Saturday, December 24, 2011

தன்னலம் தவிர்!

எட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். ரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய ரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.

'தங்கைக்கு ரத்தம் கொடுக்க சம்மதமா?' மருத்துவர்கள் கேட்டார்கள்.

கொஞ்ச நேரம் யோசித்த சிறுவன், 'சரி' என்றான்.

அவனிடமிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், `நான் எப்போது சாகத் துவங்குவேன்?'

நர்ஸ் அதிர்ச்சியடைந்தாள்.

தனது ரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்!

இன்றைய இளைஞர்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில்நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடி திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச் சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநலத்தை ஓட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள்!

எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கப் போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கிறோம்? அந்த சிந்தனையிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா? பலவீனப்படுத்துமா? என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனைகள் மகத்துவமானவை!

'சுயநலமற்ற அன்பு' என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது? பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே? பெரும்பாலான மக்கள் இப்படித் தான் நினைக்கிறார்கள். 'இருந்தா குடுத்திருக்கலாம்... இல்லையே' என தங்களையே தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த விஷயத்தையும் 'நமக்காக மட்டுமே' பயன்படுத்துவது சுயநலமே!

ஒரு சின்ன உதாரணம், 'நேரம்'.

'கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்' என தொலைக்காட்சி முன்னால் வீணடிக்கும் நேரம் கணக்கில் அடங்குமா? அல்லது அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என கண்ணாடி முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா? இந்த நேரங்களையெல்லாம் பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா? இதுவரை யோசிக்காவிட்டால் இப்போது யோசிக்கலாமே?

உதவி தேவைப்படும் ஒரு நண்பருக்காக அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம். ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒருவருக்கு ஆறுதல் சொல்லலாம். ஒரு அனாதை விடுதியில் உங்கள் மாலை வேளையைச் செலவிடலாம். முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக்கின்றன. சுயநலத்தின் இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.

சுயநலம் உறவுகளுக்கிடையே உருவாகும்போது வாழ்வின் அடிப்படையான அன்பே சிதிலமடைகிறது. அன்பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று கலப்பதில்லை. கணவனோ, மனைவியோ சுயநலவாதியாய் இருக்கும் போது அந்தக் குடும்பம் பலவீனமடைந்து விடும். பிள்ளைகள் சுயநலவாதிகளாய் இருந்தால் பாசப் பிணைப்பு பலவீனமடையும். நண்பர்களுக்கிடையே எழுகையில் நட்பே உடைந்து விடும்.

'நான்' என்பதை பின்னால் நிறுத்தி `நீ, உனது விருப்பம்' என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.

மாட மாளிகைகள் அல்ல பாக்கியம் செய்தவை. எந்த குடும்பத்தில் சுயநலமற்ற அன்பு உலவுகிறதோ, அது தான் பாக்கியம் செய்த குடும்பம். அது குடிசையாகவும் இருக்கலாம், மாடி வீடாகவும் இருக்கலாம் அல்லது சாலையோர கோணிக் கூடாரமாகவும் இருக்கலாம்.

நான் எனும் சுயநலத்தின் அடுத்த வட்டமாக, `எனக்கு, என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு' என சுயநலம் தனது எல்லைகளை அமைக்கிறது. தனது வட்டத்தைத் தாண்டிய சக மனிதன் மீதான கரிசனை காணாமல் போய்விடுகிறது.

சுயநல சிந்தனைகளை விட்டு வெளியே வர முதல் தேவை, `நாம் சுயநலவாதி' என்பதை ஒத்துக் கொள்வது தான். பலவேளைகளில் 'நான் சுயநலவாதியல்ல' என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

உதாரணமாக, நீங்கள் பொறாமை குணம் படைத்தவர் என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் சுயநலம் ஒளிந்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நண்பரோ, விரோதியோ, சக பணியாளரோ உங்களை விடப் பெரிய பதவிகளை சட்டென அடைந்தால் உங்கள் மனதில் பொறாமை எழுகிறதா? அவர்களுடைய தகுதியை தரக் குறைவாய் விமர்சிக்கத் தோன்றுகிறதா? உஷாராகி விடுங்கள். இவையெல்லாம் சுயநலத்தின் வெளிப்பாடுகள்!

அதே போல, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாமே சுயநலத்தின் வேறு வேறு வடிவங்களே. நாம் சக மனித கரிசனையில் நடக்கும் போது நம்மைத் தாண்டிய உலகமும் நமக்கு முன்னால் அழகாகத் தெரிகிறது.

ஒவ்வொரு நாளும், சுயநலமற்ற ஒரு நல்ல செயலையாவது புதிதாய்ச் செய்ய வேண்டும் என நினைத்துப் பாருங்கள். வழியில் லிப்ட் கேட்கும் நபராய் இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் மனிதராய் இருந்தாலும் சரி, வெறுமனே தனிமையில் இருக்கும் முதியவராய் இருந்தாலும் சரி. எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத ஒரு துளி அன்பை அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது!

'தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போதுதான் உலகம் பயனடைகிறது' என்கிறார் தெர்தூலியன்.

மன மகிழ்வுடன் கொடுப்பது நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் கொடுக்கும் போது உங்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்பால் நிறைவடைகிறது.

பிறருடைய பார்வையில் நல்லவனாய்த் தெரியவேண்டும் என்பதற்காக சிலர் நல்ல செயல்களைச் செய்வார்கள். அது தவறு. செயலும், அதன் பின்னணியில் இருக்கும் சிந்தனையும் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம்.

சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு சுயநலமற்ற பண்பை கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு அது பழகிப் போய்விடுகிறது. பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் எனும் பால பாடத்தை மறக்க வேண்டாம்.

விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வரும்போது ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறோம். பெரும்பாலும் நம் குடும்பம், நமது நண்பர்கள், நமது உறவினர்கள் இவ்வளவுதான் நமது எல்லை! இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப் பார்க்க நினைத்ததுண்டா? முதியோர் இல்லங்கள், எதிர் தெரு ஏழைகள், அருகில் வாழும் எளியவர்கள், நோயாளிகள் இவர்களோடு சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாடிப் பாருங்களேன். சுயநலமற்ற அன்பின் உண்மை விஸ்வரூபத்தை அப்போது கண்டடைவீர்கள்.

'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது' என்கிறார் புத்தர். சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது!

சுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது!

உணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு!

தனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு!

தன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.

இதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா?

'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' என்கிறார் ஸ்பினோஸா.

சுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா?' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.

ஒரு குட்டி கதை:

பார்வையிழந்த ஒரு பெண் இருந்தாள்.

அவளுக்கு தன் மீதே வெறுப்பு. உலகத்தைப் பார்க்க முடியாதே எனும் ஆதங்கம்.

அவளுடைய ஒரே ஆறுதல் அவளுடைய காதலன் தான். உயிருக்கு உயிரான காதலன். எப்போதும் அவளுடைய கரம் பிடித்து நடக்கும் காதலன்.

'எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன்' என அடிக்கடி அவள் நெகிழ்வாள்.

ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகும் செய்தி வந்தது. ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்து சிலிர்த்தாள். அறுவை சிகிச்சை முடிந்தது. பார்வை கிடைத்தது.

பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் முதன் முறையாக தனதுக் காதலனைப் பார்த்தாள்!

அதிர்ந்து போனாள்.

அவன் ஒரு பார்வையிழந்த மனிதன்.

'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?' ஆனந்தப் பிரவாகத்துடன் கேட்டான் காதலன்.

காதலியோ வழக்கத்துக்கு மாறாக மௌனமானாள்.

'மன்னித்து விடு காதலா! உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விரும்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல். செய்கிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

சில நாட்களுக்குப் பின் அவளுக்கு காதலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

'அன்பே உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்'.

சுயநலமற்ற அன்பு, பிறருடைய ஆனந்தத்துக்காய் எதையும் இழக்கத் தயாராகிறது. தனது கண்களையே காதலிக்குப் பரிசளித்த காதலனைப் போல!

அன்பைக் கெடுக்கும் சுயநலம்- அதை
விட்டு விலகுதல் வெகுநலம்!

சேவியர்

No comments: