Friday, June 24, 2011

ஹாலிவுட் டி ரெய்லர்

BAD TEACHER - திரை விமர்சனம்

இருங்கள்... இருங்கள்... இருங்கள்...

எதற்காக அவசரப்படுகிறீர்கள்? இது ஹாலிவுட் படம்தான். படத்தின் பெயரும் 'பேட் டீச்சர்' தான். கதாநாயகியாக நடித்திருப்பவரும் கனவுக்கன்னியான கேமரூன் டயஸ்தான். ஆனால், இது 'அந்த' மாதிரியான படமல்ல.

என்ன செய்ய...? இத்தனைக்கும் டாப் டென் கிசுகிசுக்களில் ஒன்றாக மதிக்கப்படும் அளவுக்கு டேட்டிங் செய்தவர்கள்தான் கேமரூன் டயஸும், ஜஸ்டின் டிம்பர்லேக்கும். இருவரும் ஈஷிக் கொண்டு ஊர் சுற்றியதை சூடேறும் அளவுக்கு அச்சு ஊடகங்கள் பிரசுரித்து கல்லா கட்டியிருக்கின்றன. ஆனால், யார் கண் பட்டதோ... சுபயோக சுப முகூர்த்தத்தில் இவர்கள் உறவு 'புட்டுக்' கொண்டது.

அதன் பிறகு இருவரும் தனித்தனியே பலருடன் சுற்றியிருக்கிறார்கள், கிசுகிசுக்கப்படுகிறார்கள். பாப் உலகின் முடிசூடா ராணியான பிரிட்னி ஸ்பியர்சில் ஆரம்பித்து மடோனா வரை ஜஸ்டின் டிம்பர்லேக் டேட்டிங் செய்தவர்களின் பட்டியலை ஒன்றுவிடாமல் வெளியிட்டால், இந்தப் பக்கமே மஞ்சள் பத்திரிகையின் பக்கமாகிவிடும்.

கேமரூன் மட்டும் 'இந்த' விஷயத்தில் சளைத்தவரா என்ன? நேற்று அறிமுகமான ஹாலிவுட் ஹீரோ முதல், கிழடு தட்டிப் போன அந்தக் கால நடிகர் வரை அனைவருடனும் இணைத்து பேசப்பட்டவர் - பேசபடுகிறவர் அல்லவா அவர்?

இப்படிப்பட்ட பல காதல் பராக்கிரமங்களைக் கொண்ட இருவரும் ஒரு இடைவெளிக்கு பின், இந்த 'பேட் டீச்சரில்' ல் இணைந்து நடித்திருக்கிறார்கள்... இவர்களை மனதில் வைத்தே பல நெருக்கமான காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார்கள் என்னும் பொது ஒரு மாதிரியான சீன்ஸை எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனால், இது 'அந்த' மாதிரியான படமல்ல. பக்கா நகைச்சுவைப்படம்.

ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கேமரூன் டயஸ், பரம ஏழை. செய்யும் தொழிலே தெய்வம் என்பது இவரை பொறுத்தவரை ராங் ஸ்டேட்மெண்ட். இரவு முழுவதும் தண்ணியடிப்பார். பகல் முழுவதும் ஹேங்ஓவரில் அவஸ்தைப்படுவார். போதும் போறாததற்கு போதை மருந்து பழக்கமும் இவருக்கு உண்டு.

யாரவது ஒரு பணக்கார இளைஞரை கரெக்ட் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டுமென்பது இவர் லட்சியம். அதற்கேற்ப கேமரூனின் தந்தையும் ஒரு வசதியான பையனை மாப்பிளையாக தேர்ந்தெடுக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த மாப்பிள்ளை கேமரூனை அவமானப்படுத்தி, நிராகரித்து விடுகிறான்.

இந்த நேரத்தில்தான் பெரும் செல்வந்தரான ஜஸ்டின் டிம்பர்லேக், அதே பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார். ஈரேழு தலைமுறைகளுக்கு தேவையான சொத்து ஜஸ்டின் குடும்பத்திடம் இருக்கிறது என்பதை அறியும் கேமரூன், அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், ஜஸ்டினின் குணம் கேமரூனின் இயல்புக்கு நேர் எதிரானது. ஆசிரியர் தொழிலே உயர்ந்த தொழில் என்பது ஜஸ்டினின் எண்ணம். எனவே தன் குணத்தை மாற்றிக் கொண்டு 'நல்ல' டீச்சராக இருக்க கேமரூன் முயல்கிறார்.

இதற்கிடையில் அதே பள்ளியில் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை ஜஸ்டினை விரும்ப, இன்னொரு ஆசிரியர் கேமரூனை அடையத் துடிக்க... கடைசியில் யாருடன் யார் இணைந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

'இந்தியானா ஜோன்ஸ்' சீரிஸின் 'ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்', க்ளாஷ் ஆஃ டைட்டன்ஸ்' ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களில் கதாசிரியரான லாரன்ஸ் கஸ்டனின் மகனான ஜேக் கஸ்டன், இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

நகைச்சுவை ததும்பும் இக்கதைக்கு பொருத்தமான திரைக்கதை இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் ஏற்பார்கள். அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். லீ ஈசன்பெர்க்கும், ஜெனி ஸ்டூப்னிஸ்கியும், அமெரிக்க தொலைக்காட்சியில் சக்கைப்போடு போட்ட 'தி ஆபீஸ்' சீரியலின் 2 முதல் 6 வரையிலான பாகங்களும், 'கோஸ்ட்பஸ்டார்ஸ் 3' ம் இவர்களின் எழுத்துவண்ணம் தான். காமெடி கொப்பளிக்க சின்னத்திரையில் அதகளம் செய்தவர்கள், இப்போது பெரிய திரையில் அதே வேலையை இன்னும் ஷார்ப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பு எசகுபிசகாக இருந்தாலும் படம் ஒன்றும் அவ்வளவு 'பேட்' அல்ல.

கே.என்.சிவராமன்

No comments: