Saturday, March 31, 2012

காதலியுங்கள், ஆனால்...

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று.

'உலகின் மிக அழகான பொருட்களை தொட்டோ, பார்க்கவோ முடியாது' என்கிறார் ஹெலன் கெல்லர்.

அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன.

அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும்தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை. இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல்.

காதலும், காதல் சார்ந்த இடங்களும்தான் இளைஞர்களின் எல்லைக் கோடுகள். காதல் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் கண்களுக்கே ரொம்ப அழகானதாக மாற்றித் தருகிறது.

ஓர் இளைஞனும், அவனுடைய தந்தையும் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகள் இளைஞனை உற்சாகம் கொள்ளச் செய்தன.

'வாவ்... மரங்கள்' என்றான். 'வாவ்.. வெயில்' என்றான், 'அடடா பறவைகள் என்ன அழகு' என்றான்.

அருகில் இருந்தவர்கள் எல்லாம் அவனை வித்தியாசமாய்ப் பார்த்தார்கள்.

தந்தையோ அவனுடைய கைகளைப் பற்றியபடி, எல்லாவற்றுக்கும் புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் மழை தூறத் துவங்கியது.

இளைஞன் வழக்கம் போல 'ஹைய்யா, அப்பா, மழைத்துளி எவ்ளோ அழகு, அது தரையில் விழுவது அசத்தலா இருக்கு' என குதிக்க ஆரம்பித்தான்.

அருகில் இருந்தவருக்கு பொறுக்கவில்லை.

பையனோட அப்பாவைப் பார்த்து, 'பையனுக்கு... மூளை...' என்று இழுத்தார்.

தந்தை இல்லையென அவசரமாய் தலையாட்டிக் கொண்டே சொன்னார், 'என் பையனுக்கு நேற்று வரைக்கும் பார்வையில்லை. இப்போதான் ஆபரேஷன் பண்ணி பார்வை வந்திருக்கு. இதான் பார்வை கிடச்சப்புறம் அவன் செய்ற முதல் பயணம். அதான் அவனுக்கு எல்லாமே புதுசா இருக்கு, மன்னிச்சுக்கோங்க'.

காதலும் இப்படித்தான்.

காதல் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் விதையாய் விழுந்த உடன் அவனைச் சுற்றிய வாழ்க்கை அழகான மலர்களைச் சொரிய ஆரம்பித்து விடுகிறது. அதுவரை சாதாரணமாய் இருந்த விஷயங்கள் எல்லாம் அவனுக்குள் அழகியலைப் போதிக்கும் மகத்துவமான விஷயங்களாகி விடுகின்றன.

தமிழனுக்கும் காதலுக்குமான தொடர்பு இன்று நேற்று வந்ததல்ல. கல்தோன்றாக் காலத்திலேயே தோன்றிய காதலை, சொல் தோன்றிய காலத்திலேயே சொல்லி மகிழ்ந்தனர் தமிழர்.

சந்தேகம் இருந்தால் ஏதேனும் ஒரு பண்டைய இலக்கியத்தை தூசு தட்டிப் பாருங்கள். உள்ளேயிருந்து காதல் உதிரும்.

இவ்வளவு அழகான காதலை பலரும் விமர்சிக்கக் காரணம் என்ன? வெறுக்கக் காரணம் என்ன? பதட்டப்படக் காரணம் என்ன? அது தீண்டக் கூடாத விஷயம் என பதறக் காரணம் என்ன...?

முக்கியமான விஷயம், உண்மைக் காதலுக்கு இடையே வளரும் காதல் போன்று தோற்றமளிக்கும் களைகள்.

'காதலிக்க மறுத்த காதலியை வெட்டிக் கொன்றான் காதலன்', 'காதல் ஜோடி தற்கொலை', 'காதலித்த பெண் மண்ணெண்ணை ஊற்றிப் படுகொலை', 'காதலித்து திருமணம் செய்த நாலே மாதத்தில் விவாகரத்து' என்றெல்லாம் வரும் தகவல்கள் காதலைக் கொச்சைப்படுத்துகின்றன.

அதனால்தான் உண்மையான காதலைக் கூட சமூகம் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது.

இளைஞர்கள் பல வேளைகளில் `உடல் ரீதியான ஈர்ப்பை' க் கண்டு 'இதுதாண்டா காதல்' என நினைத்து விடுகிறார்கள். அப்புறம் உடல் சிந்தனைகளிலேயே மூழ்கி நீச்சலடிக்கவும் செய்கிறார்கள்.

'காம நினைவுகளின்போது மூளையின் குறிப்பிட்ட பகுதி தூண்டப்படுகிறது. கோகைன் போன்ற போதைப் பொருளை உட்கொண்ட மூளையும், காம சிந்தனை நிறைந்த மூளையும் ஒன்று போல இருக்கும். அது உண்மையான நபரைப் பார்க்காமல், இச்சையை நோக்கியே சிந்தனையைச் செலுத்தும்' என்கிறார் ஜுடித் ஆர்லோப் எனும் உளவியல் மருத்துவர் மற்றும் எழுத்தாளர்.

காமம் ஒரு நபருடைய மேனி எழிலைப் பார்த்து வருவது. கட்டுமஸ்தான உடலையோ, நளினமான உடலையோ பார்த்து தூண்டப்படுவது.

வந்திருக்கிறது காதலா, இல்லை ஈர்ப்பா என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதை தொடரலாமா, அல்லது விடலாமா என முடிவெடுக்க முடியும்.

உடலையும், அழகையும் மட்டுமே உங்களுடைய கண்கள் பார்க்கிறதா? சாதாரணமா பேச முடியலையா? அவிழ்த்து விடப்பட்ட ஆட்டுக் குட்டிகளைப் போல உங்கள் பார்வை அழகுப் பிரதேசங்களில் இலக்கில்லாமல் ஓடித் திரிகிறதா?

அது காதலல்ல, உடல் ஈர்ப்பு.

பேசிக்கொண்டிருப்பதை விட சில்மிஷம் சுவாரசியமாய் இருக்கா? பாலியல் சிந்தனைகள் எப்போதும் இருக்கா? உங்கள் பேச்சிலும், மெயிலிலும், எஸ்.எம்.எஸ்.சிலும் பாலியல் சார்ந்தவையே ஆக்கிரமித்திருக்கிறதா?

உஷார், உங்கள் காதல் இனக்கவர்ச்சியின் சிக்னலில் இருக்கிறது.

பேசும் போது எப்படிப் பேசறீங்க?

'வானவில்லைக் குறுக்காக வெட்டி ரிப்பனாகக் கட்டும் விஷயங்களையா?' அல்லது யதார்த்தமான பிரச்சினைகள், நிகழ்வுகளையா?

வெறும் கற்பனைக் கயிறில் பட்டம் விட்டால், அது உண்மைக் காதலல்ல.

உண்மையான காதலில் நட்பு நிச்சயம் உண்டு. ஒருவேளை உங்கள் காதலில் நட்பின் அம்சம் நீர்த்துப் போயிருந்தால், அந்தக் காதலைக் கொஞ்சம் அவசரமாக பரிசீலனை பண்ணுங்கள்.

உண்மையான அன்பு, இணைந்து நேரம் செலவிட விரும்பும். ஆனால் அது பாலியல் சார்ந்தவையாய் இருப்பதில்லை. பேசிப் பேசி நேரம் போவதே தெரியாது. ஆனால் அது பாலியல் சார்ந்த பேச்சாய் இருக்க வேண்டும் என்பதில்லை.

அடுத்தவருடைய உணர்வுகளை, சிந்தனைகளை, விருப்பங்களை, சோகங்களை எல்லாம் அது காது கொடுத்துக் கேட்கும். உண்மையான பரிவுடன் ஆலோசனைகள் சொல்லும். உண்மையில் அடுத்த நபருடைய இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பதில் காதல் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டும்.

அடுத்தவரை வாழ்வில் முன்னேறச் செய்ய வேண்டுமென ஊக்கப்படுத்துவதையும், தொடர்ந்து ஆதரவு நல்குவதையும் காதல் சிறப்புறச் செய்யும்.

'எக்ஸாம் கெடக்குது.. வாடா சினிமா போலாம்' என்பது உண்மைக் காதலல்ல.

'நல்லா எக்ஸாம் எழுது, பேனா பென்சில் எடுத்துட்டியா? படிச்சியா?' என அக்கறையாய் விசாரிப்பதில் அது மலரும்.

அதேபோல தப்பான காதல் குடும்பத்தினரை விட்டு விலகியே இருக்கத் தூண்டும். வெளிப்படையாய் இருக்க மறுக்கும் காதலுக்குள் சில மர்மங்கள் இருக்கலாம்.

மால்கம் கிளாட்வெல் தனது 'பிளிங்க்' எனும் நூலில் குறிப்பிடும் விஷயம் சுவாரசியமானது. நம்முடைய உள்ளுணர்வு ஒரு விஷயத்தை முந்திரிக் கொட்டை மாதிரி முன்னால் வந்து எச்சரிக்கும் இல்லையா? 'அது அக்மார்க் உண்மை, அதன்படி நடந்துக்கோங்க' என்பதை அவருடைய நூல் வலுவாக முன்வைக்கிறது.

'பார்ட்டி சரியில்லையே' என உள்மனம் எச்சரித்தால் உடனே ஒரு முற்றுப்புள்ளி போட்டு விடுங்கள்.

'உண்மை கசக்கும், ஆனால் நிலைக்கும்'.

காதலைப் பொறுத்தவரை சிக்கல் பொய்யில் துவங்கும்.

'எப்படியாவது ஆளைக் கவுக்கணும்பா' என பொய்கள் சரசரவென ஓடி வரும். கல்யாணத்துக்கு அப்புறம் சாயம் வெளுக்கும். அதுதான் காதலில் விழுகின்ற முதல் ஓட்டை.

ஓட்டை விழுந்த படகு பயணத்துக்கு லாயக்கற்றதாகி விடும்.

நம்பிக்கை உடைவதைப் போல உறவுகளின் இடையேயான விரிசல் வேறு இல்லை.

உண்மையான காதலுக்கு சில அற்புதமான குணாதிசயங்கள் உண்டு. உண்மைக் காதல் நிஜங்களை அதன் உண்மையான இயல்புகளோடு ஏற்றுக் கொள்ளும், முரண்டு பிடிக்காது. உண்மைக் காதல் அடுத்தவருடைய வலிகளில் துடிக்கும், வளர்ச்சியில் பறக்கும், தோல்வியில் துவளும். அடுத்த நபர் விலகிவிட்டாலும் கூட.

உண்மைக் காதல் ஒரு நீண்டகால ஒப்பந்தம். தற்காலிகத் தேவைகளுக்கான அடைக்கல நிழல் அல்ல.

காதல் நமது தோளில் உட்கார்ந்திருக்கும் பறவை போல என்பார்கள். இறுகப் பிடித்தால் இறந்து விடும். பிடிக்க நினைத்தால் பறந்து விடும். சுதந்திரமாய் விட்டால் தோள்களிலேயே தஞ்சமடையும்.

காதலனும், காதலியும் சுதந்திரமாய் உணர்வது காதலில் மிக முக்கியம்.

காதல் என்பது அன்பின் நிலை. அந்த அன்பு நிரம்பியிருப்பவர்கள் மற்றவர்கள் மீதும் அன்பும் கரிசனையும் காண்பிப்பார்கள். அடுத்த நபரிடம் மரியாதை செலுத்துவார்கள். செயல்களில் பணிவும் நாகரீகமும் மிளிரும், மன்னிப்பு மலரும், ஈகோ விடைபெறும்.

இவை எல்லாம் இல்லையேல் உள்ளே உள்ள அன்பு உண்மையா? என கேள்வி எழுப்புங்கள்.

ஒரு சின்னக் கதை...

உயிருக்குள் உயிர் பொதிந்த காதலர்கள் அவர்கள். எல்லா காதலர் தினத்திலும் காதலிக்கு ஸ்பெஷல் பூங்கொத்தை பரிசளிப்பான் காதலன். காதல் வளர்ந்து திருமணமானது. வருடங்கள் வளர வளர காதலும் வளர்ந்தது. பூங்கொத்தும், பிரியமும் தொடர்ந்தது. இந்தக் காதலை மரணம் கூட பிரிக்கக் கூடாதென மன்றாடினர் இருவரும். ஆனால் ரணத்தின் தேரேறி மரணம் ஒருநாள் வந்தது. காதலன் மறைந்தான், காதலி உறைந்தாள்.

அடுத்த காதலர் தினம் துயரத்துடன் வந்தது. அவளுடைய அழுகை அணை உடைத்தது. அவனில்லாத முதல் காதலர் தினம் அது. படுக்கையில் புரண்டு கண்ணீர் விட்டாள். திடீரென கதவு தட்டும் ஓசை. வாசலில் பூங்கொத்துடன் ஒருவன். பூங்கொத்தை வாங்கினாள்.

இறந்து போன காதலன் அனுப்பியிருந்தான்.

பூங்கொத்தில் ஒரு வாசகம். 'மரணம் உயிரைத்தான் பிரிக்கும், காதலையல்ல. நான் உன்னை நேசிக்கிறேன்'.

அவளுக்கோ கோபம்.

பூ அனுப்பிய கடைக்காரரிடம் சென்றாள்.

'வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாயா?' என சீறினாள்.

அவன் நிதானமாய்ச் சொன்னான்.

'அம்மா, உங்க வீட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாரு. எல்லா காதலர் தினத்துக்கும் உங்க வாசலில் ஒரு பூங்கொத்து வைக்கச் சொல்லி பணம் கொடுத்தாரு. ஒருவேளை நான் நேரடியா கடைக்கு வந்து பூ தேர்வு செய்யலேன்னா, நான் இறந்துட்டேன்னு அர்த்தம். ஆனாலும் நீ பூங்கொத்து கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. ஒருவேளை மரணம் வந்து அவளையும் சந்தித்தால் கடைசியாய் ஒருமுறை அவள் கல்லறையில் பூங்கொத்தை வை.

எப்போதும் கடிதத்தில் தவறாமல் எழுது - 'மரணம் உயிரைப் பிரிக்கும், காதலையல்ல'... என்று.

இதாம்மா நடந்தது' அவன் சொன்னான்.

அவள் அழுதாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் காதலில் கரைந்து பெருமிதம் அடைந்தன.

உண்மைக் காதல் ஆழமானது.
காதலின் உண்மை வேர்களில் தெரியும், பூக்களில் அல்ல.
போலிகளைப் புறக்கணியுங்கள்.
உயிரில் உலவும் உண்மை
அதுவே காதலின் தன்மை!


சேவியர்

2 comments:

எம்.டி.வெங்கடேஷ்வர் said...

Kadasi story Chance illai. Nalla interesting story . Maranam uyrai pirikkum kadhalai alla. Good lines . Ini ungaluda ovvaru post padippen

எம்.டி.வெங்கடேஷ்வர் said...

Thank you for posting . I write love story in my blog . Could you like read my love story once