Tuesday, August 8, 2017

'வெள்ளையனே வெளியேறு' - ஆகஸ்ட் புரட்சி (08.08.1942)


08.08.1942 இந்த நாளில் அன்று....
'வெள்ளையனே வெளியேறு' எனும் சனநாயக ரீதியான வன்முறையற்ற அகிம்சை வழியிலான அறம்சார்ந்த மாபெரும் போராட்டத்தை மகாத்மா அறிவித்தார்.
அன்றைய காங்கிரஸ் செயற்குழுவில் முழு ஆதரவைப் பெற்றது இந்தத் தீர்மானம்.
அப்போது காந்தி இவ்வாறு கூறினார்.
"இந்தத் தருணத்தில் இருந்து நீங்கள் விடுதலை பெற்றவர்கள் எப்படிச் செயல்படுவார்களோ அப்படியே செயல்படுங்கள். நாடு முழு விடுதலை அடையும்வரை நாம் அமைதி அடையக் கூடாது. செய்வோம் அல்லது செத்து மடிவோம். இந்தியாவின் விடுதலையை நனவாக்குவோம். அல்லது அந்த முயற்சியில் மடிவோம்" .
இந்தியாவின் விடுதலை இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல உலகத்தின் பாதுகாப்புக்கே அவசியம் என காங்கிரஸ் உணர்ந்திருந்த நேரம் அது. 2ம் உலகப் போரின் விளைவுகள் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. நாஸிசம், பாஸிசம், ராணுவச்சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் போன்ற மக்களுக்கெதிரான சக்திகள் உலகமெங்கும் வலுவோடு உருவாகிக் கொண்டிருந்தது. இந்த சக்திகளை வலுவோடு எதிர்கொள்ள வேண்டுமானால் இந்திய விடுதலை மிகவும் அவசியம் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருந்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கி மறு நாளே காந்தியும் ஒட்டுமொத்த செயல் குழுவினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த 3 நாட்களுக்குள் நேரு உட்பட்ட எல்லாத் தேசியத் தலைவர்களும் கைது செய்யப் பட்டனர்.
நாடு முழுவதும் மக்கள் பெரிய தலைவர்கள் இன்றி இயங்கினார்கள். முதலில் நகரங்களில் தொடங்கிய போராட்டம் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியது. குறிப்பாக வட இந்தியக் கிராமங்களான பிஹார், கிழக்கு உத்தர பிரதேசம், போன்ற பகுதிகளில் பல கிராமங்கள் விடுதலை பெற்றதாக அறிவித்தன.


ஆங்கிலேய அரசின் கொடிய அடக்குமுறைகள் தலைவிரித்தாடின. ஜெயப்பிரகாஷ் நாரயண், அருணா ஆசப் அலி, சுசேசா கிருபாளினி போன்ற தலைவர்கள் முன்னின்று போராட்டத்தை நடத்தினர். ஆனால் விமானக் குண்டு வீச்சுகள் மூலம் பத்தாயிரம் பேர்வரை உயிரிழந்தனர். உலகப்போர் முடிவுக்கு வரும் வரை நேரு விடுவிக்கப்படவில்லை. இரண்டுவருடங்கள் வரை காந்தி சிறைவைக்கப் பட்டார். 18 மாதங்கள் சிறைவைக்கப்பட்ட காந்தியின் மனைவி கஸ்தூரிபா 1944 பிப்பிரவரி 22இல் காலமானார்.
இவ்வாறு இயக்கம் ஒடுக்கப்பட்டாலும் இந்தியா முழுவதும் வெள்ளையர்களிற்கெதிரான நிலைப்பாட்டில் மக்கள் இருக்கிறார்கள் என்ற சொரணை ஆங்கிலேய அரசுக்கு வந்தது. 2ம் உலகப்போர் முடிந்ததும் மூட்டையை கட்டிக் கொண்டு வெளியே செல்வதைத் தவிர வேறு வழியில்லை என உணரவைத்தது இந்தப் போராட்டம்.
இன்று 75 ஆண்டுகளின் பின் அன்று உயிரிழந்த மக்களையும் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களையும் அவர்தம் தியாகங்களையும் நன்றியோடு நினைக்கும் போது ஒன்றுமட்டும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரவேண்டும்.

" இந்த தேசம் தலை சிறந்த ஜன நாயக நாடாகவும் மதசார்பற்ற நாடாகவும், நாஸிசம் ,பாஸிசம், ராணுவச் சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் போன்ற மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நாடாகவும், உலகம் முழுவதற்கும் உதாரணமாகவும் என்றும் இருக்கும் என்ற கனவுகளுடனேயே போராடினார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

தீர்க்கதரிசனக் கவிஞன் பாரதி அன்று கொண்ட நம்பிக்கை போல் " உலகப் பொதுவிதியை இந்தியா உலகுக்களிக்கும்" எனும் நம்பிக்கையை இந்த நாளில் எமக்குள்ளும் விதைப்போம்.
நன்றி. தமிழ் இந்து .பி ஏ கிருஷ்ணன் கட்டுரையிலிருந்து

No comments: