Saturday, July 14, 2012

வெற்றியின் இலக்கணம்

அவன் ஒன்பதாம் வகுப்பு மாணவன். பள்ளியிலும், ஊரிலும், சுற்றுவட்டாரத்திலும் ஓட்டப் போட்டியில் அவன்தான் நம்பர் ஒன்.

அன்றும் ஊரில் தீபாவளிக்கு விளையாட்டுப் போட்டி நடந்தது. வழக்கம் போல 100 மீட்டர் தூரத்தை அதிவேகமாக ஓடி முடித்தான். அந்த கிராமமே அவனைக் கை தட்டிப் பாராட்டியது.

அவனிடம் வந்த வயதான பெரியவர் ஒருவர், 'நான் சொல்லும் இருவருடன் ஓடி உன்னால் வெற்றி பெற முடியுமா? அப்படி வெற்றி பெற்றால் உன்னை மிகச் சிறந்த வீரனாக ஏற்றுக் கொள்கிறேன்' என்றார்.

'ஓட்டப் போட்டியில் என்னைத் தோற்கடிக்க இந்த ஊரில் இரண்டு பேர் இருக்கிறார்களா?' என்றபடி போட்டிக்கு ஒத்துக்கொண்டான் மாணவன்.

கண் தெரியாத ஒருவரையும், கால் சற்று ஊனமான ஒருவரையும் அவனோடு போட்டியிட நிறுத்தினார் அந்தப் பெரியவர்.

இரண்டு பேரையும் பார்த்தவன், 'இன்றைக்கு ஏப்ரல் ஒன்று இல்லையே, என்னை முட்டாளாக்குவதற்கு?' என்றான். இதைப் பார்த்த பார்வையாளர்கள் இன்னும் ஆர்வமாயினர்.

மூவரும் தொடக்கக் கோட்டில் நின்றனர். ஏதோ ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதைப் போல அவன் மட்டும் வெற்றி வெறியுடன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான்.

விசில் ஒலி கேட்டதும் வேகமாக இலக்கை நோக்கி ஓடினான். அவன் எத்தனை வேகமாக ஓடினாலும், கூட்டத்தில் ஒரு சத்தமில்லை, உற்சாகமில்லை, கை தட்டுமில்லை.

மாறாக கூடியிருந்தவர்கள் மற்ற இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.

பார்வை இல்லாதவருக்கு 360 டிகிரியும் ஒன்றே. எந்தப் பக்கம் ஓடுவது எனத் தெரியாமல் அவர் தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வந்தார்.

கால் ஊனமானவரோ இப்பொழுதுதான் நடைபயிலும் குழந்தை போல ஒரு அடி முன்னும் அரை அடி பின்னும் வைத்து நடை பயின்று கொண்டிருந்தார்.

வெற்றி இலக்கை அடைந்த பின்னும் யாரும் தன்னைக் கண்டுகொள்ளாத நிலை அறிந்து அந்தப் பெரியவரிடம், 'ஏன்? ஏன்? என்ன நடக்கிறது? முன்பை விட வேகமாகத்தானே ஓடினேன். இருந்தும் யாரும் என்னை ஏன் பாராட்ட வில்லை?' என்றான் மூச்சு வாங்காமல்.

பெரியவர் ஒரு புன்னகையை மட்டும் பதிலாய்த் தந்தார். பின் அவனைப் போட்டி தொடங்கும் இடத்துக்கு அழைத்து வந்து, 'உன் இடது கையால் கண் தெரியாதவரின் கையையும், வலது கையால் கால் ஊனமானவரின் கையையும் பிடித்துக் கொண்டு ஓடு' என்றார்.

'அது எப்படி முடியும்? அவர்களால் வேகமாக ஓட முடியாதே' என்றான்.

'உன்னால் முடியும்; முயற்சி செய்' என்றார்.

மீண்டும் விசில் ஊதப்பட்டது. இருவரின் கை களைப் பிடித்துக்கொண்டு நடந்தான். எப்போதும் இல்லாத அளவுக்குக் கைதட்டல்கள். இருவரும் அவனின் கையைப் பிடித்துக் கொண்டு மனதால் ஓடினர், உண்மையில் நடந்தனர்; இல்லை மெதுவாக அடி எடுத்து வைத்தனர்.

பத்து வினாடிக்குள் முன்பு ஓடிய ஓட்டப் பந்தயம் இப்போது பத்து நிமிடம் ஆனது போலிருந்தது. என்றாலும் மக்களின் கரவொலி ஓயவில்லை.

வெற்றி இலக்கை மூவரும் தொடும் போது ஒலிம்பிக் போட்டியில் நம் வீரர்கள் வெற்றி பெற்றதைப் போன்ற ஓர் உணர்வு. தீபாவளி பட்டாசு வெடிகளை விட அதிகக் கை தட்டு, கரவொலி வெடிகள்.

அவனுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி என்றாலும் கொஞ்சம் குழப்பம். பெரியவரிடம், 'தாத்தா, இந்தக் கை தட்டும் பாராட்டும் யாருக்கு? எங்களில் யார் வெற்றி பெற்றார்கள்?' எனக் கேட்டான்.

'உங்கள் மூவருக்குமே வெற்றிதான். மற்றவரையும் வெற்றிபெறச் செய்ததால் உனக்குக் கொஞ்சம் பாராட்டுகள் அதிகம்' என்றார்.

வாழ்க்கையையும் இப்படித்தான் சிலர் போட்டியாகவும் பலர் போராட்டமாகவும் எதிர்கொள்கிறார்கள். தான் மட்டும் வெற்றி பெற்றால் போதுமென எண்ணிக் கொண்டு ஓடுகிறார்கள். மற்றவர்களைக் கீழே தள்ளிக் கொண்டு அவர்களை மிதித்து ஓடவும் தயங்குவதில்லை.

இப்படி பெறும் வெற்றி வெற்றியே அல்ல; வெறும் வெறியே. உடன் வேலை பார்ப்பவருக்குப் பதவி உயர்வு என்றால் பாராட்டாமல், பொறாமை உணர்வு கொள்கின்றனர்.

தான் மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்களும் வெற்றிபெறச் செய்பவனே நல்ல தலைவன் ஆகிறான்.

வெற்றி என்பது ஓர் இலக்கு மட்டும் அல்ல. அதை நோக்கி நாம் நடக்கும் பயணமும் கூட. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து வாழ்ந்தால், வாழ்க்கை இன்பமாகும்.

போட்டியில் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆனால் போட்டியில் கலந்து கொள்வது கூட வெற்றியின் முதல் படியே. 'தோல்வியே வெற்றியின் படிக்கற்கள்' என்பதை அறிவோம். ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடம் கற்று, அடுத்து இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும்.

இதைத்தான் தாமஸ் ஆல்வா எடிசன், 'நான் ஆயிரம் தோல்விகளைச் சந்திக்கவில்லை. ஆனால் நான் செய்த ஆய்வுகள் எப்படி ஆயிரம் வழிகளில் வேலை செய்யவில்லை என்பதை அறிந்து கொண்டேன்' என்றார்.

படிப்பை இடையில் விட்டுவிட்டு தான் தொடங்கிய தொழிலில் வெற்றி கண்ட பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களின் வெற்றிச் சரித்திரம் நாம் அறிவோம்.

ஓர் உணவுத்துண்டு கிடைத்தால் தான் மட்டும் உண்ண வேண்டும் என எண்ணி மற்றவர்களை விரட்டும் நாய்களைப் பார்க்கலாம்.

ஆனால் காக்கை அப்படி அல்ல. எந்த உணவைக் கண்டாலும் சில நிமிடங்களுக்குள் 'கா, கா' என்ற கீதமும் கேட்கலாம்; பல காகங்கள் ஒன்று கூடி அந்த உணவை உண்ணும் நடனத்தையும் ரசிக்கலாம்.

கிராமத்தில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்தப் பணக்காரர் அன்றைய வரவான சில லட்சங்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி, 'தினமும் பிச்சைக்கு வரும் பையன் இன்று வரவில்லை. மணி இரண்டு ஆயிட்டுது. அவனுக்கு உடம்பு சரியில்லையோ என்னவோ? கோவில் திண்ணையில் படுத்திருப்பான். போய் இந்த சாப்பாட்டை அவனுக்குக் கொடுத்திட்டு வாருங்கள்' என்றாள்.

'என்ன, ஒரு பிச்சைக்காரனுக்கு நான் போய் சாப்பாடு கொடுப்பதா? எனக்கு நிறைய வேலை இருக்கு. அவன் பசித்தால் வருவான்' என்றார்.

'அப்படி என்ன தலை போகும் வேலை? சாப்பாடு கொடுத்துட்டு வந்தால் ஒன்றும் ஆகி விடாது' என்றாள். நாட்டுக்கு ராஜா என்றாலும் வீட்டுக்கு ராணி தானே.

சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கோவில் பக்கம் சென்றார். அவனை ஓரிரு முறை பார்த்திருந்ததால் எளிதில் அடையாளம் கண்டார். படுத்திருந்தவனை எழுப்பித் தன் மனைவி கொடுத்த உணவைக் கொடுத்தார்.

அவனோ, 'நான் ஏற்கெனவே மதிய உணவு சாப்பிட்டு விட்டேன், வேண்டாம்' என்றான்.

'பரவாயில்லை, இரவு சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்' என்றார்.

அதைக்கேட்ட அவன் கலகலவென சிரித்தான். 'சாமி, ராத்திரி சாப்பாட்டுக்கு இன்னும் எட்டு மணி நேரம் இருக்கு. இப்போ எதுக்கு அதைப் பற்றி யோசிக்கணும்?' என்றான்.

அவன் சொன்னது அவர் நெற்றிப் பொட்டில் உறைத்தது. அடுத்த வேளைக்குக் கவலைப்படாத அவன் எங்கே? ஏழு ஜென்மத்துக்கும் வேண்டும் வேண்டும் எனத் தேடும் தான் எங்கே?

'அதோ அந்த தம்பி இன்னும் சாப்பிடவில்லை. அவனிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்று தள்ளிப் படுத்திருந்தவனைக் காட்டினான்.

அவனின் கவலையற்ற வாழ்க்கையும், தனக்குத் தேவையில்லாததை இன்னொருவருக்குத் தந்து உதவ வேண்டும் என்ற உயர்ந்த உள்ளமும் அவரின் நெஞ்சைத் தொட்டது.

இந்தப் பணக்காரரைப் போல் தான் பலர் பணம் சேர்ப்பதில் வெற்றி கண்டு, வங்கிக் கணக்கின் இருப்பில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பணத்தின் அருமை அதைத் தேடுவதில் மட்டும் இல்லை, செலவு செய்வதிலும் இருக்கிறது. அதுவும் பிறருக்காக செலவு செய்தால் மகிழ்ச்சியும் இரட்டிப்பு ஆகும்.

ஒருவன் பணக்காரன் ஆகிறான் என்றால் பலர் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்பதுதான் நிஜம். தன் கம்பெனியில் உழைக்கும் தொழிலாளிகளின் உழைப்பால் வெற்றி பெற்ற முதலாளி கூட அந்த வெற்றியில் சிறு பங்கை அவர்களுக்கும் கொடுத்து உதவாதது வருந்தத் தக்கதே.

உலகின் மிகப் பெரியப் பணக்காரர்களான பில் கேட்ஸ், வாரன் பபெட் போன்றவர்கள் தன் செல்வத்தின் பெரும் பங்கை அறக்கட்டளை மூலம் தன் நாட்டுக்கும், உலக நாடுகளுக்கும் கொடுத்து உதவுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

தான் விரும்பியதை முழுக் குறிக்கோளோடு தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம். அது கெட்டிக் காரத்தனமான குறிக்கோளாக (நஙஅதப எஞஅக) இருந்தால் வெற்றி மிக மிக உறுதி.

உலகின் வெற்றியாளர்கள் இதையே செய்தார்கள். நஙஅதப என்பதை இப்படி விரிவாக்கமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

S (Specific- செய்யப் போவதை வரையறுக்க வேண்டும்.)

M (Measurable- செய்வதை அளக்க முடிய வேண்டும்.)

A (Achievable- செய்ய முடிந்ததாக இருக்கவேண்டும்.)

R (Realistic- செய்வது யதார்த்தமாக இருக்க வேண்டும்.)

T (Time bound- செய்யும் காலவரையறை தெரிய வேண்டும்.)

இப்படிச் செய்தால் வெற்றிக்கனி உங்கள் கையில்.

'வெற்றி பெறும் மொழியும் வெற்றி தரும் வழியும்' உண்மையான வெற்றிக்கு இலக்கணமாகும்.

குமார் கணேசன்

No comments: