Saturday, September 22, 2012

அன்னைத் தமிழா? அந்நியத் தமிழா?

பவித்ரா தன் பக்கத்து வீட்டுத் தோழியிடம் இந்தியில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த அவளின் அம்மாவுக்கு ஆச்சரியமும் அதே நேரத்தில் கொஞ்சம் கோபமும் வந்தது.

கணவனைப் பார்த்து, `நாமும் ஒவ்வொரு வாரமும் தமிழ் வகுப்புக்கு அவளை அனுப்புகிறோம். வீட்டில் ஒரு வார்த்தை தமிழில் பேச மாட்டேன் என்கிறாள். ஆனால், இந்தியை மட்டும் எப்படித்தான் அவளால் பேச முடிகிறதோ?' என்றாள்.

பவித்ரா அமெரிக்காவில் பிறந்தவள். அவளின் பெற்றோர்கள் தமிழ்நாட்டில் படிப்பை முடித்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள். 'அருகில் இருக்கும்போது அருமை தெரியாது' என்பது போல அடுத்த நாட்டுக்குச் சென்றவுடன் தமிழ் மீது பற்று கொஞ்சம் அதிகமே அவர்களுக்கும் வந்தது.

வெளிநாட்டில் பிறந்த தம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் வராதோ என எண்ணிப் பயந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளைப் பார்க்க வைப்பதும், ஆங்கிலத்தில் மட்டுமே குழந்தைகளுடன் பேசுவதும் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம்.

நாளடைவில் அந்தக் குழந்தை ஆங்கிலத்துக்கு அடிமையானவுடன், `ஐயோ என் குழந்தை தமிழ் பேசமாட்டேன் என்கிறது' என்று கண்ணீர் விடும் பெற்றோர்களின் மத்தியில் பவித்ராவின் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள்.

தமிழ் ஆர்வலர்களின் மூலம் வார இறுதியில் நடத்தப்படும் தமிழ் வகுப்புகளுக்குத் தம் மகளையும் தவறாமல் அழைத்துச் சென்றனர். வீட்டில் கூட அவளுடன் தமிழிலேயே பேசினர். என்றாலும் பவித்ராவுக்கு ஆங்கிலம் தான் அழகாக வந்தது.

பவித்ராவின் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குப் போவதால், கடந்த ஆறு மாதமாக ஒரு குஜராத்தி அம்மாவிடம் அவளை விட்டு விட்டுச் செல்கிறார்கள்.

அந்த அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் அவர் ஆசைப்பட்டபடியே இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வாங்கியிருந்தார்கள். அந்த அம்மாவும், இந்தித் தொலைக்காட்சியும் பவித்ரா மீது இந்தியைத் திணிக்காமல் ஊட்டின.

எதையுமே படிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் படித்தால் அது மூளையில் ஏறுவதில்லை. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி எதையாவது கேட்டால் கூட அது எளிதில் நம்மிடம் அடைக்கலம் ஆகிவிடுகிறது.

ஒரு வருடம் முழுவதும் பரீட்சைக்காகப் படிக்கும் இரண்டு அடி திருக்குறள் மனதில் நிற்பதில்லை. மாறாக, ஒருமுறை கேட்ட சினிமா பாடல், இசையோடு வாழ்நாள் முழுவதும் நம்மோடு தங்கி விடுகிறது.

பவித்ராவின் பெற்றோர்களின் முயற்சியும் அப்படியே. மொழியை சொல்லிக் கொடுக்கும் போது இலக்கணத்தைத் திணிப்பதும், குழந்தை தப்பாகச் சொன்னால் சிரிப்பதும், கிண்டல் செய்வதும் பெற்றோர்கள் செய்யும் பெரும் தவறு.

இதனால்தான் இலங்கைத் தமிழர்கள் தன் சிறு குழந்தைகளையும் மரியாதையோடு, `வாங்க, சாப்பிடுங்க, விளையாடுங்க' எனச் சொல்கிறார்கள். இதைக் கேட்கும் குழந்தைகளும் தம் பெற்றோர்களை அப்படியே மரியாதையுடன் அழைக்கிறார்கள்.

வளர்ந்த பின் ஒரு காலகட்டத்தில் வித்தியாசத்தைப் புரிந்த பின் `வா, சாப்பிடு, விளையாடு' எனப் பெற்றோர்கள் சொன்னாலும், கற்ற மரியாதையைப் பிள்ளைகள் மறப்பதில்லை.

நம் நாட்டில் பல மாணவர்கள், தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஒரு மொழியைக் கற்கக் கஷ்டப்படுவதை நாம் காண்கிறோம். வெற்றி பெறக் குறைந்தபட்ச மதிப்பெண் முப்பத்தைந்தாக இருந்தாலும், அதையும் பெறுவதற்கு மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.

சரவணன் தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதை விடக் குறைவு. அப்படி என்றால் மற்ற பாடங்களில் கேட்கவே வேண்டாம். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப் படிப்பும் படிக்கலாம் என்றவனுக்கு அவனின் பெற்றோரும், உறவினரும், ஆசிரியரும் வழங்கிய பட்டங்கள் அதிகம்.

வாழ்க்கையை வெறுத்த அவனுக்கு மும்பையில் வசிக்கும் நண்பனின் ஞாபகம் வந்தது. உடனே அங்கே சென்றான். ஒரு கடையில் கணக்கு எழுதும் வேலை. வாடிக்கையாளர்களிடம் அவர்களின் மொழியில் பேசவேண்டிய கட்டாயம்.

ஒரே வருடத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொண்டான். எப்படி அவனால் இப்போது முடிந்தது? வாழ்க்கைப் பாடத்தில் தேறிய அவனால் பள்ளிப் பாடத்தில் ஏன் தேர்வு பெற முடியவில்லை என்பது புதிராக உள்ளது.

இளம் வயதில் குழந்தை தன் தாய்மொழியைக் கற்கிறது. வீட்டில் அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களாக இருந்தால், அதை அவர்களும் தம் வீட்டில் பேசினால், அந்தக் குழந்தை எளிதில் அவ்விரண்டு மொழிகளையும் கற்றுக் கொள்ளும்.

பொதுவாக, ஒரு மொழியை நன்றாகக் கற்றபின் இரண்டாம் மொழியைக் கற்பது எளிது என அறிஞர்கள் கூறுகிறார்கள். எந்த வயதிலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்றும், புதிதாக ஒரு மொழியைக் கற்க வயது ஒரு தடை இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜான் பவுரிங் என்பவர் மொழிபெயர்ப்பாளர், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் வெளிநாட்டுத் தூதர் ஆவார். அவருக்கு 200 மொழிகள் தெரியும். 100 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இன்னும் பல மொழிகளை அறிந்தவர்கள் எத்தனையோ உள்ளனர். அவர்களால் இருநூறு முடியும் என்றால் நம்மால் இரண்டாவது முடியாதா?

வயதான பின் ஒரு மொழியைக் கற்கும் போது, அவர்களின் தாய்மொழியின் உச்சரிப்பின் வாசனை இருக்கும் என்பது மட்டும் உண்மை. தமிழையே `குமரித் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், தஞ்சைத் தமிழ், சென்னைத் தமிழ்' என பல்வேறு வட்டாரத் தமிழில் பேசும் போது, அயல் நாட்டு ஆங்கிலம் அங்கங்கே மாறுவதில் வியப்பில்லையே.

எனவே, பள்ளியில் தாய்மொழியில் எல்லாப் பாடங்களையும் கற்றாலும் கூட, கல்லூரிக்குச் செல்லும் போது அவர்களின் தாய்மொழி அறிவு நன்றாக இருந்தால், கல்லூரியில் ஆங்கிலத்தில் எளிதில் எல்லாப் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை.

ஆனால், அண்மையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த மணிவண்ணன், தைரியலட்சுமி ஆகியோரின் முடிவு நம் மனதைப் பாரமாக்குகிறது. இருவரும் கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள்.

பள்ளிப் படிப்பைத் தமிழில் கற்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று, பொறியியல் கல்வி கற்க இடம் பெற்று, கற்றுக் கொண்டிருந்தாலும், தேர்வில் தேர்வு பெறமுடியாமல் தவித்துள்ளார்கள். இருவருக்கும் ஆங்கில வழிக் கல்வி ஒரு தடையாக இருந்திருக்கிறது.

மதிப்பெண்களை மட்டுமே மனதில் கொண்டு, முன்பின் இருப்பதைத் தெரியாமல், தேர்வுக்கு வேண்டியதை மட்டுமே மனனம் செய்வதால் வந்த விளைவாக இருக்கலாம்.

ஆரம்பப் பள்ளியில் மனனம் செய்யலாம், புரிதல் கடினம் என்பதால். அதன் பின் நடுநிலைப் பள்ளியில் புரிந்து மனனம் செய்யலாம். ஆனால், உயர் நிலைப் பள்ளியில் புரிந்து சொந்தமாக எழுதக் கற்றுக் கொள்ளவேண்டும். அதை, எந்த மொழியில் எழுதினாலும் சரி. ஆனால் எழுத்துக்கு மாணவன் சொந்தக்காரனாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தேனீக்கள் போல சுறுசுறுப்பாக உழைக்கலாம். ஆனால் அவை மலர்களிடமிருந்து தேனை உறிஞ்சி, பின் தம் கூட்டில் உமிழ்வதைப் போல தாமும் புத்தகத்தில் இருந்து புரியாமல் விழுங்கி தாளில் கொட்டக்கூடாது.

மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. என பல வகையான பள்ளிப்படிப்பு இருக்கின்றன. பாடங்கள் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும், கண்டிப்பாக தேர்வு முறை வேறுபடுகிறது.

மாணவர்கள் கற்றதைத் தாம் புரிந்துகொண்ட முறையில் எழுதும் கல்வி மிகச் சிறந்ததாகும். அதிக மதிப்பெண் எடுக்க எளிதாக இல்லாமல் இருப்பதாக அந்த முறை தோன்றினாலும் 'கற்க கசடற' என்பதற்கு அது வழிகோலும்.

மொழியை வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டும் எண்ணினால், மொழி பற்றிய பல சிக்கல்கள் நீங்கும்.

சைகை மொழி, ஒலி மொழியாக மாறிய காலத்தில் இருந்து பல்வேறு மொழிகள் உலகில் தோன்றியுள்ளன.
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி' என நாம் பெருமையுடன் கூறிக்கொண்டாலும், உலகில் தோன்றிய முதல் மொழி எது என்பதில் ஐயப்பாடுகள் உள்ளன.

எழுத்து வடிவம் கொண்ட மொழிகளும், வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழிகளும் உலகில் பல உள்ளன. ஒரே மொழியைக் கோடிக்கணக்கானோர் பேசுவதும், இன்னொரு மொழியை ஒருசிலரே பேசுவதையும் காணலாம்.

உலகில் சுமார் 6900 மொழிகள் உள்ளன என்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது. 1962ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1,652 மொழிகள் உள்ளன; 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பேசும் மொழிகள் 30 உள்ளன.

மனிதன் மட்டும் அல்லாமல் உலகின் எல்லா உயிர்களும் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

நல்ல மழை பெய்து, குளங்கள் எல்லாம் நிறைந்து, நாற்றங்காலில் நெல் நாற்றுப் பாவி, நன்செய் வயல்களில் உழுது, நீரூற்றி நாற்று நடத் தயாராக இருக்கும் காலங்களில் தவளைகளின் இன்னிசைக் கச்சேரியைக் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் கேட்டிருப்பார்கள்.
'வித்தெடு விதையெடு' என ஒரு குழுவும், பதிலுக்கு 'கம்பெடு தடியெடு' என இன்னொரு குழுவும் சொல்வதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். சற்று கூர்ந்து கவனித்துக் கேட்டால் அவர்கள் சொன்னது சரியாகவே தோன்றும்.

அவற்றுக்குள் என்ன கருத்துப் பரிமாற்றம் நடக்குது எனத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஒன்றுக்கொன்று கருத்துப் பரிமாறுகின்றன என்பது உண்மை.

தவளைகளைப் பற்றி இன்னோர் ஆச்சரியமான செய்தி. அவை பிற பூச்சி போன்ற உயிரினங்களின் சத்தத்தில் இருந்து அதன் அளவைப் புரிந்து கொண்டு, பின்பே அதைப் பிடித்து உண்ணும். அதற்கு முன், சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும், பட்டினியால் சாகுமே தவிர அதை உண்ண முயற்சி செய்யாது. உணவில் கூட மொழி பங்கு பெறுவதை உணரலாம்.

க, கா எனும் காகமும், கி, கீ எனும் கிளியும், கு, கூ எனும் குயிலும் தம் குரலை மாற்றுவதில்லை. குரலின் ஏற்ற இறக்கங்களால் தம் இனத்துக்கோ பிறவற்றுக்கோ வெவ்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றன. உலகின் எல்லா உயிர்களும்
அப்படியே. ஆனால் மனிதன் மட்டுமே புதுப்புது மொழிகளைக் கற்று புதுமையை ஏற்படுத்துகிறான்.
'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற பழமொழி, புதுமொழியைக் கற்பதுக்குப் பொருந்தாது. தன் ஐம்பது வயதிலும் புதுப்புது கணினி மொழிகளை உருவாக்குவதிலும், கற்பதிலும் மனிதன் கணினியோடு போட்டியிடும் போது பேசும் மொழியும் எளிதாகவே இருக்க வேண்டும்.

247 எழுத்துக்கள் கொண்ட நம் தமிழ் மொழியை நாம் எளிதில் கற்கும் போது, 26 எழுத்துகள் கொண்ட ஆங்கிலம் என்ன கடினமா?

கற்றலின் பயம் கழிப்போம்.
கற்றலின் பயன் சேர்ப்போம்!

குமார் கணேசன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... விளக்கங்கள் அருமை...

ஆங்கில மொழி மட்டும் மட்டுமல்ல... எந்த மொழியானாலும் அந்த மொழியிலே அர்த்தத்தை புரிந்து கொண்டால் விரைவில் கற்றுக் கொள்ளலாம்...

நன்றி...