Monday, September 10, 2012

ஹாலிவுட் டிரெய்லர் - 'த வேட்ஸ்'

என்னதான் இந்த 'த வேட்ஸ்' (The Words) ஹாலிவுட் படத்தின் ஸ்டில்ஸ் ரொமான்ஸ் படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும் விஷயம் காதல் அல்ல. கதை திருட்டு.

ரோரி ஜேன்சன், வளர்ந்து வரும் இளம் நாவலாசிரியன். கொஞ்சம் பேர் இவனது கதைகளை படித்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டு மொத்த அமெரிக்காவும் தன் எழுத்தை கொண்டாட வேண்டும் என்பது தான் இவனது கனவு, லட்சியம். அதற்காகத்தான் தொடர்ந்து நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறான். ஆனாலும், புகழ் வெளிச்சம் கண்காணா தொலைவில் இருந்தபடிதான் கண்ணாமூச்சி ஆடுகிறது.

குடும்ப வாழ்க்கை பழுதில்லை. சொல்லலப் போனால், கொடுத்து வைத்த வாழ்வு. அருமையான மனைவி. என்றேனும் ஒரு நாள் தன கணவன் ஜெயிப்பான் என தீவிரமாக நம்பும் காதலியே மனைவியாக அமைந்தது கொடுப்பினைதானே? கனவை நினைவாக்கவும், லட்சியத்தை நிறைவேற்றவும், தொடர்ந்து ரோரி ஜேன்சன் போராடுகிறான். மனைவி அதற்கு உறுதுணையாக நிற்கிறாள்.

ஒரு நாள் எதேச்சையாக பழம் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு செல்கிறான். அங்கிருக்கும் பொருட்களை சும்மா நோட்டமிட்டவனின் பார்வையில் ஒரு பெட்டிபடுகிறது. அதன் அழகு அவனை ஈர்க்கவே எடுத்து திறந்து பார்க்கிறான். உள்ளே ஒரு ஃபைல். அதைப் பிரித்தால், உடையும் தருவாயில் இருக்கும் பழுப்பு நிற காகிதக் குவியல் கண் சிமிட்டுகிறது. அந்தக் காகிதத்தில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று படித்துப் பார்க்கிறான்.

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஒருசேர தாக்குகின்றன. அது ஒரு நாவல். வாக்கிய அமைப்பும், சொல்ல வந்த விஷயமும் ரோரி ஜென்சனை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. உடனே அந்தப் பெட்டியை விலைக்கு வாங்கி, வீட்டுக்கு வருகிறான். மனைவி வெளியே சென்றிருக்கிறாள்.

தன் கம்ப்யூட்டர் முன்னாள் அமர்ந்து, அந்த நாவலை தட்டச்சு செய்ய ஆரம்பிக்கிறான். நாவலில் இருக்கும் வார்த்தைகளும், வாக்கியங்களும் தன் விரல்களின் வழியாக கம்ப்யூட்டரில் பதிவாவதை பார்த்து மகிழ்கிறான். கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தன் கணவன் மும்முரமாக எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு ஏக மகிழ்ச்சி. அருகில் வருகிறாள். இவனை ஆதரவாக அணைத்தப்படி கம்ப்யூடர் திரையில் மின்னும் வாக்கியங்களை படிக்க ஆரம்பிக்கிறாள்.

அவளால் நம்பவே முடியவில்லை. தன் கணவனுக்குள் இவ்வளவு திறமையா? அப்படியே சொக்கிப் போகிறாள். மனைவியின் கண்களில் வழியும் காதலை பார்க்கப் பார்க்க இவனுக்கு பயம் வருகிறது. அது, தான் எழுதிய கதையில்லை என எப்படி சொல்வது என திகைக்கிறான். மனைவியின் மகிழ்ச்சியைக் கெடுக்க மனமில்லாமல், தான் எழுதி வரும் நாவல் என பொய் சொல்கிறான்.

அந்தப் பொய் தொடர்கிறது. பழைய பெட்டியில் இருந்த யாரோ எழுதிய நாவல், இவன் பெயரில் புத்தகமாக வெளிவருகிறது. அமெரிக்காவே இவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

சரியாக அப்போது பார்த்து ஒரு வயதானவர், இவனைத் தேடி வருகிறார். இவன் பெயரில் வந்திருக்கும் நாவல், தான் எழுதியது என்று சொல்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை 'த வேட்ஸ்' ஹாலிவுட் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

'ஹெங் ஓவர்', 'லிமிட்லெஸ்' உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் ப்ராட்லி கூப்பர், இளம் நாவலாசிரியனாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்வில் இவருக்கு காதலியாக இருப்பவரும் 'அவதார்' பட நாயகியுமான ஜோ சல்டானா, இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். எனவேதான் காதல் காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன !

எழுதி இயக்கியிருப்பவர் ப்ரையன் க்ளுக்மேன் மற்றும் லீ ஸ்ட்ரென்தல் ஆகிய இரட்டையர்கள். இருவருக்கும் இதுதான் இயக்குனராக முதல் படம்.

கே.என்.சிவராமன்                 

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

நல்லது நடந்தால் சரிதான்....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வலைப்பூ தலையங்க அட்டவணை
info@ezedcal.com
http//www.ezedcal.com