Saturday, September 8, 2012

நண்பேன்டா!


திணிக்கப்பட்ட உறவுகளை விட தேடியும், தேடாமலும் கிடைக்கும் உறவான நட்பு மிகவும் சிறந்தது.

உறவின் உச்சகட்டம் நட்பு என்பதை விளக்கத்தான் 'தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்' எனத் தந்தை- மகன் உறவைச் சொல்வார்கள்.

சாதி, மதம், மொழி, பணம், பதவி எனச் சாக்கடையில் விழுந்து கிடக்கும் இதயங்களைக் கூட பூக்கடையாய் மாற்றுவது நட்பு.

பூக்களின் வண்ணம், வாசனை, அழகு, அளவு என எதுவும் பார்க்காமல் நட்பு என்ற மாலையை அலங்கரிக்கும்.

புதிதாகப் பள்ளிக்குச் சென்ற ஒரு வாரத்திலேயே நண்பர்களைப் பெற்று, வார இறுதியில் கூட வகுப்புகள் நடைபெறாதா என ஏங்க வைப்பது இந்த நட்பே.

நாள் முழுக்க நண்பனோடு இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் தொலைபேசியிலோ, குறுஞ்செய்தி மூலமோ மீண்டும் மீண்டும் தொடர்பில் இருக்க வைப்பது நட்பு.

இளமைப் பருவத்தில் ஏற்படும் நல்ல நட்பு வாழ்நாள் வரை நிலைக்கும். தகவல் தொடர்பு முன்னேறி இருக்கும் இந்நாளில் கேட்கவே வேண்டாம். அது தொடர்ந்து வளரும்.

பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தாலும் வேலை நிமித்தமாக தூரத்தில் இருந்தனர். ஒருவர் திருநெல்வேலி. இன்னொருவர் மும்பை.

முதலில் அடிக்கடி ஊருக்கு வந்தாலும், கல்யாணத்துக்குப் பின், தமக்கு வேலை, குழந்தைகளின் படிப்பு, விடுமுறை என வர முடியவில்லை.

இப்போது மும்பையில் இருக்கும் நண்பனும் தன் ஊரில் ஓர் அவசர வேலை இருந்ததால் தான் மட்டும் ஊருக்கு வந்தான். வாரநாள் என்பதால் மாலை தன் நண்பனைப் பார்க்கப் போனான்.

இந்த பதினைந்து வருடத்தில் மக்களும், சாலைகளும், போக்குவரத்தும் மாறிப் போய்விட்டன. பத்து நிமிடத்தில் போன தூரம் இப்போது ஒரு மணி நேரமாகிறது.

வீட்டுக்குப் போன நண்பனை நண்பனும், மனைவியும், இரண்டு குழந்தைகளும் அன்பாய் வரவேற்றனர். வாங்கி வந்ததைக் குழந்தைகளிடம் கொடுத்து விட்டு நண்பனிடம் பேசினான்.
 
நண்பன் மனைவி கொடுத்த காபி, நண்பன் வீட்டில் அவன் அம்மா அந்த நாட்களில் கொடுத்ததை, நினைவுபடுத்தியது.

'என்ன கல்லூரியில் நிறைய வேலையா? ரொம்ப களைப்பாக இருக்கிறீர்கள்' என நண்பனின் மனைவியிடம் கேட்டான்.

'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, கொஞ்சம் வேலை. அவ்வளவுதான்' என்றார்.

நண்பர்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். பிரிந்தவர்கள் சந்தித்தால் பேசவும் வேண்டுமோ என்பார்கள். ஆனால், நண்பர்கள் சந்தித்தாலோ தம் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பித்து பேசிக்கொண்டே இருப்பார்கள்.

'சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே' என்றார் நண்பனின் மனைவி.

அவரின் முகத்தில் பசி தெரிந்தது. கணவனின் நண்பன் என்றதால் நிறைய சமைத்து சாப்பாட்டு மேஜையில் வைத்திருந்தார்கள்.

'நீங்களும் குழந்தைகளும் உட்கார்ந்து சாப்பிடுங்கள். நான் பரிமாறுகிறேன்' என்றார்.

'எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாமே? நாங்கள் இருவரும் சோபாவில் இருந்து சாப்பிடுகிறோம்' என்றான் மும்பை நண்பன்.

'ஐயோ வேண்டாம், வேண்டாம். நான் நீங்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடுகிறேன்' என்றார் அவசரமாக.

பெண் விடுதலையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றாலும், தமிழ் நாட்டு பெண்கள் இன்னும் கிராமத்துப் பெண்களாகவே இருக்கிறார்கள். எத்தனை பாரதி வந்தாலும் அவர்களை மாற்றுவது கடினம்.

ஒரு தட்டில் உணவைப் போட்டவன் அதை அப்படியே நண்பனின் மனைவியிடம் நீட்டி, `வேலைக்கும் போய்விட்டு இத்தனை நேரம் நீங்கள் தனியாக சமைத்திருக்கிறீர்கள். பசி எல்லோருக்கும் பொதுவானதுதானே? அது ஆண், பெண், சிறியவர், பெரியவர், கணவன், மனைவி, நண்பன், பகைவன், ஏழை, பணக்காரன் எனப் பார்த்து வருவதில்லையே! நீங்கள் சாப்பிட்டால்தானே எங்களுக்கும் நல்லா சமைத்துத் தரமுடியும்?' என்றான்.

'ஆமாம்மா, அங்கிள் சொல்வதும் சரிதான். நீங்களும் சாப்பிடுங்கள்' என்றனர் குழந்தைகள்.

நண்பனும், 'ஆமா, வாங்கிக்க, அவன் எப்போதும் இப்படித்தான். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பெண் விடுதலை பற்றி பேசி மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றவன். கொஞ்சம் அதிக முற்போக்கு' என்றான்.

'எது சரியோ, அதைச் சொல்பவர்களையும், செய்பவர்களையும் முற்போக்குவாதிகள் என்று பட்டம் கொடுத்து விடுகிறீர்கள். சொல்லப் போனால், நீங்கள் செய்துகொண்டிருப்பதுதான் பிற்போக்கு' என்றான் மும்பை நண்பன்.

'சரி, சரி. எனக்கும் பசிதான். நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லி அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மனைவி.

சாப்பாட்டை ரசித்து உண்ட நண்பனும், சாப்பாடு ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினான்.

சாப்பிட்டு முடித்தபின், `ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். அம்மா வேலையும் பார்த்து விட்டு, கஷ்டப்பட்டு ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து செய்து தருவார்கள். நாங்களும் ஒன்றையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவதுடன் ஒரு நன்றி கூட சொல்வதில்லை' என்றனர் நண்பனின் குழந்தைகள்.

'இன்று முதல் நான் அம்மாவுக்குப் பாத்திரங்கள் கழுவி கொடுப்பேன், உதவியாய் இருப்பேன்' என்றாள் மகள்.

'நான் சாப்பிடும் மேஜையை தயார் செய்ய உதவுவேன்' என்றான் மகன்.

எப்படியோ இரண்டு நல்ல விதைகள் விதிக்கப்பட்டதில் மும்பை நண்பனுக்கும் நல்ல மகிழ்ச்சி.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சிறுசிறு வேலைகளைச் சொல் லிக் கொடுக்காமல், பெரியவர்கள் ஆனபின் அவர்கள் ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள் எனக் குறைகூறும் பெற்றோர்களே அதிகம்.

அன்று ஆண் மட்டும் செய்த வேலைகளைப் பெண்ணும் செய்யும் போது, இன்றும் பெண் செய்த வீட்டு வேலைகளைப் பெண் மட்டும் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

இப்படிப்பட்ட புதிய சிந்தனைகளை உறவுகள் சொல்வதைவிட நண்பர்கள் சொன்னால் புரிந்து கொள்வது எளிதாக இருப்பதும் உண்மையே.

குடும்ப உறவுகளில் உயர்வு, தாழ்வு உண்டு. பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் உண்மையான நட்பில், நட்பு மட்டுமே உண்டு.

ஒருவன் நல்ல இடத்தில் வந்து விட்டால், அவனை நண்பன் என்று சொல்லிக் கொண்டு வரும் பெரிய கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நண்பர்களையும், நண்பன் என்ற பெயரில் ஏமாற்ற நினைப்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு வாழ்வது மிகவும் அவசியம்.

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்தக் குளத்தின் நீரைப் பயிருக்குப் பயன்படுத்தியதால் நாளுக்கு நாள் நீரின் அளவு குறைந்து கொண்டிருந்தது.

ஒரு கொக்கு அந்தக் குளத்தின் கரையில் சோகமாக நின்று கொண்டிருக்க, மீன்கள் அதன் கவலையின் காரணம் கேட்டன.

'இந்தக் குளத்தில் நீர் எல்லாம் வற்றிப் போனால் நீங்கள் செத்துப் போவீர்களே?'என்றது கொக்கு.

'நாங்கள் பிறந்தது முதல் இந்தக் குளத்தைத் தவிர வேறொன்றும் தெரியாது. நீங்கள் தான் பல இடங்களுக்குப் பறந்து சென்று வந்துள்ளீர்கள். நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்' என்றன மீன்கள்.

'நண்பர்களே, இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு குளம் உள்ளது. அங்கே நீர் எப்பொழுதும் வற்றாது' என்றது கொக்கு.

இதைக் கேட்ட மீன்களின் முகத்தில் மகிழ்ச்சி. ஆனால் எப்படி அங்கே போவது என்ற கவலை.

'நான் ஒவ்வொருவராக வாயில் ஏந்தி, பறந்து சென்று, அந்தக் குளத்தில் விட்டு விடுகிறேன். நீங்கள் அங்கே பிழைத்துக் கொள்ளுங்கள்' என்றது கொக்கு.

நன்றியுள்ள மீன்களும் உடனே சம்மதித்தன. ஒவ்வொரு நாளும் கொக்கு மீனை வேறு குளத்துக்கு எடுத்துச் செல்வதாகச் சொல்லி, அருகில் உள்ள பாறையில் வைத்துக் கொன்று தின்றது.

ஒரு நாள் ஒரு நண்டு தன்னையும் அந்தக் குளத்தில் கொண்டு போய் விடுமாறு கேட்டது. கொக்கும் தன் கழுத்தில் மெதுவாகக் கடித்து தொங்கிக் கொண்டு வருமாறு சொல்ல, நண்டும் அவ்வாறே செய்ய, கொக்கு நண்டைத் தூக்கிச் சென்றது.

கொஞ்ச தூரம் பறந்து பாறை அருகே கொக்கு இறங்கி வரும் போது, கொக்கால் ஏமாற்றப்பட்டு கொக்குக்கு உணவான மீன்களின் மீதி எலும்புகள் இன்னொரு பாறை போலக் குவிந்து கிடப்பதை நண்டு பார்த்தது. கொக்கின் வஞ்சம் புரிந்து விட்டது நண்டுக்கு.

தன் கூரான பற்களால் கொக்கின் கழுத்தை நண்டு நறுக்க, கொக்கு பதறியது, துள்ளியது. பின் ரத்தம் கொட்டி இறந்தது.

நடந்து கொண்டே மீண்டும் குளத்துக்கு வந்த நண்டை மீன்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன. நண்டும் நடந்ததைக் கூற, நண்பன் எனச் சொல்லி ஏமாற்றிய தீய கொக்கைக் கொன்று தம்மைக் காத்த நல்ல நண்பன் நண்டுக்கு நன்றி சொன்னன.

கூடா நட்பினால் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி, படிப்பையும், வாழ்க்கை இழந்ததையும் காணலாம். எனவே, கவனமாகவும் இருக்க வேண்டும்.

பேனா நண்பர்கள் என முன்பு வெவ்வேறு நகரங்களிலும் நாடுகளிலும் இருந்தார்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு எழுதுவதிலும் அவர் களைப்பற்றித் தெரிந்து கொள்வதிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் ஆர்வம் காட்டினார்கள்.

இன்று இணைய தளத்தில், சமூக வலைத் தளங்களில், முகநூல் போன்ற தளங்கள் உள்ளன. எல்லா நாடுகளிலிருந்தும் நண்பர்கள் சேர உதவியாக இருக்கின்றன.

முகநூலைப் போன்ற இணைய தளங்களில் பல குழுக்கள் உள்ளன. உதாரணத்துக்கு 'உணவுப் பிரியர்கள்' என்ற குழுவில் புலம் பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்றவர்கள் தம் நாட்டின் உணவுப் பழக்கங்களையும், அன்றைய உணவைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்வது நன்றாக உள்ளது.

ஆனால் நண்பர்களைப் போலவே, இணையதளத்திலும் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்த பெரியவர்களிடம் அறிந்து கொள்ளவேண்டும்.

நண்பர்களைப் பெறுவது எப்படி? நீ ஒரு நல்ல நண்பனாக இரு, நிறைய நண்பர்கள் தானாகக் கிடைப்பார்கள். உன்னைப் பற்றி பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதைக் கேள். அது நட்புக்கு நல்ல உரமாகும்.

கண்ணீரைத் துடைப்பது உறவு என்றால், கண்ணீரைத் தடுப்பது நட்பு ஆகும்.

நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.

குமார் கணேசன்

No comments: