Saturday, September 15, 2012

கற்க! கசடற!

ஒரு வளமான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதைப் பக்குவப்படுத்தி, நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் கிடைக்குமாறு ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு, வீரியமுள்ள விதைகளை விதைக்கிறோம்.

அவை முளைத்து, பின் வளர வளர அவற்றிற்குத் தேவையான உரமும், நீரும் வழங்குவதோடு பாதுகாப்புக்கு வேலி அமைத்து அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பிற களைகளைப் பிடுங்கி, நோயுற்றால் மருந்து தெளித்து, கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறோம்.

நாம் விதைத்த விதைகள் மலர்களாகி, காய்த்துப் பின் பல விதைகளை அல்லது கனிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நன்றியோடு தருகின்றன.

ஒவ்வொன்றுக்கும் தன் தன்மைக்கேற்ப விளைகாலம் மாறுபடும். நெல்லுக்கு நாலு மாதம் என்றால் வாழைக்கு பயிரிடும் இடத்தையும் பயிரின் இனத்தையும் பொறுத்து, ஏழு மாதங்கள் வரை ஆகலாம்.

அதிகமாக உரத்தைப் போட்டோ, நீரைப் பாய்ச்சியோ, பாட்டுப் பாடியோ அல்லது அதைச் சுற்றி ஆடியோ, ஆறு மாதத்துப் பயிரை ஆறு நாளில் அறுவடை செய்ய முடியாது.

பயிர் இயற்கையாக வளரவேண்டும். அதன் நுனியைப் பிடித்து வேகமாக இழுத்து நீட்டிவிட முடியாது. அப்படி முயன்றால் பயிரின் உயிர்தான் போகும்.

மாணவர்களும் அப்படித்தான். அவர்களுக்கு, நல்ல வசதிகள் நிறைந்த பள்ளிக்கூடத்தில், அன்பும் அனுபவமும் நிறைந்த ஆசிரியர்களை வைத்து, பாடங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.

வீட்டிலும் அவர்களின் படிப்புக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். என்றாலும் அவர்கள்தான் கற்க வேண்டும். அவர்களுக்காக வேறு யாரும் கற்றுக் கொள்ளமுடியாது.

விதைகளுக்கும் மாணவர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. நெல்லின் விதை போட்டால் நெல்தான் கிடைக்கும், சோளம் கிடைக்காது.

ஆனால், மாணவர்கள் களி மண் மாதிரி. களிமண்ணைப் பதமாகப் பிசைந்து எந்த பொம்மையும் செய்யலாம் என்பது போல, எந்த ஒரு குழந்தையும், தேவையானவற்றைக் கற்றுக் கொண்டு, கலை, அறிவியல், பொருளாதாரம், வணிகம், பொறியியல், மருத்துவம் என எந்தத் துறையிலும் வல்லுனராக முடியும்.

ஆனால் வீரியமுள்ள விதைகளைத் தேர்வு செய்வது போல, ஒரு காலகட்டத்தில், எந்தக் குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது, எதில் திறமை இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு படிப்பைத் தொடர வேண்டும்.

நம்பிக்கையே வாழ்க்கைதானே. முடியும் என நினைப்பதைத்தான் நம்மால் செய்ய முடியும்.

நம்மால் முடியும் என நினைத்தாலும், பல நேரங்களில் `உன்னால் முடியாது' என்ற எண்ணத்தைப் பிறர் நம் மீது திணிப்பதையும் அறிவோம்.

ஆண்ட்ரு மாத்யுஸ் (அஙூக்ஷசுக்ஞு ஙஹஞ்குக்ஞுசூ), தனது ஊச்ஙீஙீச்ஞு வச்ஞிசு ஏக்ஹசுஞ் என்ற புத்தகத்தில், ஓர் அழகான சோதனையைப் பற்றிக் குறிப்பிடுவார். அமெரிக்காவிலுள்ள `வுட்ஸ் ஹோல் ஓசனோகிராபிக் இன்ஸ்டிடிïட்' (ரச்ச்க்ஷசூ ஏச்ஙீக் ஞஷக்ஹஙூச்கீசுஹசிகுகூஷ ஐஙூசூஞ்கூஞ்ஞிஞ்க்) நடத்திய சோதனை அது.

ஒரு கண்ணாடி மீன் தொட்டியின் நடுவே தெள்ளத் தெளிவான கண்ணாடித் தட்டினை வைத்து அதை இரண்டாகப் பிரித்தார்கள். ஒரு பக்கத்தில் இருக்கும் மீன் அந்தக் கண்ணாடியின் வழியே அடுத்த பக்கத்தில் என்ன இருக் கிறது என்று பார்க்க முடியும்; ஆனால் போக முடியாது.

கண்ணாடித் தட்டின் ஒரு பக்கம் பேரகூடா (ஆஹசுசுஹஷஞிக்ஷஹ) என்ற ஒரு மீனையும், மறு பக்கம் மல்லெட் (ஙஞிஙீஙீக்ஞ்) என்ற ஒரு மீனையும் வைத்தார்கள். இரண்டும் வெவ்வேறு வகை மீன்கள். பேரகூடா மிக எளிதாக மல்லெட் என்ற மீனைக் கொன்று உண்ணக் கூடியது.

தொட்டியின் அடுத்த பக்கத்தில் மல்லெட்டைப் பார்த்தவுடன் அதை நோக்கி பேரகூடா வேகமாக ஓடியது. இடையில் இருந்த கண்ணாடி தெரியவில்லை.

ஓடிய வேகத்தில் பேரகூடா கண்ணாடியில் முட்டிக்கொண்டது. வலியால் துடித்து பின் திரும்பி வந்து மீண்டும் தன் உணவான மல்லெட்டை நோக்கி ஓடியது. மீண்டும் இடி பட்டது.

மீண்டும் மீண்டும் இந்த முயற்சி தொடர, முகத்தில் எல்லா இடங்களிலும் காயங்கள். வலியை உணர்ந்த பேரகூடா நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது.

அதற்குப் பின் அடுத்த பக்கம் போக முயற்சி செய்யவில்லை. இடையில் இருந்த கண்ணாடித் தட்டை எடுத்த பின்னும், அந்தப் பக்கம் போகாமல், அங்கேயே பட்டினியாக இருந்து செத்துப் போனது.

மாணவர்களும் இப்படித்தான். அவர்களுக்கும் கண்ணாடித் தட்டுக்குப் பதில் ஆசிரியர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என பல கண்ணாடித்தட்டுகள்.

'உனக்கு எது முடியும், எது முடியாது' என அவர்கள் தீர்மானித்து அவர்களின் எண்ணத்தை உன்னிடம் திணிக் கிறார்கள்.

'அவனுக்குக் கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது' என்று ஒருவர்.

'அவனுக்கு தமிழும் வராது, ஆங்கிலமும் வராது. எப்படி டாக்டர் ஆக முடியும்? சும்மா ஏதாவது ஒரு டிகிரி வாங்கட்டும்' என்று இன்னொருவர்.

அதையும் நேரடியாக அவனிடம் சொல்லமாட்டார்கள். அவனின் தலை எழுத்தை மற்றவர்களிடம் தேடும் பெற்றோர்களிடம் சொல்வார்கள்.

நம் பெயரைத் தேர்ந்தெடுக்கத்தான் நமக்கு வாய்ப்பில்லை. நம் பெயருக்குப் பின்னால் போடும் பட்டங்களையாவது தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நமக்குத் தந்தால் என்ன?

அரைகுறை வயதான பதின்மப் பருவத்தில் தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் படிப்பை முடிவு செய்ய வேண்டிய நிலையில் மாணவர்கள்.

பத்து முடிந்து பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடங்களை எடுக்கிறோமோ அதுவே பிற்கால வாழ்க்கையை முடிவு செய்வதாக எல்லோரும் எண்ணுகிறார்கள்.

இந்தியாவைப் போன்ற மக்கள் தொகை மிகுந்து, வாய்ப்புகள் குறைந்த நாடுகளில் அது ஓரளவு உண்மையும் கூட.

மாணவனுக்குப் பிடித்த பாடமாக இருந்தாலும், அவனுக்கு அதில் நல்ல திறமை இருந்தாலும், பிற சக்திகள் அதை அழித்து விட்டு, எது படித்தால் வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் திணிப்புகள் நடக்கின்றன.

இந்த வயதில் பல மாணவர்களுக்கு எதில் விருப்பம் அல்லது திறமை என அறிவது கடினம். நமது நாட்டின் கல்வி முறையும், பெற்றோர்களின் உலக அறிவுக் குறைவும் அதற்குக் காரணமாகும்.

அப்படிப்பட்ட நேரங்களில், உலக நடப்பை அறிந்து எதைப் படிப்பது நல்லது என மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதில் தப்பில்லை.

எதைப் படித்தாலும் அதைப் புரிந்து கொண்டு படித்தால் கண்டிப்பாக அந்தப் பாடமும் பிடிக்கும். ஆனால், தெரிந்து கொள்வதை விட தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமே நோக்கமாக நம் கல்விநிலை மாறியிருப்பது வருத்தத்துக்குரியது.

பல நாடுகளில் 70 விழுக்காடு என்பது குறைந்த மதிப்பெண்ணாக இருக்கும்போது, நம் நாட்டில் 35 விழுக் காடுகள் வாங்கினாலே தேர்வு பெற்றதாக விதிமுறைகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

படிக்காமல் கூடத் தேர்வு பெற்று விடலாம் என்ற ஒரு பொய்யான மாயையைத்தான் இது உருவாக்குகிறது.

'ஒருமைக்கண் தான் கற்றக் கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து' எனக் குறள் கூறுவது அப்படிப்பட்ட கல்வியையே.

தேர்வு எழுதிய ஏழாம் நிமிடத்திலேயே மறந்து விட்டு அடுத்தத் தேர்வுக்கான புதிய தகவலை உள்ளே ஏற்றும் இன்றைய படிப்பு ஏமாற்றமாகவே உள்ளது.

அந்தக் காட்டுப் பகுதியில் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் கூடச் சரியாகச் சுடவில்லை.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த மேலதிகாரி, அந்த வழியாக வந்த நரிக்குறவர் ஒருவரை அழைத்து சுடுமாறு வேண்டினார். அவரும் துப்பாக்கியை வாங்கி, கொஞ்சம் கூட யோசிக்காமல் பட படவென்று இலக்கினைச் சரியாக சுட்டார்.

பயிற்சி பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு ஆச்சரியம். `அவருக்கு சுடுவது மட்டும் தான் நோக்கம். அதை அனுபவித்து மகிழ்ந்து செய்தார். ஆனால் நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது போட்டியில் வெற்றி பெற்று விட வேண்டும், வென்றால் பதவி உயர்வு என்ற பலனை எண்ணி, சுடுவதில் கோட்டை விட்டு விட்டீர்கள்' என்றார் மேலதிகாரி.

மகிழ்ந்து படிப்பதை விட்டு விட்டு `இதைப் படித்தால் இது கிடைக்கும், அதைப் படித்தால் அது கிடைக்கும்' என்று பலனை மட்டும் எண்ணிப் படிப்பதால்தான் படிப்பு பலருக்கு பாகற்காய் ஆகிவிடுகிறது.

கல்வி என்பது உனக்கு எவ்வளவு தெரியும் என்பதல்ல; தெரிந்ததையும் தெரியாததையும் வேறுபடுத்தும் திறமையே அது.

நம்மைச் சுற்றியுள்ள இந்த பிரபஞ்சம் ஒரு மாயையானது. அறிவியலும், பொறியியலும், அருளியலும், பொருளியலும் அங்கே நிறைந்திருக்கிறது.

இயற்கையோடு மனிதனின் செயற்கையும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஓர் ஆழ்கடலின் ஒரு துளியாவது கற்று மகிழ்வோம், மகிழ்ந்து வாழ்வோம்.

அவன் நாலெழுத்துப் படித்தவன் என்பது ஆங்கில மோகத்தில் ஏ, பி, சி, டி என்ற நான்கு எழுத்துகளை அல்ல. மனிதன் என்ற நான்கு எழுத்துக்களை.

கற்கக் கசடற என்பது நாம் கற்பவற்றைக் குறையின்றி கற்பதோடு, நாம் குறையின்றி வாழவும் கற்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.

கற்போம் கசடற! வாழ்வோம் கசடற!

குமார் கணேசன்

No comments: