Tuesday, October 7, 2014

நீங்களும் மக்கள் முதல்வராக வேண்டுமா....?


பெரியாரைத் துணைக்கோடி, தம் குற்றம் கடிதலாலும், சிற்றினம் சேராமையாலும் மக்கள் தலைவனாக முடியும் என்கிறது தமிழர்களின் நீதி நூலான  திருக்குறள்  [ அதிகாரம் 45,44,46]
 

கல்வி,  கேள்வி,  அறிவுடமைகளால் ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியுமென்றாலும் அறிவு , வயது  , திறமை ,  பண்பு போன்றவற்றில்  முதிர்ச்சியுற்ற பெரியவர்களின் துணையையும் தேடிப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்றும்

 தம்மிடம் தோன்றும் குற்றங்களை தாமே கடிந்து அறவே நீக்கிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் இது பொருந்துமாகிலும் , முக்கியமாக நாட்டை ஆளும் தலைவனுக்கு இது  மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் தம் குற்றம் கண்டு  நீக்க முயலாமல் பிறரது குற்றங்களை நீக்குவதென்பது இயலாத காரியமாகிவிடும் என்றும்

தரம் தாழ்ந்து செயல்படும் மக்களுடன் சேராதிருத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாக கூறப் படுகிறது..ஒருவனது அறிவு அவனது மனத்துள்ளதா?   அல்லது அவன் சாரும் இனத்துள்ளதா? என ஆராய்வோமாகில், மனத்தில் உள்ளது போல் தோன்றினாலும் அவன் சார்ந்திருக்கும் இனத்தினால் அதுமாறும் தன்மையுடையது என்பது தெளிவாகும் .[இங்கு இனம் என்பது மக்கள் கூட்டத்தை குறிப்பது]
அதனால்தான் தரம் தாழ்ந்த மக்களுடன் சேராதே எனவும்  எச்சரிக்கப் படுகிறது.

இவற்றையே மேலே குறிப்பிட்ட  மூன்று அதிகாரங்களில்  வரும் பத்துப் பாடல்களும்  உணர்த்தி நிற்கின்றன.

 வள்ளுவப்பெருந்தகை நாம் வாழும் வகையுணர்த்தி நிற்கையில் இன்றைய  போராட்டங்கலும், பேதங்களும்  எதற்கோ என எண்ணத் தோன்றுகிறது.

பெரியாரைத்  துணைக்கோடல் எனும் அதிகாரத்தினை அறிவோமாகில் ..

அறநெறிகளை நீங்கள்  அறிவதோடல்லாமல் ,முதிர்ந்த அறிவுடைய மூத்தவர்களின் ஆழ்ந்த நட்பை பெற்றுக்கொள்ளும் வழியறிந்து அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

தமக்கு நேர்ந்த துன்பங்களை விடுத்து  , இனி நேரக் கூடிய துன்பங்களையும் முன்னதாகவே  அறிந்து  அதை வராமல் காக்கவல்ல திறமையுடைய பெரியவர்களைத தேடிக் கண்டறிந்து, அவர்களைப்  போற்றி, அவர்களுக்கு வேண்டுவன செய்து நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

பெரியவர்களான சான்றோர்களைத் தேடி  நட்பாக்கிக் கொள்ளுதல் என்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல.உலகத்தில் உள்ள அரிதான செயல்களில் எல்லாம் இது அரிதானதாகும்

தம்மைவிட அறிவிலும் திறமையிலும் முதிர்ந்த மூத்த பெரியவர்களைத் தமக்கு வேண்டியவர்களாக கொண்டு வாழுதலே   ஒருவனுக்குரிய வலிமைகளுள் எல்லாம் தலையான வலிமையாகக் கொள்ளப்படுகிறது.

மக்களின் தலைவன் என்பவன் தன் நல்லாட்சிக்காகவே  சிந்தனை செய்து ஆலோசனை கூறுபவர்களையே தன் கண்களாகக் கொண்டு ஆட்சி நடத்தவேண்டியுள்ளதால் அங்ஙனம் சிந்திக்கும் திறன் மிக்கவர்களை நன்கு ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளவேண்டும்.

அறிவு, ஆற்றல் , ஒழுக்கம்  என எல்லாவகையாலும் தகுதியுடையவர்களைத் தனக்குத துணையாகக்  கொண்டு தானும் நன்கு ஆராய்ந்து அறிந்து நடக்கவல்ல திறமையான ஒரு தலைவனுக்கு பகைவர்களால் எந்தக் கெடுதியும் விளையப் போவதில்லை

குற்றம் குறை கண்டவிடத்து தம்மை இடித்துக் கூறி[ வலியுறுத்திக் கூறி] திருத்தவல்ல தகுதியுடைய பெரியவர்களைத் துணையாகக் கொண்ட எவரையும்  கெடுக்கக் கூடிய  ஆற்றல் படைத்தவர்கள்  யாரும் இந்த உலகில் இருக்கவே முடியாது.

தன்னை குற்றம் கண்டவிடத்து இடித்துக் கூறி [ வலியுறுத்திக் கூறி] திருத்தவல்ல பெரியவர்களின் துணையில்லாத பாதுகாப்பற்ற தலைவன், விசேடமாக ஒரு பகை அவனைச் சூழாவிடினும் தானே கெட்டொழிந்து போவான்.

முதல் போட வழியில்லாத வணிகர்களுக்கு எவ்வாறு ஊதியம் கிடைக்காதோ, அவ்வாறே தம்மைத் தாங்கவல்ல பெரியவர்களின் சார்பில்லாதவர்களுக்கு நிலையான வாழ்வு கிடைக்கப் போவதில்லை.கட்டிடத்தைத் தாங்கும் உத்தரம் போல வாழ்வில் நிலை பெறுதலும் உயர்தலும் பெரியவர்களின் துணையால் இலகுவில் ஈடேறும்.

துணையாகக் கூடிய நல்லவர்களோடு மனம் வேறுபட்டு அவர்களின் நட்பினைக் கைவிடுவதென்பது பலரோடு பகை கொள்வதைவிடப் பத்துமடங்கு தீமையாய் முடியும்.

குற்றம் கடிதல் எனும் அதிகாரத்தினை அறிவோமாகில் .

செல்வச் செருக்கும் , கடுங்கோபமும் , சிறுமைப் பண்பும் இல்லாதவர்களின் பெருக்கம் அதாவது பதவி, புகழ், செல்வம் என்பன குறைவில்லாது உயர்ந்துகொண்டே செல்லும்.இவ்வாறான சிறுமைப் பண்புகள் மக்களை வழிநடத்தும் தலைவர்களிடம் அமையுமாயின் அதுவே அவர்களுக்கு எதிரியாக மாறிவிடும்.

செலவு செய்ய வேண்டிய இடங்களில் செலவு செய்யாமல் , செல்வத்தின் மீது பற்று வைக்கும் கருமித் தனமும், பெருமைதராத எல்லைமீறிய மான உணர்ச்சியும் , மாண்பற்ற தகுதியில்லாத மகிழ்ச்சியும் , நாடாளும் தலைவனுக்கு குற்றமாகும். இவை அறவே நீக்க வேண்டியனவாகும்.  மாண்பு இறந்த மானம் என்பது  எல்லை கடந்து மான உணர்ச்சி பேசுவதையும் , மாணா உவகை என்பது காமம் போன்றவற்றில் எல்லைகடந்த மகிழ்ச்சியில் திளைப்பதையும் குறிக்கும்.

தமக்கு வரும் பழிச் சொற்களுக்கு  வெட்கப்படும் பண்பாளர்கள், தினையளவினதாகவே குற்றம் தம்மிடம் ஏற்பட்டாலும் அதனைச் சிறிது என்று கருதாது பனை அளவினதாகக் கருதி அதை நீக்கத் துடிப்பார்கள்.பொதுவாக பிறருடன் ஒப்பிட்டு "நான் என்ன தவறு செய்துவிட்டேன் ,பெரிதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லையே என்று வாதிடுவது மாந்தர் இயல்பு எனினும்  பண்பான தலைவன் இப்படி வாதிட மாட்டான்.

ஒருவருக்கு அழிவைக் கொடுக்கும் பகை அவர் செய்யும் குற்றமேயாகும்.அதனால் அவர் தன்னிடம் எந்தக் குற்றமும் ஏற்ற்படாதிருப்பதையே குறிக்கோளாகக் கொண்டு காக்கவேண்டும்.
ஒருவருக்கு புறத்தேயிருந்து பகை வருகிறதென்பதை விட அவர்கள் புரிகின்ற குற்றங்களினாலேயே அவரது அழிவு தொடங்குகிறது.

குற்றம் ஓன்று தன்பால் உண்டாகும் முன்பே அதனை வராமல் தடுத்துத் தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை எரியும் நெருப்பின் முன்னிட்ட வைக்கோற்போர் போலக் கெட்டொழிய நேரும். குற்றமொன்று ஏற்பட்டபின் காத்தல் என்பது வைக்கோல் போரில் நெருப்பு தன்னைக் காப்பது போலாகிவிடும். சிறு குற்றங்கள் கூட தன்பால் ஏற்படாதவாறு முன்கூட்டியே  தன்னைக் கண்காணித்துக் கொள்வதுதான் நல்ல தலைவனுக்கு அழகாகும்.

முதலில் ஆட்சிபுரிபவன் தன்பால் உள்ள குற்றங்களைக் கண்டு அதனை நீக்கி விட்டுப் பிறகு மற்றவர்களிடம் உள்ள குற்றங்களை கண்டு நீக்க வல்லவனாயிருந்தால் அந்த ஆட்சியாளனது ஆட்சிக்கு எந்தவித கேடும் குற்றமும் உண்டாகாது. ஆள்பவனே குற்றமுடையவனானால் பிறர் குற்றம் களைதல் கைகூடாது. அவன் குற்றமற்றவனானால் அவனது ஆட்சியில் எவ்விதக் குற்றமும் நேராமல் காக்க முடியும்.

தனக்கும் பிறர்க்கும் செய்துகொள்ளக் கூடிய நன்மைகளைச் செய்து கொள்ளாது, மிகுந்த அவாக் கொண்ட கருமி சேர்த்த செல்வம் பின்னொருநாளில் யாரும் காக்கவியலாது தானே அழிந்து போகும்.

செல்வத்தைச் செலவிடவேண்டிய நேரத்தில் செலவிடாது அதில் அதிக ஆசைவைக்கும் கருமித்தனம் குற்றங்கள் எதனுள்ளும் வைத்து பார்க்கமுடியாதளவு குற்றமாகக் கருதப்படும்.

ஒருவன் எத்துணை உயர்ந்தாலும், எப்பொழுதும் தன்னைத்தானே வியந்து பெரிதுபடுத்திப் பேசாதிருப்பானாகில் மக்களிடையே மேலும் உயர்வான். இத்தகைய செருக்கு மிகுமாயில் தனக்கும் பிறர்க்கும் நன்மைதராத செயல்களையே செய்ய விருப்பம் கொள்வான். மிக உயர்ந்த நிலைகளை அடைந்தாலும் அடக்கமாக இருந்து ஆட்சிபுரிபவனே நல்லாட்சியாளன் ஆவான்.

தான் ஆர்வத்தோடு நேசிக்கும் பொருட்களில் தனக்குள்ள ஆசையை வெளிப்படுத்துவது குற்றம்.அவ்வாறு தாம் கொண்ட ஆர்வத்தை  யாரும் அறியாதவாறு அப்பொருட்களை ஒருவன் அனுபவிக்க வல்லவனானால் பகைவர்கள் அவனை கொல்லுமாறு சிந்திக்கும் சூழ்சிகள் பயனற்றுப் போகும். அவனுக்கு எதில் ஆசையுள்ளதென அறிந்து அவனை அழிக்கச் சதி செய்பவர்களுக்கு ஆர்வ வெளிப் பாடானது வழிசமைத்துக் கொடுத்துவிடும்.[ ஏதிலார் நூல் என்பது பகைவர் சிந்தனையைக் குறிக்கும்.திட்டமிடுதலின் சிந்தனையை நூலென்றார்.]

சிற்றினம் சேராமை எனும் அதிகாரத்தினை அறிவோமாகில்

பெருமை மிக்க பெரியோரது மனமானது சிறியார் இனத்தோடு [ இங்கு சிறியார் இனம் என்பது தரம் தாழ்ந்த மனிதர்களைக் குறிக்கும்] நட்புக் கொள்ள அஞ்சும் . சிறுமைமிக்க சிறியோர் மனமோ சிறியாரைக் கண்டவுடன் அவர்களைத் தன் சுற்றமாக நினைத்து அவர்களுடன் சேர்ந்துவிடும்.

தான் சேர்ந்த நிலத்தின் இயல்பால், நீர் திரிந்து அந்நிலத்தின் நிறமும் சுவையும் உடையதாய் மாறும். அதுபோல மாந்தர்க்கு தாம் சேர்ந்த இனத்தினது இயல்பால் அறிவு திரிந்து அவ்வினத்தினது தன்மையைகொண்டுவிடும் .ஆதலால் சிற்றினம் சேர்வதை நல்லரசன் தவிர்க்க வேண்டும்.

மக்களுக்குப் பொதுவான உணர்ச்சி  என்பது அவரவர் மனத்தால் அமைவதாகும்.ஆனால் அவர்களை இத்தகையவர்கள் என்று சொல்லும் சொல் அவர்தம் இனத்தாலேயே அமைவதாகும்.

ஒருவனது அறிவு அவனது மனத்தில் உள்ளதுபோல வெளியே தோன்றி அவன் சார்ந்துள்ள இனதுகேற்ப வெறுபடுவதாகும். அவரவர் மனதிலிருந்துதான் அறிவு வெளிபடுகிறது என்பது உண்மையே. ஆனால், அவன் பலருடன் பழக பழக அந்த இனதுக்குள்ளதாகிய நன்மை தீமைகள் இந்த அறிவில் படிந்து இந்த இனத்துகேற்ற அறிவாக அது மாறிவிடுகிறது.    

ஒருவனது மனம் தூயனவாதலும் செய்யும் செயல் தூயனவாதலும் அவன் சாரும் இனம் தூயதாக அமைதளைப் பொறுத்தே உண்டாகும். ஆதலால், இனம் தூயதானால் மனம் தூயதாகும். மனம் தூயதானால் செயல் தூயதாகும்.

மனம் தூயவரானவர்களுக்கு மக்கள் நல்லவர்களாக அமைவர். இனம் தூயவரானவர்களுக்கு அவர்கள் செய்யும் செயலெல்லாம் நல்ல பயனுள்ளதாகவே முடியும்.

மனம் நல்லதாதல் நிலை பெற்ற மக்கள் உயிர்க்கு ஆக்கத்தைக் கொடுக்கும். மன நலத்தால் அறவழி நிலைக்க உயிர் ஆக்கம் பெரும். இனம் நலம் நற்பெயர் தருதலால் அதன் வழி புகழ் அனைத்தும் வாய்க்கும்.

மன நலம் இயல்பாக மிக உடையவர்  ஆயினும் சான்றோர்களுக்கு இன நலமும் அமைவது அதற்கு பாதுகாப்பான துணையாகும். மனநலம் இயல்பாகவே வைத்துள்ளது என்றாலும் இன நலமும் அமைந்தால் அம்மண நலம் காக்கப்படும் என்பதாகும்.

இயல்பாய் அமைந்த மன நலத்தினாள் மறுமையிலும் நன்மை உண்டாகும் அம்மணத்தின் நன்மையையும் இன நலதினாலேதான் பாதுகாவலாய் கட்டிக்காக்கப்படுகிறது. மன நலமும் இன நலமும் தொடர்ந்து பரம்பரைக்கும் மறுமைக்கும் பயன் தருவன ஆகும்.

நல்லவர் இனத்தைக் காட்டிலும் ஒருவனுக்கு துணையாவது பிறிதில்லை. தீயவர் இனத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றுமில்லை.    

இந்த நீதியைத் துணையாகக் கொண்டு நீங்களும் முயலுங்கள். நிச்சயம் நீங்கள் மக்கள் தலைவனாகலாம். காலம் உங்களை முதல்வனுமாக்கலாம்.
      

No comments: