Monday, October 24, 2011

வாழ்வில் இனிமை சேர...

நமது நேற்றைய சிந்தனை, அதன் அடிப்படையில் எடுத்த முடிவுகள் ஆகியவற்றின் தாக்கமே நமது இன்றைய வாழ்க்கை. இன்று நாம் சிந்தித்து எடுக்கும் முடிவு நாளைய நமது வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பாரபட்சமின்றி சமமாக வழங்கப்பட்ட ஒன்று, 24 மணிநேரம் கொண்ட ஒருநாள். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதே நம் வாழ்க்கையின் நிலையைத் தீர்மானிக்கிறது.

இதைப் பற்றி ஒரு தத்துவப் பேராசிரியர் கூறும் விளக்கத்தைக் காண்போம்...

அவர் தனது வகுப்பில் மாணவர்கள் முன்பு ஒரு கண்ணாடி ஜாடியை வைத்து அதில் தலா இரண்டு அங்குலம் அளவுடைய கற்பாறைத் துண்டுகளைப் போட்டார். அதன்பின்னர் மாணவர்களைப் பார்த்து, 'ஜாடி நிரம்பிவிட்டதா?' என்று கேட்டார். உடனே மாணவர்கள், `நிரம்பவில்லை' என்று கூறினர்.

அடுத்து பேராசிரியர் சிறிய ஜல்லிக்கற்களை எடுத்து ஜாடியில் போடத் தொடங்கினார். கடைசியில், ஜாடி முழுவதும் நிரம்பிவிட்டதா என்று கேட்டார். இப்போதும் நிரம்பவில்லை என்றனர் மாணவர்கள். உடனே பேராசிரியர் மணலை அள்ளிக் குடுவையில் போடத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் எந்த இடைவெளியும் இல்லாமல் ஜாடி நிரம்பியது. மாணவர்களும் ஜாடி நிரம்பிவிட்டது என்று கூறினர்.

உடனே பேராசிரியர் மாணவ, மாணவியரைப் பார்த்து, 'இந்த ஜாடி போன்றதே உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை. இதில் முதலில் நிரப்பிய கற்கள் சற்று பெரியதாக இருந்தன. அவைதான் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் முக்கியமாகக் கருதும் குடும்பம், உடல்நலம், குழந்தைகள், வேலை போன்றவை. சிறிய ஜல்லிக்கற்கள் என்பது உங்களது வீடு, நீங்கள் பயன்படுத்தும் வாகனம், உடமைகளைக் குறிக்கும். மணல் துகள்கள் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சிறிய நிகழ்வுகள்' என்றார்.

நமது வாழ்க்கையில் எதை முதலில் நிரப்புவது என்று முக்கியத்துவம் அளிக்கத் தெரியாதபோது சிறிய செயல்களுக்கு மதிப்பளித்தால் மணலை நிரப்புவது போல முக்கியமானவற்றைச் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். மணலை நிரப்பிவிட்டுக் கற்களை நிரப்பினால் அது சரியாக அமையாது. வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்ந்து, உரிய செயல்பாடுகளுக்கும், அனுபவங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வாழப் பழகிக்கொண்டால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்.

சிறிய வேலை பார்த்த ஒரு குடும்பத்தலைவர் தனது மனைவியையும், மூன்று குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தார். மாலை வேளையில் சில வகுப்புகளில் சேர்ந்து படித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று சம்பளத்தைக் கூட்டிக்கொண்டார். அதனால் தனது குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அவரால் அளிக்க முடிந்தது.

மீண்டும் அதைவிட உயர் பதவிக்கு போக வேண்டுமென்றால் மேலும் படிக்க வேண்டும் என்று அறிந்து மீண்டும் மாலை நேரங்களில் கல்வி பயின்று தேர்வெழுதி வெற்றிபெற்று தனது பதவியை உயர்த்திக் கொண்டார்.

ஆனால் அவரால் குடும்பத்தில் மனைவி, குழந்தைகளுடன் அதிகநேரத்தைச் செலவிட முடியவில்லை. ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் கடினமாக உழைத்து வருவாயை பெருக்குவதையே முக்கியமாகக் கருதினார். ஒரு புதிய வீட்டைக் கட்டி அதில் குடிபுகுந்த பின்பு கடினமாக உழைக்கப் போவதில்லை என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் இரவு உறங்கப் போனவர், காலையில் எழுந்திருக்கவே இல்லை. பதவி, வருமானம் என்று தமது நிலையை உயர்த்திக் கொள்வது தவறல்ல. ஆனால் அவர் தனது உடல்நலம், குடும்பத்தாருடன் பேசி மகிழ்வது போன்றவற்றையும் முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா விஷயங் களும் அடங்கியதுதான் வாழ்க்கை.

மாமியார், மருமகள் இடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை நாம் பரவலாக அறிந்திருக்கிறோம். ஆனால் முற்றிலும் வித்தியாசமான மருமகள் ஒருவர் தனது கணவனைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதாவது அவர், குழந்தைகளையும் தன்னையும் நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறினார். ஆனால் அவர் தனது விதவைத் தாயார் மீது அதிக அன்பு கொண்டவராக விளங்கியபோதும், அவர் வசிக்கும் பூர்வீக வீட்டுக்குச் சென்று அவருடன் மனம் விட்டு பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சுட்டிக்காட்டினார்.

தான் தாயின் மீது அன்பு காட்டிய போதும் அவருடன் நேரம் செலவழித்து உரையாடவில்லை, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற காரியங்களைச் செய்யவில்லை என்று உணர்ந்து வருந்தினார் அந்தக் குடும்பத்தலைவர். உடனே தனது தாயின் வீட்டுக்குச் சென்றார். தாய்க்கு ஒரே ஆச்சரியம். தனது தாயை மாலை வந்து அழைத்துச் சென்று ஓட்டலில் உணவருந்திவிட்டு, பூங்காவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மாலையில் தயாராக இருக்கும்படி கூறினார்.

தாய்க்கு மகிழ்ச்சி தாளவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரிடமும் தன் மகன் தன்னை வெளியே அழைத்துச் செல்வதைப் பற்றி கூறி மனம் மகிழ்ந்தார். மாலையில் மகன் வந்து தாயை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு செல்லும்போது மிக்க மனமகிழ்ச்சியுடன் தன்னிடமுள்ள விலை உயர்ந்த சேலையை அணிந்து சென்றார். உணவுப் பண்டங்களின் விலைப்பட்டியலைப் பார்த்து மகன் தனது தாயின் விருப்பம் அறிந்து உணவுவகைகளை வரவழைத்து அவரை உண்ணச் சொல்லி வேண்டினார். தாயும் நேரம் போவது தெரியாமல் தனது மகனிடம் பேசிக் கொண்டே இருந்ததால் பூங்காவுக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் தாய், மகன் ஆகிய இருவர் மனதிலும் ஒரே திருப்தியும், மகிழ்ச்சியும் நிலவின.

வீட்டிற்கு திரும்பியவுடன் தன் மனைவியை பாராட்டிய அவர், தாயுடன் கழித்த பொழுது மனநிறைவை அளித்தது என்று கூறினார். சில நாட்கள் கழித்து ஒருநாள் அந்தத் தாய் மாரடைப்பால் இறந்து போனார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பின், தாயும், மகனும் உணவருந்திய ஹோட்டலில் இருந்து ஒரு ரசீதும், தகவலும் வந்தன. தனது மகனும், மருமகளும் ஓட்டலில் சென்று பொழுதை கழிக்க அந்தத் தாய் முன்பதிவு செய்த ரசீதுதான் அது. அத்துடன் இணைக்கப்பட்ட கடிதத்தில் தனது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தனது மகனும், மருமகளும் சிறப்பாக வாழவேண்டும் என்று தனது வாழ்த்தையும் எழுதி அனுப்பி இருந்தார் அந்தத் தாய்.

வாழ்க்கை என்பது நிலையற்றது என்று அலட்சியமாக இருக்கமுடியாது. அதேசமயம் நிலையான ஒன்று என்று பெரிதாக மனக்கோட்டையும் கட்ட முடியாது. நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டு, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் மற்ற செயல்பாடுகளுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும். இவ்வாறு வாழ்க்கையை, வாழும்முறையை இனிதாக மாற்றிக் கொள்வது அவரவர் கைகளில்தான் உள்ளது.
ப. சுரேஷ்குமார்

No comments: