Saturday, December 10, 2011

பேசுங்கள், வெற்றிகள் வசமாகும்

'வாயுள்ள புள்ளை பொழைக்கும்' என்பது கிராமங்களில் நிலவும் பழமொழிகளில் ஒன்று.

அதே போல 'நுணலும் தன் வாயால் கெடும்' எனும் பழமொழியும் நமக்குத் தெரிந்ததே.

நமது பேச்சே நம்மை வாழவும் வைக்கும், அழிக்கவும் செய்யும் என்பதே இவை சொல்லும் சேதி.

பேச்சைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.

சிலர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். 'எப்படா நிறுத்துவான்' என நாம் காத்துக் கொண்டிருப்போம்.

சிலர் பேசவே மாட்டார்கள். 'பேசறதுக்குக் காசு கேப்பான் இவன்' என ஒரு கமெண்ட் அடிப்போம்.

சிலர் கனகச்சிதமாய்ப் பேசுவார்கள். 'பேசினா கேட்டுட்டே இருக்கலாம்பா' என வியந்து போவோம்.

'உங்கள் பேச்சைக் கொஞ்சம் கவனிக்காவிட்டால், விளைவுகளை ரொம்பவே கவனிக்க வேண்டியிருக்கும்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஒரு மனிதனுடைய பேச்சு அவனை வெற்றியாளனாகவோ, தோல்வியாளனாகவோ உருமாற்ற முடியும். 'எப்படிப் பேசவேண்டும், எங்கே பேசவேண்டும், எதைப் பேசவேண்டும்' எனும் மூன்று விஷயங்களைத் தெரிந்து கொண்டால் போதும்.

நண்பர்களுக்கு இடையேயான பேச்சு நன்றாய் இருக்கும்போது நட்பு வலுவடைகிறது. குடும்பத்தில் பேச்சு ஆரோக்கியமாக இருக்கும்போது குடும்ப வாழ்க்கை சிறப்பாகிறது. அலுவல் சூழலில் பேச்சு கச்சிதமாய் அமையும் போது அலுவலில் வெற்றிகள் வந்து சூழ்ந்து கொள்கின்றன.

ஒரு பேச்சு வெற்றிகரமாய் அமைய சில அடிப்படை விஷயங்களை நாம் கவனத்தில் கொண்டாலே போதும்.

பேச வேண்டுமெனும் ஆர்வமும், சுவாரசியமும் மனதில் இல்லையெனில் பேசாதீர்கள். மனதின் வார்த்தையையே உதடு பேசும். உற்சாகமாய் பேசுங்கள். உங்கள் பேச்சிலுள்ள உற்சாகம் அடுத்த நபரையும் தொற்றிக் கொள்ளும்போது ஓர் உரையாடல் அழகாகி விடுகிறது.

பேச்சில் உண்மை உலவ வேண்டியது அடிப்படை விஷயம். சொல்லப்படாத உண்மையும், சொல்லப்படும் பொய்யும் பலவேளைகளில் ஒரே பணியைச் செய்து விடுகின்றன. எதையாவது பேசவேண்டுமே என பொய்யான விஷயங்களையோ, இட்டுக் கட்டிய, ஜோடித்த சமாச்சாரங்களையோ அவிழ்த்து விடவே விடாதீர்கள். உங்கள் நம்பகத் தன்மையை ஒருமுறை இழந்து விட்டால் பின் அதை மீண்டெடுப்பது குதிரைக் கொம்பு என்பதை மறக்க வேண்டாம்.

எப்படிப் பேசவேண்டும் என்பது பேச்சின் அடிநாதம். எந்த ஒரு சுவாரசியமான விஷயத்தையும் போரடிக்கும் விதமாகவும் சொல்லலாம். எந்த ஒரு போரடிக்கும் சமாச்சாரத்தையும் சுவாரசியமாகவும் சொல்லலாம். சொல்ல வேண்டிய விஷயத்தை எப்படிச் சொல்வது என்பது ஒரு கலை. சொல்ல வரும் விஷயத்தை நிறுத்தி நிதானமாய் பேசுவதும், எல்லோருக்கும் கேட்கும் விதமாக தெளிவாக சத்தமாகப் பேசுவதும் நல்ல உரையாடலுக்கான பால பாடங்கள்.

பேச்சை விஷயத்துக்குத் தக்கபடி உணர்வு கலந்து பேசவேண்டியது இன்னொரு விஷயம். தெளிவான பேச்சில் உணர்வு கலக்கும் போது அது வலிமையாகிறது. அத்துடன் கூடவே உங்கள் உடல்மொழியும் இணையும் போது அது அற்புதமான உரையாடலாய் அமைந்து விடுகிறது.

சரியான உடல்மொழி, ஒரு உரையாடலை எப்போதுமே மிகவும் `பவர்புல்' ஆக்கும். நேரடியான உரையாடலுக்கும், தொலைபேசி உரையாடலுக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமே இந்த உடல்மொழி தான். ஒரு சின்னப் புன்னகை, ஒரு கண்சிமிட்டல் கூட ஒரு உரையாடலின் தன்மையை தலைகீழாய்ப் புரட்டிப் போடும்! எனவே உடல் மொழியில் கவனம் செலுத்துங்கள்.

பேசும்போது கண்களைப் பார்த்துப் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். கண்களைப் பார்த்துப் பேசும்போது எதிர் நபரின் கவனிப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும். உங்களுடைய உரையாடலின் சாரம்சத்தை நீங்கள் மிகத் தெளிவாக உங்கள் பார்வையின் இயல்பின் மூலமாய் வெளிப்படுத்தவும் முடியும்.

'நான் பேசுவதுதான் சரி, மற்றவர்கள் பேசுவதெல்லாம் தவறு' என நிறுவ முயன்றீர்களென்றால் எந்த உரையாடலும் தோற்று விடும். ஆரோக்கியமான உரையாடலுக்கு முக்கியத் தேவை 'செவிமடுப்பது'. பிறருடைய கருத்துகளைக் கேட்பதும், அவற்றில் சரியானவற்றை ஈகோ இன்றி ஏற்றுக் கொள்வதும் சிறந்த உரையாடலுக்கான அம்சங்கள்.

பேசும் போது நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென நினைப்பதும், யாராவது சுவாரசியமாய் ஒரு விஷயத்தைப் பேசும்போது நடுவிலேயே கட் பண்ணி சொந்தக் கதையைப் பேசுவதும் தப்பு. அது அவரை அவமானப்படுத்தும் செயல் என்பதை மனதில் எழுதுங்கள்.

பழம் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் எரிச்சல் பார்ட்டிகளே. 'அப்பல்லாம்..', 'நான் அங்கே இருந்தப்போ...' என இழுக்கும் மக்கள் உரையாடலை அழுக்காக்கி விடுவதுண்டு. பேசும்போது கடந்தகால விஷயங்களைச் சேர்ப்பது தப்பில்லை. ஆனால் அது சமையலில் கலக்கும் உப்பு போல இருப்பதே சிறப்பானது. மற்றபடி நிகழ்காலத்தில் நின்று பேசுவதே நல்லது!

பேச்சில் சுவாரசியம் இருக்க வேண்டுமென்றால் உங்கள் வாழ்க்கையும் சுவாரசியமாய் இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கையை சுவாரசியமே இல்லாமல் அணுகுபவர்களால் தங்கள் பேச்சை மட்டும் சுவாரசியமாய் அமைத்துக் கொள்வது கடினம். பாசிடிவ் சிந்தனையும், உற்சாகமும் மிளிரும் பேச்சுகள் ரசனைக்குரியவை!

உங்கள் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர வேண்டியது வெற்றிக்குத் தேவை. அதற்கு நீங்கள் உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதைப் பற்றிப் பேசுகிறீர்களோ, அதில் உங்களுக்கு அறிவோ, அனுபவமோ, திறமையோ இருக்கும் போது உரையாடல் வெற்றியடையும். தன்னம்பிக்கையான பேச்சும் அப்போதுதான் உருவாகும்.

கொஞ்சம் நகைச்சுவை உணர்வு உங்கள் பேச்சில் இருந்தால் நீங்கள் ரொம்பவே வரவேற்கப்படுவீர்கள். சுவாரசியமான மனிதர்கள் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். நகைச்சுவையை ரசிப்பார்கள். பேச்சில் நகைச்சுவை உணர்வு இருந்தால் குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமாய் இருக்கும், நட்பு வட்டாரம் சிறப்பாய் இருக்கும் என்பது ஆய்வுகள் சொல்லும் சேதி!

குட்டிக் குட்டி வாக்கியங்களால் பெரிய பெரிய விஷயங்களைச் சொல்வது உரையாடலில் இருக்க வேண்டிய வசீகர அம்சம். நீண்ட வாக்கியங்களைப் பேச ஆரம்பித்தால் முடிவு வரும் போது துவக்கம் தொலைந்து போய்விடக் கூடும். சின்னச் சின்ன வாக்கியங்களே கேட்பவர்களுக்கு எளிதானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒரு விஷயத்தை நாம் சொல்லும் போது அடுத்தவருக்கு ரசிக்குமா? என்பதை பிறருடைய மனநிலையில் நின்று பார்ப்பது ஓர் உயரிய வழி. உங்கள் உரையாடலை தரமானதாகவும், உயர்வானதாகவும் மாற்றும் நல்ல வழி அது.

எதையும் நீங்களாகவே யூகித்துக் கொண்டு பேசாதீர்கள். புரியாதவற்றைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். உங்களுக்குப் பிடித்தமான வகையில் எதையும் அர்த்தம் புரிந்து கொண்டு பேசாதீர்கள்.

அதேபோல நீங்கள் சொன்ன விஷயம் அடுத்த நபருக்குப் புரிந்ததா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எளிது என தோன்றும் விஷயங்கள் இன்னொருவருக்குப் புரிந்து கொள்ளக் கடினமாய் இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எப்போதுமே நிலை தடுமாறிப் பேசுவதோ, கத்துவதோ, எரிச்சலைக் காட்டுவதோ ஒரு நல்ல உரையாடலை உடைக்கும் விஷயங்கள். அத்தகைய உரையாடல்கள் உங்கள் வெற்றியின் கதவுகளை இறுகச் சாத்திப் பூட்டிவிடும். எனவே எச்சரிக்கை தேவை.

அடுத்தவருடைய பிழையைக் கண்ணியமாய்க் கோடிட்டுக் காட்டுவதில் தவறில்லை. ஆனால் அதையே பேசி அடுத்த நபரைச் சின்னதாக்கும் முயற்சி கூடவே கூடாது. அது உறவுகளையே பலவீனப்படுத்தும்.

அடுத்தவர்களைக் காயப்படுத்தும் எந்த உரையாடலுமே தோல்விதான். அது குடும்ப உறவுகள் சார்ந்ததானாலும் சரி, அலுவலக உரையாடலானாலும் சரி. பிறரை மதிப்பதும், அவர்களுடைய உணர்வுகளை மதிப்பதும் நமக்கு இருக்க வேண்டிய அடிப்படை மனித குணங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

ஓர் உரையாடலுக்கு சிறப்பான தயாரிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடம் பேசப் போகிறீர்களோ அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதும், அது சம்பந்தமான உரையாடலை ஆர்வமுடன் அணுகுவதும் உரையாடலை அர்த்தமுள்ளதாக்கும்.

யாராவது நல்ல கருத்தைச் சொன்னால் பாராட்டத் தயங்காதீர்கள். சரியான நேரத்தில் வழங்கப்படும் ஒரு பாராட்டு கூட சிறப்பானதொரு உரையாடலின் அம்சமே. குறிப்பாக அவர்கள் சொல்லும் விஷயங்களில் சிறப்பான ஒரு விஷயத்தைக் கோடிட்டுப் பாராட்டுதல் வெகு சிறப்பு.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உரையாடலின் வெற்றி என்பது நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை, சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி விட்டீர்களா? அது அடுத்த நபரைச் சென்று சேர்ந்ததா என்பது மட்டும்தான். அதை அடுத்த நபர் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவருடைய ரசனையையோ, தேவையையோ பொறுத்தது. எனவே அடுத்தவர் ஒத்துக் கொண்டால்தான் உங்கள் உரையாடல் வெற்றி எனும் தப்பான அபிப்பிராயத்திலிருந்து வெளியே வாருங்கள்.

மனதின் நாவால் பேசுங்கள்!
வெற்றித் திலகம் பூசுங்கள்!

சேவியர்

No comments: