Monday, October 15, 2012

தானம் செய்வோம்

ஒருவன்... அன்று வெள்ளிக்கிழமை... வழக்கம் போல வேலைக்குப் போனான். மத்தியானம் போல அவனுக்கு சிறிது காய்ச்சல். நேரம் போகப் போக அவனுக்கு உள்ளே கொஞ்சம் குளிரும், சூடும் ஏறியது. மாத்திரை சாப்பிட்ட பின்னும் சரியாகவில்லை.

தன் மானேஜரிடம் அனுமதி கேட்டுவிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டான். ஒரு காபி மட்டும் குடித்து விட்டு அப்படியே படுக்கையில் படுத்தான். இடையில் அவன் மனைவி எழுப்பி ஒரு காய்ச்சல் மாத்திரை மட்டும் தந்தாள். அதை விழுங்கியவன் மீண்டும் நன்றாகப் போர்த்திக் கொண்டு தூங்கினான்.

காலையில் எட்டு மணிக்கு எழுந்தவன் கொஞ்சம் களைப்பாய் இருந்தான். மற்றபடி காய்ச்சல் எதுவும் இல்லை.

சனிக்கிழமை என்றதால் வேலைக்குச் செல்லவேண்டிய அவசியமும் இல்லை. சில இட்லிகளைச் சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தான். அவன் மனமும் சந்தோசமாக இருந்தது.

இன்னொருவன்... அதே வெள்ளிக்கிழமை... இன்னொரு ஆபீஸ். வழக்கம் போல காலையில் வேலைக்குப் போனான். நண்பர்களிடம் அரட்டை அடித்தான். ஆபீஸ் பையனிடம் சொல்லி மாலையில் கச்சேரிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினான்.

மனைவியை போனில் கூப்பிட்டு ஆறு மணிக்கு தயாராக இருக்குமாறு சொன்னான். கச்சேரிக்குப் போகும் வழியில் வெளியே சாப்பிடலாம் என்றான். மனதில் மகிழ்ச்சி அலைகள் துள்ளி விளையாடின.

பிற்பகல் நான்கு மணி இருக்கும். மானேஜர் அழைப்பதாகப் பியூன் வந்து சொன்னார். 'என்ன இது! ஏதாவது அவசர வேலையாக இருக்குமோ? கச்சேரிக்கு வேற டிக்கெட் வாங்கிட்டோமே. லேட்டாப் போனா வீட்டுல வேறு திட்டு கிடைக்கும்' என்று யோசித்துக் கொண்டே மானேஜர் அறைக்குள் சென்றான்.

'உங்கள் கிட்ட முக்கியமான விஷயம் ஒன்று சொல்லத்தான் கூப்பிட்டேன். எப்படி இருக்கிறீங்க?' என்றார் மானேஜர்.

'நல்லா இருக்கிறேன் சார், தேங்க்ஸ்' என்றான்.

'நீங்கள் செய்து கொண்டிருக்கிற பிராஜெக்ட் போன மாதமே முடிந்து விட்டது என்பது உங்களுக்கும் தெரியும். கண்டிப்பாக அந்தக் கம்பெனி அடுத்த பிராஜெக்ட் தருவாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனால் இப்போதைக்கு முடியாதுன்னு சொல்லிட்டாங்க'.

'ஆமா சார், தெரியும்'.

'அதனால, கம்பெனியை தொடர்ந்து நடத்த சில சிக்கன நடவடிக்கைகளை எடுக்கணும். கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்ய? இந்தாங்க உங்க இந்த மாதச் சம்பளம். இன்னொரு வேலை பார்த்துக்குங்க. வேற ஏதாவது பிராஜெக்ட் கிடைத்தால் நாங்க உங்களைக் கண்டிப்பா கூப்பிடுகிறோம். ரொம்ப நன்றி' என்றவாறு ஒரு கவரை நீட்டினார்.

கவரை வாங்கியவன் வீட்டில் வந்து கட்டிலில் தொப்பென விழுந்ததுதான் தெரியும். மனமெல்லாம் வலி. மனைவிக்குப் பதில் கூட சொல்லவில்லை. மாறாக எரிந்து எரிந்து விழுந்தான்.

ரொம்ப நேரம் காத்திருந்து விட்டு அவள் வீட்டிலேயே சமைத்தாள். அவன் எதுவும் சாப்பிடவுமில்லை.

இரவு முழுக்கப் புரண்டு புரண்டு படுத்தான். தூக்கம் தொலைந்ததுதான் மிச்சம். காலையில் எழுந்தால் பத்து நாட்கள் பட்டினி கிடந்தவன் போலத் தெரிந்தான். உணவு உள்ளே போக மறுத்தது.

மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். அவளின் ஆறுதல் அவனுக்கு அமைதி தரவில்லை. பைத்தியம் போல வீட்டுக்குள் நடந்தான், மீண்டும் படுத்தான், எழுந்தான். செய்வதறியாது புலம்பினான்.

ஆரோக்கியம் என்றவுடன் நமக்கு உடல் ஆரோக்கியம்தான் நினைவுக்கு வருகிறது. மன ஆரோக்கியத்தை யாரும் அதிகம் கண்டு கொள்வதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஒருவனுக்குக் காய்ச்சலால் உடல் வலி. ஒரு நாள் ஓய்வுக்குப் பின் சரியாகி விட்டது. இன்னொருவனுக்கோ வேலை போனதால் மன வலி. ஒரு வாரத்துக்குப் பின்னும் அதே வலி. இன்னொரு வேலை கிடைக்கும் வரை அது தொடரலாம்.

உடல் வலிக்கு நிறைய மருந்துகள் உண்டு. நிறைய மருத்துவர்களும் இருக்கிறார்கள். மன வலிக்கு மருத்துவர்கள் இருந்தாலும் அவர்களிடம் ஆலோசனை பெறுவதைக் கூடத் தப்பாகப் பார்க்கும் ஊர் நம்மூர்.

உடற்பயிற்சிகள் செய்யும் நாம் உள்ளத்துக்குப் பயிற்சி செய்ய மறக்கிறோம் அல்லது மறுக்கிறோம்.

சில உடற்பயிற்சிகள் உள்ளத்துக்கும் பயிற்சியாக அமைந்தாலும், யோகா, தியானம், பிராணாயாமம், பூஜை, ஜெபம், இசை, நல்ல சொற்பொழிவு கேட்டல், நல்ல புத்தகங்களைப் படித்தல், இயற்கையோடு ஒன்றி வாழுதல் எனப் பல பயிற்சிகள் உள்ளத்துக்கு நல்லதாகும்.

உள்ளப் பயிற்சியும் உடல் நோயைக் குணப்படுத்தும் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்தில், ஹியூஸ்டன் நகரில் உள்ள லேக்வுட் சர்ச்சின் மத குருவாக இருந்தவர் ஜான் ஆஸ்டீன். இவர் மிகவும் பிரபலமானவர்.

அவருடைய மனைவி டோடி ஆஸ்டீன் தனது 48 ஆவது வயதில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அவர் இயேசு மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். வேதாகமத்தில் உள்ள நம்பிக்கை ஊட்டும், நோயைக் குணப்படுத்தும் வசனங்களைத் தினமும் சொல்லி இறைவனை வழிபட்டார். நோய் விரைவில் முற்றிலும் குணமானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தன் 78 ஆம் வயதில், இன்றும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மருத்துவ உலகில் இது ஒரு மாபெரும் அதிசயம் ஆகும். இவரின் புத்தகத்தைப் படித்துப் பல நோயாளிகள் பலன் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள் பலவிதம். ஒவ்வொரு நோய்க்கும் பல காரணங்கள் உள்ளன. பிறக்கும் போதே சில குழந்தைகள் நோயோடு பிறப்பதையும் நாம் காண்கிறோம். பெற்றோரின் குணங்கள் மரபணு வழியால் குழந்தைகளுக்குச் சென்றடைகின்றன.

பெற்றோரின் சில பரம்பரை நோய்களும் குழந்தைகளைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி சூழலில் பெற்றோர் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல வீடுகள் சேர்ந்த கூட்டுக் குடியிருப்பு அது. ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு வந்த பெற்றோர்கள் அனைவரும் தம் குழந்தைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருவர் தம் மகள் வகுப்பில் முதல் மாணவி என்றும், இன்னொருவர் தன் மகன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெறுபவன் எனவும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ தம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் வரவில்லை என்றும் அல்லது கணக்கு மட்டும் தகராறு என்றும் கவலையோடு சொன்னார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தாய், 'நீங்கள் உங்கள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அன்பும் எதிர்பார்ப்பும் நல்லதே. ஆனால், முதலில் அவர்கள் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பதைப் பெரிய பாக்கியமாகக் கருதுங்கள். அதுவே இறைவன் கொடுத்த வரம். அழகு, படிப்பு, பேச்சு, விளையாட்டு எல்லாம் போனஸ்தான்' என்றார் சற்று கோபமாக.

அவரின் பேச்சைக் கேட்ட எல்லோரும் அவரையும் அவரின் குழந்தையும் பார்த்தார்கள்.

'ஆம், என் குழந்தைக்கு மதி இறுக்கம் என்னும் வியாதி இருக்கிறது. மற்ற குழந்தைகளைப் போல அவனும் பேசமாட்டானா, சாப்பிடமாட்டானா, விளையாடமாட்டானா என்பதே என் கவலை. முதல் பரிசு என்றோ அல்லது முதல் மதிப்பெண் என்றோ நான் அதிகம் ஆசைப்படவில்லை' என்றார்.

அவர் சொன்னது மிகவும் உண்மை. குறையோடு பிறப்பது குழந்தைகளின் தப்பில்லை. சொல்லப் போனால் பல நேரங்களில் அது பெற்றோர்களின் குறை தான்.

எனவே, நாம் அவர்களை அன்போடு வளர்க்க வேண்டும். மருத்துவம் வளர்ந்த இந்நாளில் எல்லா நோய்களுக்கும் ஒரு தீர்வு உண்டு.

அவ்வாறு செய்யாமல், அன்று 'அநாதை இல்லங்கள்' என அழைக்கப்பட்டு இன்று 'அன்பு இல்லங்கள்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இல்லங்களில், தான் பெற்ற குழந்தைகளை விடுவது எத்தனை கொடுமை.

நோயில் பிறந்த குழந்தைகளைத் தன் வீட்டில் வைத்து மோசமாக நடத்துவதை விட, அன்பு இல்லங்களில் அவர்களை விடுவது மேல் என்றே தோணுகிறது.

திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை என்றால், குழந்தை இல்லையே என ஏங்குகின்றார்கள். பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை இல்லையே என்று கவலை.

பின் அது கறுப்பா, வெள்ளையா, அழகா, இல்லையா என்று கவலை. நன்றாகப் பேசுமா, நன்றாகப் படிக்குமா, படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று டாக்டர் அல்லது என்ஜினீயர் ஆகி, நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து, பின் நல்ல இடத்தில் திருமணம் நடந்து, ஒரு வருடத்தில் ஒரு பேரக் குழந்தை பிறந்து, அவனுக்கும் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் இடம் கிடைத்து... என எத்தனை எதிர்பார்ப்புகள் கவலைகளோடு.

எதிர்பார்ப்புகளில் தப்பில்லை. ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரை மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன் எனக் கவலைப்படுவதுதான் மகா தப்பு. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளும், தேவையில்லாத எதிர்பார்ப்புகளும் தப்பு.

'நோயைக் குணப்படுத்துவதை விட நோயைத் தடுப்பது மேல்' என்று அன்று சொன்னார்கள். 'நோயைத் தடுப்பதே ஒரே வழி' என்பது இன்றைய அறிவுரை.

நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும், உண்ணும் உணவும் மிக முக்கியம். அவற்றின் மூலமாக உள்ளே செல்லும் நோய்க்கிருமிகள்தான் பெரும்பாலும் உடலில் நோயை உண்டு பண்ணுகின்றன.

எனவே சுத்தமாக இருந்தால்தான் சுகாதாரமாக இருக்க முடியும். நம் உடல், உள்ளம், வீடு, நாடு, பூமி எல்லாவற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

அறிவியல் வளரும் வேகத்தில் செயற்கை ரத்தம், செயற்கை உறுப்புகள் என எல்லாம் எளிதில் தயாரிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அதுவரை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் செய்வோம்.

மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாகும் நம் உயிரற்ற உடலுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம். கண், இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், தோல் என நம் உறுப்புகளைத் தானம் செய்வோம்.

இறந்த பின்னும் இவ்வுலகில் இன்னொருவர் வழி வாழ்வோம்!

குமார் கணேசன்

No comments: