Saturday, July 21, 2012

சந்தோஷம் பலவிதம்

தினமும் மாலையில் நான்கு மணிக்குப் போகும் மின்சாரம், இன்று காலை ஆறு மணிக்கே போய்விட்டது. இதனால் காலையில் கண் விழிக்கும் போதே அவனுக்குக் கொஞ்சம் தலைவலி.

மின்சாரத்தையும் அதன் பயன்களையும் கண்டுபிடித்தவர்களுக்குக் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும். அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது 'கரண்ட்' விஷயத்தில் முற்றிலும் உண்மை.

'ஏங்க, குழாயில தண்ணீர் வரல. கரண்ட் வேற போயிடுச்சி. கவிதாவைப் பள்ளிக்
கூடம் அனுப்பணும். பக்கத்து வீட்டுல போய் நாலு பக்கெட் தண்ணீர் பிடிச்சிட்டு வர முடியுமா?' என்று எழுப்பினாள் அவன் மனைவி.

தலைவலி தலைக்கு மேலும் ஏறியது. என்றாலும் தண்ணீர் பிடித்து வர பக்கத்து வீட்டை நோக்கி நடந்தான். அவசரத்தில் செருப்புப் போட மறந்ததால் ஆணி ஒன்று அவன் காலைக் குத்தியது.

காலை ஒரு மாதிரி ஊன்றி வந்தவனிடம், 'என்னங்க, உங்க காலில் இருந்து இரத்தம் கொட்டுது?' என்றவள் ஓடிப்போய் பாண்டேஜ் எடுத்து வந்து போட்டாள்.

ஒரு வழியாகக் கவிதாவை எழுப்பிக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, பள்ளிக்குத் தயார் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

அவனுக்கு அவசரமாக ஒரு போன் பண்ண வேண்டியிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் இல்லை. அவளின் போனைப் பார்த்தால் ரீ சார்ஜ் பண்ண மறந்திருந்தாள்.

சில நேரம் மழை பெய்வதில்லை, கொட்டும் என்பார்கள். அப்படித்தான் ஒன்று மாற்றி ஒன்று மாறி மாறி பிரச்சினையாகவே இருந்தது அன்று.

'ஸ்கூல் வேன் வரும் நேரம் ஆகுது. சீக்கிரம் கிளம்புங்க' என்றாள். கடந்த வாரத்திலிருந்து அந்தத் தெருவை ஒரு வழிப் பாதையாக மாற்றியதால் குழந்தையை தெரு முனையில் கொண்டு விட வேண்டியிருந்தது.

வேனுக்காகக் காத்திருக்கும் போது சுமார் ஏழு வயது குழந்தை தன் அம்மாவிடம் எதையோ சொல்லி அழுது கொண்டிருந்தாள்.

'அம்மா, பேனா வாங்கித் தந்தாத்தான் நான் ஸ்கூலுக்குப் போவேன். இல்லன்னா என் டீச்சர் என்னை அடிப்பாங்கம்மா' என்றாள்.

'அப்பா ஞாயிற்றுக் கிழமை வந்தவுடன் வாங்கித் தரச் சொல்றேன். இப்போ அழாமல் போ' என்றார் அம்மா.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கவிதா தன் பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்து, 'அப்பா...' என்றாள் அவனைப்பார்த்தபடி. அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அவனும் ஒரு புன்னகையைப் பதிலாய்த் தந்தான். புரிந்து கொண்டவள், `இந்தா, என் கிட்டே இரண்டு பேனா இருக்கு. நீ ஒண்ண வைச்சுக்கோ, நல்லா பரீட்சை எழுது, 'குட் லக்' என்றாள்.

வாங்கிக் கொண்ட அந்தக் குழந்தைக்கு அப்படி ஒரு சந்தோஷம். ஒரு புன்னகையை நன்றியாய் உதிர்த்துவிட்டு அவசர அவசரமாகத் தன் நோட்டில் எழுதிப் பார்த்தாள்.

'அக்கா நல்லா எழுதுது அக்கா. அம்மா ரொம்ப நல்லா எழுதுதும்மா. அங்கிள் ரொம்ப ரொம்ப நல்லா எழுதுது அங்கிள்' என்றாள். துள்ளிக் குதித்தாள்.

அவளின் சந்தோஷம் அவர்கள் மூவரையும் தொற்றிக் கொண்டது.

இப்படித்தான் குழந்தைகளுக்குத் தன்னிடம் அதிகம் இருந்தால் இல்லாதவருக்குக் கொடுக்கும் பழக்கத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

திரும்பி வரும்போது அவனுக்குக் கால் வலியும் தெரியவில்லை, கரண்ட் போனதும் ஞாபகத்தில் இல்லை. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் புன்னகை மட்டுமே கண்களிலும், மனதிலும் நின்றன.

இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. ஒருவருக்குப் பத்து ரூபாய் கஷ்டம் என்றால் இன்னொருவருக்குப் பத்து கோடி கஷ்டம். அவரவர் கஷ்டம் அவரவருக்குப் பெரிதாய்த் தெரியும்.

அந்தக் கிராமத்தில் அவன் தன் மனைவி, நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். வாழ்வின் தொல்லை அவனை வாட்டியதால் துறவுதான் தீர்வு என எண்ணி இரவோடு இரவாக வீட்டை விட்டு தொலைதூரம் சென்றான்.

அங்கே இன்னொரு கிராமத்தின் எல்லையில் ஒரு கோவில் மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.

புதிதாக சாமியார் ஒருவர் வந்திருக்கிறார் என எண்ணி அவருக்கு அன்னமிட்டு வணங்கினர் அந்த ஊர் மக்கள். வெயில், மழையால் பாதிக்காமலிருக்க ஒரு குடில் ஒன்று அமைத்துத் தந்தனர்.

குடிலில் எலித்தொல்லை இருப்பதை அறிந்த மக்கள் பூனை ஒன்றைக் கொடுத்தனர். பூனைக்குப் பால் வேண்டி இன்னொரு பசுவும் தந்தனர்.

பசுவை யார் பராமரிப்பது என யோசித்து விட்டு, சாமியாருக்கு உணவு சமைக்கவும், பாத்திரங்களை சுத்தம் செய்யவும், பசுவைப் பராமரிக்கவும் வேலைக்கு ஒரு பெண்ணை வைத்தனர்.

சில மாதங்கள் கழித்து அந்த வேலைக்காரியையே திருமணமும் செய்து கொண்டான் அவன். வாழ்க்கையும் சந்தோஷமாகப் போனது. இருவரும் சில குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

மீண்டும் குடும்பத் தொந்தரவு. துறவு பற்றிய அதே பழைய சிந்தனை.

கஷ்டங்களை விட்டு நாம் ஓடி விடமுடியாது. அதை எதிர் கொள்ள வேண்டும். பிரச்சினையில் இருந்து விலகிச் செல்கிறோம் என்றால் அதன் தீர்வில் இருந்தும் தூரம் செல்கிறோம் என்றுதான் பொருள். எங்கு போனாலும் அது நம்மைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

மகிழ்ச்சி என்பது எதையும் எதிர்பார்த்து அது கிடைத்தால் வருவது இல்லை. ஏற்கனவே இருப்பதில் கிடைப்பது அது. ஆனால் பலர் தமக்கு இது கிடைத்தால் மகிழ்வேன்; அது நடந்தால் சந்தோஷப்படுவேன் என்று நிபந்தனை போடுவதைக் காணலாம்.

இன்று நம்மிடம் இருப்பது கூட ஒரு நாள் கனவாக இருந்ததுதான். அது நடந்தவுடன் இன்னொரு கனவை மனதில் கொண்டு அது நடக்கும் வரை சந்தோஷமாக இருக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது நல்லதல்ல.

மகிழ்ச்சியும் ஓர் இலக்கு அல்ல, மாறாக வாழ்க்கைப் பயணமாகும். ஒவ்வொரு பொழுதையும் மகிழ்ச்சியாய் கழிக்க வேண்டும்.

கவலைப்படுவோரில் இன்னொரு வகையும் உண்டு. பெரிய அளவில் வெற்றி கிடைத்தால்தான் மகிழ்வார்கள். சிறுசிறு வெற்றியைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒருவன் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல படிகளைத் தாண்டித்தான் வெற்றி அடைய முடியும்.

தன் ஊரில் வென்று, பின் மாவட்டம், மாநிலம், நாடு என ஒவ்வொரு படிகளாக ஏறி, இறுதியில் பல்வேறு நாடுகளோடு போட்டியிட்டு ஒலிம்பிக்கில் வெற்றி பெற வேண்டும்.

ஒலிம்பிக் வெற்றியில் பெறும் அதே அளவு அல்லது அதைவிட அதிக அளவு மகிழ்ச்சியைத் தன் ஊரில் வென்ற போதும் அவன் உணர வேண்டும்.

மகிழ்ச்சிக்கு வயது ஒரு தடையாக இருக்கவே கூடாது. குழந்தைகள் துள்ளிக் குதித்துத் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பெரியவர்களும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்துவது அவசியம்.

பேராசிரியர் ஹெர்பர்ட் சார்லஸ் பிரவுன் ஓர் அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி. 1979 ஆம் ஆண்டு நோபல் பரிசினைப் பெற்றவர்.

ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருந்தாலும், ஒவ்வொரு கட்டுரையும் பிரசுரமாகும் போது ஏதோ முதல் கட்டுரையைப் பிரசுரித்த மாணவனைப் போல மகிழ்வார்.

ஒவ்வொரு ஆண்டும் தம் நண்பர்களுக்கும், தம் பழைய மாணவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பும் போது அந்த ஆண்டு அவர் பெற்ற வெற்றிகளையும் தெரிவித்து மகிழ்வார்.

மற்றவர்கள் கஷ்டப்பட்டால் சந்தோஷப்படுபவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'என் பையன் மட்டுமல்ல, நன்றாகப் படிக்கும் எதிர் வீட்டுப் பையனும் தேர்வில் தோல்வி' என்றும், 'எனக்கு மட்டுமல்ல என்னை விட அழகான என் தோழிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை' என்றும் எண்ணி மகிழும் அல்லது ஆறுதல் கொள்ளும் மனிதர்களை என்ன சொல்வது?

ஒருவர் ஒரு பழத்தை உண்டால் அது அவருக்கு மட்டுமே சந்தோஷம். ஆனால், ஒரு அம்மா சமைத்து அவளின் குழந்தை நன்றாக உண்டால் அது இருவருக்கும் மகிழ்ச்சி. அதுவே, அந்தக் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பலருக்கு விருந்திட்டால் அவளுக்கு ஆனந்தம்.

சந்தோஷத்தின் உச்சகட்டம் ஆனந்தம் ஆகும். தன் இசைக் கச்சேரியாலும், நல்ல நடனத்தாலும் பலரை சந்தோஷப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் கலைஞர்களும் இதில் அடங்குவர்.

தன் மனதுக்கு ஆறுதலாக இருப்பது கூட ஒருவகை சந்தோஷமே. அந்தப் பூங்காவில் நடைபாதையை ஒட்டி பல காங்க்ரீட் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அந்த பெஞ்சில் படுத்திருந்த ஒருவர், தூக்கத்தில் புரண்டு நடைபாதையில் விழுந்த பின்னும் அயர்ந்து தூங்கினார்.

உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தவர்கள் அவரைப் பார்த்து முகம் சுளித்து, விலகித் தன் நடையைத் தொடர்ந்தனர். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. 'ஆறு மணிக்கே சரக்கு அடித்து விட்டார் போலிருக்கிறது' என்று ஏளனமாகப் பேசிக்கொண்டனர்.

அப்போது அங்கே ஒரு பத்து வயது சிறுமி தன் தம்பியோடு ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள். நடைபாதையில் வெறுந்தரையில் படுத்திருந்தவரைப் பார்த்து, 'இவர் தூங்குகிறாரா? அல்லது இவருக்கு ஏதாவது ஆயிடுச்சா?' என்று சொல்லிக் கொண்டே அவரின் அருகில் போய் நின்றாள்.

மூச்சு ஏறி இறங்குவதைப் பார்த்துக் கொஞ்சம் நிம்மதி. தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் முகத்தில் தெளித்தாள்.

கண் விழித்தவர், கீழே உருண்டு விழுந்ததை அறிந்து, மீண்டும் பெஞ்சில் நிம்மதியாகப் படுத்துக் கொண்டார். பார்த்த அவளுக்கும் ஒருவித நிம்மதியும் சந்தோஷமும்.

சந்தோஷம் பலவிதம்.
ஒவ்வொன்றும் ஒருவிதம்!

குமார் கணேசன்
நன்றி : தினத்தந்தி 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சந்தோஷம்...
பகிர்வுக்கு நன்றி...