Friday, December 9, 2011

கவிதைச்சரம்

ஆறு ஆறாய் இருந்ததில்லை

ழு வயதில்
தத்தனேரி சுடுகாட்டில்
அம்மாச்சியை எரித்துவிட்டுத்
திரும்பும்போது
கறுப்பாய், பம்புசெட் வழி
அறிமுகமானது ஆறு.

மதுரைக்குச் சாமான்கள் வாங்க
நெல்பேட்டைப் பட்டறைகளின்
இரும்புச் சத்தம்
அதிரக் கரையிலிருந்து வரவேற்க
ஆழ்வார்புரம் வழி
ஒபூலா படித்துறை ஏறுவாள்
தங்கபாப்பு அத்தை.

ஒரு வாரம் காய்ச்சலில் கிடந்தார்கள்
மல்லிகா சித்தியும் பிரபா சித்தியும்
கல்பனா தியேட்டருக்கு
குறுக்கு வழியில் போவோமென
கால் வழுக்கி

நல்ல தண்ணீர் ஊத்துகுழியில்
விழுந்து.

மடப்புரத்துக்கு
சாமி கும்பிடப் போனபோது
ஆற்று மணலின்
சூடு பொறுக்காமல்
அழுத என்னைத்
தூக்கிக்கொண்டு ஓடியவள்
சுந்தரவல்லி பெரியம்மா.

சின்ன அம்மாச்சி மகன்
நாகரத்தினம் செத்துக்கிடந்தது
நடுத்திட்டு லிங்கத்தின் கீழே.

எட்டாவது பி செக்ஷன் சூரிய நாராயணன்
சலவைத் துறையில்
மண்ணெண்ணெய் பாட்டிலை
தேடித் தேடி உடைப்பான்.

ராமேஸ்வரத்தில் பிடிபட்டவர்களை
ரகசியமாக இங்குவைத்தே எரித்தார்கள்.
அப்பாவைத் தகனம் செய்துவிட்டு
சத்குரு சங்கீதக் கல்லூரிக்கும்
டாஸ்மாக்குக்கும் இடையிலிருக்கும்
மாநகராட்சிக் குளியலறையில்
முடித்துக்கொண்டோம் காரியங்களை.

எக்காலத்திலும் எவருக்கும்
ஆறு ஆறாக இல்லை
தனக்கும்!

சாம்ராஜ்


****************************

பச்சை நிறத் துரோகம்

கிளிக்குஞ்சு
மரப்பொந்திலிருந்து எடுத்துவரப்படுகிறது
குழந்தை
வீட்டிலிருந்து கூட்டிவரப்படுகிறது

கிளிக்குஞ்சு கூண்டில் அடைக்கப்படுகிறது
குழந்தை அழத் துவங்குகிறது

பழம் கொடுக்கப்படுகிறது கிளிக்கு
அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை

கிளி பழத்துக்கு அடிமைப்படுகிறது
குழந்தை பாடல்களைக் கற்றுக்கொள்கிறது

சீட்டுக்களைக் கலைத்து
நெல்மணியைப் பெற்றுக்கொள்கிறது கிளி
புத்தகங்களை அடுக்கி
பாராட்டுப் பெறுகிறது குழந்தை

தனியாகப் பள்ளி செல்லப்
பழகிவிட்டது குழந்தை
கவனமாக வெட்டிவிடப்படுகின்றன
கிளியின் சிறகுகள்

வெளிச்சமாயிருப்பதாகச்
சொல்லப்படுகிறது
குழந்தையின் எதிர்காலம்
நல்ல காலம் பிறக்குமென
எழுதப்பட்டிருக்கிறது கிளிச் சீட்டில் ! 

இளையநிலா ஜான்சுந்தர்

****************************

நிராகரிப்பின் சுவை

ரே ஒரு வார்த்தையிலிருந்தே
துவங்குகிறது
நிராகரிப்பின் வேதனை.

அதன் சுவை
கசப்பென்று சொல்வதுகூட
ஓர் ஒப்பீட்டுகாகத்தான்.
அதை உணர்வது
நாவுகள் மட்டுமல்ல என்பது
மேலும் வேதனை தரக்கூடியது.

எல்லையைத்
தாண்டிகொண்டிருக்கும் ஏதிலி
காதலியின் திருமண அழைப்பிதழை
அஞ்சலில் பெற்றவன்
மேல்முறையீடு
கிடைக்கப் பெறாத குற்றவாளி
திருமண விருந்திலிருந்து
வெளியேற்றப்படுபவன்
நாளிதழில் தன் தேர்வு எண்ணைக்
காணப் பெறாதவன் என
நிராகரிப்பின் முகவரிகள் நீள்கின்றன.

நிராகரிப்புக்கு உள்ளானோர்
நீட்டும் சுட்டுவிரலின் முன்
குற்றவாளியாக
அடையாளம் காணப்படுகின்றன
அன்னை மார்பு முதல்
அணு மின் உலை வரை.

மதச் சொற்பொழிவில்
தவறாது இடம் பிடிக்கும்
நரகம்குறித்த சொல்லாடல்களைப்
புன்னகையுடனே
எதிர்கொள்கின்றனர்
நிராகரிப்பின் சுவை உணர்ந்தோர்.

மானசீகன் 
 

****************************

எதிர்வினை

முதல் தளத்திலிருந்த
என் வீட்டுக்கு ஏறினேன்
என் கால்களுக்குக் கீழே
இறங்கிச் சென்றன
படிக்கட்டுகள்.

நா.அருள்ஜோதியன் 
 
 

No comments: