Saturday, February 4, 2012

பகிர்தல் பழகு!

அன்னை தெரசாவின் வீட்டுக்கு அருகே ஏழைக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அவர்கள் சாப்பிட்டே பல நாட்கள் ஆகியிருந்தன. இளகிய மனம் கொண்ட அன்னை தெரசா அவர்களுடைய வறுமையை அறிந்தபோது மனம் வருந்தினார். கொஞ்சம் அரிசியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டுக்கு விரைந்தார்.

அந்த வீட்டுப் பெண்மணியிடம் அரிசியைக் கொடுத்து பசியாற்றிக் கொள்ளச் சொன்னார். அந்தப் பெண்மணியின் கண்களில் ஆனந்த மின்னல். அடுத்த வினாடியே அந்த அரிசியில் பாதியை இன்னொரு பையில் அள்ளிக் கொண்டு வெளியே ஓடினார் அந்தப் பெண்மணி. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்தப் பெண்மணியிடம் தெரசா கேட்டார்.

'அத்தனை அவசரமாய் எங்கே போனீர்கள்?'

அந்தப் பெண்மணி மூச்சிரைத்துக் கொண்டே சொன்னார், 'பக்கத்தில் இன்னொரு வீடு இருக்கிறது. அவர்களும் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அவர்களும் சாப்பிடட்டுமே என்று அந்த அரிசியைக் கொண்டு போய் கொடுத்தேன்'.

அன்னை தெரசா நெகிழ்ந்தார், அந்தப் பெண்மணியின் இளகிய மனதைக் கண்டு வியந்தார்.

பகிர்தல் ஓர் அற்புதமான மனித நேயப் பண்பு. மனதில் ஒளிந்திருக்கும் அன்பின் வெளிப்பாடு பகிர்தலில் வெளிப்படும். ஆனால் அந்த பண்பை ஊட்டி வளர்ப்பதில் பெரும்பாலானவர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் சோகம்.

'தனக்கு மிஞ்சியதுதான் தானம்', 'ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்' என்றெல்லாம் உலவுகின்ற பழமொழிகள் உண்மையில் பகிர்தலின் அர்த்தத்தையே அழித்து விடுகின்றன. தனது தேவைக்கும் அதிகமாக, உபரியாய் இருப்பதை மட்டுமே பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு தவறான பாடத்தை இத்தகைய 'கிழமொழிகள்' நமக்குச் சொல்லித் தருகின்றன.

முதலாவது, பகிர்தல் என்பது பொருள் சார்ந்த விஷயமே கிடையாது. அது நமது மனம் சார்ந்த விஷயம். பட்டினியின் விளிம்பில் கிடந்தாலும் பகிரும் மனப்பான்மையுடன் இருக்கலாம் அல்லது சுவிஸ் பேங்கில் பணத்தைப் போட்டும் சுயநலத்துடன் திரியலாம். எல்லாம் நமது மனதில்தான் இருக்கிறது.

அழிந்து வரும் உயிரினங்களைப் போல இன்றைக்கு பகிர்தலைப் பேணும் மனிதர்கள் அருகிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கும் மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பலர் தங்களுக்காகவும், தங்கள் குடும்பம் அல்லது உறவுகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறார்கள். சொல்லப் போனால் பாதிப் பேர் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளையே கூட கண்டுகொள்வதில்லை என்பது துயரத்தின் உச்சம்.

அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிறு வயதில் தரப்படும் போதனைகள் அதில் ஒன்று. ஒரு குழந்தையின் மனதில் உருவாக்கப்படுகின்ற மதிப்பீடுகளுக்கு ரொம்பவே வலிமை அதிகம். பெரும்பாலும் நாம் பிள்ளைகளை டாக்டர் ஆக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டுவோம். அந்த ஆர்வத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக் கூட அவனை ஓர் இளகிய மனம் படைத்த மனிதனாக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை.

'சேச்சே.. நான் அப்படியில்லேப்பா!' என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு சின்ன சோதனை!

உங்கள் குழந்தையிடம் பத்து ரூபாய் கொடுத்து ஒரு பொருள் வாங்கி வரச் சொல்கிறீர்கள். போகும் வழியில் எதிர்ப்படும் ஏழைக்கு அந்த பத்து ரூபாயை அவன் கொடுக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அந்தக் குழந்தையின் ஈகைக் குணத்தைப் பாராட்டுவீர்களா? அல்லது இதெல்லாம் தப்பு என கண்டிப்பீர்களா?

முல்லைக்குத் தேர்கொடுக்கும் பாரியும், மயிலுக்கு போர்வை கொடுக்கும் பேகனும் நமக்கு வெறும் வரலாற்றுக் கதைகள் மட்டும்தானா? உங்கள் மகன் தன்னிடமிருக்கும் ஒரு விலையுயர்ந்த பொருளை நண்பனின் தேவைக்காய் கொடுத்தால் பாராட்டுவீர்களா? இப்போது சொல்லுங்கள்!

பகிர்தல் பதியம் போடப்பட வேண்டிய பருவம்- பால்யம்! சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதிலேயே இது ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை மனம் திறந்து பாராட்ட வேண்டும்.

குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்றெல்லாம் பேசுவதை விட, பகிர்தல், அன்பு, உறவுகள் போன்ற உயரிய கொள்கைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். டோராவும், பவர் ரேஞ்சர்களும் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கட்டும். சின்ன வயதில் விதைக்கும் பகிர்தல் விதை, முதுமை வயதில் கூட தழைத்து வளரும்.


கனடாவில் ஆலன்- வயலட் லார்ஜ் என்ற ஒரு முதிய தம்பதியர் வசிக்கிறார்கள். சமீபத்தில் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது! நிஜமாகவே ஜாக்பாட். லாட்டரியில் 11.2 மில்லியன் டாலர்கள். தோராயமாய் கணக்குப் போட்டுப் பார்த்தால் 55 கோடி ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். விஷயத்தைக் கேள்விப்பட்டபோது அவர்கள் சிலிர்த்தார்கள்.

ஆனால் அவர்களுடைய மனம் அந்த லாட்டரிப் பணத்தை விட வெகு விசாலமாய் இருந்தது. 'இந்த பரிசுத் தொகையை முழுமையாய் ஏழைகளுக்கே அளிக்கிறோம்' என்று அவர்கள் அறிவித்தனர். உலகமே வியந்தது. மருத்துவமனைகள், புற்றுநோய் சிகிச்சை, காப்பகங்கள் என பல இடங்களுக்கு இந்தப் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது!

ஆனந்தம் என்பது தனக்காக வைத்துக் கொள்வதிலல்ல, பகிர்தலில் என்பதைப் புரிந்து கொண்டதுதான் அந்த தம்பதியரின் வெற்றி. அவர்களுடைய வாழ்க்கை நிச்சயம் ஆனந்தத்தின் வீதிகளில் இளைப்பாறும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

பகிர்தல் எப்போதும் பொருளாதாரம் சார்ந்ததாய் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு நல்ல ஆலோசனை, ஓர் ஆறுதலான வார்த்தை என எதுவாகவும் இருக்கலாம். ரொம்ப சோர்வாக இருக்கும் உங்கள் நண்பருக்கு ஒரு சின்ன புன்னகையை அளிப்பதில் கூட பகிர்தலின் சுகம் இருக்கிறது.

பகிர்தல் என்பது பூமராங் போல! அதை நாம் செய்யச் செய்ய அது நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கும். ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பகிர்தலை மனதுக்குள் எழுதிக் கொள்ள வேண்டும். பகிர்தல் அன்பின் வெளிப்படாக இருக்க வேண்டுமே தவிர அது ஒரு கட்டாய நிகழ்வாய் இருக்கக் கூடாது. பகிர்தலை பழகிக் கொண்டவர்கள் மன அழுத்தம் அடைவதில்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

அமெரிக்காவின் ஆரிகன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சி நடத்தினார்கள். ஹார்வர்டு பேராசிரியர் மைக்கேன் நார்டன், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக எலிசபெத் டன் மற்றும் லாரா அக்கின் இதை நடத்தினார்கள். `பிறருக்குக் கொடுக்கும்போது நமது உடலில் ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. மூளை சுறுசுறுப்பாகிறது. மனம் ஆனந்தமடைகிறது' என இந்த ஆராய்ச்சி முடிவு வெளியிட்டது.

வெல்லெஸ்லி பல்கலைக்கழக பால் விங்க் தனது ஆராய்ச்சியில் `பரந்த மனப்பான்மை உடையவர்கள் உடலளவிலும், மனதளவிலும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருப்பார்கள்' என்கிறார்.

இப்போது சொல்லுங்கள், கொடுப்பதால் பயன் பெறுவது கொடுப்பவர்களும்தானே?

பகிர வேண்டும் எனும் மனம் நமக்குள் இருக்கும் போது வாய்ப்புகள் எப்போதும் நமது கண்களுக்கு முன்னால் தெரியும். பேருந்தில் பயணம் செய்யும் போது உங்கள் இருக்கையை இன்னொருவருக்குக் கொடுப்பதில் ஆகலாம். உங்கள் வாகனத்தை இன்னொருவரின் தேவைக்கு பகிர்வதில் ஆகலாம். இப்படி, நீங்கள் வாய்ப்புகளைக் கண்டறிந்துப் பயன்படுத்தப் பயன்படுத்த உங்களுக்குள் பகிர்தல் இயல்பு வேர்விட்டு வளரும்.

அவ்வப்போது ஏதேனும் கசப்பான நிகழ்வுகள் நேரலாம். அதை ஒரு தடைக்கல்லாக வைத்துக் கொண்டு பகிர்தல் குணத்தை மூட்டை கட்டி மூலையில் போடாதீர்கள்.

வீண் செலவு செய்யும் ஓட்டைக் கை ஆசாமிகள் வீணாய் செலவிடும் பணத்தை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்திப் பாருங்கள். கொடுப்பதில் கிடைக்கும் ஆனந்தம், சும்மா செலவிடுவதில் இல்லை என்பதை உணர்வீர்கள். அதிக பணம் கொடுத்து வாங்கி வீட்டில் சும்மா இருக்கும் ஒரு பொருள் உங்களை மன அழுத்தத்தில் தள்ளும். ஆனால் ஒருவருடைய தேவைக்கு அளிக்கும் பணம் எப்போதுமே மனதை உற்சாகப்படுத்தும்!

இளைஞர்கள் நாட்டின் குருதிக் குழாய்கள். உங்களிடையே பகிர்தல் வேகம் பரவுகையில் ஒரு தேசமே வளம் பெறும். உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் பகிர்தல் சிந்தனையை உருவாக்க முயலுங்கள். சமூக மாற்றத்துக்கான உங்களுடைய பங்களிப்பாகவும் அது அமையும்.

ஒரே ஒரு தீக்குச்சியின் உரசலில் உருவாகும் நெருப்பு, ஒரு மெழுகுவர்த்திக்குத் தாவி, பின் இன்னொன்றுக்குத் தாவி, ஆயிரக்கணக்கான வெளிச்சப் புள்ளிகளுக்கு விதையாகும். நல்ல செயல்களும் அப்படியே! அவை நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்!

'உன்னால் நூறு பேருக்கு உணவு கொடுக்க முடியா விட்டால் பரவாயில்லை, ஒருவருக்குக் கொடு' என்கிறார் அன்னை தெரசா!

கொடுங்கள்! எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல. எந்த மனநிலையில் கொடுக்கிறோம் என்பதே முக்கியம். ஒவ்வோர் பகிர்தலிலும் அடி நாதமாய் அன்பு இருக்க வேண்டும். நம்முடைய மகிழ்ச்சியை விட அடுத்தவருடைய மகிழ்ச்சி நமக்கு முக்கியமானதாய் தோன்றும்போது நமக்குள் பகிர்தல் பெருங்கடலாய் விரியும்.

பல நேரங்களில் நமக்கு அந்த மனநிலை வருவதில்லை. 'இந்த நிலமைக்குக் காரணம் நீதான்', 'அப்பவே சொன்னேன் நீதான் கேக்கல', 'உனக்கு அந்தத் தகுதி இல்லை' இப்படி ஏதாவது ஒரு சாக்குப் போக்குக்குப் பின்னால் நம்முடைய கல் மனதை ஒளித்து வைக்கிறோம்! 'அருகதையற்ற நபர்' என ஒருவரை நாம் எந்த சூழலிலும் தீர்ப்பிடவே கூடாது! பாத்திரம் அறிந்து பிச்சையிட வேண்டிய அவசியம் இல்லை. தேவை அறிந்து உதவினால் போதும்!

இருப்பதில் கொடுப்பது பகிர்தலின் துவக்கம்.. இருப்பதெல்லாம் கொடுப்பது பகிர்தலின் சிகரம். இல்லாததைக் கூட கொடுக்கலாம் என்பது பகிர்தலின் மகத்துவம்! பகிர்தலில் நாம் உலகிற்கு முன்னோடி! வயலில் விதைத்த விதை நெல்லையே பொறுக்கி வந்து, அடைக்கலமாய் வந்தவருக்கு உண்ணக் கொடுத்த பகிர்தலின் வரலாறு நமக்கு இருக்கிறது!

பகிர்வோம், வளர்வோம்!

அன்பே பகிர்தலின் அச்சாணி
அதுவே வாழ்வின் உச்சாணி!

No comments: