Saturday, October 6, 2012

உணவாகும் உணர்வுகள்

'ஸ்கூல் பஸ் வர்ற நேரமாச்சு, சீக்கிரம் வாம்மா' என்றார் அப்பா.

'இதோ வந்துட்டேம்பா' என்று சொல்லிக்கொண்டே அப்பாவைப் பின் தொடர்ந்து அவரின் ஏழு வயது மகளும் வெளியே வந்தாள்.

மகளின் புத்தகப் பையை அவர் தோளில் மாட்டிக் கொண்டு நடந்தார். நாலு வீடு கடந்து தெருமுனை சென்றால் அங்குதான் ஸ்கூல் பஸ் வரும்.

அந்தத் தெருவின் மூலையில் வைத்திருக்கும் குப்பைத் தொட்டியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். வழக்கம் போல இருவரும் தம் மூக்கைப் பிடித்துக் கொண்டு அதைக் கடந்து சென்றார்கள்.

குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிந்து கிடந்த குப்பையின் நடுவில் நின்ற ஒரு இளைஞன் இவர்களைப் பார்த்து சிறிது புன்னகைத்ததைக் கூட இருவரும் கண்டுகொள்ளவில்லை.

மகளை பஸ்சில் அனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது தெருக்களில் அநாதையாய்க் கிடந்த குப்பைகளைக் காணவில்லை. எல்லாம் குப்பைத் தொட்டிக்குள் விருந்தாளிகளாய்ப் போயிருந்தன.

அந்த இளைஞன் மட்டும் தன் கையில் ஒரு பிளாஸ்டிக் கவரோடு நின்று கொண்டிருந்தான். இவரைப் பார்த்ததும் மீண்டும் புன்னகைத்தான்.

'ரெயிலில் பயணம் செய்யும்போது குப்பைகளைக் கூட்டிவிட்டு காசு கேட்கும் சிறுவர்களைப் போல இவனும் காசுக்குத்தான் நிற்கிறானோ' என நினைத்து அவனைப் பார்த்தும் பார்க்காதது போல் நழுவப் பார்த்தார்.

'சார், நான் குப்பைக் கூடைக்குள் கிடக்கும் பேப்பர், பிளாஸ்டிக், கோக் கேன், பழைய இரும்பு போன்ற பொருட்களை எடுத்து ரீசைக்ளிங் பண்ணும் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்' என்றான்.

'வேலைக்குப் போகும் அவசரமான இந்த நேரத்தில் இவன் ஏன் தன் சொந்தக் கதையைச் சொல்லி என் நேரத்தை வீணாக்குகிறான்' என எண்ணிய அவரும் ஏதோ விருப்பமில்லாமல் அவன் சொன்னதைக் கேட்டு நின்றார்.

'சார், நான் குப்பைகளில் தேடும்போது இந்த பிளாஸ்டிக் கவர் கிடந்தது. உள்ளே பார்த்தால் ஒரு நூறு ரூபாய் நோட்டு, ஒரு போட்டோ, இன்னொரு பேப்பர் கவர் உள்ளே இருந்தன. அந்தப் படம் உங்க படம் மாதிரி இருந்தது. இது உங்களுடையதான்னு பாருங்க சார்?' என்று நீட்டினான்.

அவரும் குப்பைக்குள் கிடந்ததைத் தான் தொடுவதா என்பது போல யோசித்து தயக்கத்தோடு மெதுவாகக் கையை நீட்டினார்.

அதைப் புரிந்து கொண்ட அவனும் 'பொறுங்க சார். கவருல அழுக்கா இருக்கு, நான் திறந்து காட்டுறேன்' என்று சொல்லி, தன் கையில் அணிந்திருந்த கிளவுசைக் கழற்றி விட்டு, கையைத் தன் சட்டைத் துணியில் துடைத்துக் கொண்டான். பின் கவனமாக அந்த பிளாஸ்டிக் கவரைத் திறந்து உள்ளே இருந்த போட்டோவை எடுத்துக் கொடுத்தான்.

போட்டோவில் தன் அருமை மகள் தன்னோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அப்படி ஒரு சந்தோஷம். எப்படி தன் மகள் படம் குப்பையில் போனது எனக் கூடவே வருத்தமும்.

அந்தப் பையன் மற்றதை உள்ளிருந்து எடுத்துக் கொடுக்கும் முன்னே, அவசரம் அவசரமாக அந்த பிளாஸ்டிக் கவரை அவனிடமிருந்து பிடுங்கி, ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தார். உள்ளே இரண்டு வாரமாகத் தேடிக்கொண்டிருந்த எல். ஐ. சி. பாலிசியும் இருந்தது கண்டு ரொம்ப மகிழ்ச்சி.

'ச்சே, கவருக்குள் நூறு ரூபாய் இருந்தும் அதை எடுத்துக்கொண்டு மற்றதைக் குப்பையில் போடாமல் என்னிடம் தர வந்தவனை எப்படித் தப்பாக நினைத்து விட்டேன்' எனத் தன்னைத் தானே நொந்து கொண்டார்.

'ரொம்ப நன்றி தம்பி. இது என்னுடையதுதான். தெரியாமல் குப்பை போடும்போது இங்கே வந்திருக்கிறது. இந்தக் கவரை என்னிடம் திருப்பிக் கொடுத்ததுக்கு இந்தா, இந்த நூறு ரூபாயை நீயே வைத்துக்கொள்' எனச் சொல்லி நீட்டினார்.

அவன் அதை வாங்க மறுத்தான்.

'என்ன தம்பி, நீ செய்த உதவிக்கு நூறு ரூபாய் போதாதா? இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறாயா?' எனக் கேட்டார்.

'மன்னிக்கவும் சார், நான் 'பூமியை சுத்தப்படுத்துவதுடன், மனிதர்கள் பயன்படுத்தி வீணாக்கிய பொருட்களை மீண்டும் பயனாக்கும் ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்க்கிறேன். குப்பையில் கிடந்த எத்தனையோ பொருட்களை என் கம்பெனியில் அல்லது பொருளின் சொந்தக்காரரிடம் கொடுத்திருக்கிறேன். எனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொருளுக்கும் நான் ஆசைப்படுவதில்லை சார்' என்றான்.

'இது என்ன கலியுகக் கண்ணனா என் கண் முன் நிற்பது' எண்ணிய அவருக்குத் தன்னைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.

தான் எப்படி ஒருவனைத் தவறாக எளிதில் எடை போட்டு விட்டோம் என எண்ணி வெட்கப்பட்டார்.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு, `ரொம்ப நன்றி தம்பி, உனக்கு உதவி செய்யலாம் என நினைத்துத்தான் அப்படி கேட்டேன். உண்மையில் நீதான் என் கண்களைத் திறந்து எனக்கு உதவி செய்து விட்டாய். என்னை மன்னித்துவிடு' என்றார்.

அவன் கையிலிருந்த சிறு அழுக்கு அவர் உள்ளத்தில் இருந்த பெரிய அழுக்கை நீக்கியது.

'என் வீடு இதே தெருவில்தான் இருக்கிறது தம்பி. உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் உன் வீடு போல வரலாம்' என்று சொல்லி நன்றியோடு நடந்தார். அவரின் கண் ஓரம் கொஞ்சம் ஈரம்.

இந்த சமுதாயம் இப்படித்தான் வயிற்றுப் பசிக்காகக் குப்பைத் தொட்டியில் தம் உணவைத் தேடுபவர்களையும், அல்லது குப்பை அள்ளி வாழ்பவர்களையும் ஒரு தாழ்ந்த எண்ணத்தில் பார்க்கிறது.

ஒரு பக்கம் தட்டிப் பறிப்பதால்தானே இன்னொரு பக்கம் கொட்டிக் கிடக்கிறது. மிஞ்சிய உணவினை ஏழைகளுக்குக் கொடுக்காமல் குப்பைத் தொட்டியில் போடுபவர்களே வெட்கப்பட வேண்டும்.

இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் கொடுத்து விட்டு, சுயமாகப் பரிமாறி உண்ணும் முறையில் (ஆமஊஊஉப), கிடைத்ததை எல்லாம் வயிற்றுக்குள் நிரப்புவது ஒருவகை. நமக்கென்ன என்ற எண்ணத்தில், அடுத்தவர்களுக்கும் வேண்டுமே என எண்ணாமல், தன் தட்டை நிரப்பி பின் குப்பைக் கூடையை நிரப்புவது இன்னொரு வகை.

ஒருவன் ஒரு லட்சம் ரூபாயைத் தொலைத்தாலோ அல்லது அழித்தாலோ, அவனின் வாங்கும் திறன் மட்டுமே குறையும். அதனால் உலகுக்கு அதிக இழப்பில்லை. ஆனால் ஒரு பிடி உணவை வீணாக்கினாலும், அதை உண்டாக்கிய உழைப்பையும் நேரத்தையும் இழக்கிறோம்; மீண்டும் அதைப் பெறக் காத்திருக்கிறோம். இது மன்னிக்க முடியாத குற்றம்.

காற்றும் நீரும் போல எல்லா உயிர்களுக்கும் மிகவும் முக்கியமானது உணவு. தாவரங்கள் மட்டுமே, ஒளிச்சேர்க்கை மூலம், தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன.

பிற உயிர்கள் எல்லாம் தாவரங்களையும், உணவுச் சங்கிலியில் இருக்கும் பிற உயிரினங்களையும் சார்ந்தே வாழ்கின்றன.

ஒவ்வொரு வேளையும் சமைத்து உண்டார்கள் நம் முன்னோர்கள். அவர் கள் எங்கே? வார நாட்களில் ஓடி ஓடி உழைத்து, வார இறுதியில் ஏழு நாட்களுக்கும் சமைத்து, குளிராக்கிப் பின் சூடாக்கி உண்ணும் நாம் எங்கே?

இரவு உணவுக்குப் பின் மிஞ்சியதைப் பசி என வருவோருக்குக் கொடுத்தார்கள் அன்று. இன்றோ, அதைக் குளிர் பெட்டியில் வைத்துப் பின்னால் உண்ணும் 'சுயபிச்சைக் காரர்கள்' ஆகி விட்டோம்.

முடியாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தானம் செய்யும்போதும் வாங்குவோரின் தன்மானம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒருவன் தன் குடும்பத்தோடு, வேலையில் இடமாற்றம் காரணமாக, சிறிய நகரத்தில் இருந்து பெரிய நகரத்துக்கு வந்தான்.

ஒருநாள், 'அம்மா தர்மம் போடுங்கம்மா' என்ற ஒரு வயதான குரல் கேட்டு வீட்டின் வெளியே வந்தான். கேட்டின் வெளியே ஒரு வயதான பெண். அவரின் கண்ணின் ஒளியைப் பசி தின்று விட்டது.

இதற்குள் அவனின் எட்டு வயது மகளும் வெளியே ஓடி வந்தாள். பத்து ரூபாயைக் கொடுக்கத் தன் பைக்குள் கையை விட்டவன் யோசனையோடு, `பாட்டி, உங்களுக்குப் பசி என நினைக்கிறேன், சாப்பிடுகிறீர்களா?' என்றான்.

அதைக்கேட்ட அந்தப் பாட்டியின் கண்களில் ஓர் இன்ப ஒளி. அதன் காரணம் வயிற்றுப் பசிக்கு உணவு என்றதாலா? அல்லது பிச்சை கேட்டவளையும் அன்போடு பாட்டி என ஒருவர் அழைத்ததாலா? எனத் தெரியவில்லை.

பாட்டியும் தலையை அசைத்து சம்மதம் தர, அதற்குள் சிறுமி கையில் உணவுத் தட்டோடு வந்தாள்.

உள்ளே வந்து சாப்பிடச் சொன்னாலும், பாட்டி மறுத்ததால் வெளியே சென்று உணவைக் கொடுத்தான். தட்டை வாங்காமல் ஒரு சிறு பிளாஸ்டிக் பையை நீட்டினார்.

'பசி இல்லையா பாட்டி' என அந்தக் குழந்தை கேட்க, 'உன்னைப் போல இரண்டு பேரக்குழந்தைகள் என் வீட்டில் பசியோடு இருக்கிறார்கள்' என்றார். இன்னும் கொஞ்சம் உணவு அந்தப் பைக்குள் சென்றது. குழந்தையின் கண்ணிலும் ஒளி ஒட்டிக்கொண்டது.

நாம் உண்ணும் உணவே நம் உணர்வாக மாறும் என்பார்கள். உணவின் தன்மையே உணர்வின் தன்மை. உண்ணாத உணவும் கூட அன்பால் அந்தப் பாட்டியின் பசியைத் தீர்த்தது.

உணவின் தேடலில் அன்போடு உணர்வையும் தேடுவோம்.

நல்ல உணர்வே உணவானால், உலகமும் நமதாகும்!

குமார் கணேசன்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் அழுக்கை நீக்கிய முதல் கதை...

அன்பு உணர்வின் (உணவின்) சிறப்பான இரண்டாவது கதை...

வாழ்த்துக்கள்... நன்றி...

ssr sukumar said...

நல்ல உள்ளத்தில்தான் நல்ல எண்ணங்கள் தோன்றும்.....

வல்லிசிம்ஹன் said...

குப்பையில் கிடைத்த மாணிக்கமோ முதல் கதை.
அன்னம் இட்ட கைகளின் புண்ணியமும்
அதைக் கொடையாகக் கொண்ட
பாட்டியின் ஆசிகளும் அளவிட முடியாதவை.
வாழ்த்துகள்.

தமிழ் காமெடி உலகம் said...

நாம் எண்ணும் எண்ணம் நல்லா இருந்தாதான் நாமும் நன்றாக இருப்போம்...

நன்றி,
மலர்
http//www.tamilcomedyworld(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

இராஜராஜேஸ்வரி said...

அவன் கையிலிருந்த சிறு அழுக்கு அவர் உள்ளத்தில் இருந்த பெரிய அழுக்கை நீக்கியது.


அழகான எண்ணங்கள் !