பற்றி 3 ஆண்டுகள் வைத்திருந்தது. 


சென்னை மாகாணம்

இருப்பு பாதைகளால், இந்திய பகுதிகளை இணைத்த ஆங்கிலேயர்கள், நான்கு இடங்களில் தலைமையகங்களை நிறுவினர். மதராசும் அதில் ஒன்றானது.சுதந்திரத்துக்கு பின், மதராஸ், மாநில தலைநகரமானது. 1969ல், மதராஸ், தமிழ்நாடு என, மாறியது. 1996ல், மதராஸ், சென்னையானது.

சென்னை தினம் வந்தது எப்படி

.இந்த சென்னை தினம் கொண்டாட, வரலாற்று ஆய்வாளர் முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர், வின்சென்ட் டி சோஸா ஆகியோரே, முக்கிய காரணம். அவர்கள் தான், சென்னையை துாற்றுவோருக்கு, அதன் பெருமைகளை புரிய வைப்பதற்காக, 2004ல், சென்னை தின கொண்டாட்டத்தை துவக்கினர். தற்போது, சென்னையை நேசிக்கும் இளைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களால், சென்னை தின கொண்டாட்டம் பிரபலமடைந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது, வரலாற்று நடை பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை - புகைப்படக் கண்காட்சிகள், உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என, பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
சென்னை தினம் கொண்டாடுவோருக்கு ஆலோசனை கூறவும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும், themadrasday@gmail.com என்ற, இணையதளமும் உருவாக்கப்பட்டு உள்ளது.


சென்னை பட்டணம் உருவாக்கம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதை மையமாக வைத்து, ஆங்கிலேய குடியிருப்புகள் வளர்ந்தன. திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட கிராமங்களும், சாலைகளால் கோட்டையுடன் இணைந்தன. சென்னை பட்டணமும், ஆங்கிலேயர்களின் வியாபார தலங்களும், 
இப்படித்தான் விரிந்தன. சென்னைக்கு வந்த போத்துக்கீசியர்கள், 1522ல், செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். 1612ல், புலிக்காட்டு பகுதியில், அவர்களின் குடியிருப்புகளை அமைத்தனர்.

துாற்றுவோரும் போற்றும் சென்னை புரட்சி!

அன்றாடம் மனைவியை திட்டியபடியே, அன்பு செலுத்தும் கணவனை போல், சென்னையை துாற்றியபடியே போற்றுவோர் அதிகம். 'எதார்த்தமில்லை; எளிமை இல்லை; அன்பு இல்லை; உண்மை இல்லை' என, பல, 'இல்லை'களை சொல்லி எரிச்சலடையும் பலருக்கு, எந்த நிலையிலும் தன் அன்பை குறைக்காத தாயைப்போல், அள்ளக்குறையாத செல்வத்தையும், வாய்ப்புகளையும் அள்ளித் தருகிறது, சென்னை.

சென்னை, நீண்ட கடற்கரையை மட்டுமின்றி, நெடிய வரலாற்றையும் உடையது. வரலாற்றை உருவாக்கியோருக்கும், கடற்கரைக்கும், சிலைகளால் நெருங்கிய தொடர்பு உண்டு. கவலைகளோடு சென்றால், குளிர்ந்த காற்றால் கவிதை எழுதி அனுப்பும், மெரினா கடற்கரையை யாருக்கு தான் பிடிக்காது; மூன்று முதல்வர்களை தன் மடியில் படுக்க வைத்து, அலையால் தாலாட்டும், அமைதியான மெரினாவை, அனைவருக்கும் தெரியும். என்றாலும், சுனாமிக்கு பின் கண்ணகியாய் சீறிய மெரினாவை பொன்னெழுத்துக்களால், தமிழக வரலாறு பதித்து வைத்திருக்கிறது.உணர்வற்று கிடந்த தமிழர்களை உசுப்பவும், ஆற்றல் அற்று கிடந்த அரசியலை அலசவும், பெண்களுக்குள்ளும் வீரம் உண்டு என்பதை உணர்த்தவும், அந்த மெரினாவுக்கு தெரியும் என்பதை, உலகம் அறிந்த நாள், 17.01.2017.தமிழகத்தின் வீரத்தோடும், காதலோடும் பின்னிப்பிணைந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, பண்பாடு அறியாத, சில அமைப்புகளின் வலியுறுத்தலால், தடை செய்யப்பட்டதை, இளைஞர்கள் அறிந்தனர். அவர்களின் தலைவரான, விவேகானந்தர் தியானித்த இடத்திற்கு அருகில் கூடினர்.

'வேண்டும் வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்' என, உரக்க குரல் எழுப்பினர். அரசியல் பாம்பாட்டிகளின், பசப்பு மகுடிகள், அவர்களை மயக்க முனைந்த போது, தமிழக தெருக்களில் இருந்து, ஏராளமான ஆண்களும் பெண்களும், குழந்தைகளுடன் கூடினர்.ஆறு நாள் கூடிய கூட்டத்தையும், அவர்களின் ஒழுக்க நடவடிக்கைகளையும் பார்த்து, ஒரு நாள் மாநாட்டுக்கு கூட்டம் கூட்டவே, தலையால் தண்ணீர் குடிக்கும் அரசியல்வாதிகளுக்கு, வியர்த்து கொட்டியது. 

தமிழக காளைகள், அரசியல்வாதிகளால் முடியாத இந்த அரிய சாதனையை நிகழ்த்திய இளைஞர்களுக்கு களம் அமைத்த மெரினா புரட்சி, சென்னை தினத்தில் நினைவு கூற வேண்டிய யுக புரட்சி.


- தினமலர் 

No comments: