Monday, October 22, 2012

விளையாட்டில்லா விளையாட்டு!

'ஏங்க கொஞ்சம் நில்லுங்க... அங்கதான்... அங்கதான்... கிட்ட வராதிங்க... அங்க... அங்க... போதும்... போதும்...'

'என்னங்க, எதுக்கு என்னை நிக்கச் சொல்றீங்க?'

'என் கால்ல செருப்பு இருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.'

'அடப்பாவி, கால்ல கிடக்குற செருப்பு கூட உன் கண்ணுக்குத் தெரியலையா?'

'இல்லங்க... பக்கத்து ஊருல ஒரு கல்யாணம். மத்தியானம் சாப்பாடு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதுதான் குனியவும் முடியல.'

'அப்படின்னா உன் வாய்க்குள்ள ரெண்டு விரலை விட்டு, சாப்பிட்டதைக் கொஞ்சம் வாந்தி எடு. எல்லாம் சரியாப் போயிடும்.'

'அட நீங்க வேற. ரெண்டு விரலை விடுறதுக்கு இடம் இருந்தா இன்னும் ரெண்டு வடையை சாப்பிட்டுட்டு வந்திருப்பேனே!'

இதைக் கேட்டவர் தன் தலையில் அடித்துக் கொண்டார்.

இப்படித்தான் இன்றைய பள்ளிக்கூடங்களும். கொஞ்சம் இடம் இருந்தால் இன்னும் நாலு பெஞ்சைப் போட்டு நாப்பது மாணவர்களைப் புதிதாக சேர்த்து விடலாம் என்ற எண்ணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுத் திடல் வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.

அப்படியே விளையாட இடம் இருந்தாலும், படிப்பு மட்டுமே முக்கியம் என்று விளையாட்டைப் புறக்கணிக்கிறார்கள். பாடம் இன்னும் முடிக்கவில்லை என விளையாட்டு நேரத்தையும் தம் பாடத்துக்குக் கேட்கும் ஆசிரியர்களையும் பார்க்கலாம்.

குழந்தைகள் விளையாடுவது மிகவும் முக்கியம். பள்ளியில் மட்டுமல்ல, வீட்டுக்கு வந்த பின்னும் பிற குழந்தைகளோடு மாலையிலும், விடுமுறை நாட்களிலும் விளையாட வேண்டும்.

வர்ஷா அந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து சரியாக சாப்பிடுவதில்லை. பொதுவாக நன்றாகப் படிக்கும் அவளுக்கு இப்போது படிப்பிலும் கவனம் இல்லை.

அப்போதுதான் அவளுக்கு எட்டாவது பிறந்தநாள் வந்தது. வர்ஷாவின் அம்மாவும் அவளும் அந்தத் தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் போய் அவள் வயதை ஒத்தக் குழந்தைகளை அழைத்தார்கள்.

முதல் இரண்டு வீடுகளில் அம்மா அழைத்தாலும், அடுத்த வீடுகளில் வர்ஷாவே முந்திக் கொண்டாள்.

பிறந்த நாளன்று என்ன என்ன பண்ணலாம், எப்படி எப்படி கொண்டாடலாம் என்று வீட்டில் அக்காள், அப்பாவோடு பேசினார்கள். எல்லாவற்றையும் நன்றாகத் திட்டமிட்டபின் ரொம்ப ரகசியமாக வைத்திருந்தார்கள்.

வர்ஷாவின் பிறந்த நாளும் வந்தது. ஒவ்வொரு குழந்தையாக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். அவள் வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் ஓடி ஓடி கொடுத்தாள். ஒவ்வொருவர் பெயரையும் தெரிந்து கொண்டாள்.

கேக் வெட்டிய பின் எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதற்குப் பின்தான் யாரும் எதிர் பார்க்காத விளையாட்டு இருந்தது.

வந்தவர்களை இரண்டாகப் பிரித்து வின், லூஸ் ஆர் டிரா (Win, Lose or Draw) என்ற விளையாட்டை விளையாடினார்கள்.

ஏற்கெனவே எழுதிப் போட்டிருந்த துண்டுச்சீட்டில் ஒன்றை எடுத்து அதில் எழுதப்பட்டிருப்பதை படம் வரைந்து ஒருவர் காட்ட அவர் குழுவில் உள்ளவர்கள் என்ன எழுதப்பட்டது என்பதை ïகிக்க வேண்டும். போட்டிக்கான நேரம் மூன்று நிமிடங்கள்.

ஒவ்வொருவரும் வரைந்த விதம், அவர்கள் தந்த பதில்கள், அவர்களின் ஆட்டங்கள் என அந்த வீடே அதிர்ந்தது, ஆடியது. தம் குழந்தைகளை விட வந்த சில பெற்றோர்களும் அங்கேயே தங்கி விளையாட்டை ரசித்தனர்.

எல்லோரும் வீட்டுக்குப் போகும் போது ஒவ்வொருவருக்கும் பசில் (Puzzle) ஒன்றை பரிசாகக் கொடுத்து அனுப்பினாள்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் எப்படி பசில் விளையாடுவது என்பதைக் கற்றுக்கொள்ள வர்ஷாவை அழைக்க ஆரம்பித்தார்கள்.

பின் எல்லோரும் தினமும் மாலையில் சேர்ந்து விளையாடினார்கள். ஓரிரு வாரத்தில் அந்தத் தெருவில் வர்ஷாவைத் தெரியாதவர்களே இல்லை.

வர்ஷாவின் நடத்தையிலும் நல்ல முன்னேற்றம். படிப்பில் பிடிப்பு, உணவில் ஊக்கம், இரவில் தூக்கம் என எத்தனை மாற்றங்கள். புதிய நண்பர்கள் கிடைத்ததும், தினமும் அவர்களோடு விளையாடிய விளையாட்டும் எல்லா மாற்றத்துக்குக் காரணம்.

கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பலரோடு சேர்ந்து விளையாடுவதால் டீம் வொர்க் (TEAM WORK) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கூட்டு முயற்சி பற்றி சிறுவயதிலேயே தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை முடித்த பின்னும், வேலைக்கான நேர்முகத் தேர்விலும், வேலையிலும் இதைத்தான் அதிகம் வலியுறுத்துகிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றி பெறுவது உறுதி.

TEAM என்பதைக் கூட ‘Together Everyone Achieves More’ என அழகாகக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, கூட்டாக உழைத்தால் ஒவ்வொருவரும் தனித் தனியாக உழைக்கும் போது கிடைக்கும் பலனை விட ஒவ்வொருவருக்கும் அதிக பலன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காகத் தன்னையும் தன் அணி யையும் எப்படித் தயார் செய்து கொள்வது என்பதையும் கற்றுக் கொள்ளவேண்டும்.

இதற்குப் பயிற்சி அளிக்க ஒருவர் (Coach) கண்டிப்பாக வேண்டும். அவர் மேல் நம்பிக்கை வைத்து அவர் சொன்னபடி நடக்க வேண்டியது மிக முக்கியம்.

வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் மாறி மாறி வரும். வெற்றியின் போது வெற்றியை இழந்தவரை இகழாமல் இருக்கவும், தோல்வியின் போது தான் துவளாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும்.

பிறந்த குழந்தை உடனே ஓட முடியாது. அது புரண்டு, தவழ்ந்து, எழுந்து, நடந்து அதன் பின்தான் ஓட வேண்டும். எந்த ஒரு விளையாட்டும் அப்படித்தான். பல படிகளைக் கடந்துதான் வெற்றியை எட்ட முடியும்.

ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் அதை பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

இது விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான். விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் எடுக்காமல் வாழ்க்கைக்கும் பாடமாக எடுக்க வேண்டும்.

விளையாட்டு என்பது வீரர்களுக்கு மட்டும் அல்ல, அதைக் கண்டு களிக்கும் பார்வையாளர்களுக்கும்தான். ஒரு பார்வையாளராகத் தொடங்கி விரைவில் ஒரு வீரருக்கு அல்லது ஓர் அணிக்கு ரசிகராக மாறுவது இயற்கை.

இரண்டு நாடுகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டி நடந்தது. இரண்டு அணிகளையும் ஆதரித்து ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். ஒரு அணி முன்னேறும் போது அதன் ரசிகர்கள் சந்தோஷத்துடனும், பிறர் வருத்தத்துடனும் காணப்பட்டனர்.

விளையாட்டைக் காணச் சென்ற முல்லா மட்டும் எந்த அணி நன்றாக விளையாடினாலும் துள்ளிக் குதித்தார்.

அதைப்பார்த்த ஒரு ரசிகர், 'என்ன இது? நீ இரண்டு பக்கமும் வெற்றி பெறும்போது கை தட்டுகிறாய். எந்தப் பக்கம் நீ?' என்றார் சற்றுக் கோபத்துடன்.

முல்லாவோ, 'நான் இந்தப் பக்கமும் இல்லை, அந்தப் பக்கமும் இல்லை. ஆனால் விளையாட்டின் பக்கம்' என்றார். 'நான் ஆட்டத்தைத்தான் ரசிக்க வந்தேன்' என மேலும் சொன்னார்.

தான் விரும்பும் அணி வெற்றி பெறவேண்டும் என உற்சாகப்படுத்தித் தானும் சந்தோஷப்படலாம். ஆனால் எதிரணி தோற்க வேண்டும் என சத்தமிடுவது நாகரீகம் அல்ல. ஆனால் உலகெங்கும் அதுதான் நடக்கிறது.

விளையாட்டு, உலகத்தையே ஒன்று சேர்க்கிறது என்றால் அது மிகையல்ல. கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் உலகத்தில் உள்ள பல நாடுகள் ஒற்றுமையாகக் கலந்து கொள்கின்றன. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகள் கடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் ஏழு இடங்களைப் பெற்றவர்கள்.

மக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றாலும், இந்த ஆண்டு ஒலிம்பிக் பரிசு பட்டியலில் ஐம்பத்தைந்தாவது இடத்தைத்தான் பெற்றது என்பது கொஞ்சம் வருத்தமே.

தங்கத்தை ஆபரணமாக சேர்ப்பதில் நம் நாட்டு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் போது, நம்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் கூட பெறாதது நம் மனதை மிகவும் வாட்டுகிறது.

ஒருவர் வெற்றி பெறும் போது அவரைத் தோளில் தூக்கிக் கொஞ்சுவதும், அவர் ஒருமுறை தோல்வி அடைந்தாலும் அவரைத் தூற்றுவதும் நல்லதல்ல.

கிரிக்கெட் போன்ற ஒரு சில விளையாட்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தந்தால் நாமும் பல வெற்றிக் கனிகளை எளிதில் சுவைக்கலாம்.

உடல் விளையாட்டுகள் (Physical Games) மட்டுமின்றி, மன விளையாட்டுகளும் (Mind Games) உள்ளன. அந்தக் கால செஸ் முதல் இந்தக் கால கணினி விளையாட்டுகள் வரை இதில் அடங்கும்.

தனியாக இருக்கும் போது கிராஸ் வேர்டு (Cross word), சுடோகு (Sudoku) போன்ற மன விளையாட்டுகள் கூட நல்லது. ஆனால், மூளைக்கு இது சவாலாக இருந்தாலும், இன்னொரு மனிதரோடு நேரில் விளையாடுவதைப் போன்ற உணர்வைத் தராது.

விளையாட்டு என்பது சிறுவர்களுக்கு மட்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். சடுகுடு விளையாடும் சிறுவர் முதல், குடுகுடு என வாடும் கிழவர் வரை விளையாட வேண்டும்.

ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் விளையாட்டு பொதுவே. மாற்றுத் திறனாளிகளுக்காகக் கூட பல விளையாட்டுகள் இப்போது உள்ளன.

விளையாட்டு, உடலுக்கு உணவு மனதுக்கு உணர்வு!

No comments: