Wednesday, August 3, 2011

மனதை வெல்லும் மந்திரம்!

நம்மில் பலருக்குப் பிரச்சினையாக இருப்பது, வெளிப்புறச் சூழ்நிலையோ, பொருளாதார நிலையோ அல்ல. மனம்தான். மனம் நிறைவுறாதபோது, அதை நல்ல வழியில் செலுத்தமுடியாதபோது, எவ்வளவு செல்வம் இருந்தும், வசதிகள் இருந்தும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடிவதில்லை.

உறக்கத்தில் சிந்தனையில்லை. உயர்வு, தாழ்வு, பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை, அறிவாளி, முட்டாள், நல்லவர், கெட்டவர், படித்தவர், படிக்காதவர் என்று ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், பிறரை அடையாளம் காணுவதும் விழிப்பு நிலையில்தான். உறக்கத்தின்போது மனதின் செயல்பாடு வெகுவாகக் குறைந்து விடுவதால் அமைதி ஏற்படுகின்றது. இமைக் கதவுகள் மூடிக் கொள்கின்றன. கண் விழித்தவுடன் மீண்டும் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.

அவரவரின் மனதுதான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனதை அடக்கியாளத் தெரிந்து கொள்வதே மிகவும் முக்கியமான ஒன்று. இதை அனைவரும் அறிந்து இருந்தாலும் மனதை நெறிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. மனதை அடக்கியாளும் மந்திரம் தெரியாமல்தான் பலர் கடல் அலைகளில் துரும்பைப் போலத் தவிக்கிறார்கள்.

அரசனாக இருந்த ஒருவர் தனது அரண்மனை, உற்றார், உறவினர் ஆகிய அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு காட்டுக்குச் சென்று தியானம் செய்யத் தொடங்கினார். நாளடைவில் ஞானியாக மாறி அறவாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதேசமயம் அந்தப் பகுதியில் மற்றொரு நாட்டின் அரசன் பல நாடு, நகரங்களைப் போரில் வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்தி வந்தான். அவனுக்குக் காட்டில் ஞானியாகத் தவம் செய்பவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஆசை எழுந்தது. சொத்து, அரசாட்சி போன்ற எதுவும் இல்லாத ஒரு ஞானியை வென்று தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால் அரசருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகின்றது என்று மக்கள் பேசத் தொடங்கினர்.

காட்டில் ஞானியின் தவத்தை கலைக்க அரசன் மேற்கொண்ட முயற்சிகள் எந்தவிதப் பயனையும் அளிக்கவில்லை.

"என்னுடன் போருக்கு வா! ஏன் நாடு, நகரத்தையும், உற்றார், உறவினரையும் உதறித் தள்ளிவிட்டு காட்டில் அடைக்கலம் புகுந்துள்ளாய்?'' என்று தொடங்கினான் அரசன்.

ஞானி அமைதியாகச் சூழ்நிலையை ஆராய்ந்து கருத்தில் கொண்டு அரசனைப் பார்த்து, தன்னுடைய எதிரியை வெல்ல முடியாத காரணத்தால்தான் அனைத்தையும் துறந்து காட்டுக்கு வந்ததாகக் கூறினார்.

"உனது எதிரி என்னைவிட வலிமையானவனா?'' என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினான் அரசன்.

"ஆமாம்!'' என்று அமைதியாகக் கூறினார் ஞானி.

உடனே அரசன், அந்த எதிரி யார் என்று கூறினால் அவனைத் தன்னால் வெல்லமுடியும் என்றும், அவ்வாறு முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறினான்.

"மனதுதான் நான் கூறும் எதிரி. அதை வெல்ல முடியாமல்தான் நான் தியானம் மேற்கொண்டுள்ளேன்'' என்றார் ஞானி.

உடனே அரசன் தனது மனதை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டான். ஒவ்வொரு முயற்சியின்போதும் மிஞ்சியது தோல்விதான். அரசன் தனக்குத் தெரிந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி மனதை அடக்கி ஆள்வதற்கு முயன்றும் தோல்வியே மிஞ்சியது. தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைதான் அரசனுக்கு ஏற்பட்டது.

காட்டுக்கு வந்த ஞானியும், நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் மனம் அவரவருடனே பயணம் செய்கிறது என்பதை உணர்ந்தார். மனதைத் தனியாகக் கழட்டி வைக்க முடியாது. மனது ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டது என்பதை உணர்ந்தார். மனதைக் கொண்டுதான் மனதைத் தாண்டவேண்டும் என்று உணர்ந்து, நல்ல பழக்கங்களை மனதுக்கு அறிமுகப்படுத்திப் பின்னர் படிப்படியாக மனதை நெறிப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் கண்டார்.

அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் எதிர்கொள்வது மனதில் ஏற்படும் போராட்டத்தையே ஆகும். தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படுவது, நடுநிலையுடன் முடிவெடுப்பது என்று அவரவரின் மனப்பாங்கின் அடிப்படையிலேயே முயற்சிகளும், செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலும் பிரார்த்தனை என்பதுகூட மனதில் நினைப்பதை அடைவதற்கான சடங்காகத்தான் உள்ளது.

ஒரு கப்பலில் பல பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஒரு வியாபாரியும் அக்கப்பலில் பயணம் செய்தார். ஒரு துறவியும் அதில் பயணம் செய்தார். திடீரென்று புயல் வீசத் தொடங்கியது. உடனே வியாபாரி தான் சேர்த்து வைத்த செல்வத்தை வீடு கொண்டு போய் அனுபவிக்க முடியாதே என்று மனம் வருந்தினார். ஆகவே கடவுளை நோக்கி, புயலின் சீற்றம் குறைந்து கப்பல் கரையைச் சென்றடைந்ததால் தன்னுடைய சொந்த மாளிகையைக் காணிக்கையாகத் தருவதாக வேண்டினார்.

ஆனால், அவர் அருகில் பயணம் செய்த துறவி மனதைப் போட்டு அலட்டிக்கொள்ளவே இல்லை. விளைவு எவ்வாறு இருந்தாலும் அதற்கு எப்படி தயாராவது என்பதிலேயே அவரது முழுக் கவனமும் இருந்தது. திடீரென்று புயல் வீசுவது நின்று கடல் அமைதியானது. அனைவரும் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். உடனே வியாபாரி மனதில் கவலை தோன்றியது. துறவியைப் போல எதுவும் வேண்டாமல் இருந்திருந்தால் மாளிகையைத் தானமாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது என்று வருந்தினார்.

வியாபாரியின் மனதில் ஒரு யோசனை எழுந்தது. தனது மாளிகையையும், அதனுடன் சேர்ந்து ஒரு பூனைக் குட்டியையும் ஏலம் விடப் போவதாக அறிவித்தார். மாளிகையின் விலை ஒரு பொற்காசு என்றும், பூனையின் விலை ஒரு லட்சம் பொற்காசுகள் என்றும் கூறினார். புதிராக இருந்தாலும், அதற்கு ஒப்புக்கொண்டு ஒருவர் மாளிகையையும், பூனைக்குட்டியையும் வாங்கிக் கொண்டார். இப்போது மாளிகையை விற்ற ஒரு பொற்காசை உண்டியலில் போட்டுவிட்டு, பூனையை விற்ற ஒரு லட்சம் பொற்காசுகளைத் தான் எடுத்துக்கொள்ள முடியும் என்று மகிழ்ச்சியடைந்தார் வியாபாரி.

இதுதான் மனம் ஒரு குரங்கு என்பதற்கு அடையாளம். அதைத் தாவ விடவும் கூடாது, தப்பி ஓட விடவும் கூடாது. மனதை நெறிப்படுத்தி, பயனுள்ள கருவியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும்.

இளம் வயதில் எதைப் பார்த்தாலும் அதை அடைய வேண்டும் என்று மனம் அலைபாய்கிறது. ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை மனதில் நங்கூரமாய் நிலைப்படுத்திக்கொள்ளும்போது மனது உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆகவே மனதை அடக்கி ஆளாமல், நெறிப்படுத்திக் கருவியாக பயன்படுத்த இளைஞர்கள் பழகிக் கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ப. சுரேஷ்குமார்.

2 comments:

Anonymous said...

nalla karuthu....mealum yeluthungal

Anonymous said...

nalla karuthu....mealum yeluthungal