Friday, October 7, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் ஹாலிவுட்டின் சாராயத்தை திரும்பவும் கண்டக்காய்ச்சி டெக்னிக்கல் ஆக புதிய கோப்பையில் தர முடிவு செய்திருக்கிறார்கள்.

அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் என ஹாலிவுட்டில் வெளியாகும் பாக்சிங் கதைகளை சொல்லலாம். எந்தவொரு இயக்குநரும், தன்னை கமர்ஷியல் பிரண்ட் ஆக நிலை நிறுத்திக் கொள்ள இக்கதையையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார். சொல்லப் போனால் அனைத்து மாஸ் ஹீரோக்களும் தலா ஒரு பாக்சிங் படத்திலாவது நடித்திருப்பார்கள். அதனாலேயே புகழின் உச்சியை தொட்டிருப்பார்கள்.

அந்தவகையில் வெளியாக இருக்கும் 'ரியல் ஸ்டீல்' ஹாலிவுட் படமும் பாக்சிங்கை மையமாகக் கொண்டதுதான். என்ன, மனிதர்களுக்கு பதில் இந்தப் படத்தில் ரோபோக்கள் பாக்சிங் போடுகின்றன!

சார்லி கென்டன், புகழ்பெற்ற ஒரு பாக்ஸர். தொடர்ந்து அவன் போட்டியில் பங்கேற்று ஜெயிப்பதால், பணம் கொட்டுகிறது. வாழ்க்கை இனிக்கிறது. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு அவனது புகழ் மங்க ஆரம்பிக்கிறது. சேமிப்பு வற்றுகிறது. அவனது திறமையை, பாக்சிங் ஆற்றலை, அனைவரும் ஜஸ்ட் லைக் தட் ஆக புறம் தள்ளுகிறார்கள்.

காரணம், மனிதர்கள் போட்டியிடும் பாக்சிங்கை இப்போது யாரும் விரும்புவதில்லை. பதிலாக, ரோபோக்கள் ஆக்ரோஷத்துடன் சண்டையிடுவதை பார்க்கவே அலை கடலென திரள்கிறார்கள். இதனால் வாழ்க்கை நடத்துவதே சார்லி கென்டனுக்கு சிரமமாகிறது.

இந்நிலையில் தனக்கொரு மகன் இருப்பதையும். இனி வரும் காலங்களில் தன் பிள்ளையை தானே பராமரிக்க வேண்டும் என்பதையும் அவன் அறிகிறான். மனைவி இறந்துவிட்டாள். அடைக்கலம் தேடி வரும் மகனிடம் பாச மழை பொழிகிறான். ஆனால், வருமானம்? ப்பூவா?


இதற்காக ரோபோ தயாரிப்பில் ஆர்வம் காட்டும் மகனின் உதவியுடன் ஒரு ரோபோவை தயார் செய்கிறான். தனக்கு தெரிந்த அனைத்து பாக்சிங் வித்தைகளும் அந்த ரோபோவுக்கு கற்றுத் தருகிறான். நடக்கவிருக்கும் போட்டியில் அந்த ரோபோ வெற்றி பெற்றால் பொது வாழ்க்கையை குறைவின்றி நடத்தலாம்.

ஆனால், போட்டி நாளில் எதிர்பாராத சிக்கல்கள் எழுகின்றன. சார்லி கென்டன் தயாரித்த ரோபோ, எதிரணி ரோபோவிடம் அடி மேல் அடி வாங்குகிறது. ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என அனைவருமே உணருகிறார்கள். இனி எதிர்காலம் சூன்யம்தான் என்ற முடிவுக்கு சார்லி கென்டன் வருகிறான்.

இதற்கு பிறகு முடிவு என்ன என்பது இந்தக் கதையை கேட்டுக் கொண்டிருக்கும் கருவிலுள்ள சிசுவுக்கும் தெரியும். இந்த 'ராக்கி'டைப் கதையைத்தான் பக்கா சிஜி ஒர்க் உடன் 127 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

1956 ல் ரிச்சர்ட் மேக்திசன் என்பவரால் எழுதப்பட்ட 'ஸ்டீல்' சிறுகதையின் திரை வடிவமே இப்படம். இயக்கியிருப்பவர், ஷான் லேவி. நைட் அட் மியூசியம்' என்ற சூப்பர் ஹிட் படத்தின் டைரக்டர். ஹீரோவாக நடித்திருப்பவர், ஹக் ஜேக்மேன். 'எக்ஸ்-மென்'  சீரிசில் வோல்விரின் ஆக நடித்திருப்பவரே... அவரேதான்.

பேராமவுண்ட் பிக்சர்ஸ் பல வருடங்களாக இப்படத்தை எடுக்க வேண்டும் என்று முயற்சித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தை ஆரம்பித்தபோது, பேராமவுண்ட் பிக்சர்ஸ்டமிருந்து 17 திரைக்கதைகளையும் தங்களுக்கான பங்காக எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று 'ரியல் ஸ்டீல்' படத்தின் ஸ்க்ரிப்ட்.

ஒரு சுபயோக சுபதினத்தில் இப்படத்தின் திரைக்கதையை ஒருவர் வாசித்தார். அவருடைய நாசி துடிக்க ஆரம்பித்தது. தந்தைக்கும் மகனுக்குமான பாசம் இழையோடும் இக்கதையில், ரோபோவும் இருப்பதால் கல்லா நிரம்பும் என அவர் அக்கணமே நுகர்ந்த்தார். உடனடடியாக படப்பிடிப்பு தொடங்கும்படி உத்தரவிட்டார்.

அவர், ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஸ்பீல்பெர்க்!

கே.என்.சிவராமன்

1 comment:

Kannan said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com