Friday, August 12, 2011

ஹாலிவுட் டிரெய்லர்
விதியை நம்புபவர்களா நீங்கள்? அப்படியானால், இந்தப் படம் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்தும். விதியை நம்பாதவர்களா நீங்கள்? அப்படியானால் அட்சர சுத்தமான சுவாரஸ்யம் உங்களுக்காக காத்திருக்கிறது. அது தான் 'ஃபைனல் டெஸ்டினேஷன் 5' ஹாலிவுட் படத்தின் பலம்.

இதுவரை  'ஃபைனல் டெஸ்டினேஷன்' என்னும் பெயரில் நான்கு ஹாலிவுட் படங்கள் வந்திருகின்றன. நான்குமே பம்பர் ஹிட். விடுவார்களா தயாரிப்பாளர்கள்? இதோ 5ம் பாகம் ரெடி. அதுவும் 3டியில்!

இது திகில் படம்தான். ஆனால், த்ரில்லிங்குக்கு மைக்ரோ செகண்ட் கூட குறைவிருக்காது என்று அடித்துச் சொல்லலாம். காரணம், முந்தைய பாகங்களின் ரோலர் கோஸ்டர் திரைக்கதைகள். அதை வைத்துப் பார்க்கும்போது இந்தப் படமும் பரபரவென சீரும் என்று நம்பலாம்.

'ஃபைனல் டெஸ்டினேஷன்' படங்களின் சுவாரஸ்யமே வில்லன்தான். யெஸ், முந்தைய நான்கு பாகங்கள் போலவே இந்த 5வது பாகத்திலும் வில்லன் என்று யாரும் இல்லை. எப்பொழுதும் போல் மரணம்தான் வில்லன். அந்த மரணத்தை எப்படி மனிதர்கள் எதிர்கொள்கிறார்கள், கடக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்பதுதான் ஒன்லைன்.

முதல் பாகத்தில் நண்பர்கள் விமானத்தில் கிளம்புகிறார்கள். அசதியில் ஒருவன் மட்டும் லேசாக கண்னயர்கிறான். கனவு. அவர்கள் செல்லும்  விமானம் வெடிக்கப் போகிறது. பயணம் செய்யும் அனைவரும் இறக்கப் போகிறார்கள். சட்டென கண் விளிக்கும் அவன், தன நண்பர்களிடம் அக்கனவை குறித்து சொல்கிறான். நான்கு பேர் மட்டும் அவனை நம்பி விமானத்தில் இருந்து இறங்குகிறார்கள். மற்றவர்கள் அவனை கிண்டல் அடித்துவிட்டு அதே விமானத்தில் புறப்படுகிறார்கள். கனவில் வந்தது போலவே விமானம் டேக் ஆஃப் ஆனதும் வெடித்துச் சிதறுகிறது.

உண்மையில் தப்பித்தவர்களும் அன்றுதான் இறக்க வேண்டும். அதுதான் விதி. ஆனால், எப்படியோ தப்பித்து விட்டார்கள். அதற்காக மரணம் அவர்களை விட்டுவிடுமா என்ன? ஒவ்வொருவராக எப்படி இறக்கிறார்கள் என்பது தடதடக்கும் திரைக்கதை.

2ம் பாகத்தில், சாலை விபத்துதான் களம். இதில், கதாநாயகிக்கு கனவு வருகிறது. அவளும் சிலரும் தப்பிக்கிறார்கள் மற்றவர்கள் விபத்தில் இறக்கிறார்கள். தப்பித்தவர்கள் அடுத்தடுத்து எப்படி பலியாகிறார்கள் என்பதை நகத்தை கடித்தபடி பார்க்க வேண்டும்.

3ம் பாகத்தில் ரோலர் கோஸ்டர்தான் களம். தீம் பார்க் செல்லும் நண்பர்களின் மரணங்கள் ரசிகர்களின் ரத்தத்தை உறைய வைக்கும். 4ம் பாகத்தில் கார் ரேஸ்தான் களம். மற்றபடி முந்தைய பாகங்கள் போலவே கனவு, இறப்பு, தப்பித்தல், மரணம்... என டிட்டோ.

அந்தவகையில் வெளிவர இருக்கும் 5ம் பாகத்தின் களம் என்ன? 'படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...' என்று புன்னகைத்திருக்கிறது வார்னர் பிரதர்ஸின் அங்கமான நியு லைன் சினிமா.

மரணத்திலிருந்து தப்பிக்க முடியாமல் படத்தில் இடம் பெறப்போகும் முக்கிய கதாபாத்திரங்கள் இறக்கத்தான் போகிறார்கள். படம் பார்க்காமலே இது ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், எப்படி, எந்த நொடியில் மரணம் நிகழப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ளத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருத்தலை இறுதிக் காட்சி வரை நீட்டித்து வழங்குவதுதான் திரைக்கதையாசிரியர்களின் பணி. அந்த வகையில்,  'ஃபைனல் டெஸ்டினேஷன்' சீரிஸின் நான்கு பாகங்களுமே திரைக்கதைக்கான படங்களாக மதிக்கப்படுகின்றன. இந்த லிஸ்டில் 5ம் பாகம் இடம் பெறுமா என்பது பட ரிசல்ட்டை பொறுத்தது.

நிக்கோலஸ் டி' அகஸ்ட்டோ, எம்மா பெல், மெயில் ஃபிஷ்ஷர் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு எரிக் ஹீசர் திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்கம், ஸ்டீவன் க்வாலே.

க்ளிஷேதான் என்றாலும் இதை சொல்லித்தான் ஆக வேண்டும் இளகிய மனம் படைத்தவர்கள் இப்படத்தை பார்க்க வேண்டாம்.
கே.என்.சிவராமன்   

1 comment:

Priya said...

நல்ல விமர்சனம்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com