Monday, July 18, 2011

இருட்டும், வெளிச்சமும்!


நினைத்தது பலிக்கும்போது, மகிழ்ச்சி யூட்டும் விஷயங்கள் நடக்கும்போது சந்தோஷத்தில் களிக்கும் மனது, கஷ்டங்களில், இடர்பாடுகளில் துவண்டு போகிறது. நல்ல மனநிலையில் நமக்குள் வெளிச்சம் நிரம்பியிருக்கிறது. சோர்ந்து போகும்போதோ மனம் இருண்டுவிடு கிறது. இந்த நிலையை எப்படிச் சமாளிப்பது.

வாழ்க்கையில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். உடல் நலக்குறைவால் அவதிப்படலாம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கலாம். மற்றவர்களுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். ஓர் இருண்ட பாதையில் பயணம் செய்வது போலத் தோன்றலாம்.

ஆனால் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்து விடவில்லை என்பதை உணரவேண்டும். கைவிளக்கு வெளிச்சத்தில் பயணத்தைத் தொடர முடியும். கண்கள் பார்க்கும் சக்தியை இழந்தாலும் உள்ளொளியின் துணையுடன் பயணத்தைத் தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்துபவர்களைக் காணமுடிகிறது.பெரும்பாலும் குகை என்றாலே வெளிச்சத்தைக் காண்பது அரிது. ஒரு குகை, பூமிக்கடியில் தனது முழு வாழ்க்கையையும் இருட்டிலேயே கழித்து வந்தது. அதனால், வெளிச்சம் என்றால் என்னவென்றே அதற்குத் தெரியவில்லை. ஒருநாள் எங்கிருந்தோ ஒரு குரல் குகையை நோக்கி வந்து, சூரியனின் கிரணங்களையும் வெளிச்சத்தையும் கண்டுகளிக்க அழைத்தது. வெளிச்சம் என்றாலே என்னவென்று எனக்குத் தெரியாது என்ற குகை கூறியது.

பின்னர், மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு பூமிக்கு அடியிலிருந்து குகை மேல்நோக்கி வந்தது. மேல்பரப்பில் சூரிய வெளிச்சத்தை பார்த்தவுடன் குகைக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறிதுநேரம் வெளிச்சத்தை அனுபவித்த குகை, சூரிய வெளிச்சத்தைத் தனது வீட்டுக்கு அழைத்தது. தனது வீடு மிகவும் இருட்டாக இருக்கும் என்று குகை கூறியது. சூரிய ஒளிக்கு இருட்டென்றால் என்னவென்று புரியவில்லை. ஏனென்றால் சூரிய ஒளி இருட்டை அதுவரை பார்த்ததே இல்லை. சூரிய ஒளி, குகையின் அழைப்பை ஏற்று அதன் வீட்டிற்கு சென்றது. உள்ளே சென்றவுடன் எங்கே இருட்டு என்று குகையிடம் கேட்டது. ஒளியின் முன்பு இருட்டுக்கு வேலை இல்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருட்டையே அனுபவித்துப் பழகிய குகைக்கு சூரிய ஒளி அறிமுகமானபின்பு வெளிச்சத்தைப் பெறுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆவதில்லை. உடனடியாக வெளிச்சம் இருட்டை அகற்றுகிறது. இதை நாம் நன்கு உணர வேண்டும். அறியாமை என்னும் இருட்டை நிரந்தரமாக அகற்றுவதற்கு அறிவு வெளிச்சமே தேவைப்படுகிறது.

சில நேரங்களில் இடர்பாடுகள் அல்லது பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நமது மனம் சோர்வடைகிறது. அப்போது இருட்டே நமது இயற்கையான அடையாளம் என்று கருதக் கூடாது. நமக்குள் இருக்கும் உள்ளொளி, நற்செயல்களை மேற்கொள்ள நமக்கு வழிகாட்டியாக அமையும் என்பதை உணரவேண்டும்.

அண்ணல் காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தபோது ஒரு ஆங்கிலேயரால் ரெயிலிலிருந்து இறக்கி விடப்பட்டார். அப்போது அவர் சோர்வடையவில்லை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் எது என்று ஆராய்ந்து, சத்தியாக்கிரகியாக தன்னை அடையாளம் கண்டு ஆதிக்க மனப்பான்மை, நிறவெறியை எதிர்த்து அறவழியில் போராடி வெற்றிபெற்றதை நாம் அறிவோம். இன்னல்களையும், தடைகளையும் சந்திக்கும்போது அவற்றைத் தனிநபராக எதிர்கொண்டு வெற்றி பெறுவோர் ஒரு ரகம். தங்கள் அளவில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு, பிறர் நலம் பற்றிக் கருதாமல் வாழ்வோர் இன்னொரு ரகம்.

நாம் ஒவ்வொருவரிடமும் உள்ள அபரிமிதமான ஆற்றலை நன்கு உணர வேண்டும். அனைவருக்கும் ஒளிவெள்ளத்தை வாரி வழங்கும் சூரியன், கிரகணத்தின்போது நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அப்போது சூரியன் தனது ஆற்றலின் மேல் உள்ள நம்பிக்கையை இழப்பதில்லை. உள்ளொளி என்பது கருப்பொருள். அது எப்போதும் அழிவதில்லை. நம்மைச் சுற்றி நாம் காணும் தடைகள் இருளைப் போன்று தோன்றினாலும் அவற்றை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் நம் மனதுக்கு உண்டு என்பதை உணருங்கள்.

நாகார்ஜுனா என்ற தத்துவ அறிஞர் பல்வேறு வகை மாம்பழங்களை உவமையாகச் சொல்லி அதுபோல பலரகப்பட்ட மனிதர்கள் இருப்பதாகக் கூறுகிறார். சிலவகை மாம்பழங்கள் பழுக்காமல் இருக்கும். ஆனால் பார்ப்பதற்குப் பழுத்தது போல தோற்றமளிக்கும். இது முதல் வகை மாம்பழம். இரண்டாவது வகை மாம்பழம் உண்மையிலேயே நன்றாகக் கனிந்து சாப்பிடுவதற்கு ஏற்ற பக்குவமடைந்திருக்கும். ஆனால் அது தோற்றத்தில் காய் போலத் தோற்றமளிக்கும். சில மாம்பழங்கள் பழுக்காமல் இருக்கும், பார்ப்பதற்கும் காயாகவே தோற்றமளிக்கும். இவை மூன்றாவது வகையைச் சார்ந்தவை. நான்காம் வகை மாம்பழம் பார்ப்பதற்கும் பழுத்துக் காணப்படும். உண்மையிலேயே சுவைக்கும்போதும் பக்குவமாக இருக்கும்.

நாம் நான்காவது வகை மாம்பழத்தைப் போன்றவர்களாக இருப்போம். அவ்வாறு இருக்கும் பிறரிடம் உறவு பாராட்டுவோம். அடுத்து மூன்றாவது ரக மாம்பழத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் அது தனது உண்மை நிலையை அப்படியே ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றது. யாரையும் ஏமாற்ற முயற்சிப்பதில்லை. இரண்டாவது வகை மாம்பழம் நன்கு பழுத்துப் பக்குவமாக இருந்தாலும், காயாகத் தோற்றமளிக்கிறது. இத்தகையவர்கள் தங்களது உண்மை நிலையை உணர்ந்தால் திறமையை வெளிப்படுத்தி தானும் பயன்பெற்று, பிறரும் பயன்பெற உதவலாம்.

ஆனால் முதல்வகை மாம்பழம், காகிதப் பூவைப்போல தோற்றத்தில் நன்றாகக் காட்சியளிக்கும். ஆனால் யாருக்கும் பயன்படும் வகையில் பழுக்காமல், வெறும் தோற்றத்தையே கொண்டு இருக்கும். இப்படி பலர் இருப்பதை நாம் அறிவோம். ஆகவே நீங்கள் நான்காவது வகை மாம்பழமாக இருக்காதீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் உள்ளொளி என்பதற்கு 'பவர்கட்' கிடையாது. அக இருள் அகலட்டும். அறிவொளி வீசட்டும். நம்பிக்கை ஒளியால் உங்கள் மனதை நிரப்பிக் கொண்டு பிறருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களாக இளைஞர்களாகிய நீங்கள் திகழ வேண்டும்.
ப. சுரேஷ்குமார்

No comments: