Thursday, August 18, 2011

போலி எஸ்.எம்.எஸ்சை கண்டு ஏமாறாதீர்கள்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைவதைப்போல பெருநகரங்களில் புதுவிதமான மோசடிகளும், குற்றங்களும் அரங்கேறிக் கொண்டே வருகின்றன. மெட்ரோ சிட்டியான சென்னையில் மோசடிகளுக்கு பஞ்சமே இல்லை என்றே கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகரில் “உங்களுக்கு லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் விழுந்து இருக்கிறது’’ என்ற இமெயில் வந்து கொண்டிருந்தது. அதனை நம்பி பல லட்சங்களை சென்னையில் பலர் ஏமாந்து போயினர். போலீசார் விசாரணை நடத்தி நைரீஜியாவை சேர்ந்தவர்களை கையும் களவுமாக பிடித்து சிறையில் தள்ளினர்.

இதன் பிறகு அதுபோன்ற இமெயில் நின்ற மாதிரி தெரிந்தது. ஆனால், தற்போது அதுபோன்ற இமெயில்கள் சகட்டு மேனிக்கு இன் பாக்ஸ்களில் குவியத்தொடங்கி விட்டது. அதை விட தற்போது போலி எஸ்எம்எஸ் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே போலீசார் போலி இமெயிலோ, எஸ்எம்எஸ்ஸோ வந்தால் யாரும் நம்ப வேண்டாம் அது பொய்யானது. என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற வந்த 3 எஸ்எம்எஸ், 4 இமெயில் ஆகியவற்றை நம்பி ஒரு தொழிலதிபர் ரூ.31.65 லட்சத்தை சர்வ சாதாரணமாக ஏமாந்து இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி ஒருவர் கூறியதாவது்;

அவருக்கு ஜனவரி மாதத்தில் ஒரு இமெயில் வந்திருக்கிறது. அதில் “உங்களுக்கு லாட்டரியில் 5 லட்சம் கோடி இங்கிலாந்து பவுண்டு (பணம்) விழுந்திருக்கிறது. அது உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பிளீஸ் ரிப்ளை’’ என்று கூறப்பட்டிருந்தது. முதலில் இவர் அதை நம்பவில்லை. பின்னர், அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து 3 இமெயில், 3 எஸ்எம்எஸ் குவிந்தன. இதனால், அவருக்கு லேசாக நம்பிக்கை எட்டிப்பார்த்தது. “ரிப்ளை தான் பண்ணி பார்ப்போமே’’ என நினைத்து அவர் எஸ்எம்எஸ், இமெயில்களுக்கு ரிப்ளை அனுப்பினார். அந்த போலி எஸ்எம்எஸ் மற்றும் இமெயிலில் வந்த செல்போன் நம்பருக்கு பேசியிருக்கிறார்.

மறுமுனையில் பேசிய மோசடி பேர்வழி “உங்களுக்கு லக்கி பிரைஸாக கிடைத்திருக்கும் தொகை இங்கிலாந்து நாட்டு பணம். அதை இந்திய பணமாக ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற வேண்டும். அதற்கு ஐக்கிய நாடுகள் சான்றிதழ், சுங்கம் வரி தொடர்பாக சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற வேண்டும். அதனால் நீங்கள் கொஞ்சம் முன்பணம் தர வேண்டி இருக்கும். நாங்கள் தரும் வங்கி கணக்கில் அந்த பணத்தை போடுங்கள்’’ என லாவகமாக பேசியிருக்கிறான்.

இதனையும் நம்பிய அவர், வங்கிக் கணக்கில் முதலில் ரூ.3 ஆயிரம் போட்டிருக்கிறார். பின்னர், அந்த ஆசாமி கேட்கும் போதெல்லாம் பணத்தை அள்ளி வீசியிருக்கிறார். இதேபோல், ஜனவரி முதல் ஜூன் வரை ரூ.31.65 லட்சத்தை மோசடி ஆசாமிக்கு தாரை வார்த்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மோசடி ஆசாமியிடம் இருந்து தகவல் இல்லை.

இதைத்தொடர்ந்து அவர் ரிசர்வ் வங்கியிடம் சென்று நடந்ததை கூறி விசாரித்துள்ளார். “அது போலியானது. அப்படி எதுவும் இங்கு வராது’’ என்று ரிசர்வ் வங்கியில் கூறியுள்ளனர்.

சில மோசடி எஸ்.எம்.எஸ்கள்
  • லண்டன் நேஷனல் லாட்டரியில் உங்களுக்கு லட்சக்கணக்கில் பவுண்டு பரிசு விழுந்திருக்கிறது, பிளீஸ் ரிப்ளை.
  • பிஎம்டபூள்யூ கார் பரிசு விழுந்துள்ளது, அதனை இந்தியாவிற்கு அனுப்ப கப்பலுக்கு பணம் தேவை.
  • வெளிநாட்டில் ஒரு கோடீஸ்வரர் இறந்து விட்டார். அவர் நிறைய பணம் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறார். அவருடைய பெயரும் உங்களுடைய பெயரும் ஒத்துள்ளது. அந்த பணத்தை உங்களுக்கு மாற்றித்தர ஆகும் செலவுக்கு பணம் அனுப்புங்கள்.
  • உங்களை லண்டனில் வசிக்கும் ஒரு பெண் தத்து எடுத்துக் கொள்வதாகவும், அதற்குரிய ஆவணங்களான தத்து எடுத்தல் சான்றிதழ், பாஸ்போர்ட், தீவிரவாதி அல்ல சான்றிதழ் ஆகியவற்றை பெற வேண்டும். கோடீஸ்வரரின் வக்கீலை தொடர்பு கொண்டு பணம் அனுப்புங்கள்.
  • வெளிநாட்டில் வேலை. பல லட்சம் சம்பளம். பணம் அனுப்புங்கள்.
  • லண்டனில் உள்ள கம்பெனியின் மேலாளரான நான் நாட்டின் பல பகுதிகளுக்கு பண பரிமாற்றம் செய்து வருகிறேன். உங்கள் வங்கி கணக்கு எண்ணை அனுப்பினால் பல பரிசுகள் கிடைக்கும்.
  • நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு ஆரம்பித்து கணக்கு எண், பாஸ்வேர்டு ஆகியவைகளை கொடுக்குமாறும், உங்கள் வங்கி கணக்கிற்கு வரும் பணத்திலிருந்து 10 சதவீதம் கமிஷனை எடுத்துக் கொள்ளுங்கள். மீதம் உள்ளவற்றை நாங்கள் கூறும் வெளிநாட்டு வங்கி கணக்கில் போடுங்கள். நிறைய பரிசுகள் கிடைக்கும். இப்படி பல மோசடி எஸ்எம்எஸ்கள் உலா வருகின்றன.

1 comment:

Priya said...

நல்ல தகவல்!
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com