Monday, July 30, 2012

எண்களா? எண்ணங்களா?

 விலை உயர்ந்த வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கிய மோகன் தன் குடும்பத்துடன் கடைக்குச் சென்றான். அன்றுதான் பூமியில் புதிதாகப் பிறந்த பூவைப் போல புன்னகை அவன் இதழில் பூத்திருந்தது.

இருபத்தைந்து லட்சம் கொடுத்து வாங்கிய கார் என்பதால் ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி சோதனை செய்வது போலப் பார்த்தான்.
'அப்பா எனக்கு அந்தப் பாட்டுப் பிடிக்கும்' என்றாள் மகள் யாழினி. ஆனால் அவனோ, விலை அதிகம் என்றால் எப். எம். ரேடியோ ஸ்டேஷனும் அதிகம் இருக்கவேண்டும் என்பதைப் போல ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி எண்ணிப் பார்த்தான்.

நாற்பது கிலோமீட்டர் வேகம் செல்லும் தெருவில் அறுபதில் ஓட்டினான். அறுபதில் ஓட்டவேண்டிய தெருவில் இருபதில் ஓட்டினான். தெருவில் போகும் மற்றவங்களைப் பற்றிய எண்ணங்களை விட, தான் விரும்பும் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்.

போக்குவரத்து நெருக்கடியைத் திட்டி, தெருவில் ஓட்டும் பிறரைத் திட்டி, ஒரு வழியாகத் துணிக்கடைக்குச் சென்றார்கள்.

யாழினி எந்த டிரஸ்ஸை விரும்பிக் கேட்டாலும் அவளின் அம்மா விலையைத்தான் முதலில் கேட்பாள்.

ஐயாயிரத்துக்குக் குறைவு என்றால் அவளின் அம்மா அதைத் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டாள்.

`என்னை உடுத்திக்கொள்' என வாங்காத, எளிய, எழிலான ஆடைகள் யாழினியைக் கெஞ்சுவதும், அவளும் அதை உடுத்திக் கொண்டு தன் நண்பர்களிடம் காட்டுவதும் ஒருசில நிமிடங்களில் அவள் கற்பனையிலேயே முடிந்து விடும்.

கலர், டிசைன், சைஸ், பேஷன் என எதையும் கொஞ்சம் கூடப் பார்க்காமல் விலை ஒன்றையே மனதில் கொண்டு சில உடைகளை அம்மா வாங்க, `இன்னும் அதிக விலையில் எதுவும் இல்லையா?' என அப்பா கேட்பது தான் வேடிக்கையும், வாடிக்கையும்.

நல்ல வேளை, துணியில் தொங்கும் விலைச் சீட்டுடன் குழந்தையை எங்கும் அனுப்புவதில்லை.

வீட்டில் வந்த பின்னும் விலை உயர்ந்த துணி என்பதால் எல்லா நேரமும் உடுக்க விடுவதில்லை. எப்பொழுதாவது முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே உடுக்க அனுமதி உண்டு.

`ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய துணி; கண்ட கண்ட இடங்களில் உட்காராதே; அழுக்கான குழந்தை எதையும் தொடாதே; சாப்பிடும் போது கவனமாக இரு' என ஆயிரம் `செய், செய்யாதே' கட்டளைகள் இருக்கும்.

புதுத்துணி உடுக்கும் சந்தோஷத்தை விட கையில் இருக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு விதத் திருட்டுப் பயத்தோடு இருப்பதைப் போன்ற உணர்வே அதிகம் இருக்கும்.

இப்படி பலரும் தம் எண்ணங்களுக்கும் தம்மைச் சுற்றியுள்ளவர் களின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் எண்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது துரதிர்ஷ்டமானது.

பணக்காரப் பெற்றோர்கள் இப்படி என்றால், ஏழைகளின் பிள்ளைகளும் இதே கனவைக் காண்பது கொடுமையானது. `கைபேசி வேண்டுமா?' என்ற கவலையான கேள்வியோடு, தன் வசதிக்கேற்ப எளிமையானதை வாங்கிக்கொள் என்றால் `நண்பன் வைத்திருப்பதைப் போல ஐபோன், அதுவும் 4ஜி வேண்டும்' என்று கண்ணீரோடு கட்டளையிடுவதையும் காண்கிறோம்.

பத்து அறைகள் உள்ள வீடு இருந்தாலும் தினமும் மணிக்கு ஓர் அறையில் தூங்க முடியாது. ஒரு விஷயத்தில் நல்லது கெட்டதை எண்ணிக் `கை' வைக்கலாம்; ஆனால் எதிலும் எண்ணிக்கையை மட்டுமே எண்ணி `கை' வைக்கக் கூடாது.

தனக்கு என்ன வேண்டும் என்பதை விட கடையில் என்ன இருக்கின்றன எனத் தேடிப் பிடித்து இருப்பதில் விலை கூடியதை வாங்குவதும், வாங்க முடியாவிட்டால் வாங்கியதை ஏதோ அனாதைக் குழந்தையைப் போலப் பார்ப்பதும் கொடுமை.

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் நமக்குக் கிடைத்ததை விரும்பினால் வாழ்க்கை வசப்படும். குழந்தை தனக்கு என்ன வேண்டும் என விரும்பலாம்; ஆனால் விலை பார்த்து எதையும் விரும்பாது. நாமும் அப்படி வாழ வேண்டும்.

ஷீலாவுக்கு அவளின் வீட்டுக்குப் பக்கத்திலேயே வேலை. போகும் முன் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பி விட்டுச் செல்லலாம். குழந்தை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் முன் வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி விடலாம்.

சிறிய கம்பெனி என்றதால் சம்பளம் கொஞ்சம் குறைவுதான். ஆனால், வேலையில் எல்லோரும் ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தனர். நல்லதொரு குடும்பம் போல வாழ்ந்தனர்.

இப்படி சந்தோஷமாக இருக்கும் போது பெரிய கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் அவளின் கல்லூரித் தோழி வந்தாள். காரில் வந்து இறங்கியவளைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருந்தது.

தானும் இப்படி ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்து அதிகச் சம்பளம் வாங்கி வசதியாக வாழலாமோ என்றும் தோன்றியது.

தோழி வந்து பத்து நிமிடத்துக்குள் பதினைந்து தொலைபேசி அழைப்புகள். அவளின் மானேஜர், அவளுக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள், கணவன், குழந்தைகள் எனப் பலரின் அழைப்புகள்.

ஒரு சில அழைப்புகளை ஏற்காமல் ஷீலாவுடன் தோழி பேசிக்கொண்டிருந்ததால், குறுஞ்செய்திகள் வர ஆரம்பித்தன.

`என் குழந்தைகளிடம் இருந்துதான். பள்ளிக் கூடத்தில் இருந்து அவர்கள் ஆயாவிடம் (ஙிணீதீஹ் ஷிவீååமீக்ஷீ) போய் விடுவார்கள். இன்று நான் போய் அழைத்து வர நேரமானதால் ஒரே தொந்தரவு' என்றாள்.

`குழந்தைகளின் அழைப்பைக் கூடத் தொந்தரவு என நினைக்கும் தோழியின் வாழ்க்கை என்ன வாழ்க்கை' என எண்ணினாள் ஷீலா. வேலையையும் வீட்டையும் இரு கண்களாகப் பார்த்துக் கொள்ளும் தன் வேலையை எண்ணிப் பெருமை கொண்டாள்.

ஆனால், பெரும்பாலானவர்கள் ஷீலாவாக வாழ எண்ணாமல், அதிகச் சம்பளம் வாங்கும் அவளின் தோழியாக வாழவே விரும்புகிறார்கள் என்பதும் உண்மையே.

பணம் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பணமே வாழ்க்கையாகி விடாது என்பதை நாம் புரிந்துகொள்ள

வேண்டும்.தாயின் முக்கியத்துவத்தை உணர்ந்த இயற்கை, குழந்தையை ஒன்பது மாதங்கள் கருவறையிலே வைத்தது. தாய்ப்பால் ஊட்ட சில காலத்தையும், அன்பை வழங்க ஆயுட்காலத்தையும் அவள் தாயாக ஏற்றுக்கொண்டாள்.

ஆண்களும் பெண்களும் படித்து இருவரும் வேலைக்குச் செல்லும் காலமிது. அப்படி அமைந்தால், கணவனும், வீட்டில் இருப்பவர்களும் அவளின் சுமையைக் குறைப்பது மிக அவசியம்.

பெரும்பாலான ஆண்கள் ஆண்களாக மட்டுமே வாழ ஆசைப்படுகிறார்கள். வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. பெண்களோ வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து விட்டு, வேலைக்கும் போய் சம்பாதிக்கிறார்கள்.

கணவன் மனைவி இருவரும் ஓடி ஓடி வேலை செய்து பணத்தைத் தேடுகிறார்கள்; வசதிகளைப் பெருக்குகிறார்கள்; ஆனால், வாழத்தான்

நேரமில்லை.வீட்டில் ஐம்பது அங்குல தொலைக்காட்சி பெட்டி உண்டு. ஆனால், ஐந்து நிமிடம் கூட நிம்மதியாக உட்கார்ந்து எந்த நிகழ்ச்சியையும் பார்க்க நேரமில்லை.

வாரத்தில் ஒரு நாள் சமைத்து, குளிர்ப் பெட்டியில் வைத்து, வாரம் முழுவதும் மீண்டும் சூடுபடுத்தி உண்கிறார்கள். உணவைக் கெடுத்து உடல் நலனையும் கெடுக்கிறார்கள்.

ஊரில் இருந்து பாசத்தோடு வீட்டுக்கு வரும் அம்மாவுக்கும் அதே குளிர்பெட்டி பழைய சாப்பாடுதான். `நம்ம அம்மாதானே பரவாயில்லை' என சமாளிப்பு.

ஆனால், உடன் வேலை பார்ப்பவர்களும், சிறிதே அறிமுகமான நண்பர்களும் வந்தால் `அந்தஸ்து என்னாவது' என்று பெரிய வரவேற்பு. விழுந்து விழுந்து சமையல்; சீனாத் தட்டில் உணவு.

இப்படித் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வதாக எண்ணித் தன்னையே இழக்கிறார்கள் அல்லது அழிக்கிறார்கள். உண்மையான உதவி வேறு, சுய கவுரவத்திற்காக நடப்பது வேறு.

பெருந்தலைவர்கள் சொன்னது போல கனவு காண்பதைக் கூடத் தனக்காக அல்லது நாட்டுக்காகக் காண்பதில்லை. மாறாக அடுத்தவர்களுக்காக, அவர்கள் தம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையே கனவு காண்கிறார்கள்.

நமக்கிருப்பது ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம். இதை உணர்ந்து வாழவேண்டும். ஆனால், பலர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக எண்ணி, தனக்கும் தன் குடும்பத்துக்கும் சேர்த்து வைக்க நினைக்கிறார்கள்.

ஒரு கம்பெனியில் அவன் மிகச் சாதாரண வேலையில் சேர்ந்தான். எல்லோரையும் போல உழைத்தான். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் தன் குழந்தைகளோடு விளையாடினான்.

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்றார்கள். மாதமொரு முறை பிடித்த எளிமையான ஹோட்டல் சாப்பாடு. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை படத்துக்கும் போனார்கள். வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருந்தது.

பதவி, பணம், பெரிய வீடு, கார் என அவனுக்கும் ஆசை வந்தது. ஆசை வர வர அவன் கடினமாக உழைத்தான். ஆசைப்பட்ட அத்தனையும் கிடைத்தன. வீட்டை மறந்து அதிக நேரம் அலுவலகத்தில் கழித்தான். அவன் சம்பளத்தின் எண்கள் கூடக் கூட, வீட்டைப் பற்றிய அவனின் எண்ணங்கள் குறைந்தன.

வசதிகளைக் குழந்தைகளும் முதலில் விரும்பினாலும், போகப் போக அவை அவர்களுக்குப் போரடித்தன. அப்பாவோடு முன்பு இருந்த நேரம் நினைவில் வந்தது.

ஒருநாள் இளைய குழந்தை அம்மாவிடம் போய், `அம்மா, அப்பா எனக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்கள். ஆனால், அப்பாவை நான் ரொம்ப `மிஸ்' பண்றேன். என் கிட்டே இப்போதெல்லாம் அப்பா விளையாடுறதே இல்லை. அப்பா கிட்டச் சொல்லி எனக்கு ஒரு புது அப்பா வாங்கித் தரச் சொல்லும்மா' என்றாள்.

அடுத்த அறையில் இருந்து இதைக் கேட்ட அவனுக்கு சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. கடின உழைப்பில் தவறில்லை. ஆனால் வாழ்க்கையில் ஒரு சமநிலை வேண்டும்.

நேரத்தை செலவு செய்து,
பணத்தை சம்பாதிக்கலாம்.
பணத்தை செலவு செய்து,
நேரத்தை வாங்க முடியாது!


குமார் கணேசன்

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் நமக்குக் கிடைத்ததை விரும்பினால் வாழ்க்கை வசப்படும் !!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையாச் சொல்லி உள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்... நன்றி...


பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)