Thursday, July 26, 2012

எறும்பூரக் கல்லும் தேயுமோ...?

'அடிபட்டு நடக்க முடியாமல் போன ஒரு எறும்பை மற்றொரு எறும்பு கூட்டுக்கு தூக்கி கொண்டு சென்றிருக்கிறது' என்னே ஒரு எறும்பு நேயம்.

இந்தச் செய்தியை அறிந்த பின் எறும்புகள் பற்றி மேலும் தகவல் அறிய முயன்ற போது, ஏறும்புகளுக்கான வரலாறு பிரமிக்க வைக்கிறது. இந்தப் பூமிப் பந்தில் எறும்புகள் இல்லாத இடம் மிகக் குறைவு. சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரிய கரிய கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிகப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு என இவைதான் நமக்கு தெரிந்த எறும்பு வகைகள். ஆனால், உலகில் 11,931 வகையான எறும்புகள் உள்ளன. இவற்றில் 5.2 சதவிகித வகைகள் இந்தியாவிலும் ஊர்கின்றன. எறும்புகள் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. அண்டார்டிகா போன்ற பனிப் பிரதேசங்களைத் தவிர பூமியின் பல இடங்களில் எறும்புகள் பரவிக் காணப்படுகின்றன. ஆயினும் எறும்பு வகைகள் அதிகமாக இருப்பது பூமத்திய ரேகைக்கு அருகாமையிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில்தான். இப்பகுதிகளில் உள்ள யானை, புலி, ஒட்டகச்சிவிங்கி இன்னும் பல தரைவாழ் விலங்குகள் அனைத்தையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து மற்றொரு தட்டில் எறும்புகள் அனைத்தையும் வைத்தால் எறும்புகள் உள்ள தட்டுதான் எடைதாங்காமல் கீழே இறங்கும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எண்ணிக்கையில் அபரிமிதமாக இருப்பது எறும்பினங்கள்.

காட்டில் தரைப்பகுதியிலும், மரங்களிலும், மர விதானங்களிலும் வாழ்கின்றன. பெரும்பாலும் சர்க்கரை உள்ள பொருட்களை எறும்புகள் உணவாக கொண்டாலும், பல வேளைகளில் மற்ற சிறிய உயிரினக்களை வேட்டையாடுவதோடு இறந்து போன உயிரினங்களையும், விதைகளையும், மற்றத் தாவர வகைகளையும் சாப்பிட்டு வாழ்கின்றன. எறும்புகள் உணவுச் சங்கிலியின் முக்கியமான அங்கம். பறவைகள் மற்றும் சில பாலூட்டிகளுக்கு எறும்பு ஒரு முக்கிய உணவாக இருக்கிறது.

எறும்புகள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வாழ்பவை. இவற்றின் சமூக வாழ்வு வியக்கத்தக்கது. ஒவ்வொரு எறும்புக் கூட்டமும் ஒன்றாகக் கூடி கூட்டைப் பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டையிடுவது, இனப்பெருக்கம் செய்வது, கூட்டை சுத்தம் செய்வது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது என வேலைகளை பகிர்ந்து கொள்கின்றன. அவை செய்யும் வேலையை வைத்து வேலைக்கார எறும்பு, இனப்பெருக்கம் செய்ய முடியாத பெண் எறும்பு, எதிரிகளிடமிருந்து கூட்டைக் காக்கும் சிப்பாய் எறும்பு முட்டை இடும் பெண் எறும்பு அல்லது ராணி, இறக்கையுள்ள ஆண் எறும்பு என இனம் பிரிக்கலாம். நாம் வழியில் காணும் எறும்புகள் அனைத்தும் வேலைக்கார ஏறும்புகள் தான். இவற்றில் சில உருவத்தில் வேறுபட்டு காணப்படும். உருவத்தை வைத்து அவை செய்யும் வேலைகளையும் அறிந்து கொள்ள முடியும். உருவத்தில் மிக சிறிய வேலைக்கார எறும்புகள் பெரும்பாலும் கூட்டைவிட்டு வெளியே வருவதில்லை. ராணிக்கு சேவை செய்வது, முட்டைகளைப் பராமரிப்பது இவையே இவற்றின் வேலை. ராணியை காண்பது அரிது. அது கூட்டுக்குள்ளேயே இருக்கும். அதே நேரம் இனப்பெருக்க காலங்களில் இறக்கையுள்ள ஆண் எறும்புகள் கூட்டை விட்டு வெளியில் பறந்து செல்லும்போது பார்த்திருக்கலாம். வேலைக்கார எறும்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மண்ணுக்கு அடியில் படிப்படியாக அவை கூட்டை விரிவுபடுத்த தொடங்குகின்றன. முட்டைகளை வைத்து பாதுகாக்க அதிலிருந்து வரும் நுண்புழுக்களையும், கூட்டு புழுக்களையும் வைக்க, உணவை சேமித்து வைக்க என தனித்தனி அறைகளை அவை உருவாக்குகின்றன.

சில பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டி வளர்த்து ஆளாக்குவது போல, நன்கு முதிர்ந்த எறும்பு கூட்டம் இனபெருக்கம் செய்யும் திறனைக் கொண்ட இறக்கையுள்ள ராணி மற்றும் ஆண் எறும்புகளை வளர்க்கிறது. இவை முழு வளர்ச்சி அடைந்தவுடன் புதிதாக தமெக்கென ஒரு குடும்பத்தை அமைப்பதற்காக வளர்ந்த கூட்டைவிட்டு வெகு தூரம் பறந்து செல்கின்றன. இதற்கு கலவிப் பறப்பு (Nuptial flight) என்று பெயர். அதே வேளையில் ஆண் எறும்பை கவர்வதற்காக ராணி எறும்பு ஒரு வித இன ஈர்ப்புச் சுரப்பை (Pheromone) தனது உடலிலிருந்து வெளியிடுகிறது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் எறும்புகளை கவரும். பழங்கால சுயம்வர கதைகளைப் போல இவை தமக்குள்ளே சண்டையிட்டு, வெற்றி பெறுகிற வலுவான ஆண் எறும்புகள் ராணியுடன் இணை சேர்கின்றன. ஆனால், இதில் ஒரு சோகம் என்னவென்றால் இணை சேர்ந்த பின் ஆண் எறும்புகள் இறந்து போய் விடுவதுதான்.

எறும்பின் முட்டை வெள்ளை நிறத்தில் நீள்வட்ட வடிவத்தில் இருக்கும். வீடுகளில் அம்மியையோ அல்லது பெரிய பாத்திரத்தையோ நகர்த்தும் போது அவற்றின் கீழ் கறுப்பு நிற பிள்ளயார் எறும்பு கூடமைத்திருந்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும் முட்டைகளை வாயில் கவ்வி கொண்டு அவை வேறு இடத்திற்கு செல்வதை பார்த்திருக்கலாம். முட்டையிலிருந்து இரண்டு நாட்களில் நுண் புழுக்கள் (வேற்றிளரி Larvea) இவற்றிற்கு ஊட்டச்சத்துமிக்க எச்சில் போன்ற திரவத்தை ஊட்டி ராணி வளர்க்கும். இவை கூட்டு புழுவாகி முழு வளர்ச்சியடைந்த வேலைக்கார எறும்பாக பிறக்கும். இதன்பின் ராணிக்கு எந்த வேலையும் வைக்காமல் அவை வெளியே சென்று உணவு தேட ஆரம்பிப்பது, கூட்டை பராமரிப்பது முதலான எல்லா வேலைகளும் பகிர்ந்து செய்ய தொடங்குகின்றன. ராணியின் ஒரே வேலை முட்டையிட்டு தனது குடும்பத்தை விரிவாக்குவது மட்டுமே.

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால் சற்று நேரத்தில் அங்கு ஒரு எறும்பு கூட்டம் வந்து சேர்வதை காணலாம். எங்கிருந்து வந்தன இவை? எப்படி கிடைத்து தகவல்? உணவு இருப்பதை பார்க்கும் ஓர் எறும்பு அத்துகளின் அருகில் வந்து தனது உணர்நீட்சிகளால் (Antenna) அதை தொட்டு பார்த்துவிட்டு அங்கிருந்து செல்லும் போது தனது உடலின் பின்பகுதியிலிருந்து ஒரு வித வேதிப் பொருளை தரையில் கோடுபோல் தனது கூடு வரை ஆங்காங்கே இட்டு செல்கிறது. இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றி உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன. இவை போடும் உணவு பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும்.

உழைப்பு, சுறுசுறுப்பு என இரண்டின் சின்னங்களாக உலாவரும் அந்த சின்னச்சிறு உயிர்களை சற்றே உற்று நோக்கி நேசிப்போம் !

ப.ஜெகநாதன்
நன்றி : புதிய தலைமுறை  
      

No comments: