Saturday, August 4, 2012

இலக்கணமா? இலக்கியமா?

பச்சைப் பசேல் என்ற நெல் வயல்கள் சூழ்ந்த அந்த கிராமத்தின் நடுவே இருக்கும் உயர்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டினை, பள்ளியின் மாணவர்களும், பழைய மாணவர்களும் இணைந்து நடத்தினர். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக `தமிழ் மொழியின் சிறப்பு அதன் இலக்கணமா? அல்லது இலக்கியமா?' என்ற பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இலக்கணம் என்ற அணியில் இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரும், இலக்கியம் என்ற எதிரணியில் பழைய மாணவர்கள் மூவரும் பங்கு கொண்டனர். பள்ளியின் முன்னாள் மாணவரும், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் இந்நாள் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் குகன் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கினார்.

'பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைத் தந்தது தமிழ்' என்றனர் ஓர் அணியினர். 'உலகமே வியக்கும் ஒன்றே முக்கால் அடி கொண்ட திருக்குறள் ஒவ்வொன்றும் ஓர் இலக்கியம்' என்றனர் இன்னோர் அணியினர். `எதுகையும், மோனையும், சீரும், அணியும் என நல்ல இலக்கணத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பதே திருக்குறளின் சிறப்பு' என்றனர் பதிலுக்கு.

இலக்கிய அணியும் விடுவார்களா என்ன? `திருக்குறளின் இலக்கணத்தை உலக மொழிகளில் மொழி மாற்றம் செய்யவில்லை. மாறாக, அதன் இலக்கியத்தை, கருத்துக்களை மட்டுமே மொழி பெயர்த்தனர்' என்றனர். பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டமும் வந்தது. நடுவர் என்ன முடிவு சொல்வார், எந்த அணி வெற்றி பெறும் என அரங்கத்தில் இருந்தவர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

இரண்டு அணிகளின் வாதங்களையும், விவாதங்களையும் அழகாகத் தொகுத்து வழங்கிய நடுவர் தொடர்ந்து பேசினார்.

'வடமொழிப் பெயர்களைத் தமிழில் குறிப்பிடுவதற்காக சில வடமொழி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்துக்கு லக்ஷ்மணன், லக்ஷ்மி. அதன்பின் அவை வடமொழி எழுத்துக்கள் இன்றி லட்சுமணன், லட்சுமி என எழுதப்பட்டன. பின்னால் இலக்குமணன் என்றும், இலக்குமி என்றும் எழுதப்படுவதும் உண்மை.

இலக்கணம் என்பதும் லக்ஷணம், லட்சணம் என்ற அழகையும், இலக்கியம் என்பதும் லக்ஷியம், லட்சியம் என்ற குறிக்கோளையும் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். தமிழின் சிறப்பு வெறும் அழகா அல்லது அழகில்லாக் குறிக்கோளா என்ற கேள்விக்கு இடமில்லை.

இலக்கணம் என்ற காற்றையும், இலக் கியம் என்ற உணவையும் ஒவ்வொரு செல்லுக்கும் எடுத்துச் செல்லும் ரத்தம் தமிழ் மொழி ஆகும். இரண்டும் இணையும் போதுதான் சக்தி என்ற ஆற்றல் பிறக்கிறது. ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. அழகைப் பார்ப்பவர்களுக்கு அது லட்சணமாகத் தோன்றும். அறிவாக உணர்பவர்களுக்கு அது லட்சியமாகத் தோன்றும்.

நாமிருக்கும் காலமும், இடமும் ஒவ்வொரு நொடியும் மாறுவதைப் போல, இலக்கணமும் இலக்கியமும் கவிதைக்குக் கவிதை, கவிஞனுக்குக் கவிஞன் மாறுபடும். தமிழின் எல்லாப் படைப்புகளும், படைப்பாளிகளும் அவளின் குழந்தைகளே. நான் உட்பட. அதுவே என் முடிவும்...' என்றார்.

அவரின் பேச்சைப் புரிந்தவர்களும், புரியாதவர்களும், புரிய முயன்றவர்களும், முயலாதவர்களும் கைகளைத் தட்ட மட்டும் மறக்கவில்லை.

இப்படித்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், அவர்களின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்ற முடிவில் அல்லது அதை எப்படி அடைய வேண்டும் என்ற வழியில் குழப்பம் ஏற்படுகிறது.

வேண்டிய முடிவைக் குறுக்கு வழியில் அடைந்து வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும் அது உண்மையான வெற்றி ஆகாது. மாறாக, நல்வழியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டாலும் எதிர்பார்த்ததைவிட அது அதிக மன நிறைவைத் தரும்.

நம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.

ஒரு மாணவனுக்கு என்ன தேவை என்பதை ஓர் ஆசிரியர் அறிந்து, அவனுக்கு எப்படிக் கற்பிப்பது என்பதை உணர்ந்து, அவரே கற்பித்து, எப்படிக் கற்றிருக்கிறான் என்பதையும் அவரே தெரிந்து பின் அவனை ஒரு வல்லுனராக உலகுக்கு அறிவிக்கும் பொறுப்பையும் அந்த ஆசிரியருக்கே வழங்கினால் நன்றாக இருக்கும்.

அப்படிப்பட்ட இலக்குகளைக் கொண்ட நல்ல ஆசிரியரை இலக்கண முறைப்படித் தெரிவு செய்து மாணவர்களுக்குக் கொடுத்தால் கல்வித் தரம் உயரும். பல வளர்ந்த மேலை நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால், ஒருவர் பாடத் திட்டத்தைத் தயார் செய்து, இன்னொருவர் கற்பித்து, வேறொருவர் கேள்வித்தாள்களை உருவாக்கி, கடைசியில் யாரோ ஒருவர் மாணவனின் விடைகளைத் திருத்தி அதன் பின் வரும் தேர்வின் முடிவுகள் உண்மையான முடிவுகளா?

தினமும் கற்றுக் கொள்ளாமல் தேர்வுக்கு முன் படிப்பதற்காக விடும் சில விடுமுறை நாட்களில் கொஞ்சம் மனனம் செய்து குறைந்த மதிப்பெண்ணில் தேர்வு பெற்று, பெயருக்குப் பின்னால் ஆங்கில எழுத்துக்களை மாற்றி மாற்றி அடுக்கிக் கொள்வதில் என்ன இருக் கிறது?

பட்டதாரி ஆகவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிலர் துண்டு சீட்டுகளை தேர்வுத் தாள்களாக மாற்றுவதையும் நாம் அறிகிறோம்.

சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் கூடப் பட்டங்களாக உருவாகும் செய்திகளையும் காண்கிறோம்.

லட்சணம் இல்லா இந்த வெற்றியில் மெய்யில்லை; பட்டம் வாங்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கிறது.

போக்குவரத்து நெருக்கடியில் ஆறு மாதக் குழந்தையைக் காட்டி பிச்சை கேட்பதை விட, வெயில் என்றும், மழை என்றும் பாராமல் அங்கே பொம்மைகளையும், புத்தகங்களையும் விற்பது மேலானது. ஒரு சாண் வயிற்றுக் காக இருவரும் உழைத்தாலும் ஒன்று வலி, மற்றொன்று வழி.

காலை முதல் மாலை வரை உடல் வியர்க்க உழைத்துப் பெறும் நூறு ரூபாய் சம்பளத்தில், இரவு ஒருவேளை மட்டுமே உண்டு உறங்குபவன் கூட நிம்மதியாகத் தூங்குகிறான்.

உழைக்காமல் பிறரை ஏமாற்றி ஆயிரமென சம்பாத்தியம் பண்ணுகிறவன் குளிர் அறையில் உறங்கினாலும் உடல் கொதிப்பதாக உணர்கிறான். அவனின் உள்மனமும் ஆழ்மனமும் அவனை உறங்க விடுவதில்லை.

அமெரிக்காவில் குலுக்கல் பரிசுச் சீட்டில் லட்சாதிபதி, கோடீஸ்வரன் ஆன அதிர்ஷ்டசாலிகளைப் பற்றி ஒரு கருத்தாய்வு நடத்தினார்கள்.

பரிசு பெற்றவர்களில் பலர், பரிசு பெற்ற சில காலத்துக்குள்ளேயே மீண்டும் முன்பிருந்த பொருளாதார நிலைக்கு அல்லது அதைவிட மோசமான நிலைக்கே அவர்கள் போனதாக அது தெரிவிக்கிறது. அதிர்ஷ்டம் கூட அவர்களுக்கு நிரந்தரம் இல்லை.

அரங்கத்தின் கைதட்டல் நின்றவுடன் நடுவர் பட்டிமன்ற முடிவைத் தொடர்ந்தார். மாணவர்களைக் கொஞ்சம் குழப்பி, குழம்பிய நீரில் மீனைப் பிடிப்பது எளிது என்ற எண்ணத்தில் கொஞ்சம் விட்டு விட்டு மீண்டும் ஒரு சிறுகதையைச் சொன்னார்.

'அந்த மலைக்கு மேலேயும் கீழேயும் இரண்டு ஊர்கள் இருந்தன. எதற்கெடுத்தாலும் அவர்களுக்குள் சண்டை.

அப்படித்தான் ஒரு சண்டையின் போது மேல் ஊரிலிருந்தவர்கள் கீழ் ஊரில் இருந்த ஒரு குழந்தையைக் கடத்திச் சென்று விட்டனர்.

குழந்தையை விட, அதைக் கடத்திச் சென்றவர்கள் எதிரிகள் என்பதால் அது ஒரு மானப் பிரச்சினையாக ஆனது கீழ் ஊரில் உள்ளவர்களுக்கு. பெற்ற தாயும் கண்ணீர் விட்டு அழுதாள். முடிவில் அவர்களில் சிலர் மலை ஏறி குழந்தையை மீட்பது என முடிவு செய்தனர்.

அனுபவம் இல்லாத அவர்கள் மலையேறத் துவங்கினர். ஆனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. பத்து நாட்களாகியும் பாதி தூரத்தைக் கூடக் கடக்க முடியாமல் தவித்தனர்.

கூடாரம் ஒன்று அமைத்து ஓய்வெடுத்தனர். அப்போது கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் மேலிருந்து கீழே வேகமாக இறங்கிக் கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தால் கடத்தப்பட்ட குழந்தையுடன் அதன் தாய்.

'ஏம்மா, நீ இங்கே எப்படி?' என்றனர்.

'குழந்தையை மேலிருந்து மீட்டுக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்' என்றாள்.

அனைவரும் திகைத்து நிற்க, ஒருவன் 'இத்தனை நாட்கள் முயன்றும் எங்களால் மேலே ஏற முடியவில்லை. உன்னால் மட்டும் எப்படி முடிந்தது?' என்றான்.

தயங்கியபடி அந்தத் தாய் சொன்னாள்: 'ஏன்னா... ஏன்னா... இது உன் குழந்தை இல்லை'.

இந்தக் கதையைக் கேட்ட மாணவர்களும் மற்றவர்களும் புரிந்து கொண்டு பலமான கரவொலி எழுப்பினர்.

'நோக்கம் நல்லதாக இருந்தால் வழியும் நல்லதாகவே அமையும். தமிழின் இலக்கு நல்லது. அதனால் இலக்கை அடையும் வழியும் நல்லதாகவே அமையும்.

தமிழ் மொழியின் சிறப்பு நல்ல இலக்கியமாக இருப்பதால் இலக்கணமும் நன்றாகவே இருக்கிறது. இலக்கியமின்றி இலக்கணம் இல்லை. எனவே இலக்கணத்துக்கு ஒரு புள்ளி அதிகம் தந்து முதலிடத்தைத் தருகிறேன்' என்றார் நடுவர்.

புரிந்து கொண்ட கூட்டமும், வைர விழாவை எப்படி இதைவிட அழகாகக் கொண்டாடுவது என்று யோசிக்கத் தொடங்கியது.

இலக்கணம் தொடுத்து இலக்கியம் படைப்போம்!

குமார் கணேசன்

3 comments:

Cpede News said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு...

/// வேண்டிய முடிவைக் குறுக்கு வழியில் அடைந்து வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும் அது உண்மையான வெற்றி ஆகாது. மாறாக, நல்வழியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டாலும் எதிர்பார்த்ததைவிட அது அதிக மன நிறைவைத் தரும். ///

கருத்துக்களும், சிறுகதைகளும், விளக்கங்களும் அருமை...


நன்றி…

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கருத்துள்ள பதிவு


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)