Saturday, July 16, 2011

இந்த வயசுலயா?

'இந்த வயசுல இதெல்லாம் முடியாது...' எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம்.

பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தி இருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் யாரோ ஒரு நபரிடமோ போகிறபோக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம்.

இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் 'ஜஸ்ட் லைக் தட்' சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய தன்னம்பிக்கையின் மீதும், லட்சியங்களின் மீதும் ஓர் இடியாக இறங்கவும் வாய்ப்பு உண்டு.

பல குழந்தைகளுடைய ஆர்வமும், வேட்கையும் இத்தகைய வாக்கியங்களால் அணைந்து விடுவதுண்டு. பல இளைஞர்களுடைய லட்சியங்கள் இதனால் சோர்வடைவதுண்டு. பல முதியவர்களுடைய இனிமையான பொழுதுகள் இதனால் சிதிலமடைவதும் உண்டு.

பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்களோ அதுவே சரியானது எனும் முடிவுக்கு நாம் சீக்கிரமே வந்து விடுகிறோம். ஒரு செயலைச் செய்வதற்கு இதுதான் சரியான வயது என்பதை மற்றவர்களுடைய வாழ்க்கையில் இருந்துதான் பொறுக்கி எடுக்கிறோம். அந்த வயதுக்கு முன்போ, அந்த வயதைத் தாண்டியோ அந்த செயலைச் செய்வது நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று பிள்ளையார் சுழி போடும் போதே முடிவு கட்டி விடுகிறோம்.

இது சரிதானா?

சாதனையாளர்களுடைய பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் அவர்களுடைய சாதனைக்கு வயது எப்போதுமே ஒரு தடையாய் இருந்ததில்லை எனும் உண்மை புரியும். எதை அடைய வேண்டும் எனும் தெளிவான லட்சியமும் அதை நோக்கிய பார்வையுமே அவர்களிடம் இருக்கும். அர்ஜுனரின் கண்ணுக்குத் தெரிந்த பறவையின் ஒற்றைக் கண்ணைப் போல நேர்த்தியான, கூர்மையான லட்சியப் பார்வை அவசியம்.

ஒருவர், ஒரு நூலை எழுதிப் பதிப்பிக்க வேண்டுமெனில் எத்தனை வயதாக வேண்டும் என்பதைப் பற்றி எல்லோருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும். அடாவ்டோ கோவால்ஸ்கி டா சில்வா எனும் பிரேசில் நாட்டு எழுத்தாளர் 'அப்ரெண்டே லே' எனும் நூலை எழுதியபோது அவருடைய வயது என்ன தெரியுமா?

ஐந்தரை!

பால் குடிக்கும் வயதில் நூல் வடித்திருக்கிறார் அவர்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள எமிலி ரோஸாவுக்கு மருத்துவம் மற்றும் அறிவியல் மீது அலாதி பிரியம். சின்ன வயதிலேயே அவை குறித்த நூல்கள், ஆய்வுகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தார். அவருடைய முக்கியமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியானது. அப்போது அவருக்கு வயது வெறும் 11.

பதினொரு வயதிலேயே ஆராய்ச்சியா என கின்னஸ் புத்தகம் அவசர அவசரமாய் அவரது பெயரை சாதனைப் பட்டியலில் பதிவு செய்து வைத்தது. அவர் நிறுத்தவில்லை. உளவியலில் தனது முதுநிலைப் பட்டத்தை டென்வரிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் முடித்தபோது வயது 22.

ஐந்து வயதென்றால் ஒன்றாம் வகுப்பில் படிக்க வேண்டும் என்பதுதான் உலக வழக்கம். அந்த வயதில் ஒரு நூலை எழுதுவதென்பது யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

'இந்த வயசுல உனக்கெதுக்கு இந்த வேலை, நாலு ரைம்ஸ் சொல்லு' என்று யாரேனும் சொல்லியிருந்தால் அந்த நூல் அரங்கேறியிருக்காது.

எமிலி ரோஸாவிடம் 'முதல்ல நீ ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடி, அப்புறம் ஆராய்ச்சி பற்றிப் பேசலாம்' என பெற்றோர் சொல்லியிருந்தால் அவருடைய சாதனை நிகழ்ந்திருக்காது!

நியதிகளை மீறிய செயல்களே சாதனைகளாய்ப் பதிவாகின்றன. வயதைக் காரணம் காட்டி செயல்களைத் தாமதப்படுத்தும் போது அவை சாதாரண வெற்றியாய்க் கூட மாறாமல் போய்விடுகின்றன. இந்தியாவின் கிஷன் ஸ்ரீகாந்த் தன்னுடைய முதல் படத்தை இயக்கிய போது அவருக்கு வயது வெறும் ஒன்பது!

இயக்குனராய் வெற்றிக் கொடி கட்ட வயது ஒரு தடையல்ல என்பதை அவருடைய சாதனைப் படம் நிரூபித்துக் காட்டியது.

இளைஞர்களால் மட்டுமே செய்ய முடியும் எனும் சாதனைகளைச் சிறுவர்களாலும் செய்ய முடியும். சிறுவயதினரால் செய்ய முடிகின்ற விஷயங்களை முதியவர்களாலும் செய்ய முடியும். எதைச் செய்வதற்கும் வயது ஒரு தடையல்ல எனும் அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே

போதுமானது!ஜப்பானிலுள்ள டாமே வாட்டன் பே எனும் பெண்ணுக்கு எவரெஸ்டின் உச்சியை எட்டிப் பிடிக்க வேண்டும் எனும் ஆர்வம். தளராத முயற்சியின் முடிவில் அவர் எவரெஸ்டை எட்டிப் பிடித்தார்.

ஆனந்தத்தில் அவர் தனது கரங்களை உயர்த்திய போது அவருக்கு வயது 63.

வெற்றி பெறுவதற்கான முதல் தேவை, வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை தான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை.

எங்கே வாய்ப்புக் கிடைக்கிறது என்பதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. இயங்கிக் கொண்டே, தேடிக்கொண்டே, பயணித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் வெற்றியடைகிறார்கள்.

ஓய்ந்துவிட்டால் நம்மைச் சுற்றி தோல்வியின் கரையான்கள் கூடு கட்டி விடும். தலைக்கு மேல் வேதனையின் வல்லூறுகள் வட்டமிடவும் துவங்கும்.

நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியது வெற்றிக்கான தேடலின் இன்னொரு தேவை. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் நமக்கான உற்சாகத்தை பல வேளைகளில் வழங்குவதில்லை. பெரும்பாலும் நமது உயர்வுகளுக்குக் குறுக்கே மதில் சுவர் கட்ட முடியுமா என்றே பார்ப்பார்கள்.

எனவே நம்மிடம் இருக்கும் தெளிவான இலக்கும், அதை நோக்கிய பயணத்தில் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்வதும் ரொம்பவே அவசியம்.'வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்பதை உணராமல் பலர் தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு விடுகிறார்கள். இதுவே மிகப்பெரிய தோல்வி' என்கிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

பலரும் வெற்றி பாஸ்ட் புட் போல சட்டென கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனால்தான் ஏழே நாட்களில் வெள்ளையாகலாம், முப்பதே நாட்களில் ஒல்லியாகலாம், மூன்றே மாதத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் எனும் கூக்குரல்களுக்குப் பயங்கர கிராக்கி.

பல்லாயிரம் முறை தோல்வியடைந்தாலும் வெற்றியடையும் வரை ஓடும் வேட்கையே சாதனைகளுக்குத் தேவை. தாமஸ் ஆல்வா எடிசன் அதையே செய்தார்!

கான்ஸ்டண்டைன் காலியாஸ் எனும் கிரீஸ் நாட்டு எழுத்தாளர் 'எ கிளான்ஸ் ஆப் மை லைப்' எனும் நூலைக் கடைசியாக எழுதினார். 169 பக்கங்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட அந்த நூலை அவர் எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 101.

2003-ம் ஆண்டு அவர் இந்த நூலை வெளியிட்டார். அப்போது உலகின் மிக முதிய நூலாசிரியர் இவர் தான்.

ஒருவருடைய வயது, அவருடைய விருப்பத்துக்கும், லட்சியத்துக்கும் இடையே நிற்க முடியாது என்பதை அவருடைய சாதனை எடுத்துக்காட்டுகிறது.

சாதனையாளர்கள் எல்லாம் வெற்றியை ஏதோ சகஜமாக எட்டிப் பிடிக்கவில்லை. அதன் பின்னால் அயராத உழைப்பு உறைந்து கிடக்கிறது. 'செயல்படக் கூடிய சின்ன அறிவு, செயல்படாமல் கிடக்கும் கடலளவு அறிவை விடப் பெரியது' என்கிறார் கலீல் ஜிப்ரான்.

ஐடியாக்களை மனதில் போட்டுப் புதைத்து வைப்பது பயனளிக்காது. அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என்பதையே அவருடைய கருத்து படம் பிடிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுவாமிநாத ஐயருக்கு படிப்பின் மீது அதீத ஆர்வம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் அவர் எம்.பில் பட்டம் பெற்றபோது வயது 84.

உலகிலேயே வயது முதிர்ந்த பின்னர் தத்துவ இயலில் முதுகலைப் பட்டம் பெற்றவரும் இவரே. தனது 83 வது வயதில் அந்த பட்டத்தை அவர் பெற்றார். கல்விக்கும், ஆர்வத்துக்கும், லட்சியத்துக்கும் வயது எப்போதுமே தடையாய் இருப்பதில்லை என்பதையே அவருடைய பட்டங்கள் நமக்கு சத்தியம் பண்ணிச் சொல்கின்றன.

துணிச்சலும் ஆர்வமும் கொண்டவர்களை வெற்றி ஏமாற்றுவதில்லை. தங்கள் சொகுசு வளையத்தை விட்டு வெளியே வருபவர்கள் மட்டுமே அதை விட உன்னதமான இடங்களை அடைய முடியும்.

'வெற்றி என்பது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு' என்கிறார் எழுத்தாளர் ஹென்ரிக் எட்பர்க். வெற்றி பெற வேண்டும் எனும் முடிவை நீங்கள் எடுத்து விட்டால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய முடியாது என்கிறார் அவர்.

கடைசியாக ஒன்று...

வெற்றிக்கான தேடுதல் ஓட்டத்தில் நேர்மை, உண்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை தவற விடாதீர்கள். இல்லையேல் நீங்கள் அடையும் வெற்றி உண்மையான வெற்றியாய் இருப்பதில்லை.

வெற்றிக்கு வயதொன்றும்
தடையல்ல
முயலாமல் முடங்குதல்
விடையல்ல!
சேவியர்

No comments: