Monday, August 8, 2011

சிறுநீரகத்தின் பெரும்பணி


 


சிறுநீர் மற்றும் சிறுநீரகப் பாதை சம்பந்தப்பட்டவைகளில், சிறுநீரகம்தான் (Kidney) முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். நமது உடலில் தொப்புளுக்கு சற்றுமேலே வயிற்றின் உள்ளே இரண்டு பக்கமும், பக்கத்திற்கு ஒன்றாக மொத்தம் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன.


இதை மருத்துவ மொழியில் 'கிட்னி' என்று அழைப்பதுண்டு. இதன் உருவம் அவரை விதை போன்ற வடிவத்தில் இருக்கும். சுமார் 11 செ.மீ. நீளமும், சுமார் 6 செ.மீ. அகலமும், சுமார் 4 செ.மீ. தடிமனும் உள்ளதே சிறுநீரகமாகும்.

ஒவ்வொரு சிறுநீரகமும், சுமார் 120 கிராமிலிருந்து 175 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஆண்களைவிட பெண்களின் சிறுநீரகம் சற்று எடை குறைவாக இருக்கும். வலது சிறுநீரகத்தைவிட, இடது சிறுநீரகம் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும். நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், காற்றை உள்ளே இழுக்கும்போது இரண்டு சிறுநீரகங்களும் மேலிருந்து கீழாக கொஞ்சம் நகர்ந்து கொடுக்கும். இது இயற்கையாக ஏற்படுவதுதான்.

இரண்டு சிறுநீரகங்களுக்கும், ரத்த சப்ளை, இருதயத்திலிருந்து நேராக 'அயோர்ட்டா' என்கிற பெரிய இரத்தக் குழாய் மூலமாகக் கிடைக்கிறது. இரண்டு சிறுநீரகங்களுக்கும் 24 மணி நேரமும் அதிக வேலை இருப்பதால் இருதயத்திலிருந்து வெளிவரும் சுத்த ரத்தத்தில், சுமார் 20 சதவீதத்தை இரண்டு சிறுநீரகங்களுமே எடுத்துக் கொள்கின்றன.

மனிதனின் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களையும், விஷப் பொருட்களையும் அவ்வப்பொழுது உடலிலிருந்து வெளியேற்றுவது இந்த இரண்டு சிறுநீரகங்களும்தான். விலங்குகளுக்கும் சரி, மனிதனுக்கும் சரி, உடலில் சிறுநீரகங்களின் பங்கு மிகமிக முக்கியமாகும். சிறுநீரகங்கள் இந்த வேலையை ஒழுங்காக செய்ய வில்லை என்றால், வெகு சீக்கிரத்தில் உடலின் நிலை மிக மிக மோசமாகிவிடும்.

ரத்தத்திலிருந்து சிறுநீரைப் பிரிப்பது இதுதான். 'எலெக்ட்ரோலைட்ஸ்' என்று சொல்லக்கூடிய உடலுக்குத் தேவையான பொருளை, உடலில் சமமான நிலையில் எப்பொழுதும் வைத்திருக்க உதவுவதும் இதுதான். உடலின் கார அமிலத்தன்மையை சரிசமமாக வைத்திருக்க உதவுவதும் இதுதான். உடலிலுள்ள உப்பையும், தண்ணீரையும், சரிசமமாக வைத்திருக்க உதவுவதும் இதுதான்.

உடலின் ரத்த அழுத்தத்தை எந்நேரமும் சரியாக வைத்திருக்க உதவுவதும் இதுதான். ரத்தத்தை வடிகட்டி அதிலுள்ள வேண்டாத கழிவுப்பொருட்களை வெளியே அனுப்ப உதவுவதும் இதுதான். யூரியா மற்றும் அம்மோனியா போன்ற கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுவதும் இதுதான். உடலுக்கு மிகவும் தேவையான தண்ணீர், சர்க்கரை, அமினோ அமிலங்கள் முதலியவைகளை வடிகட்டியபின் மறுபடியும் அவைகளை உள்ளிழுத்து உடலில் எப்பொழுதும் இவைகள் சரியான அளவில் இருக்க உதவுவதும் இதுதான். கேல்சிட்ரால், ரெனின் போன்ற ஹார்மோன்களை சுரக்கச் செய்வதும் இதுதான். ஆக எல்லாவற்றையுமே சிறுநீரகங்கள்தான் செய்கின்றன.

உடலில் நீர் தேங்க ஆரம்பித்தாலே உடனே கிட்னி கெட்டுவிட்டது என்று சொல்லும் அளவிற்கு சிறுநீரகம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருக்கிறது. இது சந்தோஷமான விஷயம்தான். சிறுநீரகத்திற்கும், தண்ணீருக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. இரண்டு கால் பாதங்களும் வீங்குவது, முகம் வீங்குவது, கண்ணின் கீழ்ப்பகுதி வீங்குவது இவைகளெல்லாம் நீண்ட நாட்களாக ஒருவருக்கு இருந்தால் சிறுநீரக சிறப்பு மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டும்.

சிறுநீரகங்களின் செயல்பாடு மிக சாதாரணமானதுதான் 1. வடிகட்டுவது, 2. வடிகட்டும் பொருளிலிருந்து உடலுக்கு தேவையானவற்றை மறுபடியும் உடலுக்குள்ளே எடுத்துக் கொள்ளுவது, 3. ஹார்மோன்கள் சுரப்பது. இந்த மூன்று வேலைகளையும் இரண்டு சிறுநீரகங்களும், 24 மணி நேரமும், ஆயுள் முழுவதும் செய்து கொண்டே இருக்கின்றன.

அநேகமாக நமது வீட்டிலிருக்கும் வாட்டர் பில்டர், குடி தண்ணீரை எப்படி, பில்டர் பண்ணி சுத்தமாக்கி கொடுக்கிறதோ, அதேமாதிரிதான் சிறுநீரகங்களும் வேலை செய்துகொண்டு இருக்கின்றன. சிறுநீரகத்திலுள்ள பில்டருக்குப் பெயர் நெஃப்ரான் ஆகும்.

இரண்டு சிறுநீரகங்களும் இந்த பிரித்தெடுக்கும் வேலையை தனித்தனியாக செய்கின்றன. சில நேரங்களில் உடலிலுள்ள மற்ற உறுப்புகளுடன் சேர்ந்தும் இந்த வேலையை செய்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகளின் உதவியையும் சிறுநீரகங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

அதோடு நாம் உணவில் சேர்க்கும் உப்பிலுள்ள சோடியம் மற்றும் குளோரைடு பொருள்களை, உடலிலிருந்து வெளியே அனுப்புவதை, சரியாக கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை மறைமுகமாக சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.

பிரித்தெடுத்தல் மற்றும் வடிகட்டுதல் ஆகிய வேலைகளை சிறுநீரகங்கள் செய்யும்போது உண்டாகும். கால்சியம் சம்பந்தப்பட்ட பொருட்கள், அதிக அளவில் சேர்ந்து, ஒன்றாகி, உருண்டு, கற்களாக மாறிவிடுகின்றன. இதைத்தான் சிறுநீரகக் கற்கள் என்று சொல்வதுண்டு. மில்லிமீட்டர் அளவிலிருந்து சென்டி மீட்டர் அளவு வரை, அதாவது கடுகு அளவிலிருந்து பேரீச்சம் பழம் அளவு வரைக்கும் கூட இந்த சிறுநீரக கற்கள் உண்டாகும்.

இந்தக் கற்கள் ஆபத்தை உண்டு பண்ணாவிட்டாலும்கூட, தாங்க முடியாத வலியையும் தொந்தரவையும் அதிகமாக உண்டு பண்ணக் கூடியவை ஆகும். சிறுநீரகக் கற்கள் உள்ளவர்களுக்கு தாங்க முடியாத வலி முதுகுப்பக்கம் ஆரம்பித்து, இடுப்பு வழியாக, முன்பக்கம், அதாவது வயிற்றுப் பக்கம் வரை இருக்கும்.

சிறுநீரகங்களில் ஏற்படும் நோய்களினால், சில நேரங்களில் உடல் வீங்குவதற்குப் பதிலாக, சிறுநீரகமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் வீங்கிப்போவது உண்டு. சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் அடைப்பு ஆகியவற்றால் சிறுநீரகத்தைச் சுற்றி சிறுநீர் தேங்கி சிறுநீரகம் வீங்க ஆரம்பித்துவிடும். இதற்கு 'ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்' என்று பெயர்.

சிறுநீரகம் வீங்கி இருக்கிறதா? சிறுநீரகத்துக்குள் கற்கள் உண்டாகி இருக்கிறதா? சிறுநீரகத்தைச் சுற்றி கட்டி, புற்றுநோய்க் கட்டி, வேறு ஏதாவது இருக்கிறதா? சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காக இருக்கிறதா? இல்லையா என்பதையெல்லாம் இரத்தம் மற்றும் சிறுநீர் டெஸ்ட்டுகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். இதுபோக சாதாரண எக்ஸ்ரே, மருந்து செலுத்தி எடுக்கப்படும் எக்ஸ்ரே, அல்ட்ரா ஸோனோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முதலிய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

அதிக நாட்கள் உடல் நலமில்லாமல் இருந்தாலும் சரி, அதிக வீக்கம் உடம்பில் ஏற்பட்டாலும் சரி, அதிகமாக வாந்தி எடுத்தாலும் சரி, ஆபரேஷனுக்குத் தயாரானாலும் சரி, ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின் அளவை டெஸ்ட் பண்ணியாச்சா என்றுதான் டாக்டர்கள் முதலில் கேட்பார்கள். ரத்தத்திலுள்ள யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவை வைத்து சிறுநீரகங்களின் செயல்பாடுகளை உடனே கண்டுபிடித்துவிடலாம்.

Dr.அமுதகுமார்

1 comment:

Priya said...

பயன்னுள்ள தகவல்!
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com