Thursday, September 29, 2011

மாற்றுச் சிந்தனை!சிலர், தாம் கூறும் கருத்துகளை மற்றவர்கள் உடனுக்குடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் அறிவியல்ரீதியான, நூறு சதவீதம் உண்மையான கருத்துகளைக் கூட உலகை ஏற்றுக்கொள்ள வைக்க எத்தனை அறிஞர்கள் எவ்வளவு போராடினார்கள், தியாகங்கள் புரிந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.

மனம் நினைக்கிறது. உடம்பு செயல்படுகிறது. செயல் அதற்குரிய பலனை அளிக்கிறது. இந்த வகையில் மனிதன் ஆரம்பகாலங்களில் நாகரீகத்தைத் தோற்றுவிக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித குலத்துக்குச் சிந்திக்கும் ஆற்றல் சற்று குறைவு. அவர்கள் ஒரு செயலில் ஈடுபடும் போதுதான் செயலின் தன்மையை உணர்ந்து அறிந்தனர். முதலிலேயே சிந்தித்துப் பின்னர் செயல்படும் மனப்பக்குவம் அப்போது இல்லை. நெருப்பு சுடும் என்பதை தொட்டு உணர்ந்துதான் தெரிந்துகொண்டனர். ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஏற்படும் அனுபவம், அதன்மூலம் அறிந்துகொள்ள முயல்வது என்ற வகையிலேயே பழங்காலத்தில் மனிதகுலம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டது.

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல விழிப்புணர்வுடன் செயல்படும் உளப்பாங்கு தோன்ற ஆரம்பித்தது. சிந்திக்கும் ஆற்றல் வளர்ந்தது. விழிப்புணர்வுடன் சிந்திக்கத் தொடங்கிய மனம், தனது சிந்தனை ஆற்றலைத் தானே உணர்ந்து தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டது. ஆரம்பகாலத்தில் பலர் ஒவ்வொன்றையும் தங்களது அனுபவத்தின் மூலமே அறிந்தனர். சிந்தனை என்பதும் பலருக்கும் ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது.

இத்தகைய சூழலில் யாராவது ஒரு மனிதன் சற்று வித்தியாசமாகச் சிந்தித்துத் தனது கருத்தைக் கூறினால் உலகம் அதை ஏற்க மறுத்தது. பொதுவாக ஒரு நிலைப்பாடு நடைமுறையில் இருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது அல்லது அதை நியாயப்படுத்தி ஏற்றுக் கொள்வது என்ற வகையிலேயே பல நூறாண்டுகளாக நடைமுறை இருந்தது. பலர் ஒரே நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு வாழும் அத்தகைய சூழலில் ஒருவர் புதிய கோணத்தில் சிந்தித்துத் தனது கருத்தை வெளியிட்டால் அவரையும், அவரது கருத்துக்களையும் உலகம் நிராகரித்தது.

'உன்னையே நீ அறிவாய்' என்று கூறிய சாக்ரடீஸ், பகலில் விளக்கை ஏற்றிக் கொண்டு உண்மையான மனிதன் எங்கே என்று தேடியதை நாம் வரலாற்றின் மூலம் அறிவோம். சாக்ரடீஸ் தனது அறிவில் நின்று உணர்ந்த உண்மைகளை பிறருக்குக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றபோது பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததை அறிகிறோம். அவரது சுயசிந்தனைக்குப் பரிசு, கொடிய விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதுதான். சாக்ரடீஸ் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது சிந்தனையைச் சிறைப்படுத்த முடியாமல் இன்று வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பூமியைச் சுற்றியே சூரியனும், பிற கோள்களும் வலம் வருகின்றன என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் ஒருவர் அந்த நிலைப்பாடு தவறு என்று கூறி, சூரியனைச் சுற்றிதான் பூமி வலம் வருகின்றது என்று எடுத்துச் சொன்னபோது அந்தக் கருத்து தவறானது என்று பெரும்பான்மையானவர்கள் மறுத்தனர். அதோடு, அத்தகைய அறிவியல்ரீதியான புதுக்கருத்துகளைக் கூறுபவர்கள் பல்வேறு இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. நமது நாட்டில் வான சாஸ்திரம், ஜோதிடம், மருத்துவம், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் வல்லுனர்களும், ஞானிகளும், அறிஞர்களும் வெளிப்படுத்திய உண்மைகள் மனதில் முதலில் உணரப்பட்டு பின்னர் நடைமுறை படுத்தப்பட்டவையே ஆகும். அவை இன்றும் பயனளிப்பவையாகவும், அறிவியல் அம்சங்களை தன்னகத்தே கொண்டவையாகவும் உள்ளன.

ஒரு தட்டச்சர் பல ஆண்டுகால அனுபவம் உடையவராக இருந்தால், தட்டச்சுக் கருவியைப் பார்க்காமலே சரியாகவும், வேகமாகவும் தட்டச்சு செய்ய முடிவதை காண்கின்றோம். அதேபோல சைக்கிள் ஓட்டுபவர், தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடும் கலைஞர்கள் என்று பலரும் மனதிற்குள் தங்கள் செயல்பாடுகளுக்குத் தேவையான விதிமுறைகளை அறிந்து கொண்டு செயல்படும்போது அவர்களது செயல்பாடுகள் நிறைவாக அமைகின்றன. இவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் சூட்சுமமோ, இவற்றில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் சார்ந்த உண்மையோ புரியாது. அதனால்தான் பலர் புதிய கருத்துகளை ஏற்க முன்வருவதில்லை.

உடம்பு எதையும் அனுபவரீதியாக அறியவில்லை என்றால், செயல்பட முடியாமல் தவிக்கின்றது. ஆனால் ஒருமுறை அனுபவரீதியாக உணர்ந்து கொண்டால், செயல்படுவது சுலபமாகிறது. மனம் ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் சிந்திக்கிறது. ஒவ்வொரு செயலையும் செயல்படுத்தும் முன்பு காரண காரியங்கள், அதன் அடிப்படையில் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றைக் கணிக்க முயல்கிறது. மனம் ஒரு கருத்தை முழுமையாகவும் சிந்திக்கலாம். ஆனால் அவ்வாறு சிந்திக்க முடியாமல் போகும்போது ஓரளவு புரிந்து கொண்ட உண்மைகளின் அடிப்படையில் செயல்பட முனைகிறது. மனம் முழுமையாகச் சிந்தித்துச் செயல்பட்டால் செயல்விளைவும் முழுமையான பலனை அளிக்கிறது. ஓரளவு புரிந்துகொண்டதன் அடிப்படையில் செயல்பட்டால் முடிவுகளும் ஓரளவுதான் சரியாக அமைகின்றன.

இத்தகைய நிலை உடம்புக்குக் கிடையாது. ஏனென்றால் அது ஒன்றை முழுமையாகப் புரிந்து கொண்ட பின்பே செயல்படுகிறது. ஒரு நியாயவிலைக் கடையில் பணிபுரிபவர் ஒரு கிலோ சர்க்கரையை எடை போடும்போது சாதாரணமாக அவர் தோராயமாக தராசில் எடுக்கும் சர்க்கரை ஒரு கிலோ அளவு என்றால், எத்தனை முறை என்றாலும் அதே அளவைச் சரியாக எடுக்கும் பழக்கம் அவருக்கு கைவந்த கலையாகி விடுகிறது. அதே போலத்தான் சமைக்கும்போது போடும் உப்பின் அளவும்.

இத்தகைய வெளிப்பாடுகள் உடம்பின் இயக்கங்கள் சார்ந்தவை. ஆகவே அனைவரும் இவற்றை பார்க்கமுடியும். இதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் மனதில் தோன்றும் சிந்தனைகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவை. இது மிகவும் சூட்சுமமான நிலையில் செயல்படுகிறது. எனவே இதை அதே பரிமாணத்தில் பலரும் புரிந்துகொள்வது இயலாமல் போகின்றது. அதனால் மனதில் தோன்றிய புது சிந்தனைகள் பலனளிப்பவைகளாக இருந்தாலும், அத்தகைய சிந்தனை யார் மனதில் தோன்றியதோ அவர் புரிந்த உண்மையை மற்றவர்கள் புரிந்து ஏற்றுக்கொள்வது சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது.

அதனால்தான் புதிய கருத்துகளுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருப்பதில்லை. காலப்போக்கில் அவை நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் பலனை அடையும் போது மனதும், உடம்பும் இணைந்து செயல்படுவதில் லயம் ஏற்படுகிறது. உடம்பு, மனம், பகுத்தறியும் ஆற்றல், இறை உணர்வு ஆகிய பல்வேறு அம்சங்களையும் அதனதன் இயல்பான அளவில் புரிந்து கொண்டு செயல்பட இளைஞர்கள் பழகிக்கொண்டால் இசைவான சமுதாயத்தை உருவாக்குவது எளிது.

ப. சுரேஷ்குமார்

1 comment:

Kannan said...

சமுதாயத்திற்க்கு ஏற்ற கருத்து.நீங்கள் உலகத்தை பற்றி நன்கு புரிந்து கொண்டீர்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com