Friday, July 1, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

பிரபஞ்சத்திலுள்ள சகல மொழி திரைப்பட கதாசிரியர்களும் வெளிவர இருக்கும் 'லேரி க்ரவுன்'(larry crowne) ஹாலிவுட் படத்துக்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அத்தனை மொழி எழுத்தாளர்களும் அந்தந்த மொழியிலுள்ள கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பார்கள். சூடம் ஏற்றி அவரவர் குலதெய்வத்தின் முன்னாள் 'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...' என சத்தியம் செய்வார்கள். ஆனால், நம்பத்தான் ஈ, எறும்பு கூட தயாரில்லை.

காரணம், 'லேரி க்ரவுன்' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஜூலியா ராபட்ஸ். இத்தனைக்கும் 44 வயதாகும் இந்த அமெரிக்க நடிகர், கவர்ச்சிக் கன்னியுமல்ல. செக்ஸ் பாமும் அல்ல. அகடமி விருது பெற்ற நடிகை. இவரது கதை அறிவுதான் காரணமா அல்லது இவருக்கு அமைந்த ஏஜென்ட் திறமை சாலியா...?  ஒரு எழவும் புரியவில்லை. ஆனால், ஜூலியா ராபட்ஸ் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் ஒரு கதை இருக்கும். அந்த 'நாட்'டை எந்த மொழி கதாசிரியரும் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப கையாள முடியும். காமெடி ஒன்லைனை ஆக்ஷன் படமாக மாற்றலாம். ஆக்ஷன் கருவை, நகைச்சுவை ஜூகல் பந்தியாக பரிமாறலாம். சுருக்கமாக சொல்வதென்றால் குறைந்தபட்சம் ஒரு சீனையாவது நிச்சயம் சுட முடியும்.

1990 'பிரட்டி வுமன்' படத்தில் ஹீரோயினாக நடித்ததையடுத்து டாப் நடிகைகளில் ஒருவரானார். அப்போது அடிக்க ஆரம்பித்த ஜாக்பாட், இன்றுவரை கதாசிரியர்களுக்கு அடித்துக் கொண்டேயிருக்கிறது. 'மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்', 'மிஸ்டிக் பீஸா', 'ரன் அவே ப்ரைட்', 'வேலன்டைன்ஸ் டே', 'தி பெலிகன் ப்ரீஃப்', 'ஓஷன்ஸ் லெவன்', 'டூவெல்', 'ஸ்லீப்பிங்  வித் எனிமி', 'ஸ்டெப் மாம்', 'தி மெக்சிகன்', 'டூப்ளிசிட்டி' என இவர் நடித்தப் பல படங்கள், உருவாய், மருவாய், இளதாய், ஒளியாய் தமிழ் உட்பட பல மொழிப் படங்களில் ஒழி வீசிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இந்த லிஸ்டில், 'லேரி க்ரவுன்' படமும் இடம்பெறும் என்று திடமாக கதாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கவும் செய்கிறார்கள்.

நடுத்தர வயதுள்ள லேரி க்ரவுன், பிக் பாக்ஸ் ஸ்டோரில் பல்லாண்டுகளாக பணிபுரிபவர். பிக் பாக்ஸ் ஸ்டோர் என்றதும் அது ஏதோவொரு ஸ்டோர் போல என நினைத்துவிட வேண்டாம். பல கிளைகள் கொண்ட, பிரமாண்டமான பரப்பில் விரிந்திருக்கும் சூப்பர் மார்கெட்டைத்தான் இப்படி அழைக்கிறார்கள்.

இதில் டீம் லீடர் அளவுக்கு உயர்ந்த லேரி க்ரவுனுக்கு சுபயோக சுபதினத்தில் வேலை பறிபோகிறது. காரணம், அந்த ஆண்டு அவருக்கு நிர்வாகம் பதவி உயர்வு அளிக்க வேண்டும். அதற்கு அவர் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆனால், லேரி க்ரவுன், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர். எனவே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.

இதனால் மனமுடையும் லேரி க்ரவுன், டிகிரி படிக்க முடிவு செய்கிறார். ஒரு கல்லூரியிலும் அவருக்கு இடம் கிடைக்கிறது. மாணவராக சேருகிறார். உடன் படிப்பவர்கள் அனைவருமே இளைஞர்கள். லேரி மட்டுமே அரை கிழம். சக மாணவர்களை பார்த்து தனது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைலை மாற்றுகிறார். பழைய ஸ்கூட்டரில் விர்ர்ர்ரென பறக்கிறார். பாடம் நடத்த வரும் ஜூலியா ராபட்ஸை  காதலிக்கிறார். ஜூலியாவுக்கு லேரி மீது ஈர்ப்பு வருகிறது. இருவரும் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறார்கள்.

முடிவு என்ன என்பதை 'லேரி க்ரவுன்' படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இக்கதையின் சாயலில் அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் தமிழ்ப் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

'சேவிங் ப்ரைவேட் ரியான்', 'யூ காட் எ மெயில்', 'டாய் ஸ்டோரி' படத்தின் மூன்று பாகங்கள் 'டாவின்சி கோட்' ஆகிய படங்களில் நடித்த டாம் ஹாங்க்ஸ், இப்படத்தை எழுதி, இயக்கி தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

என்றாலும் இது ஜூலியா ராபட்ஸின் படம் தான், இல்லையா?

    கே.என்.சிவராமன்

No comments: