Wednesday, February 1, 2012

தெரிந்துகொள்ள சில...

ராஜாஜியின் உத்தி!

ஒரு தடவை ராஜாஜியும், அவருடைய நண்பரான கே.ஜி. வெங்கட சுப்பையரும் ஒரு சமூக சீர்திருத்தக் கூட்டத்துக்குப் போயிருந்தனர்.

வெங்கட சுப்பையர் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். அத்துறைக்கு வருவதற்கு முன் கிறிஸ்தவக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர்.

அவர் அப்பதவியில் இருந்து விலகும்போது மாணவர்கள் அவருக்கு ஒரு தேநீர் விருந்து அளித்து நினைவுப் பரிசாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினர்.

அந்தக் கடிகாரத்தை அவர் மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து வந்தார். அதன் மீது வெங்கட சுப்பையருக்கு ஒரு தனிப் பாசமே உண்டு.

சமூக சீர்திருத்தக் கூட்டம் முடிந்து ராஜாஜியும், வெங்கட சுப்பையரும் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவு நேரம். சுப்பையரின் கையில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரம் தவறி, ரெயில் பெட்டிக்கு வெளியே தண்டவாளத்தின் அருகில் விழுந்து விட்டது.

"ஐயய்யோ... கடிகாரம் வெளியே விழுந்துவிட்டதே!'' என்று சுப்பையர் பதறினார். கடிகாரத்தின் மீது அவருக்கு அவ்வளவு பற்றுதல்.

உடனே ராஜாஜி பெட்டியிலிருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து ரெயில் பாதையின் அருகே உள்ள தந்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டே வந்தார்.

ராஜாஜி வெளியே பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றதும் ராஜாஜி ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார்.

'இத்தனை தந்திக் கம்பங்களுக்கு அப்பால் எங்களில் ஒருவருடைய கைக் கடிகாரம் தவறி தண்டவாளத்தின் அருகே விழுந்துவிட்டது. உங்கள் ஆட்களில் யாரையாவது அனுப்பி தேடிக் கண்டுபிடித்து நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அனுப்பியதற்கான செலவுடன் ஒரு நல்ல தொகையை அன்பளிப்பாக அனுப்புகிறோம்' என்று கூறினார்.

அதே மாதிரி சில நாட்கள் கழித்து ஒருநாள் வெங்கட சுப்பையருக்கு கடிகாரம் வந்து சேர்ந்தது.

அவர் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன், ராஜாஜியின் மதிநுட்பத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.
 
******************************************
 
படுத்தபடி எழுதியவர்!

புகழ்பெற்ற கவிஞரான மில்டன் படுத்துக்கொண்டேதான் எழுதுவார். கடைசிக் காலத்தில் அவருக்கு வயதாகி, கண் பார்வை குறைந்த நிலையில் 'பாரடைஸ் லாஸ்ட்' என்ற ஒப்பற்ற காவியத்தை மில்டன் சொல்லச் சொல்ல, அவரது மகள் எழுதி முடித்தார்.

******************************************
 
திருமண கேக்!

பல திருமணச் சடங்குகளின் பின்னணியாக, குலத்தைத் தழைக்கச் செய்வது என்ற கருத்து உள்ளது. திருமண கேக்குக்கும் அது பொருந்தும். கோதுமை, பார்லியில் செய்த சிறு கேக்குகளை ரோமாபுரியினர் மணப்பெண்ணின் தலையில் உடைப்பதில் இருந்து இவை தொடங்கியுள்ளன. (நம்மூர் திருமணங்களில் மணமக்கள் தலையில் அப்பளம் உடைக்கப்படுவது போல!).

இன்று நாம் உபயோகிக்கும் வெண்ணிற 'ஐசிங்'கோடு கூடிய மூன்றடுக்கு கேக், இரண்டாம் சார்லஸ் காலத்தில் அறிமுகமானது. லண்டனில் உள்ள செயின்ட் பினாட் சர்ச்சின் கூரான கோபுரத்தின் வடிவில் கேக்குகள் செய்யப்படுகின்றன.

மணமக்கள் இணைந்து கேக்கின் முதல் துண்டை வெட்டுகிறார்கள். எதிர்காலம் எதைக் கொடுத்தாலும் இருவருமாகச் சேர்ந்து அதைப் பகிர்ந்துகொள்வது என்பதை இது குறிக்கிறது.

******************************************

சேணம் பூட்டிய ஆளற்ற குதிரை!

போர் வீரரின் இறுதி யாத்திரையில் ஆளற்ற குதிரை பங்கேற்பது ரோமாபுரி மக்களின் மிகப் பழமையான பழக்கம். ஒரு போர் வீரனுக்கும், அவனுடைய குதிரைக்கும் ஒன்றாகவே யுத்தப் பயிற்சி அளிக்கப்படும். அந்த வீரனைத் தவிர வேறு யாரையும் அந்தக் குதிரை தனது எஜமானனாக ஏற்காது.

ஓய்வெடுப்பதற்காக ஒரு போர் வீரன் படையிலிருந்து விலகினால், அவனுடைய குதிரையும் நீங்கிவிடும். அதேபோல, போரில் அந்த வீரன் இறந்தால், இடுகாடு வரைக்கும் அந்தக் குதிரை சவப்பெட்டியைத் தொடர்ந்து செல்லும். எஜமானனுடன் அந்தக் குதிரையும் புதைக்கப்படும்.

மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையை நோக்கி இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். காலியான பூட்ஸை கால் வைக்கும் வளையத்தில் வைப்பது பின்னாளில் வந்த வழக்கம். அந்தக் குதிரையின் மீது வேறு யாரும் ஏறிச் சவாரி செய்ய முடியாது என்பதை அது குறிக்கிறது. தற்போது இது வெறும் சடங்காக மட்டும் உள்ளது. இறந்தவருடன், குதிரையைப் புதைப்பதில்லை.

No comments: