Tuesday, October 18, 2011

நம்பிக்கைச் சுடர் ஒளிரட்டும்!

தன்னுடைய திறமையை ஒருவரால் எவ்வாறு முழுமையாக உணரமுடியும்? ஜோன் ஆப் ஆர்க் என்ற வீரப் பெண்மணிக்குத் தன்னால் பிரிட்டனுக்கு எதிராக பிரெஞ்சுப் படையைத் தலைமைதாங்கி வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எப்படி வந்தது? அண்ணல் காந்தியடிகளுக்கு சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் என்று மார்தட்டித் திரிந்தவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை எப்படிப் பிறந்தது?

சிலர் தாங்களாக முன்வந்து சவால்களை எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்க முயல்கிறார்கள். வாழ்க்கை நம்மை நோக்கிச் சந்தர்ப்பத்தை அனுப்பி வைத்தால்தான் நமது திறமையை வெளிப்படுத்த முடியும் என்பது கிடையாது.

சாதனையாளர்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பதில்லை. எதிர்காலத்தை உருவாக்குவது என்பது அதை தோற்றுவிப்பதே ஆகும்.

ஒருவர் தனது சுயநலத்தை மையமாகக் கொண்டு செயல்படாமல் பொதுநலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் போது விசாலமான சிந்தனை உருவாகும். செயலைத் தொடங்கும் முன்பே விளைவைப் பற்றி நினைக்கத் தொடங்குவதால் மனம் சலனமடைகிறது.

சலனப்படும் மனம், சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுகிறது. சிந்திக்கும் ஆற்றல் இல்லாதபோது செயல்படுவதும் குறைந்துவிடுகிறது.

தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களில் சிலர் தங்களுக்குத் தெரிந்த விடையைக்கூட கோர்வையாக எழுத முடியாமல் போகிறது. கவனக் குறைவாகச் செயல்பட நேர்கிறது. அதற்குக் காரணம், தேர்வு பற்றிய பய உணர்வு ஏற்படுத்திய மனச் சஞ்சலமே ஆகும்.

விளையாட்டுப் போட்டிகளின்போதும் இத்தகைய நிகழ்வுகளைக் காணமுடியும். கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ச்சியாக அவுட்டாவது ஒரு வகை அச்ச உணர்வின் வெளிப்பாடே.

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கூற்றின்படி மனதைச் சுதந்திரமாக வைத்துக்கொண்டு செயல்படும்போது அதற்கான பலன் தானாக கிடைக்கத்தான் செய்யும். ஆனால் செயல்படும்போதே விளைவை எண்ணுவதால்தான் கவனக் குறைவு ஏற்படுகிறது.

ஓர் இளைஞன் எப்போதுமே வாழ்க்கையைத் தனக்குக் கிடைத்த பரிசாக எண்ணி எப்போதும், எந்தச் சூழலிலும் இன்முகத்துடனே இருந்தான். யாராவது, எப்படி இருக்கிறாய் என்று கேட்டால் தனக்கு எந்தக் குறையும் கிடையாது என்று உற்சாகத்துடன் கூறுவான்.

அவனைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவன் அவர்களை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையை எதிர்மறையாகக் கருதாமல் ஆக்கப்பூர்வமாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவான். பிறரை உற்சாகப்படுத்தி செயல்படச் செய்வது அந்த இளைஞனின் இயல்பாகவே இருந்தது.

எவ்வாறு எப்போதுமே நம்பிக்கையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படமுடியும் என்று ஒருவர் அந்த இளைஞனைக் கேட்டார். அது சாத்தியமா என்று சந்தேகப்பட்டார். அதற்கு அந்த இளைஞன் விடையளிக்கும்போது, அன்றாடம் தனக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினான்.

ஒன்று, எப்போதும் சந்தோஷமாகச் செயல்படுவது. மற்றொன்று, கவலையுடன் செயல்படுவது. தான் தினமும் சந்தோஷமாகச் செயல்படுவதையே தேர்ந்து எடுப்பதாகக் கூறினான்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் அதிலும் இரண்டு வாய்ப்புக்கள் உள்ளன. ஒன்று, பாதிக்கப்படுவது. மற்றொன்று, அந்த அனுபவத்திலிருந்து எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று அறிந்து கொள்வது.

இவையிரண்டில், பாடம் கற்றுக் கொள்வதையே தான் எப்போதும் தேர்வு செய்வதாகக் கூறினான் இளைஞன். எப்போதாவது யாராவது ஒருவர் அந்த இளைஞனை அணுகி வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கூறினால், அவர்களுக்கு வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டி நம்பிக்கையுடன் செயல்பட தூண்டுவதாகவும் அவன் தெரிவித்தான்.

ஒருமுறை அந்த இளைஞன் தான் பணியாற்றும் ஹோட்டலின் பின்பக்க கதவை பூட்ட மறந்து விட்டதால் பின்புறக் கதவின் வழியாக மூன்று திருடர்கள் உள்ளே திடீரென்று நுழைந்தபோது அந்த அதிர்ச்சியில் கையிலிருந்த பொருளைத் தவறவிட்டான். அந்த ஓசையைக் கேட்ட திருடர்கள், இளைஞனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.

அதற்குள் சத்தத்தை கேட்டு பலரும் ஓடிவந்து இளைஞனை மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றனர். 8 மணி நேரத்திற்கு மேல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவனைக் காப்பாற்றினர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து நன்கு கவனித்து வந்தனர்.

அப்போதும் புல்லட்டின் சிறிய துகள்கள் இளைஞனின் உடம்பில் இருக்கத்தான் செய்தன. ஆறு மாதங்கள் கழித்து அந்த இளைஞனிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம், தான் நன்றாக இருப்பதாக விடையளித்தான். மேலும் தனக்கு ஏற்பட்ட காயம் முற்றிலும் குணமடைந்த பின்பு அது ஏற்படுத்திய வடுவை பார்க்க ஆவலாக இருப்பதாகக் கூறினான்.

திருடர்கள் உள்ளே நுழைந்தபோது அவன் மனதில் என்ன தோன்றியது என்று கேட்டபோது, கதவைப் பூட்டாமல் விட்டது தனது தவறு என்று உணர்ந்ததாகக் கூறினான். மேலும் திருடர்கள் தாக்கித் தரையில் விழுந்தபோது இரண்டு வாய்ப்புக்கள் இருப்பதை உணர்ந்ததாகக் கூறினான்.

ஒன்று, உயிர் பிழைக்கும் வாய்ப்பு. மற்றொன்று உயிரைவிடும் வாய்ப்பு. ஆனால் தான் உயிர் பிழைக்கும் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினான்.

மேலும் தன்னிடம் மனஉறுதி இருப்பதாகவும், ஆகவே தனக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது உயிர் வாழப்போகும் இளைஞனுக்கு சிகிச்சை செய்வதாக நினைத்துக் கொண்டு டாக்டர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டதாகக் கூறினான். டாக்டர்களின் ஈடுபாட்டுடன் கூடிய சிகிச்சையும், இளைஞனின் மனஉறுதியும் சாவின் பிடியில் இருந்து தப்பிக்க உதவியது என்பதை அனைவராலும் உணர முடிந்தது.

மனோபாவம்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஒரு பணியை மேற்கொள்ளும்போது அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யப் பழக வேண்டும். அன்புடன் செயல்படும்போது அது யாரையும் காயப்படுத்தாது. வாழ்க்கையைக் கொண்டாடப் பழகிக்கொண்டால் கறுப்பு மேகங்கள் கண்ணுக்குத் தெரியாது. ஒளிக்கீற்றுதான் கண்ணுக்குத் தெரியும். ஆகவே சரியான மனோபாவத்துடன் முயற்சியை தொடர்வோம்.
பா.சுரேஷ்குமார்

1 comment:

Kannan said...

மிகவும் அருமையான பகிர்வு...
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com