Thursday, June 16, 2011

எல்லா தேச உடம்புகளிலும் இருட்டறைகள்

'சிங்கத்துக்கென வரலாற்றாசிரியர்கள் இல்லாதவரை, வேட்டை பற்றிய வரலாறு என்பது வேட்டை ஆடியவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதுதான் உண்மை' என்றொரு ஆபிரிக்கப் பழமொழி இருக்கிறது. உண்மைதான், இதுகாலவரை ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பதாகத்தான் இருந்திருக்கிறது. வரலாறு என்பது ஆண்களினுடையதாகவும் உயர்குடிகளினுடையதாகவும்தான் அமைந்திருக்கிறது. “பிறப்பால் ஒடுக்கப்படுகிறவர்களாக தலித்துக்களும் பெண்களுமே தவிர வேறு யாரும் இல்லை எனலாம்” என்கிறார் ராஜ் கௌதமன்.

நிறத்தினடிப்படையிலும் மனிதர்கள் இழிவுபடுத்தப்பட்ட போது, “உங்களது கறுப்புத் தோலை உடலை மூடும் ஒரு அங்கியைப் போல் அணியாதீர்கள். அதனை ஒரு போர்க்கொடியைப் போல் உயர்த்திப் பிடியுங்கள்” என்று முழங்கினார் அமெரிக்கக் கறுப்பினக் கவிஞரான லோங்ஸ்டன் ஹியூஸ். “அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மைக்கு எந்த விளக்கமும் தேவையில்லை” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.
மனிதர்களை வேறு வேறாகவும், மேல் கீழாகவும் பாகுபடுத்தும்போதே அது இழிவுபடுத்தலாக மட்டுமில்லாமல், இருப்பையே நிராகரிக்கும் அழித்தொழிப்பாகவும் மாறுகிறது. “உலகத்தில் முளைக்கும் எல்லா சச்சரவுகளுக்கும், பகைக்கும் மூலகாரணம் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரைவிடத் தாம் மேம்பட்டவர் என்று நினைப்பதுதான்” என்கிறார் அமார்த்தியா சென்.

ஏதோ ஒரு பற்றின் அபிமானத்தின் அடிப்படையில் மனிதர்களை ஒரு குழுவாகத் திரட்டுவதும், ஏனையவர்களை எதிரிகளாக வெளியே நிறுத்துவதும், வலியவர்கள் எளியவர்களின் வாழ்வு நியாயத்தை மறுப்பதுமாகவே நம் காலத்திய அரசியல் இருக்கிறது. சார்ளி சப்ளின் ஒரு பத்திரிகை அறிக்கையில் சொன்னார்: “நான் தேசப் பற்றில்லாதவன் என்று சொல்வது அறிவுபூர்வமான, தரிசனமான காரணங்களால் அல்ல. தேசபக்தி என்ற பெயரில் சகமனிதர்களைக் கொன்று குவிப்பதை எப்படிச் சகித்துக் கொள்ள முடியும்? அறுபது லட்சம் யூதர்களை ஜெர்மானியர்கள் கொன்று குவித்தார்கள். அது ஜெர்மனியில்தானே என்று சிலர் கேட்கிறார்கள். இருக்கலாம். ஆனால் இனவதையென்னும் இருட்டறைகள் எல்லா தேச உடம்புகளிலும் உறங்கிக் கிடக்கின்றன....

நான் வாழ்ந்த காலம் முழுவதும் நீங்களும் வாழ்ந்து பார்த்தால் உங்களுக்கும் புரியும், எல்லா அரசியலும் முட்டாள்தனமானது, சிறுபிள்ளைத்தனமானது.”

பெண் என்ற வகையிலும் சாதி ரீதியாகவும் மிக மோசமான ஒடுக்குமுறை நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. மற்றவர்களுடன் அவர்களும் சமம் என்று சொல்லக்கூட முடியாத நிலை இருப்பதும் நிதர்சனமே. இவற்றை அலட்சியப்படுத்திவிட்டு அல்லது கண்டுகொள்ளாமல் வேறு விடுதலைகள் பற்றிப் பேசுவதில் ஒருவித மேட்டிமைத்தனம் இருப்பதை இன்று பலரும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா இப்படிச் செல்கிறார்: “தமிழன் என்கிற பொது அடையாளத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? தமிழன் என்கிற பொது அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி மற்ற அடையாளங்களைத் துறப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் கிடையாது. ஏனெனில், எனக்கு ‘தீண்டத்தகாத சாதி’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதைத் துறப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ‘நீங்களும் அதே மாதிரி துறக்கத் தயாராக இருக்கிறீர்களா’ என்பதுதான் கேள்வி. உங்களுக்கு ‘தமிழன்’ என்ற அடையாளத்தைத் தவிர தொடத்தக்க ஜாதி, ஆண் போன்ற மீதி அடையாளங்கள் முக்கியமாக இருக்கின்றன. அதிகாரமிக்க உனது அடையாளங்களை நீ துறக்கத் தயாராக இருந்தால், தமிழன் என்கிற பொதுக்குடையின் கீழ் ஒன்றுபடுவதற்கு எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.”

அழகியல் என்று வரும்போது கூட, ஒடுக்குகிறவர்களின் அழகியல் வேறாகவும் ஒடுக்கப்படுபவர்களின் அழகியல் வேறாகவுமேதான் இருக்கிறது. இன்னொரு விதத்தில் பார்த்தால், அழகியல் ரீதியாகவும் ஒடுக்குதல் நிகழ்கிறது. சாதாரண பேச்சு நடைமுறைகளில் கூட, நயமாகவும் நாசூக்காகவும் பேசுவதை  மேம்பட்டவர்களின் நடைமுறையாகவும், உரத்தும் கொச்சையாகவும் பேசுவதை கீழானவர்களின் செயலாகவும் பார்ப்பது கூட ஒருவகையில் இத்தகைய விலக்குதல்தான். விழி. பா.இதயவேந்தன் சொல்கிறார்: “அழகியல் என்பது ஒரு மாயை. தலித்களின் அழுக்கு, துர்நாற்றம், கவிச்சி நாத்தம்தான் தலித் அழகியல். இதுகாறும் கற்பிக்கப்பட்ட அழகியலுக்கு நேர் எதிர்மறையானது இது. ஒடுக்கப்படும் ஆபிரிக்க கறுப்பனுக்கும், நசுக்கப்படும் இந்திய தலித்துக்கும் பிரச்சினை ஒன்றுதான். அது சமூக நிராகரிப்பு. அதுமட்டுமல்ல.... சாக்கடை அள்ளுபவன், பீ வாருபவன், செப்டிக் டேங்க் சுத்தம் செய்பவனிடமிருந்து சந்தன வாசம் வருமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.”

உயர்சாதியினர் கற்றுத்தந்த புனிதம் நிரம்பிய பண்பாட்டு முறைக்கு எதிராக தலித்தியம் தன் பண்பாட்டைக் கலகத்தோடு முன்வைப்பதைக் கடமையாகக் கருதுகிறது. ஒரு மிருகத்தைக் கூடத் தொடலாம். ஆனால் தீண்டத்தகாதவனைத் தொடக்கூடாது என்றுதான் மிகச் சமீப காலத்திலும் இருந்திருக்கிறது நிலைமை. ஆதவன் தீட்சண்யா இதையும் கோபத்தோடு குறிக்கிறார்: “நான் சைவம், நான் அசைவம் என்று உணவில் வேறுபடுவது தொடங்கி உடை, உணர்வுகள் அனைத்தையும் சாதிதான் தீர்மானிக்கிறது. நல்ல குடும்பம் என்கிற நம் வரையறையே அப்படித்தானே இருக்கிறது…. உண்பது, வாழ்வது, உணர்வது தொடங்கி நான் இன்று உண்டதை நாளை ஒருவன் அள்ளுவான் என்பது வரைக்கும் சாதிதானே தீர்மானிக்கிறது? இறந்த பிறகு எரிப்பதா, புதைப்பதா? எந்த சாதிக்காரன் குழி வெட்டுவது என்பதையும் அதே சாதிதான் தீர்மானிக்கிறது…. ‘நான் ஒடுக்குகிற சாதியில் பிறந்திருக்கிறேன், நான் பெண்ணை ஒடுக்குகிற ஆணாக இருக்கிறேன். இதுகுறித்து நான் குற்றவுணர்ச்சி கொள்கிறேன்’ என்பது மாதிரியான எந்த எழுத்தும் இதுவரை வரவில்லை.”

பிரபல கன்னட எழுத்தாளர் சித்தலிங்கய்யா நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பது இது: “ஒரு காட்டுக்குள் இருக்கிற கடவுளைப் பார்ப்பதற்காக ஒருவன் என்னை அழைத்துச் சென்றான். அங்கு போனால் ஒரு சின்ன கல், சுற்றிலும் மரம், செடி அவ்வளவுதான். இதுதான் கடவுள் என்றான். கோயில் எதுவும் கட்டவில்லையா என்று கேட்டேன். கோயில் கட்டத் தமக்கும் ஆசைதான் என்றும், கட்டுவதற்கு ஏதேனும் முயற்சி எடுக்கும் போதெல்லாம் யார் மேலாவது சாமி வந்து கோயில் கட்டக் கூடாது என்று கடவுளே சொல்லிவிடுவதாகவும் சொன்னான். சாமிவந்து ஆடுபவனிடம் ‘ஏன் கோயில் வேண்டாம்’ என்று கேட்கும்போது, ‘உங்கள் எல்லோருக்கும் வீடு இருக்கிறதா’ என்று கேட்டதாம். அப்போது யாரோ ஒருவன் ‘எனக்கு இல்லை’ என்றானாம். ‘அப்படியென்றால் எனக்கும் வேண்டாம். உங்களுக்கு இருக்க இடமில்லாத போது எனக்கு எதற்கு?’ என்று கேட்டதாம் சாமி.”
இப்படி நடந்திருக்குமென்பது உண்மையோ பொய்யோ, இத்தகைய கடவுள்தான் உண்மையில் கடவுளாக இருக்க முடியும். எல்லோருடைய சுக, துக்கங்கள் மேல் அக்கறையுள்ளதாகத்தானே கடவுள் இருக்க முடியும்?

1 comment:

சார்வாகன் said...

அருமை நண்பரே,
//இப்படி நடந்திருக்குமென்பது உண்மையோ பொய்யோ, இத்தகைய கடவுள்தான் உண்மையில் கடவுளாக இருக்க முடியும். எல்லோருடைய சுக, துக்கங்கள் மேல் அக்கறையுள்ளதாகத்தானே கடவுள் இருக்க முடியும்?//

ஒடுக்குவது குறித்த குற்ற உணர்ச்சி இல்லாதவரை ஒடுக்குதல் இருக்கவே செய்யும்.
நன்றி