Tuesday, June 14, 2011

நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்

வாழ்க்கை லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்றால் நாம் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்பட வேண்டும். இதுபற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்...

மெதுவாக நிதானமாக ஒவ்வொரு அடி எடுத்து வைத்து பயணத்தை தொடர்ந்தால் அடையவேண்டிய இலக்கை அடைய முடியும்.

எந்த ஒரு காரியமும், நினைத்த உடன் நடக்க வேண்டும் என்று கருதி இன்று பலர் குறுக்கு வழியில், குறுகிய கால அவகாசத்தில் முன்னேற முயற்சிப்பது இயல்பிற்கு முரண்பட்ட ஒன்றாகும்.

சிந்தனை, செயல் ஆகிய ஒவ்வொன்றிலும் வேகம் அவசியம்தான். ஆனால் எந்தளவிற்கு காலம் கருதி செயல்பட வேண்டும் என்ற விவேகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பூவாகி, காயாகி, கனியாவது போன்ற நிகழ்விற்கு கால அவகாசம் வேண்டும். அதே போல ஆரோக்கியமாக குழந்தை பெற வேண்டும் என்றால், ஒன்பது மாதம் பத்துநாட்கள் காத்திருப்பது போன்றவை ஒரு தாயின் கடமையாகும்.

உடம்பின் வலிமையை அதிகப்படுத்த வேண்டும், குறுகிய கால அவகாசத்தில் அதிக எடையை தூக்கி சாதனை புரிய வேண்டும் என்றெல்லாம் கருதி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தில் தான் முடியும். படிப்படியாகத்தான் உடற்பயிற்சி செய்து பழக வேண்டும்.

இதையே வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்...

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.


குறைந்த எடை தான் இருக்கிறது என்று நினைத்து, மயில் தோகையை அளவுக்கு அதிகமாக ஒரு வண்டியில் ஏற்றினால் அதன் அச்சாணி முறிந்து விடும் என்பது இதன் சுருக்கமான பொருளாகும்.

வாழ்க்கையில் சோகமான விஷயம் என்று ஒன்று உண்டென்றால் அது சுமந்து கொண்டு இருக்கும் கனவை நடைமுறைப் படுத்தாமல் இருப்பதுதான். பலரது வாழ்க்கையில் மனதில் தோன்றும் கனவை கடைசிவரை நிறைவேற்ற முடியாமலே உயிரை விடும் நிகழ்வு என்பது தான் மிகப் பெரிய தோல்வி என்று கூற வேண்டும். அது உங்கள் வாழ்க்கையில் நிகழாமல் தடுக்க உங்களால் மட்டுமே முடியும்.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொன்றும் சரி, நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு உபகரணமும் சரி, நீங்கள் அன்றாடம் படிக்க, எழுத பயன்படுத்தும் மேசை, நாற்காலி என்று எதை எடுத்தாலும் அதற்கு பின்னனியாக இருப்பது உங்களது எண்ணங்கள் தான்.

பிரபல கார் தயாரிப்பாளரான ஹென்றி போர்டு வித்தியாசமாக சிந்தித்தார். அதாவது, ஒவ்வொரு வீட்டின் போர்ட்டிகோவிலும் நிறுத்தும் கார், தனது போர்டு நிறுவனத்தின் தயாரிப்பு காராக இருக்க வேண்டும் என்று எண்ணினார். இந்த எண்ணம்தான் நிஜமான அனுபவமாக மாறியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கணினி என்பது முதலில் கருத்தாக இருந்தது. ஆனால் இன்று அனைவரின் அனுபவப் பொருளாக உள்ளது.

ஒவ்வொன்றும் முதலில் ஒரு சிறிய எண்ணமாகத் தான் மனதில் தோன்றுகிறது. எப்போதுமே செயல்களுக்கு ஆதாரமாக இருப்பது மனதில் தோன்றும் எண்ணங்கள் தான்.

ஒருவிதமாக பார்த்தால் நமது உலகம் எண்ணங்களாலும், வார்த்தைகளாலும் நிரம்பிய ஒன்றே ஆகும்.

எண்ணங்களுக்கும் செயல்பாட்டிற்கும் நடுவே பெரிய இடைவெளி இருப்பதை நாம் உணர முடிகிறது. இடைவெளி குறையும் போது எண்ணுவதை செயல்படுத்த முடிகிறது. ஆனால் பலரால் அந்த இடைவெளியை குறைக்க முடிவதில்லை.

----------------------------------------------------------

பயிற்சி தரும் வெற்றி...

மிலோ என்பவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் என்றும், பித்தாகோரஸ் என்ற கணிதமேதையின் சமகாலத்தவர் என்றும் அறியப்படுகின்றது. மிலோ என்பவர் தனது உடல் வலிமையை சிறிய வயதிலிருந்தே படிப்படியாக பெருக்கிக் கொண்டு ஒலிம்பிக் மைதானத்தில் ஆறுமுறை வெற்றிக் கனியை பறித்தவர் என்று கூறப்படுகின்றது.

அவரது தந்தை அவரை சின்னவயதிலிருந்தே ஒரு சிறிய கன்றுக் குட்டியை தூக்கிக் கொண்டு நடக்க பழக்கினார். தொடர்ந்து இப்பயிற்சியை மிலோ செய்து வந்தார்.

சிறிய கன்று வளர்ந்து பெரிய காளையாக மாறியது. அப்போதும் மிலோ அந்தக் காளையை எளிதாகத் தூக்கிக் கொண்டு ஒலிம்பிக் மைதானத்தை சுற்றி வந்ததாகக் கூறப்படுகின்றது.

அவரது தந்தை அவரை படிப்படியாக இந்த சாதனையை மேற்கொள்ள பழக்கப்படுத்தியதே இதற்கு காரணம்.

கன்றும் வளர்ந்தது. மிலோவும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து தன் பலத்தை அதிகரித்த வண்ணம் இருந்தார். தினமும் கன்றுக் குட்டியை தூக்கிப் பழகியதால் அவரது மனதில் கன்றுக் குட்டி காளையாக வளர்ந்த பின்பும் தூக்குவது கடினமாகத் தெரியவில்லை.

இது கிரேக்க நாட்டு உண்மைச் சம்பவமா! அல்லது கற்பனை கதையா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அது உணர்த்துவது என்ன வென்றால் படிப்படியாக உரிய கால அவகாசத்துடன் பயிற்சி மேற்கொள்ளும் போது நம்மையும் அறியாமலே அரிய சாதனையை இயல்பான உணர்வுடன் நிகழ்த்த முடியும் என்பதே ஆகும்.

நன்கு வளர்ந்த காளை மாட்டை நன்கு வளர்ந்த மிலோ எத்தனை நாட்கள் பயிற்சி எடுத்தாலும் தூக்குவது கடினம்.

சின்ன வயதிலிருந்தே, அதாவது கன்றாக இருந்து காளையாகும் வரை அதை தூக்கிய மிலோவிற்கு அதன் வளர்ச்சி தெரியவில்லை. மெதுவாக நிதானமாக காலத்தையும் கருத்தில் கொண்டு முயற்சி மேற்க் கொண்டதால் தான் மிலோவாய் வெற்றி பெற முடிந்தது.

---------------------------------------------------------

தினமும் சிறிய சிறிய செயல்களை தொடர்ந்து செய்யப் பழகும் போதுதான் கனவுகள், எண்ணங்கள் போன்றவை மெய்ப்படுகின்றது.

சில நேரங்களில் நம்மில் பலரது மனதில் தோன்றிய எண்ணங்கள் நாம் நடைமுறைப்படுத்த தவறி இருப்போம். ஆனால் மற்றொருவர் அதே எண்ணத்தை மனதில் தோன்றியவுடன் அமுல்படுத்தி வெற்றிகாணும் போதுதான் நாம் ஏன் அவ்வாறு செய்ய முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற வருத்தம் தோன்றுகின்றது. இது நம்மில் பலரின் அன்றாட அனுபவம்தான்.

எண்ணங்களையும், கனவுகளையும் நிஜமாக்க, நாம் செய்ய வேண்டிய வேலைகளை முதல்நாள் மாலையே தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாள் காலையில் தீர்மானித்ததை நிறைவேற்ற உத்திகளை வகுப்பது.

வாழ்வில் சிறந்து விளங்கிய பல தலைவர்கள் இவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தியதன் விளைவு தான் அவர்கள் வெற்றியாளர்களாக நிகழ்ந்தது.

எது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகின்றீர்களோ அதை முதன்மைப்படுத்தி உங்கள் செயல்களை அதற்கேற்ப மேற்க்கொள்ளுங்கள்.

நீங்கள் செயல்படுத்த வேண்டியதை உங்களது மேஜை, குளிக்கும் அறையிலுள்ள கண்ணாடி என்று உங்கள் கண்களில் படும்படி பட்டியலிட்டு அதை கருத்தில் கொண்டு செயல்பட பழகுங்கள்.

ஒவ்வொரு நாள் என்பது வினாடிகள், நிமிடங்களை உள்ளடக்கியதே. கால அவகாசத்திற்கேற்ப செயல்களை தேர்ந்தெடுத்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள். அடுத்து என்ன செய்யவேண்டும்? என்று ஒவ்வொரு செயல்பாடும் முடிந்தவுடன் அடுத்த முயற்சியை உடனே தொடருங்கள்.

ரோமாபுரி நகரம் ஒரே நாளில் உருவாக்கப்படவில்லை. அதுபோல ஆயிரம் மைல்கள் நடந்து செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டுமென்றால் முதல் அடி எடுத்து வைத்தால் தான் அது சாத்தியம்.

சிறிய செயல்களை அவ்வப்போது தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் ஒரே நாளில் பெரிய சாதனையை நிகழ்த்த முடியாது.

வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர்கள் ஒவ்வொரு நாளையும் முக்கியமான நாளாக கருதி ஒவ்வொரு சிறிய செயல்பாட்டிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களே ஆகும். முயற்சி மேற்கொண்டு செயல்படுத்தியதால் அவர்களது கனவுகள் மெய்யாக மாறியது.

நீங்களும் சிறிய செயல்களாக ஒவ்வொரு நாளும் செய்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போனால் உங்கள் செயல்கள் விண்ணில் மின்னும் நட்சத்திரங்களை தொட்டுவிடும்.
ப.சுரேஷ்குமார்

No comments: