Monday, February 20, 2012

ஹாலிவுட் டிரெய்லர்

எதிர்பார்த்தது போலவே நடந்திருக்கிறது. சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 'கோஸ்ட் ரைடர்' ஹாலிவுட் படத்தின் இரண்டாம் பாகமான 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்' வெளிவருகிறது. மார்வெல் காமிக்ஸின் கதைதான். என்றாலும் ஆங்காங்கே சினிமாவுக்கு ஏற்றபடி டிங்கரிங் செய்திருக்கிறார்கள்.

நரகத்திலிருந்து தப்பி வந்த சாத்தான்களை அழிப்பது, கோஸ்ட் ரைடரின் வேலை. எத்தனை பாகங்கள் எடுக்கப்பட்டாலும், அத்தனை பாகங்களின் ஒன லைன் இதுதான். 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்' ஹாலிவுட் படமும் இம்மிபிசகாமல் இந்த விதிமுறையையே கடைபிடிக்கிறது.

படத்தை குறித்து பார்பதற்கு முன்னால், சில அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். முதல் விஷயம், ஹீரோவுக்கும், ஆன்டி ஹீரோவுக்குமான வித்தியாசம். அசாதாரணமான நிலைமைகளை, சாதார மனிதன் எதிர்கொண்டு வெற்றி பெறுவது, ஹீரோயிசம். சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத சாதனைகளை, சர்வசாதாரணமாக நிகழ்த்துபவன், ஹீரோ. சூப்பர் ஹீரோவோ, இன்னும் மேலானவன். காற்றில் பரப்பான், மலைகளை தூக்குவான். கடல் நீரை, குடிநீராக பருகுவான். அதீத கற்பனைகளின் மொத்த வடிவம் சூப்பர் ஹீரோ என சுருக்கமாக சொல்லி விடலாம்.

ஏறக்குறைய இதே குணநலன்களை கொண்டன்தான் ஆண்டி ஹீரோ. என்ன... சமூக நலனுக்காக தீயவர்களை வீழ்த்துவான், ஹீரோ. ஆன்டி ஹீரோவோ, தனிப்பட்ட தனது பழிவாங்கும் என்னத்துக்காக கொடியவனை அழிப்பான். வில்லனுக்குரிய 'கலர்' ஆன்டி ஹீரோவுக்கு இருக்கும். ஆனால், ஆன்டி ஹீரோ, வில்லன் அல்ல.

இத்தனையும் விளக்குவதற்கு காரணம், 'கோஸ்ட் ரைடர்', ஆன்டி ஹீரோ வகையறாவை சேர்ந்தது என்று சொல்லத்தான். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், இது சூப்பர் ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட்.

டிசி காமிக்ஸை வீழ்த்துவற்காக மார்வெல் காமிக்ஸ், தலைகீழாக நின்று உழைத்து ஏராளமான சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியது. அப்போது கூடவே ஜனித்ததுதான், 'நேமர் த சப் மேரனைனர்'. ஒருவகையில் சூப்பர் ஆன்டி ஹீரோவின் முதல் காமிக்ஸ் கதாப்பாத்திரம் என இதைச் சொல்லலாம். 1939ல், பிறவி எடுத்த இந்த கேரக்டர், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முழு பரிணாமத்தை அடைந்தது, கோஸ்ட் ரைடரில். பிறகு ஃபான்டம் ரைடர் என நாமகரணம் சூட்டினார்கள். 1983 வரை பாகம், பாகமாக கோஸ்ட் ரைடர் காமிக்ஸ் விற்பனைக்கு வந்து சக்கைப் போடி போட்டது.

மார்வெல் காமிக்ஸின் அங்கமான, மார்வெல் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட பிறகு, காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் திரையில் சாகசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆரவாரத்துடன் இவர்களை வரவேற்றார்கள். அந்த வகையில், 2007 பிப்ரவரி 16 அன்று திரைக்கு வந்து மொத்தமாக கல்லாவை நிரப்பியது, 'கோஸ்ட் ரைடர்'.

இதோ இப்போது 2012, பிரவரி 17 அன்று பிரபஞ்சம் எங்கும் கலக்க வருகிறது 'கோஸ்ட் ரைடர்: ஸ்பிரிட் ஆஃப் வென்ஜென்ஸ்'. முந்தைய பாகத்தில் நடித்த ஆஸ்கர் விருது பெற்ற நிகோலஸ் கேஜ், இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார். காமிக்ஸ் கதைகளை எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் ஸ்காட்ச் கிம்பில், சேத் ஹாஃப்மேன், டேவிட் எஸ்.கோயர் ஆகிய மூவரும் சேர்ந்து இப்படத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறார்கள். 'கராங்க்' புகழ் நெவல்டின் -டைலர், இரட்டையர்கள் இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

புரட்சி எண்ணம் கொண்ட பாதிரிகள் உதவியோடு, நரகத்திலிருந்து வந்த சாத்தான்களை நிக்கோலஸ் கேஜ் அழிப்பதுதான் கதை. இதிலும் தீப்பிழம்பை கக்கும் முகமும், சூப்பர் ஃபாஸ்ட் புல்லட்டும் உண்டு.
கே.என்.சிவராமன்   

1 comment:

Kannan said...

விமர்சனத்திற்கு நன்றி...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"