Saturday, October 15, 2011

கவிதைச்சரம்

சொல்வளம் ஒரு தவளையின் கதை

திக் கரையோரம்
நீரோடும் மணலோடும்
பிறந்த வளர்ந்த தவளையொன்று
ஒரு நாள்
மணல் அள்ளும் எந்திரத்தில்
மணலோடு மணலாக வந்துவிட்டது

அது எங்கேயோ
எடுத்துச் செல்லப்படுகையில்
நாம் மணலோடுதானே இருக்கிறோம்
என்பதைத் தவிர
அது வேறு எதையும்
யோசிக்கவே இல்லை

அது மணல் லாரியில் இருந்தபடி
நகரும் ஆகாயத்தை
வேடிக்கை பார்த்தபடியே வந்தது
ஆகாயம் நகர்வது நின்றதும்
நாம் தண்ணீருக்குள் சென்றுவிடலாம்
என்று அது சமாதானப்படுத்திக் கொண்டது

நகரத்தின் இரைச்சல் மிகுந்த
ஒரு தெருவின் 
வளர்ந்துவரும்
அடுக்கு மாடிக் குடியிருப்பிற்கு
அது வந்து சேர்ந்தபோதுகூட
தாம் வேறு உலகத்திற்கு வந்துவிட்டோம்
என்பதை அது அறியவே இல்லை
மணலுக்குள்ளேயே
விளையாடிக்கொண்டிருந்தது

மறுநாள் காலை
ராட்சதக் கலவை எந்திரத்தில்
மணலை வாரிக் கொட்டியபோதுதான்
அது திடுக்கிட்டு விழித்தது
தனக்கு அதிக அவகாசம் இல்லை
என அறிந்த கணத்தில்
அது தாவிக் குதித்து வெளியேறியது
அப்போதுதான்
தன்னுடைய மாறிவிட்ட
உலகத்தைப் பார்த்தது

ஒரு சிறிய தவளை
அதற்கு எங்கே போக வேண்டும்
என்று தெரியவில்லை
அப்படி எந்த முடிவும் எடுத்து
அதற்குப் பழக்கமே இல்லை
இருக்கிற இடமே
வாழ்கிற இடம் என்பதற்கு மேல்
அதற்கு எதுவுமே தெரியாது
கிணற்றுத் தவளைகள்
கிணற்றோடு இருந்துவிடுகின்றன
ஆற்றுத் தவளைகள்
ஆற்றோடு இருந்துவிடுகின்றன

அது ஒரு சித்தாளின் குழந்தையின் மீது
தாவி அமர்கிறது
அந்தக் குழந்தை பயந்து வீறிடுகிறது
தான் என்ன செய்தோம் என்று
தவளைக்குப் புரியவே இல்லை
அது அச்சத்துடன்
மரச் சாமான்களுக்கு நடுவே
பதுங்கிக்கொள்கிறது

தவளைக்கு அந்த இடம்
பாதுகாப்பானதல்ல
என்று தோன்றுகிறது
இன்னும் கட்டி முடிக்கப்படாத
அந்தக் குடியிருப்பின் ஒவ்வோர்
அறையாகத் தவளை செல்கிறது
மறைவிடங்களற்ற காலி அறைகள்
அதைத் தனிமையை உணரச் செய்கிறது
அது மணலுக்காக
அப்படி ஏங்குகிறது
தவளைக்குத் தாகமாக இருந்தது
அது வாழ்நாளில் முதல் முறையாகத்
தண்ணீருக்கு தவிக்கிறது

மெள்ள வெளியேறி
அது மனிதர்கள் வாழும்
ஒரு வீட்டிற்குள் நுழைகிறது
ஒரு தவளை புத்தகத்தில் வாழக் கூடியது
அல்லது டிஸ்கவரி சேனலில்
வாழக்கூடியது
ஒரு நிஜ தவளை
எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்துகிறது

அவர்கள் ஒரு தவளையை
அப்போதுதான் வாழ்வில்
முதல் முறையாகப்
பார்ப்பதுபோலப் பார்த்தார்கள்
தவளை விஷமுள்ளதா என்று
அவர்களுக்குச் சந்தேகமாக இருந்தது
அது எங்காவது மறைந்துகொண்டால்
என்ன செய்வது என்று
அவர்களுக்குப் பதற்றமாக இருந்தது
ஒரு தவளையைக் கொல்வதைப் பற்றி
முடிவுகள் எடுப்பது கொஞ்சம் கடினமானது
ஒரு தவளையை வளர்க்க
விரும்புகிறவர்கள்
இந்த உலகில் யாருமே இல்லை

இது இங்கிருந்துதான்
எங்கோ பாதாள சாக்கடையிலிருந்து
வந்திருக்க வேண்டும் என்று யாரோ
சொன்னபோது
தவளை மனமுடைந்துபோனது
சாக்கடைகளிலும்
தம்மைப் போலவே தவளைகள் வாழ்கின்றன
என்பதை அது அப்போதுதான்
அறிந்துகொண்டது

தன் கஷ்டங்கள் எல்லாம்
எங்கிருந்து தொடங்கின என்று
தவளை யோசிக்கலாயிற்று
தான் ஊர்வனவாகவும் இல்லாமல்
பறப்பனவாகவும் இல்லாமல் போனதுதான்
எல்லாவற்றிற்கும் காரணம் என்று புரிந்தபோது
அது அழத் தொடங்குகிறது
திடீரென
மழைக் காலம் வந்துவிட்டதுபோல
அப்படிக் கேட்கிறது அதன் துயரக் குரல்! 

நன்றி: ஆ.வி.

2 comments:

கார்த்தி கேயனி said...

ஆனந்த விகடன் சொல்வனத்தில் வந்துச்சு. நீங்க எழுதினாதா ? இல்லைனாலும் கூட தொகுத்தற்கு நன்றி

Kannan said...

மிக அருமையான கவிதை.........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com