Monday, December 5, 2011

உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்!

'நமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது' என்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும்.

உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விஷயம் `இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்' என்பதுதான். அதற்குக் காரணம் இளம் வயதினரின் ஏனோதானோ மனநிலை என்று சொல்வதில் தப்பில்லை என நினைக்கிறேன். 'ஒபிசிடி' எனப்படும் அதீத உடல் பருமன் பிரச்சினை இன்று பரவலாய் எல்லா இடங்களிலும் தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது.

பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பலரும் ஆர்வத்துடன் அரவணைத்துக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூவி விற்கும், சிப்ஸ், குளிர்பானங்கள் போன்றவையும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள... அதீத உடல் பருமன் பிரச்சினை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறது.

'டெய்லி நினைப்பேன், ஆனா உடற்பயிற்சி செய்ய நேரமே கிடைக்கிறதில்லை' என புலம்பும் பலரையும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம். அவசர உலகில் நமக்கு எதற்குமே நேரமில்லை. அந்தப் பட்டியலின் கடைசி யில்தான் உடற்பயிற்சி எப்போதும் வந்து தொற்றிக் கொள்கிறது.

உண்மையில் உடற்பயிற்சி நமது பட்டியலின் கடைசி இடத்துக்கானதுதானா?

'நமக்கு நோய் ஏதும் வந்ததில்லை என்பதற்காக நாம் ஆரோக்கியமாய் இருக்கிறோம் என்றும் அர்த்தமில்லை' என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்துக்காக நாம் பென்ஷன் பிளான், இன்சூரன்ஸ் பாலிசி, நீண்ட கால சேமிப்பு அது இது என ஏகப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். உண்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சேமிப்பு உடல் ஆரோக்கியம்தான். இளமையில் ஆரோக்கியமாய் இருந்தால் முதுமையில் நல்ல நினைவு சக்தியுடன் வாழலாம் என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் முன்னால் பல லட்சியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போட்டி மிகுந்த உலகில் எப்படியேனும் முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆர்வமும், கட்டாயமும் அவர்களுக்கு உண்டு. வேலை கிடைக்கும் வரை புத்தகப் பூச்சிகளாகவும், வேலை கிடைத்தபின் இரவிலும் வேலை செய்யும் ஆந்தைகளாகவும் இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு.

இதனாலேயே உடற்பயிற்சி எண்ணத்தைக் கட்டிப் பரணில் போட்டுவிடுகின்றனர்.

ஆனால் ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன தெரியுமா?

சீரான உடற்பயிற்சி செய்பவர்களுக்குதான் மூளை சுறுசுறுப்பாக இருக்குமாம். மூளையில் புதிய செல்கள் உருவாக உடற்பயிற்சி தூண்டுதலாய் இருக்கும். இதனால் நினைவாற்றல், படிப்பு, முடிவெடுக்கும் திறன் என பல விஷயங்களிலும் அதிக திறமை இருக்கும் என்கின்றனர்.

குறிப்பாக தைவானிலுள்ள தேசிய செங் குங் மருத்துவக் கல்லூரி இதை விரிவான ஒரு ஆய்வு மூலம் சமீபத்தில் உறுதி செய்திருக்கிறது.

'ஆரோக்கியமான உடல் என்பது மனம் தங்கும் மாளிகை. பலவீனமான உடல் என்பது மனம் அடைபடும் சிறை' என்கிறார் பிரான்சிஸ் பேகான்.

நமது உற்சாகமான மனதுக்கு ஆரோக்கியமான உடல் உறுதுணையாய் இருக்கிறது. உடலில் உயிர்வளி அதிகமாய் உலவவும், சீரான ரத்த ஓட்டம் இருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது என்பது நமக்குத் தெரிந்ததே. அதெல்லாம் நமது மனதுக்கும் ரொம்பவே நல்லது என்பதுதான் சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், உடற்பயிற்சியின் போது உடலின் என்டோர்பின்கள் அதிகமாகச் சுரக்கின்றன. என்டோர்பின்கள் நமக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வல்லமை கொண்டவை. நீங்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் உங்களுடைய மன இறுக்கம், கோபம், சோகம் எல்லாம் காணாமல் போவதன் காரணம் இதுதான்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உங்களுடைய ஆயுள் காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. சுவீடனிலுள்ள ஒஸ்ட்ரா பல்கலைக்கழக இருபதாண்டு ஆய்வு இதை தெரிவித்திருந்தது. திடீரென நோய் வந்தோ, மாரடைப்பு வந்தோ பொசுக்கென போய்விடாமல் இருக்க சீரான உடற்பயிற்சி உதவுகிறது.

பலரும் உடல் ஆரோக்கியத்திற்கும், மனதுக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறார்கள். அது ரொம்பத் தப்பான அபிப்பிராயம். உடலின் ஆரோக்கியமே மனதின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அதேபோல மனம் உற்சாகமாய் இருக்கும் போது உடலும் ஆரோக்கியமாய் நடைபோடுகிறது.

எனவே உடலைப் பராமரிக்க வேண்டியது அதி முக்கியமானதாகிப் போகிறது. மன அழுத்தத்தையும் ஆரோக்கியமான உடல் விரட்டி அடிக்கிறது! இதை பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் தர்ஹம் பல்கலைக்கழகம் இது குறித்து சிறப்பான சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. அதில் உடல் ஆரோக்கியம் மன அழுத்தத்தை எதிர்க்கிறது எனும் அழுத்தமான முடிவு கிடைத்தது. மன அழுத்தம் பல்வேறு நோய்களையும் தன்னோடு இழுத்து வரும்.

அழுத்தமற்ற மனம் இருந்தால் நோயற்ற உடல் சாத்தியமாகிறது. அது நமது இலக்கை நோக்கிப் பயணிக்கும் உத்வேகத்தையும், வலிமையையும் நமக்குத் தருகிறது. அதனால் தான் `சேமிக்க வேண்டியது பொன்னையோ வெள்ளியையோ அல்ல. உடல் ஆரோக்கியத்தையே' என்றார் மகாத்மா காந்தி.

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க மருத்துவம் சில எளிய வழிகளை மருத்துவக் காரணங்களோடு சொல்கிறது. முதலாவது, சரியான உணவுகளைச் சாப்பிடுவது. நாவின் சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சகட்டு மேனிக்கு எதையாவது உள்ளே தள்ளினால், நடுவயதுக்குப் பின் ஆரோக்கியம் படு பலவீனமாகிவிடும்.

இளமைக் காலத்திலேயே காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என சரியான உணவுகளைப் பயன்படுத்த வேண்டும். 80 சதவீதம் ஆரோக்கியமான உணவு 20 சதவீதம் குறைந்த ஆரோக்கிய உணவு எனும் 80-20 பாலிசியைக் கடைபிடிக்க மருத்துவம் அறிவுறுத்துகிறது.

'நான் பிரேக் ஃபாஸ்டே சாப்பிடறதில்லை, அதுக்கெல்லாம் ஏது நேரம்' என சலித்துக் கொள்பவர்களுக்கும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள். காலை உணவு சாப்பிடாமல் ஓடுபவர்கள் உடலில் அதிக கொழுப்பு சேரும் என்கின்றனர் அவர்கள்.

மிக எளிதாக கிடைக்கும் விஷயங்களை நாம் பொருட்படுத்துவதில்லை என்பது துயரமான உண்மை. அதில் மிக மிக முக்கியமானது தண்ணீர். நமது உடல் 60 சதவீதம் தண்ணீரால் ஆனது. நமது உடலின் சீரான ஆரோக்கியத்துக்கும், இயக்கத்துக்கும் தண்ணீர் மிக மிக முக்கியம். இருபது கிலோ உடல் எடைக்கு ஒரு லிட்டர் எனுமளவில் தினமும் தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது என்கிறது மருத்துவம்.

இன்றைய இளைஞர்கள் கவனக்குறைவாக விட்டு விடும் இன்னொரு விஷயம் `தூக்கம்'.

இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும், மிக தாமதமாகத் தூங்குவதும் உடல்நலத்தின் மிகப்பெரிய எதிரிகள். மறு நாள் முழுவதும் சோர்வாகவும், உற்சாகமின்றியும் உடல் தடுமாறும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வும், உயிர் வழியும் கிடைக்காமல் மூளை உற்சாகமிழக்கும். எனவே தூக்கம் என்பது முக்கியமான ஒரு வேலையே எனும் சிந்தனையில் அணுகுங்கள்.

புகை, மது போன்ற பழக்கங்களை முற்றிலுமாக விட்டு விட வேண்டியது ரொம்ப முக்கியம் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. புகை பிடித்தலினால் வரும் நோய்களையும், உடல் பலவீனங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருக்கலாம். அது குறித்த ஆய்வுகள் பல நூறு வந்திருக்கின்றன.

புகையை விட்டு விட்டாலே உடலின் ஆரோக்கியம் சீரான முன்னேற்றத்தை அடையும் என்பது சர்வ நிச்சயம். `மனிதனுடைய நோய் அவனுடைய தனிப்பட்ட சொத்து' என்கிறார் அலொன்சோ கிளார்க். ஒருவருடைய நோயை இன்னொருவர் சுமக்க முடியாது என்பதே அவர் சொல்லும் செய்தி.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை நமது உடலின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து விடும். நமது மூச்சுக்காற்றிலுள்ள ஆக்சிஜனில் 80 சதவீதம் நமது மூளைக்குச் செல்கிறது. நாம் எவ்வளவு சுத்தமான, தூய்மையான காற்றை உள்ளிழுக்கிறோமோ அதில் 80 சதவீதம் பிராண வாயுவை மூளை தனக்காய்ப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை அனுபவசாலிகள் முன்மொழிகிறார்கள். எதுவும் தெரியாவிட்டாலும் கூட மூச்சை அடிக்கடி ஆழமாய், மெதுவாய் உள்ளிழுத்து வெளிவிடுவதே கூட உங்கள் மூளையை சுறுசுறுப்பாய் வைத்திருக்க உதவும்.

முக்கியமாக, உங்கள் மனதை இலகுவாக வைத்திருங்கள். மன்னிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். கோபம், எரிச்சல், பொறாமை, குறை சொல்லிக் கொண்டே இருப்பது போன்றவையெல்லாம் நமக்கெதற்கு. வாழ்க்கை அழகானது. அதை ஆனந்தமாய் எதிர்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் தன்னம்பிக்கையின் அச்சாணி! நமக்கும் நம் உடலுக்கும் இடையேயான பந்தத்தைச் சொல்வது தான் உடல்நலம். அந்த பந்தம் நீண்டகால பந்தமாய் நிலைக்கட்டும்.

இளமையைப் பேணுவோம், வளமையைக் காணுவோம்!

No comments: