Saturday, August 25, 2012

மூன்றெழுத்து மந்திரம்

ரோஜா மலரை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதன் வாசனை ஒன்றுதான் என்றார் ஷேக்ஸ்பியர். அதைப் போலத்தான் அன்பு என்ற சொல்லும். எந்த நாட்டில், எந்த மொழியில், எந்த நேரத்தில், எப்படி அழைத்தாலும் அதன் அர்த்தம் ஒன்றே; அது மாறாதது. அன்பின் அர்த்தம் அன்பே.

தமிழில் உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்றையும் தன்னகத்தே கொண்டது அன்பு. இந்த அன்பு என்ற மூன்றெழுத்து மந்திரம் ஒருவரிடத்தில் இருந்தால் அது அவரையும், அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்கும் அகிம்சை ஆயுதமாகிறது.

அன்னை தெரசாவும் தம் மக்களின் நோயையும், பசியையும், பட்டினியையும் வெல்ல இதைத்தான் நாடினார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த இயேசு கிறிஸ்து அன்பை அன்பால் போதித்தார். 'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்ற நியதியை மாற்றி, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று புது நீதி வழங்கினார்.

நாம் வாழும் பூமி சூரியன் மீதும், நிலா பூமி மீதும் காட்டும் அன்பால்தானே நமது சூரிய குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பமாக இயங்குகிறது? இயற்கையே அன்பாக இயங்கும் போது, இயற்கையின் குழந்தைகளும் அன்பாகத்தானே இருக்க வேண்டும்?

ஒரு காந்தத்தின் எதிரெதிர் துருவங்களைப் போல இருவர் இருப்பார்கள். ஆனாலும் உடனே ஒட்டிக்கொள்வர். வேறிருவரோ, ஒரே துருவத்தைப் போல எல்லாம் ஒற்றுமையாக இருப்பர். ஆனால் அவர்களுக்குள் எப்போதும் சண்டைதான். மனித மனங்களைப் புரிந்து கொள்ள மனித மனங்களுக்கு சக்தி இல்லை.

குழந்தைகளில் கூட, சில குழந்தைகள் பள்ளிக்குப் போன முதல் நாளிலேயே சில நண்பர்களைப் பெறுவார்கள். வேறு சிலரோ, பத்து ஆண்டுகள் ஒன்றாகப் படித்தாலும் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களைப் போல்தான் நடந்து கொள்வார்கள்.

அவன் வீட்டுக்கு மூன்றாவது குழந்தை. சின்ன வயதிலேயே அப்பாவுக்கு உதவுவதற்காக அண்ணன் தன் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தினார். அக்காள் கல்யாணத்துக்கு வாங்கிய கடன் வேறு. கல்லூரியில் படிக்கும் தம்பி.

இதற்கிடையில் தந்தையின் அகால மரணம். இப்படிப்பட்ட சூழலில் அவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அமெரிக்கா சென்றான்.

நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த மறு வருடமே அம்மாவுக்குப் புற்றுநோய் என்னும் அதிர்ச்சி செய்தி. குடியுரிமை கிடைக்கும் வரை நாட்டை விட்டு வெளியே போகமுடியாத ஆயிரம் விதிகள்.

தன்னை நம்பி பலர் இருப்பதை உணர்ந்த அவன் ஊருக்கு வருவதைத் தள்ளிப் போட்டான். அம்மாவும் மகன் வரும் நாட்களை எண்ணி, மாதங்களை எண்ணி, பின் வருடத்தை எண்ண ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அம்மா உயிரோடு இருக்கும் போதே நிரந்தரக் குடியுரிமை கிடைத்தது. மறுநாளே அம்மாவைப் பார்க்கப் பறந்தோடி வந்தான்.

எலும்பும் தோலுமாக இருந்த அம்மாவைப் பார்க்க அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவன் அடக்கிக் கொண்டான்.

பள்ளிக்குச் சென்று கூட்டல் கழித்தல் படிக்காத அம்மா ஒவ்வொரு நாளையும் எண்ணி, `என்னைப் பார்க்காமல் எப்படி நாலு வருஷம் இருந்தாய் மகனே?' என்றாள்.

நிறைய நேரங்களில் கண்ணீர்தானே விடையில்லாக் கேள்விகளுக்குப் பதிலாய் வருகிறது. அவனும் அதைத்தான் செய்தான்.

தன் குழந்தை அழுவதை எந்தத் தாயாலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவளும் படுக்கையில் இருந்து எழுந்து அவன் கண்ணீரைத் துடைத்தாள். அவன் உச்சி முகர்ந்தாள். புதுத் தெம்பு கிடைத்ததைப் போல உணர்ந்தாள்.

அம்மா பல மாதங்களுக்குப் பின் எழுந்து நடந்ததால், தம்பியின் வருகை அம்மாவைக் குணப்படுத்திவிடும் என அண்ணனும் நம்பினான்.

தம்பி கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள்.

ஒரு வாரம் அம்மா கூட இருந்து பார்த்தான். என்றாலும் அவளின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிப் போய்க்கொண்டிருந்தது.

'டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என் அம்மா எனக்கு வேண்டும், ப்ளீஸ்' என்றான்.

'உன் அம்மாவுக்குக் கருப்பையில் கேன்சர். அவர்கள் வாழ்ந்தது கிராமம் என்பதால் பிறரிடம் சொல்வதற்கு வெட்கப்பட்டு நோய் முற்றும் வரை விட்டுவிட்டார்கள். நோய் உடலின் பிற பாகங்களுக்கும் பரவி விட்டது. இன்றோ, நாளையோ, அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ' என்றார் டாக்டர்.

எத்தனை படித்தாலும் தனக்கு என வரும்போது அறிவியல் விதிகளெல்லாம் மாறி விடாதா என நினைக்கத் தோன்றும். அவனும் விதி விலக்கல்ல. அப்படியே நினைத்தான்.

படித்து முடித்தவுடன் வெளிநாடு சென்றதால் அம்மாவின் அருகில் இருந்து அம்மாவுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று அவனுக்குக் கவலை.

'அம்மா, உங்களுக்கு ஏதாவது வேண்டுமா அம்மா? நான் போய் வாங்கி வருகிறேன்' என்றான்.

பெற்றோர் தன் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டும், கேட்காமலும் வாங்கிக் கொடுப்பதை விட, தன் குழந்தைகள் பெற்றோருக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதை காதால் கேட்பதே ஆனந்தம்.

'எனக்கு என்னப்பா வேணும். ஆண்டவன் அருளால், அண்ணன் என்னை நல்லா பாத்துக்கிட்டான். நீயும் உண்ணாமல், உறங்காமல் உழைத்து நம் குடும்பத்தையே பார்த்துக் கொண்டாய். உன் அப்பா இருந்திருந்தால் உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்' என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவன் மீண்டும் மீண்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, 'பக்கத்து அறையில் இருக்கும் பாட்டிக்கும் புற்றுநோய் தான். அவளின் பையன் சாதாரண வேலைதான் செய்கிறான். கரண்ட் பிடிப்பதற்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாள். உன்கிட்ட பணம் இருந்தால் கொஞ்சம் அவர்களுக்குக் கொடுப்பாயா?' என்றாள் அம்மா.

'பெற்ற அம்மாவுக்கு நோய் என அறிந்தும் உடனே வரமுடியாத நான் எங்கே? சில நாளே பழகினாலும் கூட, சக நோயாளியிடம் அன்பாகப் பழகி அவளுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் அம்மா எங்கே?'

'எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொடுங்கள் அம்மா. இது உங்கள் பணம்' என்று அம்மாவின் கையில் தன் பணப்பையைக் கொடுத்தான்.

இறக்கும் தருவாயிலும் கூட ஈகை செய்த கர்ணனாக அம்மாவைக் கண்டு வணங்கினான்.

இந்த அம்மாவைப் போல நாமும் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். தன்னால் முடிந்த அளவு எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்.

உதவி செய்வதில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனப் பார்க்காமல் யாருக்கு உண்மையாக உதவி தேவைப்படு கிறதோ அவர்களுக்குச் செய்ய வேண்டும். அன்பைத் தருவது கூட மிக உயர்ந்த உதவியே.

நாம் எல்லோரும் இந்த இயற்கையின் குழந்தைகள். உலகில் உள்ள எல்லா உயிர் களும் அவளின் குழந்தைகள் என்றால் தாவரங்கள், விலங்குகள் எல்லோரும் நமக்கும் உறவுதானே?

மனிதனின் தகாத செயல்களால் பல உயிரினங்கள் இந்த பூமியை விட்டே விரட்டப்பட்டது கொடுமையானது.

பலவிதமான உயிரினங்களைப் பிடித்து அவற்றைச் சுதந்திரமின்றி மிருகக் காட்சி சாலை என்ற பெயரில் அடைத்து வைப்பது கூட தவறானதுதான்.

கறுப்பர், வெள்ளையர், இந்தியர், இந்தோனேசியர், சைபீரியர், சைனீஸ் எனப் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களை மனிதக் காட்சி சாலை என அடைத்து வைத்து வேடிக்கை பார்த்தால் எப்படி இருக்கும்?

அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இன்று நாமே அவை வாழும் இடங்களில் சென்று பார்க்கலாம். அல்லது காணொளியில் பதித்து நேரில் பார்ப்பதை விடத் தத்ரூபமாகப் பார்த்து மகிழலாமே.

தான் வேட்டையாடி சுயமாக உண்ணும் புலிக்கும் சிங்கத்துக்கும், கொன்ற மாமிசத்தைத் தின்னச் சொல்லலாமா? வேட்டையாடி உண்பதுதானே அதன் உடற்பயிற்சியும் கூட.

ஆராய்ச்சி என்ற பெயரில் சுண்டெலி முதல் மனிதக் குரங்கு வரை தெரிந்தே நோயை உண்டாக்குவதும், தெரியாத மருந்தைக் கொடுப்பதும் அன்பின் இலக்கணமா?

உயிருள்ள பொருளை மட்டும் அல்லாமல், தனக்குப் பிடித்த உயிரில்லா பொருளின் மீது கூட அன்பைக் காட்ட வேண்டும்.

அந்த வீட்டில் அப்பா கொஞ்சம் கொள்கைவாதி. 'இயற்கை வளங்களை வீணாக்கக் கூடாது, அடுத்த சந்ததியினருக்கு விட்டு வைக்க வேண்டும், நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கி வீணாக்குவது குற்றம்' என்பார்.

அன்று அவர் தன் அலுவலகத்திலிருந்து எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார். வீட்டில் ஓர் அறையில் யாரும் இல்லை; ஆனால் காற்றாடி வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்தது; மின் விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

`எத்தனை நாள் உங்களிடம் சொல்வது? மின்சாரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் கிடைக்கும் மின்சாரத்தையும் ஏன் இப்படி வீணாக்கு கிறீர்கள்' எனக் கத்தினார்.

அப்பாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரின் ஆறு வயது மகள், 'உஷ், டாடி, சத்தம் போடாதீங்க. என் பொம்மை தூங்குது. அதுக்குக் காற்று வேணும்னு நான் தான் காற்றாடி போட்டேன்' என்றாள்.

தன் மகளின் அன்பை எண்ணி அவளை அப்படியே வாரி அணைத்தார். ஒரு பொம்மையிடம் கூட அன்பு காட்டும் அவளின் குணத்தை எண்ணி வியந்தார்.

தன் பொம்மையின் மேல் வைத்திருக்கும் குழந்தையின் அன்பு ஒரு விதம் என்றால், தான் வைத்திருக்கும் பொருளின் மதிப்பிற்கேற்பத் தன் உயிரையே வைத்திருப்பதாக நினைக்கும் பெரியவர்களின் அன்பு இன்னொரு விதம்.

புதிதாகக் கார் வாங்கியவர் தன் காரில் சவாரி செய்தார். முன்னால் சைக்கிளில் மெதுவாகச் சென்ற வனைத் தன் கவனக் குறைவால் இடித்து விட்டார்.

சைக்கிளில் சென்றவன் எதுவும் சொல்வதற்குள் 'ஐயோ... ஐயோ... பத்து லட்சம் கொடுத்து வாங்கின என் புதுக் காரை, பத்து ரூபாய் பெறாத ஓட்டை சைக்கிளை வைத்துக் கோடு போட்டு விட்டியே' எனக் கத்தினார். அவனை அடிக்காத குறைதான்.

அவரின் புதுக் கார் அந்த ஏழையின் ஒரே சொத்தான பழைய சைக்கிளைக் கொன்று விட்டது என்பதை அந்தப் பணக்காரர் அறிவாரா?

அன்புக்கு இலக்கணம் அன்பே.
அன்புக்கு இலட்சியமும் அன்பே!

குமார் கணேசன்

1 comment:

Easy (EZ) Editorial Calendar said...

அன்பு என்றால் அன்பு
உண்மையான கருத்து


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)