Wednesday, November 23, 2011

கவிழ்ப்புப்புரட்சி கற்றுத்தரும் பாடம்

 
பரந்துவிரிந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தைப் பிடித்து உலுக்கி, சடசடவென 'ஜார்' முறியக் காரணமானதோட உலகைக்குலுக்கி விழித்தெழச்செய்து, "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு" எனும் அற்புத சமூகக் கட்டமைப்பை உருவாக்கி, பாரெங்கும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் முகிழ்த்தெழ வழிவகுத்து


அரசியல்-சமூக-பொருளாதாரச் சமநீதியைத் தாங்கி நிற்கும் சோஷலிச முகாமை வலிமைபெறச் செய்த அற்புதத்தின் வித்து 1917 நவம்பர் 7ல் நிகழ்ந்தயுகப்புரட்சியெனில், அரும்பாடுபட்டுப் பாட்டாளிவர்க்கமும் அதன் நேச சக்திகளும் உருவாக்கிய சோஷலிஸ்ட் முகாமைத் தகர்த்துத் தரை மட்டமாக்க விஷ வித்துஊன்றப்பட்டதும் அதே ரஷ்ய மண்ணில்தான்!


"சகல அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!" எனும் தோழர் லெனின் அவர்களின் தாரக மந்திரத்தைச் சிரமேற்கொண்டு, மக்களுக்குச் சகலஅதிகாரங்களையும் அளிக்கும் வகையில், கரடு தட்டிப்போன, தலைமையிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை மீட்டெடுக்கவும், மக்களைசெம்மைப்படுத்தும் மெய்யான சோஷலிச ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், பெரிஸ்த்ரோயகா (மறுகட்டமைப்பு), 'க்ளாஸ்னாஸ்ட்' (வெளிப்படையான அணுகுமுறை) எனும் உத்திகளைத் தீர்க்கமாகச் செயல்படுத்த முற்பட்டவர் சோவியத் ஜனாதிபதியாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராகவுமிருந்த தோழர் மிகையீல் கொர்பச்சேவ்.
சோவியத் யூனியனையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் மீட்கின்ற புனிதப்போரை நடத்துவதாகக் கூறிக் கவிழ்ப்புப்புரட்டைச் செய்தனர் மாற்றத்தை விரும்பாத கட்சி மற்றும் அரசு அதிகார வர்க்கத்தினர்.


விளைவு: "பொக்கென ஓர் கணத்தே யாவும் போகத் தொலைத்துவிட்டோம்!" வீழ்ந்தது சோவியத் யூனியன்; சோஷலிச முகாம்.
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம், உலக மக்களின் விடுதலை இயக்கம், நடுநிலை நாடுகளின் இயக்கம் கலகலத்துப்போயின.
முன்னேறிச் செல்வதற்கான வழிதெரியாது விழிபிதுங்கி நிற்கிறது உலகில் பல நாடுகளின் முற்போக்கு இயக்கங்கள்.


இந்த வன்கொடுமை எந்தப் பின்னணியில், யாரால், எப்படி நிகழ்த்தப்பட்டது? மறுகட்டமைப்பு இயக்கத்துக்குத் தலைமையேற்ற தானும் மற்ற தன்தோழர்களும் செய்த தவறுகள் என்ன? ரஷ்யாவுக்கு எதிர்காலம் உண்டா?--இத்தனைக் கேள்விகளுக்கும் விடைதரும் வகையில், 'தி வாஷிங்டன்போஸ்ட்' (The Washington Post) பத்திரிகையின் 21.08.2011 இதழில், "கவிழ்ப்புப் புரட்சி கற்றுத்தரும் பாடம்" (Lessons from the USSR coup attempt) என்ற தலைப்பில் கொர்பச்சேவ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே. தமிழில்: விதுரன்.]ருபது ஆண்டுகளுக்கு முன் இதேபோல [1991 ஆகஸ்ட் மாதத்தின்] கடைசிவாரத்தில்தான் அது நிகழ்ந்தது; ஆம், கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர்களையும் சோவியத் அரசின் அதிகாரிகளையும்கொண்ட குழு ஒன்று கவிழ்ப்புப் புரட்சியை நடத்த முயன்ற சம்பவத்தைத்தான் நான் குறிப்பிடுகிறேன்."அவசரநிலைக்கான கமிட்டி" என்னும் சட்டவிரோத அமைப்பை அவர்கள் ஏற்படுத்தினார்கள்; சோவியத் குடியரசின் தலைவரைத் தனிமைப்படுத்தி, பதவிப் பொறுப்பிலிருந்து நீக்கவும் செய்தார்கள். 


சோவியத் யூனியனில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எமது முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் நடந்த உக்கிரமான அரசியல் போராட்டத்தின் விளைவுதான் அந்த ஆகஸ்ட் மாத சம்பவங்கள் மறுகட்டமைப்பு (perestroika) நடைபெற்ற ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் எமது நாட்டில் நிகழ்ந்தன. வெளிப்படையான அணுகுமுறை (glasnost) யை; சுதந்திரமான, வேட்பாளர்கள் களம்காண்கிற தேர்தல்களை; சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறிச்செல்வதற்கான தொடக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள். ஆனால், இத்தகு மாற்றங்களால் தமது பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அதிகாரவர்க்கம் கலக்கமடைந்தது. 


மிகப்பெரிய, பல இனக்குழுக்களைக் கொண்ட, ராணுவமயமாக்கப்பட்ட, சர்வ அதிகாரங்களும் ஆட்சியாளர்களிடம் குவிந்துகிடந்த நாட்டில் அவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. மறுகட்டமைப்பு தலைவர்களாகிய நாங்களும் எங்கள் பங்குக்கு சில தவறுகளைச் செய்தோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்துவதற்கான பணியை நாங்கள் மிகக் காலந்தாழ்ந்து மேற்கொண்டோம். இதன் விளைவாக, மறுசிந்தனையின் என்ஜினாக செயல்பட்டிருக்கவேண்டிய கட்சி, அதற்குத் தடையேற்படுத்தும் 'ப்ரேக்' ஆக மாறிவிட்டது; கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த என்மீது கட்சி அமைப்புகள் தாக்குதல் தொடுத்தன; 1991 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் இது உச்சகட்டத்தை எட்டியது. இந்தக் கொடிய தாக்குதலின் விளைவாக நான் ராஜினாமா செய்வதாக அறிவித்தேன்.
சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டபோது நாங்கள் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைளைத் தீர்க்கும்பொருட்டு என்னை நிர்ப்பந்தப்படுத்தி, அவசரகால நடவடிக்கைகளை அங்கீகரிக்கச்செய்துவிடலாம் என்று எனக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள் கனவுகண்டு கொண்டிருந்தனரல்லவா, அவர்களுக்கு எனது அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. பலமணிநேரம் விவாதித்த பொலிட்பீரோ, எனது ராஜினாமாவைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, அமர்வுக்குத்திரும்புமாறு கேட்டுக்கொண்டது. அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது தவறு என்பதை இப்போது உணர்கிறேன். என்னை எப்படியாவது பதவியிறக்கம் செய்துவிட முயற்சிகள் நடந்துகொண்டிருந்த அந்த சூழலில் எனது முடிவில் உறுதியாக இருந்திருக்கவேண்டும். 


ஜூலை மாதம் மற்றொரு சம்பவம் நடந்தது: அன்றைய பிரதமர் வாலன்டின் பாவ்லொவ், பாதுகாப்பு அமைச்சர் திமித்ரி யாசொவ், கே.ஜி.பி. (KGB) அமைப்பின் தலைவர் விளாதிமீர் க்ரியுஷ்கொவ் ஆகியோர்,, அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களில் சில பிரதமருக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்கள். இவையனைத்தும் நான் அவையில் இல்லாதபோது நடந்தேறின. அதே நேரத்தில், குடியரசுத்தலைவரின் அதிகாரபூர்வ இல்லத்தில், சோவியத் குடியரசுகளுக்கிடையே ஏற்படவிருந்த புதிய [சோவியத்] ஒன்றியத்துக்கான ஒப்பந்தத்தைத் தயாரிக்கும் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நான் கலந்துகொண்டிருந்தேன். 


மறுநாள், நாடாளுமன்றத்தில் உரையற்றியபோது, "அவசரத் தீர்வுகளை" நான் எதிர்ப்பதாகக் கூறினேன்; உறுப்பினர்கள் என்னை ஆதரித்தார்கள்.
பகிரங்கமாக நடந்த போராட்டத்தில், மறுசிந்தனையின் எதிர்ப்பாளர்கள் தோற்றுப்போனார்கள்.கடுமையான சூழல் நிலவியபோதிலும், மக்கள், பிரஜைகளாகி மாற்றத்தை ஆதரிக்கலாயினர். பால்டிக் பிரதேசக் குடியரசுகள் உட்பட அனைத்து குடியரசுகளுமே அமல்படுத்தத் தயாராக இருந்த நெருக்கடியைச்சமாளிக்கும் பொருளாதாரத்திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாள், புதிய [சோவியத்] யூனியன் வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகவிருந்தது. இதனைத்தொடர்ந்து கட்சியின் சிறப்பு மாநாடும் கூட்டப்படவிருந்தது; இது சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்பவர்கள்-எதிர்ப்பவர்கள் எனக் கட்சியில் உள்ளவர்களை இனம்பிரித்துக் காட்டவிருந்தது.

புதிய ஒன்றியத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், தேர்தலை நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம்; சோவியத் நாட்டுத் தலைமையில் பெரிய மாற்றங்களைக் கொணரவும் திட்டமிட்டிருந்தோம். ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், கிரிமியாவுக்குச் சிறு விடுப்பில் செல்வதற்கு முன்னர், ரஷ்யக் குடியரசின் அதிபர் போரிஸ் எல்த்சின் மற்றும் கஜாக்கிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் ஆகியோருடன் இதுகுறித்து விவாதித்தேன்.

பலமாதங்களாக நடந்த கடுமையான போராட்டங்களின் விளைவாக நான் மிகவும் களைத்துப்போயிருந்தேன்; ஆனால் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பைக் குறைத்துக் மதிப்பிட்டுவிட்டேன். நான் விடுப்பில் செல்வதைத் தள்ளிபோட்டிருக்க வேண்டும்.
புதிய யூனியன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிவிபரங்கள் இறுதியாக்கப்படுவது பற்றி எனது உதவியாளர்களிடமும் எல்த்சினிடமும் ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். ஆகஸ்ட் 19-ஆம் நாள் மாஸ்கோவுக்குப் பறந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்கத்திட்டமிட்டிருந்தேன்; ஆனால், அழையா விருந்தாளிகளாக ஒரு கோஷ்டியினர் என் வீட்டில் அடியெடுத்து வைத்தார்கள். அந்தக் கவிழ்ப்புப் புரட்சியின் நாயகர்கள் அங்கு வந்துசேர்வதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்பதாக நகரில் எனது அனைத்துத் தொலைபேசி லைன்களும், அதிகாரபூர்வத் தொலைபேசிகளும், கேந்திரமான தொடர்பு லைனும் துண்டிக்கப்பட்டன. முற்றிலுமாக நான் தனிமைப்படுத்தப்பட்டேன். பொலிட்பீரோவிலும், அரசாங்கத்திலும் இருந்த எனது எதிரிகள், கவிழ்ப்புப்புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டனர் என்பது தெளிவாகிவிட்டது. 


அன்றைய நிலையில்,எமது நாட்டையும், எங்களையும் பெரும் ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கின்றன; முடிவு என்ன ஆகும் என்றே எனக்குத்தெரியவில்லை என்று எனது குடும்பத்தாரிடம் கூறினேன். இந்த நபர்களுடன் [கவிழ்ப்புப் புரட்சியாளர்களுடன்] சேர்ந்து செயல்பட சம்மதிப்பதில்லை எனும் என் நிலையைத் தெளிவுபடுத்தினேன். எதுவந்தாலும் சரி; நாங்கள் உங்களுக்குத் துணைநிற்போம் என்று என் மனைவி ரெய்சாவும் எனது குடும்பத்தினரும் உறுதி கூறினார்கள்.முடிவுகள் எப்படியிருந்தாலும் பரவாயில்லை; என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற பாணியில் நான் பம்மிக்கொள்ள முற்பட்டதாகச் சிலர் குற்றம் சொன்னார்கள்; ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் தவறானவை; சேற்றைவாரி இறைக்கும் தன்மைகொண்டவை. 


கவிழ்ப்புப் புரட்டாளர்களுக்கு நான் சொன்ன பதில், அவர்களது திட்டங்களின்மீது விழுந்த முதல் அடியாகும். அவர்களால் மக்களை அச்சுறுத்திப் பணியவைக்கமுடியவில்லை என்பது இதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. துணிந்து எதிர்கொள்ளவும், எதிர்த்து நிற்கவும், கோரிக்கைகளை எழுப்பவும் எமது சமூகம் கற்றுத் தேறியிருந்தது. ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சியைக் கண்டனம் செய்தும், சதிகாரர்களின் நடவடிக்கைகளைக் கவிழ்ப்புப் புரட்சி என்று சாடியும் உறுதியான நிலையெடுத்தார் ரஷ்ய ஜனாதிபதி எல்த்சின். அந்த நாட்களில் எல்த்சினின் நடவடிக்கைகளுக்காக அவரை நான் பாராட்டினேன்; புகழ்ந்துரைத்தேன்.

எமது [சோவியத்] யூனியனைப் பாதுகாக்கத்தான் இவ்வாறு தாம் செயல்பட்டதாகச் சதியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்; இன்னும்கூட சிலர் அப்படிச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்திலிருந்தே கூறிவந்ததைப்போல, அவர்களின் நடவடிக்கை, நாட்டை நிர்மூலப்படுத்துவதில்தான் முடிந்தது. கவிழ்ப்புப் புரட்சி மூன்றே நாட்களில் முடிந்துவிட்டதென்னவோ உண்மைதான்; ஆனால், [ஒன்றிணைக்கும்] பொது அரசு என்னும் கோட்பாட்டை அது பாழ்படுத்திவிட்டது. கவிழ்ப்புப்புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்பே ரஷ்யத் தலைவர்கள் தொடங்கிவைத்திருந்த "[சோவியத்] யூனியனிலிருந்து விலகுவது" என்னும் போக்கினை இது விரைவுபடுத்தியது. குடியரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக, சுதந்திரப்பிரகடனம் செய்யலாயின. 


அப்போது நாங்கள் எதிர்கொண்டிருந்த நிலை மிகவும் ஆபத்தானதுதான். இருப்பினும், மக்கள் பிரதிநிதிகளின் மாநாட்டை எங்களால் கூட்டமுடிந்தது; பெரும் சமஷ்டி அரசு என்னும் கருத்தை அடிப்படையாகக்கொண்டு ஒன்றியம் உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கான புதிய வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணியை அது அங்கீகரித்தது. எல்லாவிதமான பிரச்சனைகளையும் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது; ஆனால் விரைவிலேயே புதிய வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு, குடியரசுகளுக்குச் சமர்ப்பிக்கப்படலாயிற்று.
நெருக்கடிகளை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் நாங்கள் இணைந்து செயல்படமுடியும் என்கிற நம்பிக்கை மீீண்டும் துளிர்விடத்தொடங்கியது. ரஷ்யா, உக்ரைன், பெலாருஸ் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் மட்டும் பெலொவெஷ்ஸ்க்யா புஷ்ச்சாவில் கூடிச்சதி செய்திருக்காவிடில், 1991-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கும். சுயாதிபத்தியம் கொண்ட அரசுகளின் ஒன்றியம் (Union of Sovereign States) என்னும் பெயரில், புதிய வடிவில், குடியரசுகளுக்கு மேலும் அதிக அதிகாரங்களுடன் [சோவியத்] யூனியன் காப்பாற்றப்பட்டிருக்கும்.


அது மெய்ப்பட்டிருந்தால், பொருளாதார சீர்திருத்தங்களை ஓரளவு கஷ்டங்களுடன் நிறைவேற்றியிருக்கமுடியும்; தொழில் உற்பத்தியின் வீழ்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்; ரஷ்யாவின் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான சரிவு நிகழ்ந்திருக்காது என்பது உறுதி.
கடந்த 20 ஆண்டுகளாகப் பற்பல இன்னல்களைத் தாண்டிவந்துள்ளது ரஷ்யா. சுதந்திரத்திற்காக அது கொடுத்த விலை அளப்பரியது; அதை அடைவதற்கான பாதையோ, நாம் அதில் அடியெடுத்து வைத்தபோது அனுமானித்ததைக் காட்டிலும் மிகக்கடுமையானது. இப்போதும்கூட நாம் ஸ்திரமான ஜனநாயகத்தைப் பாதியளவுதான் எட்டியிருக்கிறோம். ஆனால் இந்தப் பாதையைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.


வருகின்ற ஆண்டுகளில் நாம் விரைந்து முன்னேற வேண்டும். இது நிகழ வேண்டுமானால், ரஷ்யாவில் மென்மேலும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மாற்றங்களை ஆதரிக்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும். 


இது சாத்தியம்தான் என்று நம்புகிறேன். இதற்கான வாய்ப்பு நம் கைகளில்; இதை நாம் நழுவவிடக்கூடாது.

1 comment:

Anonymous said...

நந்தவனத்தில் ஓர் ஆண்டி ..நாடாறு மாதமாய் குஜவனை வேண்டி ..கொண்டு வந்தான் ஒரு தோண்டி...அதைக் கூத்தடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி ..! என்பதுபோல் ஆகிவிட்டதே சோவியத் யூனியன் .