Monday, January 2, 2012

பெற்றோர்களைப் போற்றுவோம்!

ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது.

ஒரு குழந்தை அந்த மரத்தின் மீது கொஞ்சிக் குலாவி விளையாடி வந்தது. மரம் ஆனந்தத்தில் திளைத்தது. குழந்தை வளர்ந்தது. மரத்துடன் உள்ள அதன் நெருக்கம் குறைந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின் அந்த மரத்தைக் காண இளம் வயதில் அவன் சென்றான். மரம் ஆனந்தத்தில் குதித்தது.
'என்னோடு விளையாட வா' என அழைத்தது.
'இப்போது எனக்கு நேரமில்லை.. கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது' என்றான் இளைஞன்.

மரம் தன்னிடமிருந்த பழங்களை எல்லாம் அவனுக்குக் கொடுத்தது.

அவன் அதை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனான்.

மரத்தை மீண்டும் தனிமை சூழ்ந்தது.

சில வருடங்களுக்குப் பின் அந்த இளைஞன் மரத்திடம் போனான். மரம் மகிழ்ந்தது. 'வா என்னுடன் விளையாடு' என்றது.
'எனக்கு நேரமில்லை. வீடுகட்டப் போகிறேன்' என்றான்.
'சரி என்னுடைய கிளைகளை எல்லாம் வெட்டிக் கொள்' என்றது மரம்.

அவன் வெட்டிச் சென்றான்.

மீண்டும் மரம் தனிமையில் விழுந்தது.

நடுத்தர வயதில் அவன் மீண்டும் வந்தான். மரம் குதூகலித்தது.
'வா என்னுடன் விளையாடு' என்றது.

`இல்லை... எனக்கு ஒரு படகு செய்ய வேண்டும், விளையாட நேரமில்லை' என்றான் அவன்.
'என்னை வெட்டிக் கொள்' என்றது மரம் தாமதிக்காமல்.

மரம் வெட்டப்பட்டது. வேர்களும், மூடும் மட்டும் மௌனத்தில் அழுதன.

மீண்டும் வழக்கம் போல தனிமை!

பல வருடங்களுக்குப் பிறகு முதுமையின் பிடியில் அவன் வந்தான். மரம் கண்ணீர் விட்டது. 'இப்போது என்னிடம் பழங்கள் இல்லை, கிளைகள் இல்லை, எதுவுமே இல்லை. வேர்கள் மட்டும்தான் இருக்கின்றன. அவையும் காய்ந்து கொண்டிருக்கின்றன. என்னால் விளையாட முடியாது, என்னருகில் அமர்வாயா?' ஏக்கத்துடன் கேட்டது மரம். அவன் அமர்ந்தான்.

மரம் அவன் மீது காட்டிய அன்பு அவனுடைய கண்களில் ஈரமாய் வழிந்தது.

நமது வாழ்க்கையில் `பெற்றோர்' எனும் மரம் இப்படித் தான். மழலைப் பருவத்தில் அவர்களோடு சேர்ந்து விளையாடினோம். பின்னர் அவர்கள் நமக்கு பழங்களைத் தரும் மரமாகிப் போனார்கள். அது நமக்குத் திருப்தியாகவில்லை. அவர்கள் தங்களையே கொஞ்சம் கொஞ்சமாய் தியாகம் செய்தார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நமது அன்பை மட்டுமே. நம்முடைய அருகாமையை மட்டுமே. ஆனால் நாம் அவர்களுக்கு அதைக் கூடத் தரத் தயாராய் இல்லை!

எத்துணை பெரிய சுயநலம்? எவ்வளவு பெரிய துயரம்!

தினசரிகளில் அவ்வப்போது வரும் செய்திகள் உயிரை உலுக்குகின்றன. அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் 85 வயதான தாயை ரோட்டில் போட்டு பலமுறை காரை அவர் மீது ஏற்றிக் கொலை செய்த மகனின் கொடூர செயல் அதிர்ச்சியாய் பேசப்பட்டது.

இதெல்லாம் அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கும் என நாம் சொல்லவும் முடியாது. காரணம் தாயின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனிதர்கள் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்.
'என் பையன் அடிக்கிறான், சாப்பாடு போட மாட்டேங் கறான்' எனக் கதறும் முதிய வயது பெற்றோர்கள் நம்மிடையேதான் உலவுகின்றனர். முதியோர் இல்லங்களின் வாசல்களில் நமது பெற்றோர்தான் ஏக்கத்தோடு வாசல் களைப் பார்த்தபடி தவமிருக்கின்றனர்.

பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமல்ல. கொஞ்ச நேரம் கண்களை மூடி பெற்றோரின் அன்பையும், அவர்களுடைய தியாகங்களையும் மனதில் அசைபோடுபவர்களுக்குத் தெரியும் அன்பின் ஆழமும், பெற்றோரின் மகத்துவமும்.

ஒருவேளை உங்களுடைய விருப்பங்களை பெற்றோர் எதிர்க்கலாம். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு எதிரே நிற்கலாம். எல்லாவற்றுக்கும் பின்னால் உலவுவது உங்கள் மீதான அன்பு மட்டுமே!

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை. இந்த வறட்டுப் பிடிவாதம், கவுரவம், ஈகோ எதுவுமே இல்லை. இந்த வாழ்க்கையை வாழும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது பெற்றோர்தான் என்பது நமது
மனதுக்குள் எழவேண்டும்.

உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு அவர்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லுங்கள். அவர்களோடு நேரம் செலவிடுங்கள். 'இது எனது அன்புக்குரிய பெற்றோர்' என்று எந்த சூழலிலும் கர்வத்தோடும், அன்போடும் அறிக்கையிடுங்கள். நம்முடைய நூற்றுக் கணக்கான சிறுவயதுப் பிழைகளை மன்னித்து அரவணைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய சிறிய பிழைகளைக் கூட மன்னிக்க மறுக்கும் மனம் நம்மிடம் இருப்பது தவறல்லவா?

பெற்றோருடைய பழைய கதைகளைக் கேட்பதைப் போல சுவாரசியம் வேறொன்றும் இல்லை. அந்தக் கதைகள் அவர்களுடைய நினைவுகளின் மீட்சியாகவும், நம் மீதான அன்பின் ஆட்சியாகவும் மலரும். அவர்கள் மீது நாம் வைக்கும் அன்புக்கு அடையாளமாய் அந்த செவிமடுத்தல் அமையும்.

எண்பது வயதான தந்தை தனது இளம் வயது மகனுடன் பால்கனியில் அமர்ந்திருந்தார். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
'அது என்ன மகனே?' என்று கேட்டார் தந்தை.
'அப்பா, அது காகம்' என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.
'அது காகம்' என்றான் மகன்.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை 'அது என்ன?' என்றார்.

மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். 'காகம்!' என்றான்.

நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?' என்று கேட்டார்.

மகனின் கோபம் எல்லை கடந்தது. 'காகம்... காகம்... காகம்... வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே' என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.

தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
'இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.

காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.

அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.

இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்' என்று எழுதி யிருந்தது.

மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.

பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் பெற்றோராய் மாற வேண்டும் என்பார்கள். கண்ணின் கருவிழி போல நமது குழந்தைகளை பதட்டத்துடனும், பாதுகாப்புடனும், அன்புடனும் பாதுகாப்பதைப் போலத்தான் நமது பெற்றோரும் நம்மைப் பாதுகாத்திருப்பார்கள் எனும் புரிதல் நமக்கு இருக்க வேண்டியது முக்கியம்.

ஒரு கெட்ட கனவு கண்டால் கூட தூரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு போன் செய்து பத்திரமாய் இருக்கச் சொல்லிப் பட படப்பதுதானே அன்னையின் அன்பு! பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவோ, படிப்புக்காகவோ கிழிந்த வேட்டியையே தலைப்பு மாற்றிக் கட்டி நடப்பது தானே தந்தையின் பேரன்பு. பிள்ளைகளுக்காய் யோசிக்காமல் செலவு செய்யும் பெற்றோர், தங்களுக்காக என்று வரும்போது செலவு செய்யாமல் வெறுமனே யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்?

நம்முன் உலவும் தெய்வங்களான பெற்றோருக்கு நாம் என்ன அன்பைத் திருப்பிக் கொடுக்கிறோம்?

கடைசியாக எப்போது `கடவுளே என்னோட அம்மா அப்பா ரொம்ப அருமையானவங்க. அவர்களைத் தந்ததற்காக நன்றி!' என மனமுருகிப் பிரார்த்தித்தீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய் 'அப்பா, அம்மா, உங்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்ததுல நான் ரொம்பவே சந்தோசப்படுகிறேன்' என்று சொன்னீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோருக்கு 'சர்ப்ரைஸ் பரிசு' வாங்கிக் கொடுத்தீர்கள்? அவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் உங்கள் நினைவில் இருக்கிறதா?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'உங்களுக்கு ரொம்ப மன வருத்தத்தையும், இடைஞ்சலும் தந்துட்டேன். மன்னிச்சுடுங்க' என்று சொல்லி கட்டியணைத்தீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரின் முன்னால் போய் நின்று, `சும்மா பாக்கணும்னு தோணுச்சும்மா அதான் வந்தேன். இன்னிக்கு முழுசும் உங்க கூடதான் இருக்கப் போறேன்' என்று சொன்னீர்கள்?

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரிடம் போய், 'இன்னைக்கு நீங்க ரெஸ்ட் எடுங்க. சமையல், வீடு சுத்தம் செய்வது, தோட்ட வேலை, தண்ணீர் இறைப்பது என சர்வத்தையும் நானே பார்த்துக்கறேன்' என்று சொன்னீர்கள்?

இப்படி சில 'எப்போது?' எனும் கேள்விகளை உங்களுடைய மனதில் எழுப்பினாலே போதும். நீங்கள் உங்கள் பெற்றோரை நேசிக்கும் அளவு உங்களுக்குப் புரிந்து விடும். அந்தக் கேள்விகள் உங்களை குற்ற உணர்வில் ஆழ்த்தினால் தாமதிக்காதீர்கள், உங்கள் தொலைபேசியை எடுத்து உங்கள் பெற்றோரை அழையுங்கள். 'உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்தது அதான் போன் பண்ணினேன்' என்று சொல்லுங்கள்!

வாழ்வின் சில தருணங்கள் தொலைந்தால் திரும்பக் கிடைப்பதில்லை. பெற்றோருடனான அன்பும் அப்படியே!

உயிராய் உலவும் காற்று
பெற்றோர் அவரைப் போற்று!


 சேவியர்

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ...

//`சும்மா பாக்கணும்னு தோணுச்சும்மா அதான் வந்தேன். இன்னிக்கு முழுசும் உங்க கூடதான் இருக்கப் போறேன்'//---உடனே என்னை ஊருக்கு டிக்கெட் எடுக்க வைக்கின்ற... என் மனதை தொட்ட பதிவு..! நன்றி சகோ.உளறுவாயன்... (ஏன் இப்படி பெயர் வைத்துள்ளீர்கள் சகோ..?)

உளறுவாயன் said...

உள்ளதை உள்ளபடி சொல்பவன்தான் உளறுவாயன் அதனால்தான் அந்த பெயர் சகோதரா.