Saturday, June 4, 2011

எல்லாரையும் போல நானும்...


நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும்.

முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும் ஆடுகளுக்கு வழிகாட்டும். முன்னால் செல்லும் ஆடுகள் குப்பையில் இறங்கினால் பின்னால் போகும் ஆடுகளும் குப்பையில் இறங்கும். முன்னால் செல்லும் ஆடுகள் ஓடினால் பின்னால் வருபவையும் ஓடும், நின்றால் நிற்கும். முன்னால் செல்லும் ஆடுகள் தான் பின்னால் வரும் ஆடுகளின் போக்கை நிர்ணயிக்கின்றன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த சமாச்சாரம்.

இப்போது அமைதியாக நம்முடைய வாழ்க்கையைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்ப்போம். நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது? நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்கிறோமா? இல்லை, நமக்கு முன்னால் செல்லும் யாரோ நிர்ணயிக்கிறார்களா?

நிதானமாக யோசித்தால் தெரியவரும் பல விஷயங்கள் நமக்கே வியப்பாக இருக்கும்.

"எல்லாரும் சொல்றாங்க'' என்பதனால் தான் எதைப் படிக்க வேண்டும் என முடிவு செய்திருப்போம். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதனால் தான் எங்கே முதலீடு செய்வது என்பதை முடிவு செய்திருப்போம். நமது வீடு, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு, லட்சியம் என பல இடங்களில் முன்னால் செல்லும் மக்களுடைய சுவடுகளைத் தான் நாம் பின்பற்றியிருப்போம். அப்படித்தானே?

பெரிய பெரிய விஷயங்கள் என்றில்லை. தினசரி வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கூட இப்படித்தான் நடக்கிறது. அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும். அதில் விவாதிக்கப்படும் விஷயம் நமக்கு சுத்தமாய் உடன்பாடில்லாததாய் இருக்கும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் தலையாட்டினால் நாமும் தலையாட்டுகிறோமா, இல்லையா?

திடீரென புதிய ஒரு ஃபேஷன் டிரஸ் சந்தைக்கு வரும். பார்த்தால் கண்றாவியாய் இருக்கும். அல்லது கற்காலத்திலேயே தூக்கிப் போட்ட ஒரு பழைய ஃபேஷனின் புதிய வடிவமாய் இருக்கும்.

உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காது, ஒதுக்குவீர்கள். ஆனால், அங்கும் இங்குமாக அந்த ஆடை கொஞ்சம் கொஞ்சமாய்ப் பயன்பாட்டுக்கு வரும். பிடிக்காத ஆடையைக் கூட "இது லேட்டஸ்ட் ஃபேஷன்யா'' என்று பந்தாவுக்காகவேனும் போட ஆரம்பிப்பீர்கள்.

கொஞ்சநாளிலேயே அப்படி ஒரு ஆடை நம்மிடம் இல்லை என்பது கவுரவக் குறைச்சல் போலத் தோன்ற ஆரம்பித்துவிடும்.

பிடிக்காத ஒரு விஷயத்தை மற்றவர்கள் செய்கிறார்களே என்பதற்காகச் செய்யத் துவங்கிவிடுகிறோம். நாம் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை இன்னொருவர் நிர்ணயிக்கிறார் என்பது வெட்கத்துக்குரிய விஷயம் இல்லையா?

நம்முடைய தன்னம்பிக்கை என்னாச்சு? இந்த ஆடை விஷயம் அப்படியே செருப்பு, செல்போன், வாட்ச் என எல்லா விஷயத்திலும் பொருந்திப் போகிறதா இல்லையா?

இப்படி குருட்டுத் தனமாய் பிறரைப் பின்பற்றும் போக்கு தான் வியாபாரிகளின் துருப்புச் சீட்டு. கருப்பு கலர் சேலை விற்காமல் தேங்கிப் போனால், 'வரும் சனிப்பெயர்ச்சி அன்று கருப்புக் கலர் புடவை அணிவது புருஷனுக்கு நல்லது' என ஏதோ ஒரு சிந்தாமணி மூலம் சின்னப் புரளியைக் கிளப்பி விடுவார்கள். மக்களும் கருப்புக்காக கடை கடையாக ஏறி இறங்குவார்கள்.

"ஏங்கா தெரியாதா...? சனிப்பெயர்ச்சி அன்னிக்கு கருப்பு கலர் துணி போடலேன்னா, புருஷனுக்கு ஆவாதாம்ல...'' என்று சுற்றியிருக்கும் நாலு வீட்டுக்கும் விஷயத்தைப் பற்ற வைப்பார்கள்.

"நான் இப்படியெல்லாம் இல்லேப்பா...'' என்று காலரையோ, துப்பட்டாவையோ தூக்கி விடும் ஜாதி நீங்களென்றால், உங்களுக்கு இதோ ஒரு பூங்கொத்து.

காரணம், நீங்கள் உலகின் 5 சதவீதம் மைனாரிட்டி குழுவில் இருக்கிறீர்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.

'உலகின் 95 விழுக்காடு மக்கள் ஆட்டு மந்தைகளாய் தான் இருக்கிறார்களாம்.'

எந்த சூழலில், எப்படி இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களை வைத்தே முடிவு கட்டுகிறோம். அப்படியில்லாமல் தனக்குத் தானே வழிகாட்டிக் கொள்ள வேண்டு
மெனில், ஆழமான தன்னம்பிக்கை வேர்கள் நமக்குள் பதியமிடப்பட வேண்டியது அவசியம்.

சாரா பெர்னார்ட் என்றொரு நடிகை இருந்தார். 1844-ல் பிறந்த இவர், பிரெஞ்சு நாடக உலகையும், திரையுலகையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தவர். அவர் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசிக் காட்சி. உணர்ச்சிபூர்வமாய் குதித்து நடிக்கையில் அவருடைய முட்டியில் காயம் படுகிறது. துரதிஷ்டவசமாக அந்தக் காயம் ஆறவேயில்லை. அவருடைய ஒரு காலையே இழக்க வேண்டியதாயிற்று! புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறக்கும் காலத்தில் ஒரு காலை இழந்தால் என்னவாகும்? அத்துடன் அவருடைய கலை வாழ்க்கை அஸ்தமித்தது என நினைத்தார்கள்.

ஆனால், அவர் அசரவில்லை. மரணம் வரை தனது மயக்கும் குரலாலும், நடிப்பாலும் பிரெஞ்சு உலகையே வசீகர வலைக்குள் வைத்திருந்தார். உலகம் கண்ட பிரமிப்பூட்டும் நடிகைகள் பட்டியலில் எப்போதும் இவருக்கு முதன்மை இருக்கை உண்டு.

கால்களை இழந்தபின் முடங்கிப் போய் மடிந்து போனவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு. ஆனால், அந்தக் கூட்டத்தில் சேராமல் தனது மனதின் கால்களைக் கொண்டு எழுந்து நின்ற சாரா பென்னட் தான் வரலாற்றில் வந்தமர்கிறார்.

உலகம் எப்போதுமே இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. 95 சதவீதம் மக்கள் ஆட்டு மந்தைகளாய் இருக்க, 5 சதவீதம் மக்கள் அவர்களை வசப்படுத்துபவர்களாக இருக்கின்றனர் என்கிறார் பேராசிரியர் ஜென்ஸ் கிராஸ்.

கூட்டம் கூட்டமாகப் பறக்கும் பறவைகளைப் பார்த்திருப்பீர்கள். யார் வழிநடத்துகிறார்கள் என்று கண்டுபிடிப்பதே கஷ்டம். ஆனால், எல்லாமே ஒன்றைப் பின்பற்றி பறந்து கொண்டிருக்கும்.

"எல்லாரும் இதைத் தான் சொல்றாங்க அல்லது செய்றாங்க'' என்பது ஒரு வகையில் நாம் தனித்து விடப்படக் கூடாதே எனும் அச்ச உணர்விலிருந்தும் எழுகிறது.

தோல்வியடைந்து விட்டால் கூட நம்முடைய கூட்டத்தில் பலர் இருக்க வேண்டும் என்பதே பலருடைய எண்ணம்.

அதற்காக மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கவே கூடாது, அறிவுரைகளை எல்லாம் அழித்து விடவேண்டும் என்பதல்ல. தன்னம்பிக்கை உடைய மனிதராக செயல்பட வேண்டும் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.

கூட்டம் சொல்கிறது என்பதற்காக ஒரு விஷயத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும். சின்ன பிள்ளைகளுக்கு நாம் வழக்கமாகச் சொல்லும் அறிவுரை 'யார் கூட சேர வேண்டும், யார் கூடச் சேரக் கூடாது' என்பது தான். ஆனால், பெரியவர்களானபின் நாமே அதைக் காற்றில் பறக்க விடுகிறோம் என்பது தான் ஆச்சரியம்!

அப்படி இல்லாமல் இருப்பதில் தான் நம்முடைய சிறப்பு பல வேளைகளில் வெளிப்படுகிறது. ஆங்கில இலக்கியம் பற்றிப் பேசினால் ஜான் மில்டனின் "பேரடைஸ் லாஸ்ட்'' எனும் படைப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு இன்றும் ஆங்கில இலக்கியத்தில் அசையா இடத்தில் இருக்கிறது அந்த நூல். அதை எழுதும்போது மில்டனுக்குப் பார்வையே இல்லை என்பதை அறியும் போது அதிரவைக்கும் வியப்பு எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

பேஸ்பால் விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம்ம ஊர் கிரிக்கெட் போல அமெரிக்காவில் விளையாடப்படும் ஒரு பிரபலமான விளையாட்டு அது.

ஜிம் அபோட் என்றொரு சிறந்த வீரர் 1987 முதல் 1999 வரை சிறப்பாக விளையாடி வந்தார். பல கோப்பைகள், சாதனைகள் செய்து பலரை வியக்க வைத்த இவருக்கு பிறவியிலேயே வலது கை இல்லை! `சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியும்' என மக்களுக்கு உற்சாக உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இப்போது!

சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல. மாற்றுத் திறனாளிகள் கூட கூட்டத்தோடு கோவிந்தா போடவேண்டிய கட்டாயம் இல்லை என்பதையே இத்தகைய வியத்தகு மனிதர்கள் நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் அளவுகோல் அடுத்தவர்கள் இதைச் செய்கிறார்களா என்பதல்ல. இதைச் செய்யலாமா? இதைச் செய்தால் என்னென்ன விளைவுகள் வரலாம்? நன்மைகள் என்னென்ன? தீமைகள் என்னென்ன? என ஒரு சின்ன அலசல் வழக்காடுமன்றத்தை மனதுக்குள்ளேயே ஓட்டிப் பாருங்கள். உங்கள் மனம் உங்களுக்கு மிகச் சரியான வழியைக் காட்டும். அந்த வழியில் செல்லுங்கள். அந்த வழி எல்லோரும் நிராகரித்த வழியாகக் கூட இருக்கலாம். எல்லோரும் நடக்கும் வழியில் புதையல் கிடைப்பதும் அரிதே!

ஓடும் கூட்டம் ஓடட்டும் - உன்
மனமே உன்னை ஆளட்டும்!

No comments: