Tuesday, September 6, 2011

நேர்மை எனும் நெறிமுறை!

'நேர்மை' என்பது இடம், பொருள், ஏவலுக்கு ஏற்பப் பின்பற்ற வேண்டிய ஒன்று, நேர்மையைவிட சாமர்த்தியம்தான் மிகவும் முக்கியமானது என்பது இன்று பலரின் எண்ண ஓட்டம். அதையே பிறருக்கு வலியுறுத்தவும் செய்கிறார்கள். நேர்மையான வாழ்க்கை இன்று சாத்தியமில்லாததா?

நல்லவராக இருக்கவேண்டும். அதேசமயம் வல்லவராகவும் இருக்கவேண்டும். இது சாத்தியமா? நேர்மையாக வாழும் பலரை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கூறுகின்றார்களே இது சரியா? தமக்குத் தாமே நியாயப்படுத்திக் கொண்டு சாமர்த்தியமாக வாழ்வதுதான் முறையா என்பது போன்ற கேள்விகள் பலரது மனதிலும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன.

நேர்மையாகவும் இருந்துகொண்டு விருப்பங்களைக் கடந்து வாழ்க்கை நடத்த முடியுமா? நேர்மைக்குப் பரிசு வறுமைதானா? என்றும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாழ்க்கையை வாழ்வதற்கு முக்கியமான உந்துசக்தியாக விளங்குவது, 'புருசார்த்தம்' ஆகும். புருசார்த்தம் என்றால் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய நான்கும் சேர்ந்தது. நெருப்பின் தர்மம், சுடுவது. அதுதான் அதன் இயல்பும் கூட.

அதுபோல ஒவ்வொருவரும் தன்திறன் அறிந்து, மனதைரியத் துடனும், விடாமுயற்சி, புத்திசாலித்தனத்துடனும், கடினமுயற்சி மேற்கொண்டால் வெற்றி என்பது எட்டிப்பறிக்கும் தூரம்தான்.

ஒவ்வொரு செயல்பாட்டையும் அதற்குரிய விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு நேர்முறையில் செயல்படுவது அவரவர் கையில்தான் உள்ளது. ஜனகமகராஜன் துறவறம் மேற்கொள்ளாமலேயே முனிவரைப் போல வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியதாக கூறப்படுவதை நாம் அறிகிறோம்.

ரிச்சர்ட் பேக் என்பவர், 'ஜோனதன் விவிங்ஸ்டன் சீகல்' என்ற நூலில் ஜோனதன் என்ற கடல் சார்ந்த உயிரினமான நீர்வாழ் பறவையைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் ஜோனதன், தன் இனத்தைவிட்டுப் பிரிகிறது.

அது, புருசார்த்தத்துடன் செயல்படும் கூட்டத்தை இனங்கண்டு அதன் மூலம் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு, தான் கற்ற திறமைகளை தனது கூட்டத்துக்கும் கற்றுத் தந்தது. கற்றுத்தரும் முன்பு தனது சீடனிடம், அந்த வித்தையைப் பிறருக்கும் கற்றுத்தரவேண்டும் என்று கூறியது.

இல்லற தர்மம், தொழில் தர்மம், சமூக தர்மம், இறைஉணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து அறவாழ்க்கை வாழ்வோர் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நியாயமான லாபத்தை ஈட்டும் வியாபாரம் ஏற்புடைய ஒன்றே. நெறிமுறைகளைப் பின்பற்றி லாபம் ஈட்டி, அதில் சமூக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன.

நேர்மையுடன் வருவாயைப் பெருக்க முடியும். நேர்மைக்கும் வறுமைக்கும்தான் அதிக நெருக்கம் உண்டு என்று கருதுவது ஒரு குறுகிய கண்ணோட்டமே. பணம் என்பது வெறும் நிழல்தான். அதைப் பயன்படுத்துபவர்கள் அதற்கு அடிமையாகாமல் செயல்பட்டால் நேர்மையுடன் வறுமையைப் போக்கமுடியும்.

வரவுக்குள் செலவு செய்யப் பழகுவது ஒரு வழி. வரவைப் பெருக்கிக் கொண்டு அதாவது, திறமையையும், உழைப்பையும் அதிகப்படுத்திக் கொண்டு வசதியைப் பெருக்கிக் கொள்வது யதார்த்தம்தான். விடுதலை உணர்வுடன் செயல்பட பழகவேண்டும்.

எல்லாவற்றையும் துறந்து இடுப்பில் ஒரு முழம் துணியை கட்டிக்கொண்டு வாழ்வதுதான் துறவு என்று அர்த்தம் கிடையாது. ஆடையின் மேல் தேவையைத் தாண்டி நாட்டம் இல்லாதபோது காந்தியடிகளுக்கு நாலு முழ வேட்டியே போதுமானதாக இருந்தது.

விரதம் என்பது தம்மைத் தாமே வருத்திக்கொள்வதல்ல. அதன் கருத்தை மனதளவில் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால்தான் அது உண்மையான விரதம்.

ஓர் அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஞானியைப் பார்த்தான். அவரைத் தனது அரண்மனைக்கு அழைத்து வந்து சில மாதங்கள் இருக்கச் செய்து அறிவுரைகளை பெற மன்னன் கருதினான்.

முனிவர் தங்குவதற்கு ஒரு மாளிகையையும் ஏற்பாடு செய்தான். முனிவரும் அறுசுவை உணவை அருந்தி, ஆடம்பரமான துணிகளை அணிந்து மாளிகை வாசத்தைக் கழித்தார். உடனே மற்றவர்களுக்குப் பொறாமை உண்டானது. அரசனைப் பார்த்து, 'எவ்வாறு ஒரு துறவி இவ்வாறு ஆடம்பர வாழ்க்கை வாழலாம்?' என்று கேட்டனர்.

உடனே அரசன் அடுத்த நாளே தனது ஆன்மிக சந்தேகங்கள் தீர்ந்தன என்று கூறி ஞானியைக் காட்டுக்கு அனுப்பி வைத்தான். அப்போதும் அதே மன உணர்வுடன் ஞானி தனது துறவு வாழ்க்கையைத் தொடர்ந்தார். வசதி, கஷ்டம் என்பது அவரவரின் மனோ பாவத்தைப் பொறுத்ததுதான். காடும், நாடும் ஒன்று என்று கருதிச் செயல்படும் மனோபாவம்தான் கவனிக்க வேண்டிய ஒன்று.

கிரேக்க நாட்டைச் சார்ந்த ஹெலனை மோகத்தின் காரணமாக பேரிஸ் என்ற இளவரசன் வாழ்க்கைத் தணையாகத் தேர்ந்தெடுக்கிறாான்.

அவனுக்கு அழகும், அறிவும் உடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக நடந்த இளவரசன் பேரிசின் செயல், நாட்டுக்கு பெரிய அழிவையே ஏற்படுத்தியது. அதேசமயம், ஹெர்குலிஸ் என்ற வீரனின் முன் இரண்டு தேவதைகள் தோன்றினர். அத்தேவதைகளில் ஒன்று, உழைப்பைக் கொண்டு உயரும் பாதையைக் காட்டியது. மற்றொன்று, உழைப்பே இல்லாமல் வாழும் வழியை காண்பித்தது. ஆனால் ஹெர்குலிஸ் உழைத்து முன்னேறும் பாதையை தேர்வு செய்ததாக அறிகிறோம்.

அந்தோணி கிரெய்லிங் என்பவர் தனது 'சாய்ஸ் ஆப் ஹெர்குலிஸ்' என்னும் நூலில், உழைப்பு, சுகமான வாழ்க்கை ஆகிய இரண்டு அம்சங்களும் இணைந்த வாழ்க்கைதான் இயல்பான ஒன்று என்று குறிப்பிடுகிறார். துன்பத்தையும் நடுநிலையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறுகிறார்.

உழைப்பது, பொருளீட்டுவது, ஓய்வெடுப்பது, விரும்பிய உணவை உண்பது, கலை உணர்வுடன் செயல்படுவது ஆகிய அனைத்துமே வாழ்க்கைக்கோ, நேர்மைக்கோ புறம்பானவை கிடையாது. ஆனால் நமது சுதந்திரம் பிறரைப் பாதிக்கக் கூடாது.

அனைவரும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்காமல் நியாயமாக நடந்து கொண்டால் நேர்மை என்பது அனைவரின் இயல்பாக மாறிவிடும்.

எந்த ஒரு குணத்தையும் தனித்துப் பிரித்து எடுத்து மனதில் கொண்டு செயல்படாமல் ஒட்டுமொத்த வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திச் செயல்பட பழக வேண்டும்.

அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட சந்தேகமும் இதைப் போன்றதுதான். ஆனால் கிருஷ்ண பகவானின் கீத உபதேசம் அவனுக்குத் தெளிவை ஏற்படுத்தியவுடன் தனது கடமையை உறுதியோடு மேற்கொண்டான்.

இயேசுபிரான், நபிகள் நாயகம், குரு நானக் போன்ற எண்ணற்ற இறைத் தூதர்கள் அறிவுறுத்திய, வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு இளைஞர்கள் இசைவோடு வாழப் பழக வேண்டும்.
ப. சுரேஷ்குமார்.

2 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
நேர்மைக்குப் பரிசு வறுமைதானா?
//
சிந்திக்க வைக்கும் கேள்வி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான பதிவு