Friday, June 17, 2011

ஹாலிவுட் டிரெய்லர்

கைச்சுவை கதைதான். ஆனால், 'நகைகளை' விட பாதுகாப்பானது. பாடப்புத்தகமாக இருப்பதுதான். ஆனால், இறுதிவரை வாழ்க்கைப் பாடத்துக்கு உதவக் கூடியது.

அதுதான் 'மிஸ்டர். பாப்பர்ஸ் பென்குயின்ஸ்' கதையின் சுவாரசியம் அல்லது ஹைலைட். 1938ல் வெளியான இந்த சிறுவர் புத்தகத்தை எழுதியவர்கள் ரிச்சர்ட் மற்றும் ஃ ப்ளோரன்ஸ் அட்வாட்டர் ஆகிய இருவர். வெளியான காலம் முதலே பலத்த வர வேற்பை பெற்று வந்த - வரும் இந்நாவல், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பாடமாக இருக்கிறது. காரணம், இந்த நாவல் எந்தளவு சிறுவர்களுக்கான கதையாக இருக்கிறதோ, அந்தளவுக்கு பெரியவர்களுக்கான வாழ்க்கை தத்துவமாகவும் மதிக்கப்படுகிறது. அதனாலேயே தலைமுறைகளை கடந்தும் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் அச்சாகிக் கொண்டேயிருக்கிறது.

இப்படிப்பட்ட அட்சய பாத்திரத்தை, பிரபலமான அனைத்தையும் படமாக எடுத்து கல்லா கட்டி வரும் ஹாலிவுட் பயன்படுத்தாமல் இருக்குமா? இதோ, ஜான் டேவிஸ், ஜோர்டான் கேர்னர் தயாரிக்க, டிவேன்டியத் சென்சுரி ஃபாஸ் உலகெங்கும் வெளியிட, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது 'மிஸ்டர்.பாபர்ஸ் பென்குயின்ஸ்' ஹாலிவுட் திரைப்படம்.

பாப்பர், ஒரு சாதாரண பெயின்டர். பரம ஏழை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான். உலகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது அவன் ஆசை. எந்நேரமும் எதையாவது படித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதாவது ரேடியோ கேட்பான்.

அப்படி ஒருநாள் வானொலியுடன் பொழுதை போக்கிக் கொண்டிருந்தபோது, அண்டார்டிகாவிலுள்ள பென்குயின் குறித்து அறிவிப்பாளர் சொல்வதை கேட்கிறான். அத்தகவல்கள் அவனை ஈர்க்கவே, அவருடன் தொலை பேசியில் தொடர்பு கொள்கிறான். உடனே அந்த அறிவிப்பாளர் அவனுக்கு ஒரு பரிசு தருவதாக சொல்கிறார். சொன்னபடியே சில நாட்களில் அவனைத் தேடி ஓர் அட்டைப் பெட்டி வருகிறது. பிரித்தால், அதனுள் அழகான ஒரு பென்குயின். சந்தோஷத்துடன் தன் வீட்டு குளிர்சாதனப் பெட்டியை காலி செய்து, அதனுள் அந்த பென்குயினை வைத்து வளர்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் குளிர்சாதன பெட்டியையும் மீறி அந்த பென்குயின் வளர்ந்துவிடுகிறது.

எனவே மீண்டும் அந்த அறிவிப்பாளரை தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்குகிறான். அதற்கு அவர், 'உங்களிடம் வந்த ஆண் பென்குயின், தன் இணையை தேடுகிறது. எனவே பெண், பென்குயினை உங்களுக்கு அனுப்புகிறேன். எல்லாம் சரியாகிவ்டயும்...' என்கிறார். பெண் இணையும் வருகிறது.

இப்போது இரண்டு பென்குயிங்களையும் பராமரிக்கும் பொறுப்பு அவன் தலையில் விழுகிறது. சிரமப்பட்டு வீட்டையே குளிராக்கி அவைகளை பராமரிக்கிறான். ஆனால், இரண்டும் இணைந்து கிட்டத்தட்ட 10 குட்டிகள் வரை போட்டதும். அவன் நிலை திண்டாட்டமாகிறது. வேறு வழியின்றி குடியிருந்த வீட்டையே அவைகளிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்துடன் மாடியில் தங்க ஆரம்பிக்கிறான்.

இதைப் பார்த்து வீட்டின் உரிமையாளர் அவனை காலி செய்யச் சொல்கிறார். குடும்பத்தை பராமரிக்கவும், இருக்கும் 12 பென்குயின்களை காப்பாற்றவும் சர்க்கஸ் நடத்தலாம் என்று தீர்மானிக்கிறான். அதற்காக பென்குயிங்களையும் பழக்குகிறான். ஆனால், நிகழ்ச்சி நடக்கும்போது அனைத்தும் தப்புத் தப்பாகி அவன் சிறைபடுகிறான். நீதிபதி அவன் மீது கருணை கொண்டு விடுவிக்கிறார். இறுதியில் தன்னிடம் இருக்கும் அனைத்து பென்குயிங்களையும் அழைத்துக் கொண்டு ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு பயணம் செய்கிறான்.

இதுதான் நாவலின் கதை. இதை ஆங்காங்கே சினிமாவுக்கு ஏற்றபடி சீன் ஆன்ட்ரஸ் தலைமையிலான மூவர் அணி, டிங்கரிங் செய்து திரைக்கதை அமைத்திருக்கிறது. மார்க் வாட்டர்ஸ் இயக்கியிருக்கிறார். பாப்பராக நடித்திருப்பவர், ஜிம் கேரி.

உண்மைதான். சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் ஏற்ற படம், 'மிஸ்டர். பாப்பர்ஸ் பென்குயின்ஸ்' தான். சந்தேகமில்லை.

கே.என்.சிவராமன்

No comments: