Saturday, February 11, 2012

பொழுது போக்கும், பொழுதை ஆக்கும்!

எப்படா ஸ்கூல் மணி அடிக்கும், ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா?

அதன் பின் படிப்பு, வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விஷயம்தான் பொழுதுபோக்கு. ஆங்கிலத்தில் சொன்னால் ஹாபி.

பொழுதுபோக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ, `அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்... வேலையைப் பார்க்கவே டைம் இல்லை' என சலித்துக் கொள்வார்கள்.

ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம்.

ஹாபி என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே.

நமது அலுவலக வேலை நமது பொருளாதாரத் தேவைக்கான ஓட்டம்.

பொழுது போக்கு, நாம் இழந்த விருப்பங்களுக்கான ஓட்டம்!

'இதுல என்னய்யா இருக்கு...' என சலிப்படைபவர்கள் ஒரு தனி ரகம். அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே பொருளாதார ஸ்கேல் கொண்டு அளப்பவர்கள். வாழ்க்கை அதைத் தாண்டியும் உள்ளது.

உற்சாகம், இனிமை, ஆனந்தம், நேர் சிந்தனை எல்லாவற்றின் கூட்டுத்தொகைதான் வாழ்க்கை.

நமக்கு என்ன பிடிக்குமோ, அதுவேதான் வேலையாகவும் இருந்தால் ஹாபியே தேவையில்லை. ஆனால் நமக்கு அப்படியா அமைகிறது? கவிதை எழுத ஆர்வம் உடையவர் வக்கீல் வேலையில் இருப்பார். அவருக்கு கேஸ் கட்டுகளுடன் குடும்பம் நடத்தவே நேரம் சரியாக இருக்கும். இதுல கவிதைக் கட்டுக்கு எங்கே போறது?

நடனம் ஆட வேண்டும் எனும் ஆர்வமுடையவர் மென்பொருள் துறையில் இருப்பார். மேலதிகாரியின் கட்டளைகளுக்கு ஆட்டம் போட்டுப் போட்டே அவருடைய பொழுதுகளெல்லாம் அழிந்து போய்விடும். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர் பொட்டலம் கட்டிக்கொண்டு பெட்டிக் கடையில் நிற்பார். இப்படி பெரும்பாலும் நமக்கு அமையும் வேலை நம் மனதுக்குப் பிடித்ததாக அமைவதில்லை.

வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு! 'ஊர்ல விவசாயம் பண்றதுதான் எனக்கு பிடிக்குது' என பிடிவாதமாய் வாழும் மனிதர்கள் உண்டு. ஹாரி பாட்டர் நாவல் புகழ் ஜே.கே. ரவுலிங் எழுத்து மீது சின்ன வயதிலேயே அதீத காதல் உடையவர். அவருக்கு இப்போது எழுத்தே வாழ்க்கையாகி விட்டது. வெகு சிலருக்கே இப்படிப்பட்ட வாழ்க்கை அமைகிறது!

சரி, வேலைதான் இப்படி ஆயிடுச்சு, அதுக்காக நம்மோட விருப்பங்களையெல்லாம் விட்டுடணுமா என்ன? முழு நேரமும் அதையே செய்றதுக்குப் பதிலா, நமக்குக் கிடைக்கும் நேரத்துல அதைச் செய்யலாமே! அதன் மூலம் நமது விருப்பமும் நிறைவேறும், மனமும் ரிலாக்ஸ் ஆகும்! அதுதான் பொழுதுபோக்கின் அடிப்படை!

இன்றைக்கு வாழ்க்கையில் எல்லாமே அவசரம். இதனால் அலுவல் வேலை நேரமும் சகட்டு மேனிக்கு உயர்ந்து விட்டது. அதிலும் குறிப்பாக மென்பொருள் போன்ற துறையில் வேலை பார்ப்பவர்கள் ராத்திரி பகல் என உழைக்க வேண்டிய கட்டாயம். இதனால் பலரும் மன அழுத்தம் எனும் கொடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

மன அழுத்தத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினால் ஏதேனும் ஒரு டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். பட்டியல் போட்டு அதன் பிரச்சினைகளைச் சொல்வார்கள். மன அழுத்தம் மனதைப் பாதித்து, மனதின் நிம்மதியைக் குலைத்து, அமைதியைச் சிதைத்து ஏகப்பட்ட டென்ஷனைத் தரும். அந்த மன மாறுதல்கள் அப்படியே உடலுக்கும் பரவி ஏகப்பட்ட நோய்களையும் தந்து செல்லும்.

மன அழுத்தத்தை விரட்ட ஓர் எளிய வழி நல்லதொரு ஹாபியை கொண்டிருப்பது தான் என்கின்றனர் மருத்துவர்கள். பொழுதுபோக்கிற்காய் செலவிடும் கொஞ்சம் நேரமே போதுமாம் வேலை அழுத்தத்தைக் குறைத்து, மனதைச் சமநிலைப்படுத்த!

மடோனா தனது மன அழுத்தத்தைக் குறைக்க எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். பிறகு அந்த ஹாபியில் அவருடைய ஈடுபாடு அதிகமாகிப் போய் விட்டது. குழந்தைகளுக்கான பல புத்தகங்களை அவர் பிற்காலத்தில் வெளியிட்டார் என்பது சுவாரசியத் தகவல்!

பொழுதுபோக்கில் ரொம்ப ஆர்வமாய் ஈடுபடும் பலர் பிற்காலத்தில் அதையே முதன்மைத் தொழிலாக ஆக்கிக் கொள்வதுண்டு. இல்லாவிட்டால் அதன் மூலம் தங்கள் வேலையை வெற்றிகரமாய் மாற்றுவதும் உண்டு.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஜூராசிக் பார்க் இயக்குனர். அவருடைய ஹாபி, ஏலியன்ஸ் அதாவது வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றி தேடித் தேடி வாசிப்பது. அந்தப் பொழுதுபோக்கு அவருக்கு ரொம்பவே கை கொடுத்தது. ஏலியன் படங்களை எடுத்து உலகப் புகழையும் பெற்றார். ஈ.டி. எனும் மாபெரும் வெற்றிப் படத்தை மறக்க முடியுமா என்ன?

பணிகள் பெரும்பாலும் நமக்கு வெளியேயான விஷயங்களைத் தேடி ஓடுவதில்தான் இருக்கும். படிப்பு, வேலை, குழந்தைகள், பெற்றோர் இப்படி! பொழுதுபோக்கு நம்மையே நாம் தேடிக் கொள்ளும் விஷயம். நம்மைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி, நமது இயல்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் இடம் இது.

எதையேனும் செய்து முடிக்கும் போது, 'அட! நானா இதைச் செஞ்சேன்' என மனதை வருடும் இதமான ஒரு உணர்வு நமது உற்சாக நரம்புகளையெல்லாம் மீட்டி விடும். மீண்டும் மீண்டும் தொடர்ந்து செயல்பட அது ஊக்கம் தரும். நமக்காகக் கொஞ்ச நேரம் ஒதுக்காத வாழ்க்கை நமக்கான வாழ்க்கையா?

பலருக்கும் ஹாபி என்பது வேலையாகிப் போய், பின்னர் வாழ்க்கையே அதுவாகிப் போவதுண்டு. குறிப்பாக சமையல் கலையில் ஆர்வம் உடைய பலர் பிற்காலத்தில் மிகப்பெரிய உணவகங்கள் அமைத்திருக்கிறார்கள். பொம்மைகள் செய்வதில் ஆர்வமுடையவர்கள் பெரிய பிஸினஸ் தலைகள் ஆகியிருக்கிறார்கள்.

ஏன்? பேஸ்புக்கை வடிவமைத்த மார்க் ஷுக்கர் பெர்க் கூட அதை பொழுதுபோக்காகத்தான் ஆரம்பித்தார். மென்பொருள் புரோக்ராமிங் செய்வது அவருடைய பொழுது போக்கு. அவர் உருவாக்கிய 'ஷக்நெட்' எனும் 'சேட்டிங்' மென்பொருள் உண்மையில் இன்றைய பிரபல சேட்டிங் மென்பொருள்களின் முன்னோடி.

கல்லூரிக்கான ஒரு சின்ன இணைய தளமாக அவர் உருவாக்கிய பேஸ் புக் இன்று 80 கோடி பேர் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது! உலகின் மிக இளம் வயதுக் கோடீஸ்வரரான இவருக்கு வயது வெறும் 27 தான்! சொத்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய்கள்! இப்போது சொல்லுங்கள், ஹாபி நல்லதா, கெட்டதா?

பொழுதுபோக்கையெல்லாம் வயசானப்புறம் பாத்துக்கலாம்பா என பலர் நினைப்பதுண்டு. ஆனால் சிறு வயதிலேயே ஒரு நல்ல ஹாபியை உருவாக்கினால்தான் அது முதிய வயதில் கை கொடுக்கும். கதை எழுதுவது உங்கள் ஹாபி என வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வயதிலேயே அந்த கலையை ஆர்வமாய் தொடர்ந்தால் முதுமையில் அட்டகாசமாய் எழுதித் தள்ளலாம்.

இன்னும் சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலேயே ஒரு பிடித்தமான ஹாபி கை வரப் பெற்றால் அந்த ஹாபி காலம் முழுதும் பயனளிக்கும். எனவேதான், ஒரு நல்ல பொழுதுபோக்கைப் பிடித்துக் கொள்ள குழந்தைகளை உற்சாகமூட்டுவது தேவையாகிறது.

'உங்க பொழுதுபோக்கு என்ன?' ன்னு கேட்டா நிறைய பேர், `டிவி பாக்கறது, நண்பர்களோட சுத்தறது' என அடுக்குவார்கள். பொழுதுபோக்கு உங்களுடைய சொந்த திறமை, விருப்பம் சார்ந்து இருப்பதுதான் எப்போதுமே நல்லது. சினிமாதான் உங்க பொழுதுபோக்கு என்றால், அந்த பொழுதுபோக்குக்காய் சினிமா எனும் ஒரு விஷயத்தை நீங்கள் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது இல்லையா?

பொழுதுபோக்கு நட்பையும், உறவையும் வளர்க்கும்! ஒரு பொழுதுபோக்கு இருந்தால், அதே போன்ற பொழுதுபோக்குடைய பலருடன் நட்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இணையம் அந்த வசதியை மிக எளிமையாக்கியிருக்கிறது.

எழுதும் விருப்பம் உடையவர்களுக்கு இலவசமாய் கிடைக்கின்றன பிளாக் எனப்படும் வலைப்பூக்கள். பாட விருப்பம் உடையவர்களுக்கும், ஆல்பம் தயாரிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கும் ïடிïப் போன்ற வலைத்தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. ஓவியம், சமையல் போன்ற கலைகள் பிடித்திருந்தால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் குழுக்கள் வைத்து உங்களை ஊக்கமூட்டுகின்றன. இங்கெல்லாம் ஒத்த சிந்தனையுடைய நிறைய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

வெளி நபர் அறிமுகம் கிடைப்பது இருக்கட்டும், பல வேளைகளில் நமது குடும்பத்திலுள்ள நபர் களோடு இணைந்து நேரம் செலவிடவும், இனிமையாய் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கவும் கூட நமது ஹாபி கைகொடுக்கும். உதாரணமாய் தோட்ட வேலை, சமையல் போன்றவை கூட்டாய் கும்மாளமடிக்க ஏற்ற பொழுதுபோக்குகள் இல்லையா?

பொழுதுபோக்கு மூளைக்கு ரொம்ப நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். பொழுதுபோக்கு மூளையின் ஆனந்த அணுக்களைத் தூண்டி உற்சாகமூட்டுகிறது. அதனால் உடலும், உள்ளமும் உற்சாகமடைகின்றன. வேலையின் சோர்வைக் கழுவிக் களையும் சக்தி பொழுதுபோக்கிற்கு உண்டு.

நல்ல பொழுதுபோக்கு உங்கள் பொழுதுகளை ஆக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஒரு சேர உற்சாகம் தரும். வாழ்வை அர்த்தப்படுத்தும், ஆனந்தப்படுத்தும்! அப்புறமென்ன? ஒரு நல்ல பொழுதுபோக்கைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனந்தமாய் வாழுங்கள்.

மனதில் நிலவும் ஏக்கம் அதை
நீக்கும் பொழுதுபோக்கும்!
சேவியர்

2 comments:

Kannan said...

மிகவும் அழகாக சொன்னீர்கள்....அருமை....

"நன்றி,
கண்ணன்

http://www.tamilcomedyworld.com"

Vetrimagal said...

ரிடயர் ஆனப்புறம் என்ன பண்றேனென்று கேட்டு எங்கள் வீட்டுக்கு ஏன் வரலை என்று கேட்கும் தோழப் பெருமக்கள் அநேக்ம். ஏதோ பொழுது போவதற்கும் வம்பு தும்பு பேசுவதற்கும் துணை நாடும் வர்க்கம்.

ஆனால் , இனி வாழ்க்கையில் செய்ய நினைத்த அத்தனையும் முடிக்க நேரமே போதவில்லை என்று நினைப்பவர்கள் தான் உண்மையாக பொழுதை ஆக்குகிறார்கள்.
உலகில் இன்னும் கற்றுக் கோள்ளவும் நம்மால் முடிந்த அளவு பிறர்க்கு உபகாரமாக இருக்கவும் நினைப்பவர்களுக்கு பொழுது போதாதது தான்.