Saturday, August 16, 2014

கச்சதீவு ஒப்பந்தம் - யூன் 1974

கச்சதீவு ஒப்பந்தம் -  யூன் 1974 - 
28.06.1974

இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையில் நட்புறவை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை தாரை வார்த்து - இலங்கைக்கு சொந்தமாக்கிய நாள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் - இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவும் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள். இந்தியாவின் கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சதீவு இலங்கைக் கரையிலிருந்து 18  கடல் மைல் தூரத்திலும், ராமேஸ்வரம் கரையிலிருந்து 10 கடல் மைல் தூரத்திலும் அமைந்திருந்ததால் அது தமிழ்நாட்டுக்கு உரிய பகுதியாகவே கருதப்பட்டது. வரலாற்றுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.   இதைக் கருத்தில் எடுத்து ஒப்பந்தம் போட்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் தமிழ்நாடு அரசின் முழுச் சம்மதமில்லாமல் கச்சதீவு   ஒப்பந்தம் கைச் சாத்திடபபட்டிருந்தது. இருப்பினும் அன்று முதல் அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியின் விடாமுயற்சியால் தமிழக மீனவர்களுக்கு சாதகமான சில திருத்தங்கள் இவ்வொப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன.

*** இந்திய மீனவர்கள் கச்சதீவுக் கடலில் மீன் பிடிப்பதற்கும், அதன் நிலப் பகுதியில் தங்கி வலைகளை உலர விடுவதற்கும் அனுமதி அளிப்பதென்றும்,

*** வருடாவருடம் நடைபெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தில் இருநாட்டு  மக்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு அரசுகளும் செய்து கொடுப்பதென்றும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்திய மீனவர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமான இந்த இரு திருத்தங்களும் சேர்க்கப்பட்டதால் கச்சதீவு மீதான தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது. இந்தியப் பாராளுமன்றத்திலும் - மாநிலங்கள்  அவையிலும், கச்சதீவு ஒப்பந்தத்துக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் கண்டனக் குரல் எழுப்பி தங்களது எதிர்ப்பைப்  பதிவு செய்திருந்தார்கள். அதிக அதிகார  மையத்திலிருக்கும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் ஒரு வரம்புக்கு மீறி எதிர்க்க முடியாத சூழ்நிலையில், தமிழ்நாடு முதல் அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் கச்சதீவு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனையாவது  மத்திய அரசு அனுமதித்ததே என்று ஆறுதல் கொள்ளலாம்.

இந்தியாவின் வெளி உறவுக் கொள்கை அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையில் உருவான இவ்வொப்பந்தத்தை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் இருப்பதால் அதைத்  தடுக்கவும் முடியாது.

கச்சதீவை இலங்கை கேட்டது - இந்தியா அதை கொடுத்தது  என்று சாதாரணமாக  சொல்லிவிட முடியாது. இந்தியாவின் கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தலில் ஒரு ராஜதந்திர பின்னணி புதைந்திருந்தது. இலங்கையுடனான வெளி உறவுக் கொள்கையில் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருந்த ஒரு சரிவை சரிகட்டுவதற்காகவே இந்த ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டது. . 1971 ம் ஆண்டு நடந்த  இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாக உருவானபோது இலங்கை உடனான வெளி உறவுக் கொள்கையில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவுக்கு பகை நாடாக இலங்கை மாறியது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானங்கள் இந்திய வான் வெளியில் பறப்பதற்கு இந்திய அரசு தடை விதித்தபோது அதற்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவ இலங்கை அரசு முன்வந்தது. தனது நாட்டு வான் வெளியில் பறப்பதற்கும் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கி எரிபொருள் நிரப்புவதற்கும் பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு  அனுமதி வழங்கியது. 

இலங்கையின் இந்த முடிவால் இந்தியா அதிர்ச்சியடைந்தாலும் தனது தாக்குதலை அதிகரித்தன் மூலம் பாகிஸ்தானை பணிய வைத்து இந்திய உபகண்டத்தில் தனது வல்லாதிக்கத்தை இந்தியா நிரூபித்து காட்டியது.   
யுத்தத்தில் பாகிஸ்தானை  வெற்றி கொண்டு, வங்காள தேசத்தை தோற்றுவித்தாலும், இலங்கையின் எதிர்மறையான போக்கை இந்தியாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனை நட்பு நாடு என்று சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. பகை நாடென்று விலக்கி வைக்கவும் முடியவில்லை. யானையின் காதுக்குள் கட்டெறும்பு புகுந்த நிலையில் இந்தியா தவித்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் இலங்கை அலட்டிக் கொள்ளவில்லை. தனது நட்பு நாடு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு உதவியதாக  இலங்கை தன்னிலை விளக்கம் அளித்து இந்தியாவுக்கு மேலும் அதிர்ச்சியூட்டியது. இலங்கையின் தன்னிலை விளக்கத்தை கேட்டு இந்தியா கோபமடைந்தாலும், ராஜதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுத்து இலங்கையுடனான  நட்புறவை தொடரவே விரும்பியது. இந்தியாவின் வடக்கே பாகிஸ்தானும் சீனாவும் பகை நாடுகளாக இருப்பதால், தெற்கே தனது நட்பு நாடாக இலங்கையை   வைத்திருக்கவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

இந்தத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கச்சதீவை தானம் செய்தது சரியான ராஜதந்திர  நடவடிக்கைதான்  என்று அரசியல் அவதானிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர். ஆனால்  இந்தியாவின்  கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள கச்ச தீவை இலங்கை தனதாக்கிக் கொள்ள ஏன் விரும்பியது என்ற சர்ச்சைக்குரிய விவாதத்துக்குள் போக விரும்பாத இந்திய அரசும், அதன் அதிகாரிகளும் இத்துடன் தமது ராஜ தந்திரக் கடமையை முடித்துக் கொண்டனர்.  ஆனால் 1967ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் தலைமை  இப்போது கச்சதீவை இலங்கையிடம் பறி கொடுத்ததன் மூலம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கே சங்கூதிவிட்டது.

  'கடுகு சிறிதானாலும் காரம் பெரிது' என்பார்கள். இலங்கை சிறிய நாடாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் பெரியதாக இருந்தது. கச்சதீவை தனதாக்கிக் கொண்டதில் இலங்கை தனது கடல் பிராந்தியத்தை விரிவுபடுத்தியதோடல்லாமல்,  மீன் வளத்தையும் அதிகரிக்க செய்துள்ளது. இந்தியாவின் தென்பகுதி தமிழ்நாட்டையும் இலங்கையின் வடபகுதி யாழ் - குடா நாட்டையும் இணைக்கும்  பாக் நீரிணை  ஆழம் குறைந்த பகுதியாக இருப்பதாலும், கச்சதீவு ஒப்பந்தம் மூலம் இலங்கையின் ஆளுமைக்குள் இப்பகுதி முழுமையும் வந்ததாலும், இந்தியக் கடல் பகுதிக்குள் தனது எல்லையை இலங்கை விரிவுபடுத்திக் கொண்டது. மீன்களின் வாழ்நிலைக்கு ஏதுவாக யாழ்ப்பாணம் வட கடல் பகுதியின் கிழக்கே பீற்ரூ ( PETRUE ) கடல் அடித்தள மேடையும், மேற்கே மன்னார் கடல் அடித்தள மேடையும் இயற்கையாக அமைந்திருப்பதால், அங்கே மீன் இனங்கள் தங்கி இனப்பெருக்கம் செய்து வாழ்வதற்கான தட்ப வெப்ப நிலையும், அவற்றிற்கான  உணவும் நிறைந்திருந்தது சிறப்பு அம்சமாகும். வருடம் முழுவதும் மீன் பிடிப்பதற்கான மீன் வளம் பெருகிப் பரந்து கிடப்பதால்  இறால் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் கடல் பிரதேசமாக இப்பகுதிகள் விளங்கின. இக்கடல் செல்வங்கள் நிறைந்த இப்பகுதிகளுடன் இப்போது கச்சதீவு கடல் பகுதியும் இணைவதால் இலங்கையின் வடகடலில் மீன் பிடி தொழில் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. இருநாட்டு மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடிப்பதால் அவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மீன் பிடிக்கும் முறையில் இருநாட்டு மீனவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தாலும், முறை வைத்து மீன் பிடிக்கத் தவறியதால் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின. இரு பகுதி மீனவர்களும் தமிழர்களாக இருந்ததால், மோதல்கள் தவிர்க்கப்பட்டு சகிப்புத்தன்மையுடன் சுமுகமான நிலையே தொடர்ந்தது. ஆனால் இதுவும் அதிக நாள் நீடிக்கவில்லை. இறால் மீன்களை அதிகம் பிடிக்கவேண்டும் என்கிற தமிழக மீனவர்களின் பேராசை பெரும் பிரச்சனையாக மாறியது. இலங்கை நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது . தமிழ்நாட்டு மீன்பிடித் தொழிலில் புதிய தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு  இழுவைப் படகுகளின் ( ரோளர் ) எஞ்சின் வேகம் அதிகரிக்கப்பட்டது. புழக்கத்திலிருந்த  மூன்று சிலிண்டர் உள்ள சிறிய எஞ்சின் நீக்கப்பட்டு  ஆறு சிலிண்டர்  உள்ள பெரிய எஞ்சின் பொருத்தப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டது. இதன் வேகத்துக்கு ஏற்றாற்போல் இறால் மீன்பிடி வலைகளும் பெரிதாக வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவுக் கடலிலும், அதைத் தாண்டியும் இறால் மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். அதற்கேற்ற பலனும் அவர்களுக்குக் கிடைத்தது. இழுவை விசைப் படகுகளின் வேகமும், புதிய தொழில் நுட்பத்திலான மீன்பிடி முறையும் அதிக அளவில் இறால் மீன்களைப் பிடிப்பதற்கு வழிகோலின. இதனால் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்து பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது.

ஆனால்  இந்த  வகையான இழுவை விசைப்  படகுகளின் ( ரோளர்  ) மீன்பிடி வேகத்துக்கு இலங்கை தமிழ் மீனவர்களால் ஈடு கொடுக்க முடியாத நிலையில், அவர்களது மீன்பிடித் தொழில் பெரிய அளவில் முடங்கிப் போனது.

 ராமேஸ்வரம், மண்டபம், கோட்டைப்பட்டணம், ஜெகதாப்பட்டணம் , மல்லிப்பட்டணம், வேதாரண்யம், ஆற்காட்டுத் துறை, நாகப்பட்டணம் போன்ற இடங்களில் இருந்து, கச்சதீவு கடல் நோக்கி புறப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி ரோளர் விசைப்படகுகள் மின்விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் இலங்கைக் கடல் எல்லையைத் தாண்டி நுழையும்போது, ராமேஸ்வரம் தீவே மிதந்து வருவதுபோல் காட்சியளிக்கும். எல்லை தாண்டி வரும் இக்காட்சியைக் காணும் இலங்கை மீனவர்கள் கதி கலங்கிப் போய்விடுவார்கள். ஏனென்றால் மீன்களுக்காக கடலில் போடப்பட்ட வலைகள் அவர்களின் கண் முன்பாகவே காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு தமிழ்நாடு விசைப் படகுகளால் ( ரோளர் ) யாழ்ப்பாண மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டு, வாழ்வாதாரமே பாழாகி விடுகின்றது. நாட்டுப் படகு மீன்பிடி முறையில் ( நைலோன் வலை ) வல்லுனர்களான யாழ்ப்பாண மீனவர்கள் பல லட்சங்களை முதலீடு செய்து, பெரிய அளவில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எல்லை தாண்டிவரும் தமிழ்நாட்டு விசைப்படகுகள் ( ரோளர் ) அவர்கள் கடலில் போட்ட வலைகளுக்கு மேலால் தாண்டி சென்று சேதப்படுத்தி விடுகின்றன. இது தினந்தோறும்  நடைபெறும் துயரம். மீன்பிடி தொழிலுக்காக போடப்பட்ட முதலீடு கடலோடு கரைந்து   காணாமல் போய்விடுகின்றது .   இதனால் யாழ்ப்பாண மீனவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது.
ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் இதைப்  பற்றி கவலை கொள்ளாமல் கச்சதீவின் கடல் பகுதியிலுள்ள கடல் செல்வங்களை அள்ளிச் செல்வதில் குறியாக இருந்ததுதான் கவலைக்குரியதான செய்தி. 

படகொன்றுக்கு சராசரி 80 முதல் 100 கிலோ வீதம் ஆயிரம் (ரோளர்) விசைப்படகுகள் நாள் ஒன்றுக்கு பிடிக்கும் இறாலின் நிறை அளவு 80 ஆயிரத்திற்கு அதிக கிலோவாகும். பிடிபடும் மற்றவகை மீன்கள் தனிக் கணக்கு. அவற்றிற்கும் தனி விலை உண்டு. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் கிலோ இறால் பிடிபடுவது ஒரு சராசரிக் கணக்காகும். ஆனால், இதற்கு மேலாகவும் இறால் வகை மீன்கள் தினமும் பிடிபடுகின்றன. இது 1980 -1985 ஆண்டு கணக்காகும். அள்ள அள்ளக்  குறையாத கடல் செல்வங்களான இறால் மீன்கள் கச்சதீவுக் கடலிலும் அதைத் தாண்டிய இலங்கைக் கடல் பகுதியிலும் நிறைந்திருப்பதால்  அதை தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் அள்ளிச் செல்வது எந்தவிதத்தில் நியாயமானது?  கச்சதீவு இப்பொழுது இலங்கைக்கு சொந்தமானாலும் மீன் பிடிக்கும் உரிமை தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் உண்டு. அதற்காக தமிழக மீனவர்கள் இப்படியா நடந்து கொள்வது?  தமிழ்நாட்டு விசை படகுகளால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை கண்டு கொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அது தவிர்க்க முடியாத சோகமாகிவிடும்.

ஆனாலும், காலப்போக்கில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இருநாட்டு மீனவர்களையும் இரத்தம் சிந்தும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியது. 1983 யூலை இனக் கலவரம் எல்லாவற்றையும் தலைகீழாக  மாற்றிப் போட்டது .  சிங்கள இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு பயந்து ஆயிரம் ஆயிரம் இலங்கை தமிழ் மக்கள் படகுகள் மூலம் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தபோதுதான் பிரச்சனைகள் ஆரம்பமானது . இதன் தொடர்ச்சியாக இலங்கை தமிழ் இளைஞர்களின்  ஆயுதப் போராட்டம் வலுவடையத் தொடங்கியது. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் நாட்டில் ஏற்பட்ட எழுச்சி இந்திய அரசைத்   திரும்பிப் பார்க்க வைத்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்து ஆதரவுக் கரம் நீட்டினார். கலைஞர் கருணாநிதி  எதிர்க்கட்சியிலிருந்து  குரல் கொடுத்தார். இதன் விளைவு இந்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டது. தமிழ் இளைஞர்களுக்கு பல உதவிகளை செய்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதற்கும், பாக் நீரிணையை கடல் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்குமான அனுமதியும் இந்திய அரசால் மறைமுகமாக வழங்கப்பட்டிருந்தது.  

இதன் பின்பே நிலைமைகள் மேலும்  மோசமாகத் தொடங்கின. இலங்கை அரசு கச்சதீவு கடல்பகுதியில் தனது ஆளுமையை நிலைநாட்ட தனது கடற்படையின் நடமாட்டத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு மீன்  பிடிக்க தடையும் விதித்தது . இது தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஆபத்தாக முடிந்தது. கச்சதீவை தாண்டிவரும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இத்தாக்குதலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள். 1983 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டு வரையிலான 30 வருட காலத்தில் 500 க்கு மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும் - ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயப்படுத்தப்பட்டும்,  படகுகள் வலைகள் அழிக்கப்பட்டும் இன்றுவரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக 1974 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட  கச்சதீவு ஒப்பந்தம் இன்று இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறிவிட்டது. இலங்கை கடற்படையிடமிருந்து தனது சொந்த நாட்டு மீனவர்களை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் ஒரு சங்கடமான  நிலையே இந்திய அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்க கூடாது என்று இந்திய அரசு அறிவித்திருந்தாலும் நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஏனென்றால் ராமேஸ்வரம் கரையிலிருந்து கச்சதீவு 10 கடல் மைல்  தொலைவில் இருப்பதால் மீனவர்களின் விசைப்படகுகள் சாதாரணமாகவே எல்லையை தாண்டிவிடும். இது காலவரை எல்லை தாண்டியே  தமிழ்நாட்டு மீனவர்கள் இறால்  மீன்களைப்  பிடித்து வருகிறார்கள். இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் இருப்பதால் அதை நோக்கியே தமிழ் நாட்டு மீனவர்கள் உயிரைப்  பணயம் வைத்து மீன் பிடிக்க செல்கிறார்கள். தங்கள் பிழைப்புக்காக உயிரையும் விடுகிறார்கள்.

இது நீண்ட காலமாக தொடரும் சோகம். இதை முடிவுக்குக்  கொண்டு வர இருநாட்டு அரசுகளும் பேசித் தீர்க்க வேண்டும்.  முடங்கிப் போயிருக்கும் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதற்கு இருநாட்டு மீனவர்களும் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். அதேநேரத்தில் இருநாட்டுத் தமிழர்களின்  தொப்புள்கொடி உறவுமுறையும்  அறுந்து போகாமல் காப்பாற்றப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக என்றும் இருப்பவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான். இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய - இலங்கை அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட கச்சதீவு ஒப்பந்தம் இன்று திசைமாறிச் சென்று கொண்டிருப்பதால்,  ஒப்பந்தத்தை திருப்பப் பெறவேண்டும் என்ற கோஷம் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடமும் - மக்களிடமும் மேலோங்கி வருகிறது. அதே நேரத்தில் இலங்கைக்   கடற்  படையின் தாக்குதல்களும் கைது நடவடிக்கைகளும் தமிழக மீனவர்களை மேலும் கொதிப்படையச் செய்து வருகின்றன. அவர்களின்  போராட்டங்கள் கண்டு கொள்ளப்படாத நிலையில் தங்களது படகுகளில் வெள்ளைக் கொடிகளை ஏற்றிக் கொண்டு இலங்கை கடல்படையிடம் சரணடைவதற்காக கடலில் இறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.   இதற்காக  என்ன செய்யப் போகின்றன  மத்திய அரசும் மாநில அரசும்?  ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலைதான் இன்னும் தொடர்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சதீவு என்னும் குண்டுச் சட்டிக்குள் நின்று குதிரை ஓட்டாமல் தங்கள் மீன்பிடி முறையில் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி ஆழ்கடல் மீன்பிடி முறைக்குள் நுழைய வேண்டும். இந்தியப் பெருங்கடல் அந்தமான் - நிக்கோபார் தீவுகள் வரை  நீண்டு இந்திய மீனவர்களுக்காக காத்துக்கிடக்கிடக்கிறது. மத்திய அரசும் - மாநில அரசும் ஆழ்கடல் மீன்பிடி முறையை  ஊக்கப்படுத்தினால் இந்த உலகுக்கே இந்தியா  மீன் உணவை வழங்கலாம். அந்த அளவுக்கு இந்தியா கடல்வளம் நிறைந்த  நாடு. மத்திய அரசு ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் கவலையான செய்தி. 

என்.ஆர்.சோமு       

No comments: