Saturday, August 11, 2012

இன்று ஒரு தகவல் - பொன்னகை வெல்லும் புன்னகை

அழுது கொண்டிருந்த தன் தங்கையின் குழந்தையை வாரி அணைத்த ஆனந்தன், 'கண்ணா, உனக்கு ஒரு விளையாட்டு சொல்லித்தரவா?' என்றான்.

குழந்தை அழுகையை நிறுத்தாமல் `சரி' எனத் தலையை மட்டும் ஆட்டினான்.

'உன் கையைக் கொடு' எனச் சொல்லி, குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு விரலையும் மெதுவாகத் தொட்டு, 'இது சோறு, இது பருப்பு, இது கூட்டு, இது ரசம், இது மோர்' எனச் சொல்லவும் குழந்தையின் அழுகை கொஞ்சம் குறைந்தது.

பின் மீண்டும் ஒவ்வொரு விரலையும் தொட்டு, `இது தாத்தாவுக்கு, இது பாட்டிக்கு, இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு, இது உனக்கு' என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஊட்டி விடுவதைப் போலக் காட்டினான்.

அழுகையைக் குறைத்த குழந்தை இப்போது அதை அறவே நிறுத்தியது.

'எனக்கு வேண்டாம் மாமா, இது உனக்கு' என்றான் தன் சுண்டு விரலைத் தொட்டுக் கொண்டே.

ஆனந்தும் இலேசாக சிரித்துக் கொண்டான்.

இந்த விளையாட்டு நம் குழந்தைகளுக்கு தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு, உறவு முறைகளையும் கூறி, பிறருக்கும் கொடுத்து உண்ண வேண்டும் என்ற நல்ல பழக்கத்தையும் சொல்கிறது.

ஒவ்வொருவருக்கும் உணவு கொடுத்த பின் குழந்தைக்குக் கிச்சுக் கிச்சு மூட்டினான் ஆனந்தன். இதுதான் விளையாட்டின் உச்சகட்டமே. பிறருக்குக் கொடுக் கும் போது சிரித்துக் கொண்டு கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

குழந்தைகளின் விளையாட்டில் கூடப் புன்னகையைப் புகுத்தி வாழ்க்கைக்கு வழிகாட்டிய நம் முன்னோர்கள், முன்னோர்களே.

சிறுவயதில் குழந்தைகளுக்கு நல்லதைச் சொன்னாலும் அவர்கள் வளரும் போது பெற்றோர்களே அவர்கள் கற்றதை மறக்கச் செய்து மற்றதை கற்கச் செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டுக்கு, `சாலையைக் கடக்கும் போது சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால், பச்சை விளக்கு வரும் வரை காத்திருந்து பின் செல்ல வேண்டும்' எனக் குழந்தையிடம் சொல்லிவிட்டு, இரண்டு பக்கங்களும் பார்த்து விட்டு வண்டி எதுவும் வரவில்லை என்றால் பெற்றோர்கள் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு கடகடவென கடந்து செல்லும் போது `எப்படி சாலை விதிகளை உடைப்பது' என்பதையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பார்கள். அது குழந்தைகளின் களங்கமில்லா சிரிப்புக்காகத்தான். அடித்து விரட்டினாலும் நாய்க்குட்டி வாலை ஆட்டிக்கொண்டு நம்மிடமே வருவதைப் போல, பெற்றோர்கள் திட்டினாலும், கொஞ்சம் தட்டினாலும், அதை உடனே மறந்து மீண்டும் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பார்கள் குழந்தைகள்.

குழந்தைப் பருவத்தில் தெய்வமாக வாழ்ந்த குழந்தை, வளர வளர பெற்றோரைப் போல மாறி விடுகிறது. வளர வளர நல்லவை தேய்ந்து கெட்டவை வளர்வது ஏனோ?

'கடைசியாக ஒருமுறை சிரியுங்கள்' எனப் புகைப்படக்காரர்கள் புதுமணத் தம்பதிகளிடம் சொல்வதாக ஒரு நகைச்சுவை உண்டு.

கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ தலைவலியாய் அமைவார்கள் என்பதில்லை இது. கல்வி, வேலை, குடும்பம் என ஒவ்வொரு நிலையும் வித்தியாசமானது; குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் என்பதைக் குறிக்கத்தான் இது எனத் தோன்றுகிறது.

இன்றைய திருமணங்களில் புன்னகை இருக்க வேண்டிய இடங்களில் பொன்னகை இடம் பிடித்துள்ளதை நாம் அறிவோம். தன் திருமணத்துக்காகப் பெற்றோர்கள் கஷ்டப்படும்போது எந்தப் பெண்ணுக்குத்தான் புன்னகை வரும்?

இப்போது பலருடைய வாழ்க்கையும் இப்படித்தான் மகிழ்ச்சியைத் தொலைத்து மயக்கத்தில் நடக்கிறது. ஒருவருக்கு ஒருவர் உதவாவிட்டாலும் ஒரு புன்னகையையாவது கொடுக்கலாமே.

வெளிநாடுகளில் எதிரெதிர் ஒருவரைப் பார்க்கும் போது புன்னகையோடு 'குட் மார்னிங்', 'குட் ஈவினிங்' எனச் சொல்லி மகிழ்வர். நாமும் இப்படிச் சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொண்டோம். ஆனால் ஏன் சொல்கிறோம் என அறியோம்.

பயந்து பயந்து மாணவர்கள் தம் ஆசிரியர்களுக்குச் சொல்வதையும், பதிலுக்கு அவர்களை வாழ்த்தாமல், புன்னகை கூடத் தராமல், 'சொல்ல வேண்டியது உன் கடமை' என எண்ணி விலகிச் செல்வதையும் நாம் பார்க்கிறோம். இதே மாதிரித்தான் முதலாளிகளும், தொழிலாளிகளும்.

இன்று கல்லூரிக்குச் சென்றாலும் கடைக்குச் சென்றாலும் சிரித்த முகத்தோடு வாடிக்கையாளர்களை வரவேற்பது மிகமிகக் குறைவே.

துணிக் கடைக்குச் சென்றால் நான்கு சேலைகளை எடுத்துக் காட்டியவுடன் முகம் சுளிக்கும் விற்பனையாளர்கள், உணவுக் கூடத்தில் உண்ணும் போது 'சாப்பாடு எப்படி இருக்கிறது?' என்று கூடக் கேட்காத பரிமாறுபவர்கள்... எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இறைவனின் படைப்பாக இருந்தாலும் இயற்கையின் பரிணாம வளர்ச்சியாக இருந்தாலும் நாமெல்லாம் உறவுதானே. ஒருவரை ஒருவர் புன்னகையோடு வாழ்த்தினால் என்ன தவறு?

புன்னகையோடு 'முடியாது' என்று சொல்வது அழுது கொண்டே ஆம் சொல்வதை விட மேலானது. சிரித்த முகத்தோடு மட்டுமல்ல, கர்ணன் தன் கையைத் தாழ்த்தி பிறர் எடுத்துக் கொள்ளுமாறு கொடுத்ததாக மகாபாரதம் சொல்கிறது.

அமெரிக்காவில் பல ஆண்டுகள் வாழ்ந்து குடியுரிமை பெற்ற பின்னும் தாய் மண்ணின் வாசனையால் இந்தியா திரும்பிய விக்னேஷ் தொழில் நிமித்தமாக அடிக்கடி அமெரிக்க சென்று வந்தான்.

ஒரு முறை செல்லும் போது ஜி.பி.எஸ். என்னும் போக்குவரத்து வழிகாட்டும் கருவியை எடுத்துச் செல்ல மறந்து விட்டான்.

விமான நிலையத்தில் வாடகைக்கு வண்டியொன்றை எடுத்தான். சாலை சீரமைப்பினால் பல தெருக்கள் மூடப்பட்டு வழிமாற்றம் செய்யப்பட்டிருந்தன.

தெருக்களில் வழி தெரியாமல் அங்கும் இங்கும் ஓட்ட, போலீஸ் காரின் சிவப்பு நீல விளக்கும், சைரன் சத்தமும் அவனை நிறுத்தின.

அருகில் வந்த போலீஸ் புன்னகையோடு மாலை வணக்கம் கூற, அவனும் புன்னகையுடன் பதில் வணக்கம் கூறி, தன் ஓட்டுனர் உரிமத்தைக் கொடுத்தான். சோதித்து விட்டுத் திருப்பி போலீஸ் அதைக் கொடுத்துவிட்டு `சிரமத்துக்கு மன்னிக்கவும்' என்றார்.

பல தெருக்கள் மூடியிருப்பதைப் பற்றி விக்னேஷ் குறிப்பிட, ஏற்றுக்கொண்ட போலீஸ், `சாலை வேலை நடக்கிறது, மன்னிக்கவும்' என்றார்.

'நான் உங்கள் வண்டியை நிறுத்தச் சொன்னதற்குக் காரணம், நீங்கள் உங்கள் வண்டியின் ஹெட் லைட் ஆன் செய்ய மறந்து விட்டீர்கள்' என்றார்.

'சூரியன் மறைந்ததும் தானாக ஹெட் லைட் ஆன் ஆகும் என நம்பியதால் ஆன் செய்யவில்லை' என அவன் கூறியதை ஏற்றுக்கொண்ட போலீஸ் அதை ஆன் செய்யச் சொல்லி அது வேலை செய்கிறதா என சரி பார்த்துக் கொண்டார்.

பின், 'நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' எனக்கேட்டு அறிந்து, விக்னேஷ் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு போகும் வழியில் பல தெருக்கள் மூடி இருப்பதால், பதினைந்து மைல் தூரத்தையும் தன்னைத் தொடர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ் தொடர ஓட்டலை அடைந்ததும், முன்பதிவு இருக்கிறது என்பதையும் உறுதி செய்தபின் மீண்டும் ஒரு புன்னகை தந்துவிட்டு 'இரவு வணக்கம்' சொல்லிவிட்டு இன்முகத்தோடு சென்றார்.

விக்னேஷின் பயணமும் வெற்றியில் முடிந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நம் நாட்டிலும் இப்படி இன்முகத்தோடு பிறருக்கு உதவியவர்கள் நம் பாட்டனும் பூட்டனும். அப்படி அவர்கள் இருக்க இன்று ஒவ்வொருவரும் சுயநலம் ஒன்றே குறிக்கோளாக வாழ்வதேன்?

உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் மனிதன் மட்டும் தான் அழவும், சிரிக்கவும், இன்னும் பல உணர்வுகளை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்கிறான்.

ஆனால் சிரிப்பதில் கூட பல வகைகளை மனிதன் கண்டு பிடித்து விட்டான். தான் மகிழ்ந்தாலும் சிரிக்கிறான். பிறர் தாழ்ந்தாலும் சிரிக்கிறான். சிரிப்பின் விளைவு நன்மையில் மட்டுமே இருக்க வேண்டும்.

கண்ணாடியின் முன் நின்று அவள் பேசிக்கொண்டிருந்தாள். 'அப்பா, நான் கட்டுரைப் போட்டியிலே முதல் பரிசு வாங்கியிருக்கேன்.'

பின் அடுத்த பக்கம் போய் குரலை மாற்றி அப்பாவாக 'ம்ம்ம்ம்... அதுக்கு என்ன இப்போ?' என்றாள்.

மீண்டும் முதலாவது இடத்தில் போய், 'அப்பா நான் இன்றைக்கு கணக்கில் 98 மார்க் எடுத்திருக்கிறேன்'.

பின் அடுத்த பக்கம் போய் அப்பாவாக, 'என்ன? என்ன? ரெண்டு மார்க் எங்க போச்சி? உனக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாதா?' என்றாள்.

பின் அவளே சிரித்துக் கொண்டாள்.

இதை வாசலில் நின்று கவனித்த அப்பா தன் தவறை உணர்ந்தார்.

இப்படித்தான் பலரும். கெட்டது நடந்தால், கேட்டது நடக்காவிட்டால் மேலும் கீழும் துயரத்தால் துள்ளுவார்கள். நல்லது நடந்தால் அதை அங்கீகரிக்கும் வகையில் ஒரு புன்சிரிப்பைக் கூட உதிர்க்க மாட்டார்கள்.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை விட, வாய் விட்டுச் சிரித்தால் நோய் வராமல் போகும் என்பதே உண்மை.

சிரிப்போம்... சிரிக்க வைப்போம்!


குமார் கணேசன்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு கதை...

அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கருத்துள்ள கதைநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

இராஜராஜேஸ்வரி said...

வாய் விட்டுச் சிரித்தால் நோய் வராமல் போகும் என்பதே உண்மை.

சிரிப்போம்... சிரிக்க வைப்போம்

சிறப்பான சிரிப்புப் பகிர்வுகள்..