Tuesday, June 21, 2011

மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் வெற்றி பெறலாம்!


மற்றவர்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும். அதுபோல மாற்றங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமும் நமது முயற்சிகளில் ஊக்கம் பெற்று சாதனைகள் நிகழ்த்த முடியும்.

ஒவ்வொரு நாளும் வழக்கமாகச் செய்யும் வேலைகளில் ஈடுபடுவது எளிதாக இருக்கும். உதாரணமாக காலையில் எழுந்து புறப்படுவது, உணவு சாப்பிடுவது, வழக்கமான பாதையில் செல்வது... போன்றவற்றை சொல்லலாம்.

இவ்வாறு அன்றாட நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது, நமது மனம், உடல் இயக்கங்கள் அதற்கு பழகிப்போய் இருக்கும். எனவே எந்த தடங்கலும் இன்றி அந்த வழக்கமான காரியங்கள் நடைபெறும்.

எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போதுதான் அவற்றை நாம் சவால் என்று கூறலாம். அன்றாட நிகழ்வுகளை செயல்படுத்த மூளை உடம்பிற்கு கட்டளையிடும்போது அதை நிறைவேற்ற உடம்பு சிரமப்படுவதில்லை. இதைத்தான் நரம்பியல் விஞ்
ஞானம் சார்ந்த அடிப்படைச் செயல்பாடு என்று கூறுகிறோம்.

'இதுபோல சிறப்பான தலைமைப்பண்பு, மக்கள் தொடர்பு மேலாண்மை, உற்பத்தி திறனை மேம்படுத்துதல் போன்றவையும் மனதிற்குள் பதிவு செய்துவிட்டால் அந்தப்பணிகள் நமக்கு இயல்பாகிவிடும்' என்று ஆக்கப்பூர்வமான மாற்றத்தை மனதில் ஏற்படுத்த விரும்பும் வல்லுனர்கள் கருதுகின்றார்கள்.

ஆனால் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.

ஏன் மனித மனம் மாற்றத்தை புறக்கணிக்கின்றது?

மூளை நரம்புகளுக்கு எதெல்லாம் நாளடைவில் பழக்கமாக ஆகிவிடுகின்றதோ அந்த செயல்களை செய்ய அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

கார், சைக்கிள், பைக், என்று எதையும் ஓட்டும்போது முதலில் சிரமமாக இருக்கும். ஆனால் பழக்கமானவுடன் வாகனங்களை இயக்குவது இயல்பாகி விடுகின்றது.

அந்த நடைமுறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அதற்குத்தான் முயற்சி அதிகம் தேவைப்படுகின்றது. அதாவது வழக்கமான பைக் இல்லாமல் வேறு ஒரு தயாரிப்பு பைக் ஓட்ட முற்படும்போது முதலில் கொஞ்சம் சிரமம் வரும். அந்த வாகனத்தை ஓட்டிப்பழகி விட்டால் அதுவும் எளிதாகிவிடும்.

மூளையின் செயல்பாடு, பழக்கங்கள் மூளையில் பதிவாகி நரம்பு மண்டலங்களும் அதற்கேற்ப வலைப்பின்னல் போல உருவாகிவிடும். அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அது சாதாரணமான காரியம் கிடையாது.

நன்றாக படிப்பது, படிக்காமல் இருப்பது, நன்றாக வேலை செய்வது, பணியில் ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்றவற்றில் நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர வேண்டுமென்றால், மனதின் போக்கை சரியாகப் புரிந்துகொண்டு அடித்தளத்திலிருந்தே மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் மூளை நரம்புகளை செயல்படச் செய்யவேண்டும்.

மனித மூளை சுதந்திரமாக செயல்பட பழக்கவேண்டும். அதே சமயம் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருந்தாலும் மனித மூளை எதையும் தனக்கு சாதகமாக நியாயப்படுத்த துவங்கிவிடும்.

சமீபத்தில் சிலி நாட்டில் சுரங்கத்தில் தவறி மாட்டிக் கொண்ட 33 பேர் தங்களது மனது, உடம்பு, மூளையின் செயல்பாடு போன்றவற்றை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொண்ட பிறகுதான் பிரச்சினையை எதிர்கொண்டு உயிர் பிழைக்க முடிந்தது.

உடம்பில் உள்ள சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகளின் சுரக்கும் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவையே மனது, உடம்பு போன்றவற்றை தயார்படுத்தி ஒருவித பாதுகாப்பு வளையத்தை மனதில் ஏற்படுத்துகின்றது.

உடல் நலம் குன்றியவர்களுக்கும் மனதில் நம்பிக்கை ஏற்படும்போது மாற்றம் வருகிறது. அதற்கேற்ப உடம்பிற்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது.

எண்ணங்கள்தான் மனித மூளையில் உரிய கட்டளையைப் பெற்று செயல்படுத்துவதற்கான ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எரிக் ப்ராம் என்ற உளவியல் வல்லுனர் தனது 'நம்பிக்கை புரட்சி' என்ற நூலில், 'நம்பிக்கைதான் ஒரு மனிதனின் செயல்பாட்டில் ஏற்புடைய மாற்றத்தை ஏற்படுத்த காரணமாகிறது' என்கின்றார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை அடைவது சாத்தியம் என்று நம்புபவர்கள்தான் வெற்றிப்பயணத்தை மேற் கொள்கின்றார்கள்.

அன்றாடம் உறங்குவதும், 'மீண்டும் விழித்து விடுவோம்' என்ற நம்பிக்கையின் தொடர்ச்சிதான்.

ஒவ்வொரு செயலுமே அடுத்த செயலுடன் இணைவதற்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கையே. ஒருவர் மனதில் நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் மாற்றம் தன்னால் நிகழும்.

முதன்முதலில் எவரெஸ்ட் உச்சியை எட்டி சாதனை புரிந்த டென்சிங்கின் மகன் ஜம்லிங் டென்சிங். இவரும் தனது தந்தையைப் போல உலகின் மிக உயர்ந்த சிகரத்தை சிலமுறை அடைந்து சாதனை ஏற்படுத்தியவர். இவர் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது தனது அனுபவத்தைக் கூறி, 'முயன்றால் முடியாதது எதுவும் இல்லை' என்று எடுத்துரைத்தார்.

இதை அனைவரும் கவனமாகக் கேட்டு, தமது பணிகளில் சாதனை புரிய வேண்டும் என்று செயல்படத் தொடங்கி விட்டனர். சாதனை புரிந்தவர்கள் உண்மை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது அதை கேட்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகின்றது.

விளையாட்டு வீரர்களிடமும் குழு உணர்வு, கட்டுப்பாடு, கடினஉழைப்பு, அக்கறை, வெற்றிபெற்று சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற துடிப்பு இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து, ஸ்டீவ் வாக் போன்றவர்களையும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அழைத்து, தங்களது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி அளித்து எவ்வாறு உற்பத்தியை அதிகரித்தல், வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுதல் போன்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த ஊக்கப்படுத்துகின்றன.

வயதும், அனுபவமும் குறைந்த நிலையில் சிலருக்கு உயர் பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது கடினம். இதே சூழல் விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்படும். அப்போது எந்த யுக்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவது, குழுவை ஊக்கப்படுத்துவது எவ்வாறு என்பதில் அவர்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும். அதை ஊக்க உரை ஆற்றுபவர்கள், மற்றவர்களிடம் விளக்குகிறார்கள்.

பொதுவாக மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் ஏற்கனவே சாதனை புரிந்தவர்களை அழைத்து அவர்களது அனுபவங்களை கேட்கும் போது நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கையே அவர்கள் மனதில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள் கூறும் போது நம்பகத் தன்மை ஏற்படுகின்றது.

மாற்றத்தை ஏற்றுக் கொண்டு சவால்களை சமாளிக்க இளைஞர்கள் முன்வந்தால் அவர்களது பயணம் வெற்றிப் பாதையை உருவாக்கும். அதில் அடுத்தடுத்து வரும் இளைஞர்களும் பயணம் செய்து வெற்றியை தங்களது அனுபவமாக்கிக் கொள்ளலாம். அத்தகைய சாதனையாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா மாறும்போது நமது மனித மூலதனம் பலரின் நன்மைக்கு அடித்தளம் வகுக்கும்.

ப. சுரேஷ்குமார்

No comments: