Saturday, January 28, 2012

இணைந்து செயல்படு!வாழ்க்கை என்பது ஒரு சங்கமம். இணைந்து வாழ்தலிலும், இணைந்து செயல்படுதலிலும்தான் அதன் முழுமையான அர்த்தம் அடங்கியிருக்கிறது. எந்த ஒரு சின்ன விஷயத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், அது ஒரு கூட்டு விளைவாகவே இருக்கும்.

கூட்டு முயற்சி இல்லாத ஒரு வெற்றியையோ, ஒரு சாதனையையோ கண்டுபிடிப்பது இயலாத காரியம். தனி மனிதச் சாதனைக்குப் பின்னணியில் கூட பலருடைய பங்களிப்பு உண்டு என்பதே நிஜம்.

நாம் சாப்பிடும் சாப்பாடானாலும் சரி, பயன்படுத்தும் வாகனமானாலும் சரி, ஏன் நமது உடல் ஆனாலும் சரி ஒன்றாய் இணைந்த பல விஷயங்கள் அதில் உண்டு. அதனால்தான் 'தனிமரம் தோப்பாகாதுப்பா, சேர்ந்து வாழக் கத்துக்கணும்' என்பார்கள் பெரியவர்கள்.

முன்பெல்லாம் இணைந்து வாழ்வது நமது சமூக வாழ்க்கை முறையாகவே இருந்தது. வீடுகள் கூட்டுக் குடும்பங்களாக இருந்தன. ஏகப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் ஆனந்தமும், வலிமையும் நிறைந்த வாழ்க்கையாய் நமது வாழ்க்கைக் கலாசாரம் இருந்தது.

வேலைகள் கூட கூட்டம் கூட்டமாக வயலிலோ, விளைநிலங்களிலோ இணைந்து வாழும் சூழலையே உருவாக்கியிருந்தன. எனவே இயல்பாகவே மக்களிடம் இணைந்து வாழும் தன்மையும், திறமையும் மிகுந்திருந்தது.

இன்றைக்கு கூட்டு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துக் கொண்டே வருகிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுடைய குடும்பத்திலேயே நீங்கள் அதை உணர முடியும். சந்தேகம் இருந்தால் உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஓர் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்று பாருங்கள், புரிந்து கொள்வீர்கள்.

இணைந்து வாழ்தல் என்பது தவிர்க்க முடியாதது. தவிர்க்கக் கூடாதது. அலுவலகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, நண்பர்களிடையேயானாலும் சரி, அதுவே மனதை வளமாக்கும், வெற்றிகளை வசமாக்கும்.

வாழ்வில் வெற்றிகளை அடைவதற்கு எந்த அளவுக்கு நமது தனிப்பட்ட திறமைகள் முக்கியமோ, அந்த அளவுக்கு நாம் எப்படி ஒரு குழுவாக இயங்குகிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். எவ்வளவுதான் சிறப்புத் தகுதிகள் உடையவராக இருந்தாலும் குழுவாய் இயங்கத் தெரியாவிட்டால் அவர் நிராகரிக்கப்படுவார்.

அலுவலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அங்கே வெற்றி என்பது எல்லா ஊழியர்களும் ஒன்றுபட்டு உழைப்பதில்தான் இருக்கிறது. தனிநபர் சாதனைகள் தேவைதான். ஆனால் அவை பிறருடன் இணைந்து ஒட்டுமொத்த வெற்றியாய் மாற வேண்டியது அவசியம்.

சச்சின் தெண்டுல்கரின் சதம் ஒரு சாதனையெனில், அந்த சாதனையோடு மற்ற வீரர்களின் இணைந்த பங்களிப்பே அணியின் வெற்றியாக மாற முடியும்.

லட்சியம்...

ஒரு குழுவாக செயல்படும்போது எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் எனும் புரிதல் மிக மிக முக்கியம். லட்சியமற்ற குழுக்கள் வெற்றிகளை குவிப்பதில்லை. குழுவிலுள்ள அனைவருமே குழுவின் நோக்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியதும், அதை நோக்கிப் பயணிப்பதும்

அவசியம்.இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. ஒரு ஒற்றைக் குச்சியை சட்டென உடைத்து விட முடியும். அதே நேரம் ஒரு 'கட்டு'க் குச்சிகளை அவ்வளவு எளிதில் உடைத்து விட முடியாது. குட்டிக் குட்டி மீன்கள் ஒன்றாக இணையும் போது ஒரு பெரிய கப்பலையே புரட்டிப் போடும் என்பார்கள்.

ஆங்கிலத்தில் இதை 'டீம் ஒர்க்' என்று அழைப்பார்கள். நிறுவனங்கள் இத்தகைய டீம் ஒர்க் சூழலை எப்படி மேம்படுத்தலாம் என தலையைப் பிய்த்துக் கொள்வார்கள். அதற்காக ஆண்டுதோறும் பயிற்சிகள், முயற்சிகள் என பல மில்லியன் டாலர்களை அள்ளி வீசுவார்கள். இந்த டீம் ஒர்க் எனும் ஒரு சிந்தனையை முன்வைத்தே ஏகப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.

அத்தகைய பயிற்சிகளோ, செலவுகளோ இல்லாமல் நீங்கள் டீம் ஒர்க்கில் கில்லாடியாகலாம். சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.

முதலாவது விஷயம் தகவல் பரிமாற்றம். கம்யூனிகேஷன் வலுவாக இருக்கும் இடத்தில்தான் குழுவாக இணைந்து செயல்பட முடியும். ஒரு குழுவில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இடையே முழுமையான தகவல் பரிமாற்றமும், உரையாடல்களும் இருக்க வேண்டியது அவசியம். இது அடிப்படையான விஷயம். இதில் பலவீனம் நேர்ந்தால் குழுப்பணி படுதோல்வியில் முடியும்.

எனவே உங்கள் குழுவினரோடு தங்கு தடையில்லாத, ஒளிவு மறைவில்லாத உரையாடலை வைத்துக் கொள்ளுங்கள். புரியும் விதத்தில் பேசுங்கள். பிறர் பேசுகையில் அது உங்களுக்கு புரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கேளுங்கள்...

கவனமாய்க் கேட்பது குழு உரையாடலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. அடுத்த நபருடைய ஐடியாக்களைக் கேட்பதும், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்பதும் குழு உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள்.

கருத்து வேற்றுமைகளை களைவது அடுத்த முக்கியமான விஷயம். கருத்து வேற்றுமைகள் இல்லாத ஒரு குழு இருக்க முடியாது. கருத்து வேற்றுமைகளை திறமையாகக் கையாளும் குழுவே வெற்றிகரமான குழு. நீங்கள் ஒரு குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான மிக முக்கியமான குணமும் அதுதான். ஈகோவை களைந்து விட்டு கருத்து வேற்றுமைகளை சரிசெய்யும் வழியை உருவாக்குங்கள்.

ஒரு குழுவின் வெற்றியே வேற்றுமையில் ஒற்றுமையை உருவாக்கும் அதன் நுணுக்கத்தில்தான் இருக்கிறது. பல வடிவங்களில் இருக்கும் விரல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கரமாக வலிமை பெறுவது போல, பல இசைக்கருவிகள் சேர்ந்து ஒரு சிம்பொனியை உருவாக்குவது போல் வேற்றுமைகள் ஒன்றாகும்போது ஒரு குழு வலிமை பெறுகிறது.

ஒருவருக்கொருவர் ஊக்கமூட்ட வேண்டியது குழுவாய் பயணிக்க வேண்டியதன் இன்னொரு முக்கியத் தேவை. மறைந்து கிடக்கும் திறமைகளை தோண்டி எடுக்கவும், அவற்றைக் கொண்டு குழுவின் வலிமையை அதிகரிக்கச் செய்யவும் ஊக்கமூட்டுதல் உதவும்.

அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவதும், உள்ளுக்குள்ளே பாரபட்சமின்றி செயல்பட வேண்டியதும் அடிப்படை விஷயங்கள். அதில் தவறினால் வெற்றியின் கதவுகள் இறுக்கமாய் அடையும்.

வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? குழுவாக இணைந்து பணியாற்றுவதன் அட்டகாசமான உதாரணமாக அதைச் சொல்கின்றனர் வல்லுனர் கள்.

மேலை நாடுகளில் 'கூஸ்' எனப்படும் வாத்து போன்ற பறவைகள் உண்டு. அவை குழுவாய்ப் பறக்கும் நிகழ்வைக் கொண்டு 'டீம் ஒர்க்'குக்கான பல்வேறு பாடங்களை இவர்கள் வடிவமைத்திருக்கின்றனர்.

இவை வானத்தில் குழுவாகப் பறக்கும் போது 'ய' வடிவத்தில் பறக்கும். தனித் தனியே பறப்பதை விட 71 சதவீதம் அதிக தூரத்தை ஒரு குழுவாகப் பறக்கும்போது அவை கடக்கின்றன!

முன்னால் செல்லும் பறவை சோர்வடையும்போது இன்னொரு பறவை சட்டென அந்த முதல் இடத்துக்கு வந்து விடுகிறது. சோர்வடையும் பறவை பின்னால் செல்கிறது. இதனால் அதிக வீரியமாய் சிறகசைக்க வேண்டிய தேவையில்லாமல் போகிறது. குழுவின் முன்னேற்றமும் தடைபடுவதில்லை.

ஒரு பறவை நழுவி விழுகின்றபோது மற்ற பறவைகளின் சிறகசைக்கும் வேகத்தில் அந்தப் பறவை மேலிழுக்கப்படுகிறது.

குழுவாகப் பறக்கும் பறவைகள் தலைமையேற்கும் பறவையை பாராட்டி, தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் பறக்க தூண்டுகின்றன.

ஒருவேளை ஒரு பறவை காயமடைந்தோ, சோர்வடைந்தோ கீழே விழுந்தால் அந்த குழுவிலிருந்து மேலும் இரண்டு பறவைகள் பிரிந்து அதற்கு உதவ முயல்கின்றன. கீழே விழுந்த பறவை திரும்பவும் பறக்கும் வரை அவை கூடவே இருக்கின்றன. பறக்கும் வலிமை வந்ததும் ஒரு புதிய ய வடிவ குழுவாய் பறந்து போகின்றன அல்லது பழைய குழுவை அடைகின்றன. ஒருவேளை விழுந்த பறவையால் பறக்க முடியாமல் போனால் அந்தப் பறவை இறக்கும் வரை இரண்டு பறவைகளும் கூடவே இருக்கின்றன!

இந்த பறத்தலின் ஒவ்வொரு நிகழ்வும் குழுவாய்ச் செயல்படுவதற்கான சூட்சுமங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. குழுவாய் இணைகையில் அதிக வெற்றி எனும் பாடமும், குழு உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் எனும் வழிகாட்டுதலும் இதன் மூலம் கற்பிக்கப்படுகிறது.

தனியாக இருக்கும் போது நாம் ஒரு துளி, ஒன்றாய் இணைந்தால் கடல்! எல்லோருமே இணைந்து ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, வெற்றி தானே வந்து சேர்கிறது என்கிறார் ஹென்றி போர்டு.

குழுவிலுள்ள ஒவ்வொருவருடைய தனி விருப்பமும், குழுவின் விருப்பமும் இணைந்தே பயணிக்க வேண்டும். தனி மனிதனுடைய வளர்ச்சியை கவனிக்காத குழு தனிமனிதர்களுடைய ஆர்வத்தைக் குறைத்து விடும். ஆர்வம் குறைந்த உறுப்பினர்கள் நல்ல குழுவை அமைப்பதில்லை.

தனி மனிதத் திறமைகளை வளர்த்துக் கொள்வதும், பின்னர் குழுவாக இணைந்து அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதுமே வாழ்வின் வெற்றிக்கான இரண்டு மந்திரங்கள்.

வண்ணங்களின் இணைதலே
வானவில்லின் வசீகரம்!

சேவியர்

No comments: