Friday, August 5, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

மனிதக் குரங்குகளின் அட்டகாசம்

ரீமேக் படங்களுக்கும் ரீபூட் படங்களுக்குமான வித்தியாசம் புரிந்தால்தான் வெளிவந்திருக்கும் இருக்கும் 'ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' ஹாலிவுட் படத்தின் சரடை உணர முடியும்.

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை அப்படியே அல்லது சின்னச் சின்ன மாற்றங்களுடன் பிறிதொரு மொழியில் எடுப்பதை ரீமேக் படங்கள் என்கிறோம். சமயத்தில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தையே, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு அதே மொழியில் திரும்ப எடுப்பதையும் இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், ரீபூட் படங்கள் அப்படியானதல்ல. முந்தைய மைய கதாப்பாத்திரங்கள் மட்டும் புதிய வெர்ஷனில் தொடர்ந்தால் போதும். மற்றபடி புதிய கதையுடன், புத்தம் புது களத்தில் இறங்கி ரவுண்டு கட்டலாம். இது தனியான ஒரு படத்துக்கு மட்டுமல்ல; பாகம் பாகமாக வரும் படத்துக்கும் பொருந்தும். ஹாலிவு ட்டில் ஏற்கனவே ரீபூட் படங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டிருக்கின்றன. ஜேம்ஸ் பாண்ட் படமான 'கேசினோ ராயல்' முதலில், 1962 ல் வெளிவந்தது. இதே பெயரில், 2006 ல் வெளிவந்த படம், ரீபூட் வகையறா. அதேபோல், 1989 ல் வெளிவந்த 'பேட்மேன்', 2005 ல் 'பேட்மேன் பிகின்ஸ்' ஆக உருமாறியதும் இந்தப் பிரிவின் கீழ் அடங்குவதுதான்.

அந்தவகையில்தான் 'பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' சீரிஸின் தொடர்ச்சியாக இந்த மாதம் ரிலீசாகும் 'ரைஸ் ஆஃப் த ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்' ஹாலிவுட் படம், ரீபூட் ஆக நிமிர்ந்து நிற்கிறது. மனிதர்களை விட, அறிவிலும் சிந்தனையிலும் மனிதக் குரங்குகள் பன்மடங்கு உயர்ந்ததாக மாறினால் என்ன நடக்கும் என்பதை ஆக்ஷன் த்ரில்லருக்கு உரிய ஸ்பீடுடன் விவரிப்பதுதான் 'ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்'நாவல், கதையின் மையம்.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், ப்யூரி ப்யூஸ் என்ற பிரெஞ்சு நாவலாசிரியர். 1963 ல் இவர் எழுதிய 'மங்கி பிளானட்' என்கிற 'ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ்' நாவல், ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவந்து விற்பனையில் சாதனைப் படைத்தது.

உடனே, 'டுவென்டியத் சென்சுரி ஃபாக்ஸ்' ஸ்டூடியோவின் நிறுவனரான ஆர்தர் பி.ஜேக்கப், இந்த 5 பாகங்களையும் தொடர்ச்சியாக திரைப்படமாக்கினார். 1968 ல் ஆரம்பித்து 1973 க்குள் இந்த 5 திரைப்படங்களும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகின. இதன் பின்னர் யாரும் இக்கதையை திரைப்படமாக்க முன்வரவில்லை.

இந்நிலையில், 2001 ல் இயக்குனர் டிம் பர்டன், 'பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' திரைப்படத்தை ரீமேக் செய்தார். வசூல் பின்னி பெடல் எடுத்தது.  இதனை உற்று கவனித்த 'டுவென்டியத் சென்சுவரி ஃபாக்ஸ்', இதோ தங்களது அட்சய பாத்திர கதையை ரீபூட் செய்து , 'ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்' திரைப்படமாக வெளியிடப் போகிறது.

ஆராய்ச்சியாளரான வில் ராத்மேன், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை மனிதக் குரங்கின் உடலினுள் செலுத்தி அவர் ஆராயும்போது, விபரீதம் ஏற்படுகிறது. மனிதர்களை விட அறிவாளியாகவும், பலசாலியாகவும் மாறும் அந்த மனிதக் குரங்கு, தன்னைப் போலவே ஆற்றலுள்ள பல மனிதக் குரங்குகளை உருவாக்கி  உலகையே நாசம் செய்ய புறப்படுகிறது. இதிலிருந்து மனிதர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் மிச்ச சொச்ச கதை.

ஜேம்ஸ் பிராங்கோ, ஃபிரிடா பின்டோ உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ரூபட் வியாட் இயக்கியிருக்கிறார்கள். 'த எக்ஸ்பேசிஸ்ட்' உட்பட பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இவர், சிறு வயதிலேயே சூப்பர் 8 கேமரா மூலம் பல டாக்குமென்டிகளை  இயக்கியவர்.

அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மனிதர்களுக்கு எதிரான படமே, இந்த ஹாலிவுட் படம் என்ற சர்ச்சையும் எழுதியிருக்கிறது.

கே.என்.சிவராமன்
 

1 comment:

Priya said...

good post

Priya
http://www.tamilcomedyworld.com